சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டமும் உச்சநீதிமன்றத் தீர்ப்பும்!! (கட்டுரை)
இந்தியாவின் “சட்டவிரோதப் பணப் பரிமாற்றம்” தொடர்பான வழக்குகளில், “முன் பிணை பெறுவது அரிது” என்ற ஓர் உறுதியான நிலைப்பாட்டை, இந்திய உச்சநீதிமன்றம் எடுத்திருக்கிறது. “பொருளாதாரக் குற்ற வழக்குகளில், முன் பிணை என்பது அரிதாகவே கொடுக்க வேண்டும். அதற்கு, இந்த வழக்கு உகந்தது அல்ல” என்று, முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால், முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், திகார் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
“ஐ என் எக்ஸ்” மீடியா வழக்கில், சி.பி.ஐ அமைப்பால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், “திகார் ஜெயிலுக்குப் போய்விடக் கூடாது” என்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் கடுமையான சட்டப் போராட்டத்தை அவரது மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் நடத்தினர். “சி.பி.ஐஇடம் எந்த ஆதாரமும் இல்லை” என்றும் “விசாரணைக்கு முழு ஒத்துழைப் வழங்கினார் ப.சிதம்பரம்” என்றும் வாதிட்டார்கள்.
“விசாரணை அதிகாரி நினைக்கும் விதத்தில் பதிலளிக்க முடியாது” “ அரசியல் சட்டம் வழங்கியுள்ள தனிமனிதச் சுதந்திரத்தை நிலைநாட்ட, இந்த வழக்கில் முன் பிணை அவசியம்” என்றெல்லாம், காரசாரமாக வாதிட்டார்கள். 16 நாள்கள் அவ்வப்போது நடைபெற்ற இந்தச் சட்டப் போராட்டத்தில், மத்திய அரசின் சொலிசிஸ்ட்டர் ஜெனரல் துஷர் மேத்தாவின் வாதங்களே, இறுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்த வழக்கு விசாரணையின் போது, பல பரபரப்பான காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்று கூறும் விதத்தில், ஒவ்வொரு காட்சிகளும் அரங்கேறின. “சி.பி.ஐ கஸ்டடிக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரை அனுப்புவது உச்சநீதிமன்றமா, விசாரணை நீதிமன்றமா?” என்ற கேள்வி எழும் விதத்தில், “இந்தத் திகதிக்குள் ப.சிதம்பரத்தின் ஜாமின் மனுவை முடிவு செய்ய வேண்டும்” என்று, விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. “அப்படி முன் பிணை மனு மீது முடிவு எடுக்கவில்லை என்றால், சிதம்பரம் மேலும் சில நாள்களுக்கு சி.பி.ஐ கஸ்டடியில் இருக்கலாம்” என்று நீட்டிப்பு வழங்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசின் சொலிசிஸ்ட்டர் ஜெனரல், உரிய நேரத்தில் எடுத்துவைத்த வாதத்தின் விளைவாக, உச்சநீதிமன்றமே தான் பிறப்பித்த முன் பிணை மனு விசாரணை தொடர்பான உத்தரவைத் திரும்பப் பெற்றது. ஆகவே, ப.சிதம்பரம் வழக்கில் வழங்கப்பட்டுள்ள 57 பக்கத் தீர்ப்பில், “இனிமேல் பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்குத் தயவு தாட்சன்யமே இல்லை” என்ற செய்தியை, உச்சநீதிமன்றம் மிகவும் ஆணித்தரமாக விடுத்திருக்கிறது.
“46.2 மில்லியன் ரூபாய் அந்நிய முதலீட்டைப்பெற அனுமதி பெற்றுவிட்டு, 3.05 பில்லியன் ரூபாய் அந்நிய முதலீட்டைப் பெற்ற இந்த வழக்கு, “முன் பிணை வழங்குவதில்” முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முன் பிணை கோரும் மனு விசாரணையில், “சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வருமா, வராதா?” என்பது பற்றி விசாரிக்க வேண்டியதில்லை.
“அந்தச் சட்டத்தின் கீழ் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதே தவறு” என்பது பற்றி விவாதிக்க வேண்டியதில்லை. “விசாரணை அதிகாரிக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். முன் பிணை வழங்கி, அவரது விசாரணைச் சுதந்திரத்தில் குறுக்கிட வேண்டியதில்லை” “முன் பிணை மனுவை எதிர்ப்பதற்காக, விசாரணை அதிகாரி மூடிய உறையில் கொடுத்த தகவல்களை ஏற்றுக்கொள்வது தவறல்ல” “புலனாய்வு அதிகாரியின் விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகள், அதற்குக் குற்றஞ்சாட்டப்பட்டவர் கொடுத்த பதில்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்பிக்கும் விதத்தில் பதில்களைச் சொல்கிறாரா இல்லையா என்பது குறித்து, முன் பிணை மனு விசாரணையில் ஆராய வேண்டிய தேவையில்லை” என்று, தமிழகத்தைச் சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதியான பானுமதி தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் அடுக்கடுக்கான உத்தரவுகளை போட்டிருக்கிறது.
இந்த உத்தரவு, பொருளாதாரக் குற்றங்களைச் செய்துவிட்டு, முன் பிணை பெற்று நிம்மதியாகக் காலத்தைக் கழிக்கலாம் என்று கனவு கண்டவர்களுக்குப் பேரிடியாக மாறியிருக்கிறது.
எல்லாவற்றையும் விட மேலாக, “ விதிவிலக்காக முன் பிணை அளிக்கலாமே தவிர, முன் பிணை வழங்கியே தீரவேண்டும் என்று எந்த விதியும் இல்லை” அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், “பொருளாதார குற்றங்களில் மிகவும் அரிதாகவே முன் ஜாமின் அளிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறது. “ஒரு வழக்கில், ஏன் கைது தேவைப்படுகிறது” என்பதற்கு நீண்ட விளக்கத்தையும் உச்சநீதிமன்றம் அளித்துள்ளது. “ஒரு புலனாய்வு அதிகாரி, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், அது எதற்குத் தேவை என்பதையும் எடுத்துரைத்துள்ளார்கள். அவற்றுள், (1) குற்றம் சாட்டப்பட்டவரைக் கைதுசெய்தால் அவர் முழு உண்மைகளைச் சொல்லலாம். (2) அந்தத் தகவல் மூலம் வழக்குக்குத் தேவையான பொருள்களை, முக்கிய ஆவணங்களை கைப்பற்றலாம். (3) கைது என்பது புலனாய்வின் ஓர் அங்கம். அதில் எந்தத் தலையீடும் செய்ய முடியாது” என்று ப.சிதம்பரம் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. அத்துடன், நீதிமன்றம் விடவில்லை. இது போன்ற வழக்குகளில் முன் பிணை வழங்கினால் என்ன நடக்கும் என்பதைத் தனியாகப் பட்டியலிட்டுள்ளது.
அவற்றுள், (1) குற்றம் சாட்டப்பட்டவரை விசாரித்து அறிய வேண்டிய தகவல்கள், புலனாய்வு அதிகாரிக்குக் கிட்டாமல் போகலாம். (2) வழக்குக்குப் பயனுள்ள தகவல்களை சேகரிக்க முடியாமல் போகலாம். (3) ஏன் வழக்கு தொடர்பாக மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆவணங்களை, முக்கியமான பொருட்களை கைப்பற்ற முடியாமல் போகலாம்” என்றெல்லாம் அந்த தீர்ப்பில் கோடிட்டுக் காட்டியுள்ளது.
இறுதியில், சிதம்பரத்துக்கு ஏன் முன் பிணை வழங்கவில்லை? என்பதற்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள், (1) வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் (2) லெட்டர் ஆப் ரொக்கேட்டரி அனுப்பப்பட்ட போதிலும், அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லையென்றும் அமலாக்கத்துறை கூறுகிறது. ஆகவே, இந்த நேரத்தில் (3) விசாரணை நடத்துவதற்குப் போதிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, ப.சிதம்பரத்துக்கு முன் பிணை வழங்க முடியாது” என்று அறுதியிட்டு நிராகரித்து விட்டது.
ப.சிதம்பரம் வழக்கில் குறிப்பிடத்தக்க வேறு சில விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம், “சிதம்பரத்துக்கு முன் பிணை மறுத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ கொடுத்த அறிக்கைகளில் இருந்த வாசகங்களையே, தனது தீர்ப்பில் எழுதியது தவறு. நீதிபதியின் அந்த நடத்தையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறியிருக்கிறது. அதனால் மட்டுமே, சிதம்பரத்துக்கு முன் பிணை கொடுக்க முடியும் என்று, உச்சநீதிமன்றம் கருதவில்லை.
அதேபோல், “அமலாக்கத்துறையின் சார்பில் எங்களிடம் அளிக்கப்பட்ட சீல் இடப்பட்ட கவரை, நாங்கள் பிரித்துப் பார்க்க விரும்பவில்லை. அதில் உள்ள ஆவணங்களையும் நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று கூறியிருப்பதிலிருந்து, “சீல் இடப்பட்ட கவரின்” அடிப்படையில் முன் பிணை மனு நிராகரிக்கப்படவில்லை” என்பதை உறுதி செய்திருக்கிறது. சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர். முன்னாள் உள்துறை அமைச்சர் மட்டுமல்ல, நிதியமைச்சராகவும் இருந்தவர். ஆனால், இந்த முன் பிணை வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகள், எதிர்காலத்தில் “சட்டவிரோத பண பரிமாற்றச் சட்டத்தின்” கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் முன் பிணை என்பது அரிதிலும் அரிதாகக்கூட கிடைக்காது என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது.
“சீல் இடப்பட்ட கவரில் விசாரணை அதிகாரி நீதிமன்றத்துக்குத் தகவல்களைத் தெரிவிக்கலாம். அதை நீதிமன்றம் பரிசீலிக்கலாம்” என்று கடந்த காலங்களில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளை கோடிட்டுக் காட்டியுள்ள நீதிபதிகள், “ப.சிதம்பரம் வழக்கில் சட்டத்துக்கு விரோதமாக விசாரணை அதிகாரி செயற்பட்டதாக ஏதும் இல்லை” என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது. “சிதம்பரத்தின் கைது சட்டவிரோதம் அல்ல” என்ற இந்தச் செய்தி, மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஒரு மைல்கல் என்றே கருதப்படுகிறது.
90 பில்லியன் ரூபாய் வங்கி மோசடியில் ஈடுபட்ட விஜய் மல்லையா, 120 பில்லியன் ரூபாய் பஞ்சாம் நேஷனல் வங்கியை ஏமாற்றிவிட்டுப் பதுங்கியிருக்கும் நிரவ் மோடி உள்ளிட்ட பல வங்கி மோசடி பேர்வழிகளுக்கு ப சிதம்பரம் முன் ஜாமின் வழக்கில் உச்சநீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் மிகப்பெரும் எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது.
“பொருளாதார குற்றம் புரிந்தோர் சட்டத்தின் பிடியில் இருந்தும்” “விசாரணை அதிகாரியின் சுதந்திரமான விசாரணையிலிருந்தும்” தப்பிக்க முடியாது என்ற “எச்சரிக்கை மணியை” அடித்திருக்கிறது. இது வங்கி மோசடியில் ஈடுபடுவரோக்கு மட்டுமல்ல, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கும் கடும் எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. ப.சிதம்பரம் வழக்கில் பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்க ஒரு சரித்திரம் வாய்ந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது!
Average Rating