சு.கவின் கலைந்துபோன கனவு !! (கட்டுரை)

Read Time:14 Minute, 39 Second

2015இல் தான் பொறுப்பு ஏற்ற நாட்டை மாத்திரமன்றி, தனது தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியையும் குழப்பமான நிலைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

1951ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சமமான போட்டிக் கட்சியாக இருந்துவந்த; மாறி மாறி ஆட்சிக்கு வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இப்போது, மூன்றாவது நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 68ஆவது மாநாடு, செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில், சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றே கடந்த சில மாதங்களாக, அந்தக் கட்சியின் தலைவர்கள் கூறிவந்தார்கள்.

ஆனால், செவ்வாயன்று நடந்த மாநாட்டில், அதுபற்றிய எந்த அறிவிப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிடவில்லை. ஜனாதிபதித் தேர்தல் பற்றியோ, அதனை எதிர்கொள்வதற்கான உத்தி பற்றியோ எந்தக் கருத்தையும் முன்வைக்காமல் நழுவினார் அவர்.

எனினும்,“19ஆவது திருத்தச் சட்டதால் இனிமேல் ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. பாதுகாப்பு அமைச்சுகூட அவரிடம் இருக்காது. பிரதமர் பதவிக்கே அதிகாரம் இருக்கும். அதன் மீதே கவனம் செலுத்த வேண்டும்” என்று மாத்திரமே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

‘’சீ சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறி, எட்டாத பழத்தை விட்டு நழுவிய நரியார் போலத் தான், ஜனாதிபதியின் பேச்சு அமைந்திருந்தது.

முன்னதாக, சுதந்திரக் கட்சித் தலைவர்கள் பலரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீண்டும் போட்டியிடுவார் என்று அடித்துக் கூறினார். அதனை யாராலும் தடுக்க முடியாது என்று சவாலும் விடுத்தனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூட, அதற்கான விருப்பத்துடனேயே இருந்தார். 2015இல் பதவியேற்ற போது, தான் இன்னொரு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று கூறியிருந்தார்.

ஆனால், காலப்போக்கில் அவருக்கு மீண்டும் அதிகாரத்தில் இருக்கும் ஆர்வம் வந்த பின்னர், அவ்வாறு தெளிவாக கூறுவதை தவிர்த்தே வந்தார். போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தார்.

இப்போது, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற அவரது கனவு கலைந்துவிட்டது. ஐ.தே.கவும் அவருக்கு வாய்ப்பளிக்கத் தயாராக இல்லை.

இந்தநிலையில், ஏதாவதொரு கூட்டணியுடன் ஒட்டிக்கொள்வதென்ற முடிவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வந்து விட்டார். ஐ.தே.கவுடன் மீண்டும் கூட்டு வைப்பது முடியாத காரியம் என்பதால், வேறு வழியின்றி, மஹிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுகளை ஆரம்பித்திருக்கிறார்.

இரண்டு கட்சிகளையும் கூட்டாக இணைத்துப் போட்டியிடுவதற்கு, சில பேரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்கால அரசாங்கத்தில், மைத்திரிபால சிறிசேனவுக்கும் அவரது முக்கியமான விசுவாசிகளுக்கும் எந்த இடங்களை ஒதுக்குவதென்பது இப்போது நடக்கின்ற பேச்சுகளின் முக்கியமான அம்சமாகக் கூறப்படுகிறது.

பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அமைந்த பின்னர், அவர்கள் அறிவித்த வேட்பாளரே (கோட்டாபய) மாற்றப்படலாம் என்று கதைவிட்ட சுதந்திரக் கட்சியினர், இப்போது தமது சுருதியை மாற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.

கொழும்பு மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, 2020இல் நாமே ஆட்சியமைப்போம் என்று கூறிய நிலையில், அந்த மாநாட்டில் உரையாற்றிய ஏனைய தலைவர்கள் வேறு விதமாகப் பேசினார்கள்.
எதிர்காலங்களில், தங்களின் ஆதரவுடனேயே அரசாங்கம் அமைக்கப்படும் என்று சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஹிந்த அமரவீர கூறியிருந்தார்.

சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான தயாசிறி ஜயசேகர உரையாற்றிய போது, சுதந்திரக் கட்சியை சேர்த்துக்கொள்ளாமல், எந்தக் கட்சியாலும் 47 சதவீத வாக்குகளைக்கூட பெற முடியாது என்று கூறினார்.

2020இல் ஆட்சியமைக்கப் போகும் கட்சி என்று ஜனாதிபதி கூறுகின்ற நிலையில், தயாசிறி ஜயசேகரவும் மஹிந்த அமரவீரவும் இன்னொரு கட்சியுடன் கூட்டுச்சேர்வது பற்றிப் பேசியது குழப்பமாகவே இருந்தது.

அடுத்தநாள் கொழும்பில் சுதந்திரக் கட்சித் தலைமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த அமரவீர, ஜனாதிபதி 2020இல் ஆட்சியமைப்போம் என்று கூறியது, எதிர்காலத்தில் எங்களின் ஆதரவுடனேயே அரசாங்கம் அமைக்கப்படும் என்பதையே குறிக்கிறது என்று சமாளித்தார்.

இந்தத் திருத்த முயற்சிக்கு, பொதுஜன பெரமுன தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட அழுத்தங்களைக் காரணமாகத் தெரிகிறது. ஏனென்றால், ஜனாதிபதியின் இந்தப் பேச்சு, கூட்டணி முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என்று அதே நாளில் வாசுதேவ நாணயக்கால கூறியிருந்தார்.

ஜனாதிபதியின், 2020இல் ஆட்சியமைப்பது என்ற பேச்சு, மஹிந்த தரப்புக்கு கடும் சீற்றத்தைக் கொடுத்திருக்கிறது என்றே தெரிகிறது. அதேவேளை, இப்போதைய நிலையில், பொதுஜன பெரமுனவுடன் இணைந்து பயணித்தாலேயே சுதந்திரக் கட்சியைக் காப்பாற்ற முடியும் என்ற நிலைக்கு வந்திருக்கிறது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பு.

அதுகூட நிலையானதா நிரந்தரமானதா, இறுதியானதா என்றால், இல்லை என்றே கூறலாம். இரண்டு கட்சிகளுக்கும் இப்போது பரந்துபட்ட கூட்டணி தேவைப்படுகிறது, பொதுஜன பெரமுனவுக்கு, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்துகொண்டால் தான், ஜனாதிபதித் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தாண்ட முடியும் என்ற நம்பக் கூடிய நிலையில் இருக்கிறது.

சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிட்டாலோ, மறைமுகமாக ஐ.தே.கவுக்கு ஆதரவு கொடுக்க முனைந்தாலோ, அது தமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று கருதுகிறது பொதுஜன பெரமுன. அதனால், எப்படியாவது தமது கூட்டுக்குள் கொண்டு வந்துவிடும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது,

அதுபோலவே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இப்போதைய நிலையில் பொதுஜன பெரமுனவை விட்டால் வேறு கதியில்லை. சுதந்திரக் கட்சியில் இருந்த பெரும்பாலானவர்கள், மஹிந்தவுக்குப் பின்னால் ஓடிவிட்டார்கள். கடைசியாக எஸ்.பீ.திசநாயக்கவும் டிலான் பெரேராவும்கூட, பொதுஜன பெரமுனவுக்கு சென்றுவிட்டனர்.

நிமல் சிறிபால டீ சில்வாவும்கூட, அவ்வாறான முடிவை வரும் நாள்களில் எடுப்பார் என்கிறது ஒரு தகவல். கொழும்பு மாநாட்டில் அவரது உரை அவ்வாறான ஒரு முடிவையே வெளிப்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர்.

இப்படியே போனால், மைத்திரிபால சிறிசேனவுடன் சுதந்திரக் கட்சியில் மிஞ்சியிருக்கப் போவது யார் என்ற கேள்வியே எழுந்திருக்கிறது. பலமான ஒரு கட்சியாகப் பொறுப்பேற்ற சுதந்திரக் கட்சியில், இப்போது எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்ற சரியான கணக்குகூட ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஏனென்றால், நிலைமை அப்படி உள்ளது. யார், எப்போது, எங்கே மாறுவார்கள் என்ற நிலையே காணப்படுகிறது.

இப்படியானதொரு நிலைக்கு, சுதந்திரக் கட்சியைக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்ற ஜனாதிபதிக்கு, பொதுஜன பெரமுனவுடன் இணைந்து, இருக்கின்ற உறுப்பினர்களை தக்கவைத்துக் கொள்வதே ஒரே வழி.

இதன்மூலம், அடுத்த அரசாங்கத்தில் சில பதவிகளைப் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவதுதான் அவரது ஒரே இலக்கு. அதன் மூலம், கட்சித் தாவல்களைத் தடுக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்.

ஆனாலும், இந்தக் கூட்டு சரிப்பட்டு வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. கோ்டாபய ராஜபக்‌ஷவை வேட்பாளராக ஏற்றுக்கொண்டாலும், கட்சி தாவிக் கொண்டிருப்பவர்களால், இரண்டு கட்சிகளுக்கும் இடையில் முறுகல்கள் காணப்படுகின்றன.

தம்மைப் பலவீனப்படுத்த முனைகிறது, பிளவுபடுத்தப் பார்க்கிறது, கோட்டாபய ராஜபக்‌ஷவை போட்டியில் இருந்து அகற்ற முனைகிறது என்று சுதந்திரக் கட்சி மீது பொதுஜன பெரமுனவினருக்கு ஆழமான சந்தேகங்கள் உள்ளன. அதனை அவர்கள் பகிரங்கமாகக் கூறவும் தயங்கவில்லை.

இந்தநிலையில், அவ்வாறான நோக்கம் இல்லை என்பதை வெளிப்படுத்த அக்கினி குண்டத்தில் இறங்கவேண்டிய நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் வரை தான், இந்தப் போக்கு இருக்கப் போகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து தூக்கப்படும்நிலை ஏற்படும்.

அப்போது, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, சுதந்திரக் கட்சியைக் கைப்பற்றிக் கொள்வார் என்ற பரவலான எதிர்பார்ப்பு தோன்றியிருக்கிறது.

நீண்ட காலத்துக்குப் பின்னர், அண்மையில் சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குச் சென்றிருந்த சந்திரிகா குமாரதுங்க, கடந்த செவ்வாயன்று நடந்த மாநாட்டிலும் பங்கேற்றிருந்தார்.

கடந்த ஆண்டு நடந்த மாநாட்டில், தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று சந்திரிகா பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இப்போது, அவர் கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் தென்பட ஆரம்பித்திருக்கிறார்.

இது, மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்து பயணிக்குமா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

தொடர் தோல்விகளில் சிக்கியிருந்த சுதந்திரக் கட்சியை, 1994இல் மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தவர் சந்திரிகா.

எனினும், அப்போது சுதந்திரக் கட்சி இரண்டாம் இடத்தில்தான் இருந்தது. அதைவிட, சந்திரிகா அரசியலுக்கு புதுமுகமாக இருந்தார். அவர் மீது அனுதாப அலையும் இருந்தது. அவரிடம் ஒரு வாக்கு கவர்ச்சியும் இருந்தது.

இவையெல்லாம் இப்போது இல்லாத சூழலில் சுதந்திரக் கட்சியை மைத்திரியாலோ, சந்திரிகாவினாலோ காப்பாற்ற முடியும் போல தெரியவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கம்போடியா போகணும், வெஜ் சூப் சாப்பிடணும்!! (மகளிர் பக்கம்)
Next post லைஃப் ஸ்டைலை மாற்றுங்கள்… செக்ஸ் லைஃப் மாறும்!! (அவ்வப்போது கிளாமர்)