கண்ணீரின் காத்திருப்பு !! (கட்டுரை)
போராட்டத்தின் உத்வேகமும் இதன் நிலைபேறு தன்மையும், அந்தச் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வல்லவனவாக அமைந்திருந்தல் அவசியமாகின்றது.
அந்த வகையிலேயே, இலங்கைத்தீவில் காலாதி காலமாக, தமிழ் மக்கள் தமது உரிமைக்கான போராட்டங்களைப் பல வழிகளில் மேற்கொண்ட போதிலும், அவற்றின் பலாபலன்கள் எந்தளவுக்கு அமைந்துள்ளனவென்பது கேள்வியாகவே உள்ளது.
தனிநாட்டுக் கோரிக்கையில் ஆரம்பித்த போராட்டமானது, இன்று காணி விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடுதல், அரசியல் கைதிகளின் விடுதலை, மாகாண சபைக்கான அதிகாரம் என்ற சிறிய வட்டத்துக்குள் நின்று சுழன்றடிக்கின்றது என்றால் அதனை மறுப்பதற்கில்லை.
மத்தியில் ஆட்சி செய்த அத்தனைப் பெரும்பான்மை ஆட்சியாளர்களும், தமிழ் மக்களை முதுகில் தட்டியும் முகத்தில் குத்தியும், தமது இராஜாங்கத்தை நிலைநிறுத்தியுள்ள போதிலும், தமிழ்த் தலைமைகள் அது தொடர்பில் கண்டுகொள்ளாத நிலையும் அரசாங்கங்களுக்கு இசைந்தாடும் தன்மையுமே அதிகளவில் இடம்பெற்றுள்ளது.
அந்த வகையிலேயே, தமிழ் மக்களின் நீண்டதும் விடைகாண முடியாததுமான காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் காணப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பல கட்டமைப்புகளை, இலங்கை அரசாங்கம் செய்திருந்தது.
எனினும், அதனூடாக எவ்விதப் பலனுமற்ற நிலையிலேயே, சாலிய பீரிஸ் தலைமையில் காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அலுவலகங்களும் செயற்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை பிரகாரம், 1983ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், இலங்கையில் 20,000 பேர் காணாமல் போயுள்ளனரெனக் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும், ஐ.நாவுக்கு, மன்னார் ஆயர் அலுவலகத்தால் 2017ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட அறிக்கைப் பிரகாரம், யுத்த காலத்தின்போது, 1 இலட்சத்து நாற்பதாயிரம் பேர் காணாமல் போயுள்ளனரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதுவரை எவரிடமும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முழுமையான விவரங்கள் இல்லாத நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டங்கள் வடக்கு, கிழக்கில் வியாபித்திருந்தன.
தமது உறவுகளை தொலைத்தவர்கள், வவுனியாவில் 920 நாள்களையும் கடந்து, வீதியோரத்தில் சுழற்சி முறையிலான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாதாரணமாக இவர்கள் இந்தப் போராட்டத்தைக் கடந்துசெல்லவில்லை. வானிலைத் தாக்கங்கள், கேலிப்பேச்சுகள், தவறான கருத்தியல் பறிமாற்றங்கள் என்பவற்றுடனேயே, இவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்றால் அது மறுப்பதற்கில்லை.
அண்மையில் இவர்களால் நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பொன்றில், வீதியோரப் போராட்டத்தால் தாம் அனுபவித்துவரும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருந்தனர்.
“குறிப்பாக, சிறீ டெலோ கட்சியால் ஊடகம் ஒன்று நடத்தபடுகின்றது. அதில் எங்களது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாகப் பல அவதூறுச் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.
அந்த நேரத்தில் நாங்கள் பொறுமை காத்திருந்தோம். நாங்கள் ஜனநாயக ரீதியில் போராடுகின்றோம். ஜனநாயக ரீதியாக யாரும் எல்லாவற்றையும் கூறமுடியும் என்றாலும், உண்மையைக் கூறவேண்டும். குறித்த ஊடகம், அவதூறுச் செய்தியை மாத்திரமே பரப்பி வந்துள்ளது.
26 வருடங்களாகத் தமிழ் – சிங்களம் என்ற சட்டத்தைக் கொண்டுவந்த பின்னர், தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற போராட்டத்துக்குத் தலைமை தாங்கியது தமிழீழ விடுதலைப்புலிகள்” என்ற தொனிப்பொருளில், சர்வதேச ஊடகங்களில் கட்டுரையொன்று வெளியாகியிருந்தது.
“மேலும், எங்களது போராட்டத்துக்கு முக்கிய கருப்பொருளாக இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகில், எமது மாவட்டத் தலைவி கா.ஜெயவனிதாவின் மகள் ஜெரோமி இருக்கின்ற புகைப்படத்தைப் பிரசுரித்து, கா. ஜெரோமி விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தார் என்ற அவதூறான செய்தியை அந்தக் காலகட்டத்தில் குறித்த ஊடகம் பரப்பியிருந்தது.
இதன் மூலம், சிறீ டெலோ கட்சி, எமது தமிழர்களுடைய போராட்டத்தில் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளதென்பது தெரிய வருகின்றது” என்று, பகிரங்கமாகவே தமிழர் தரப்பில் அரசியல் செய்யும் கட்சியொன்றைச் சுட்டிக்காட்டி, குற்றஞ்சாட்டியிருந்தனர்.
இது ஒருபுறமிருக்க, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பிலும் போராட்டங்கள் முனைப்புப்பெற்றிருக்கின்றன.
எனினும், விடை தெரியாத இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு, வெறும் ஏமாற்றம் மாத்திரம் கிடைத்து விடவில்லை. ஏமாற்றத்துடன்கூடிய மரணங்களும் நிழந்தே வருகின்றன.
வடக்கு, கிழக்கிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 53 பேர், இதுவரை மரணித்துள்ளனரென, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில், சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான கடந்த 30ஆம் திகதியன்று, ஓமந்தையில் பாரிய அளவில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது வெளியிடப்பட்ட புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளைத் தேடிப் போராட்டம் நடத்தி மரணித்தவர்களது பெயர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியே, இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது.
ஆக, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டம் என்பது, வெறுமனே காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்களால் மாத்திரமே மேற்கொள்ளப்பட வேண்டுமா என்ற கேள்வி, அண்மைய நாள்களாக எழுந்துள்ளதையும் வடக்கு, கிழக்கில் அவதானிக்க முடிகின்றது.
மக்கள் போராட்டம் என்பது, அந்த இனக்குழுமத்தின் ஒட்டுமொத்த ஆதரவுடன் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.
எனினும், தற்போது அந்தத் தளம், தமிழ் மக்கள் மத்தியில் குறைவடைந்துச் செல்வதற்குக் காரணமென்ன என்ற கோணத்தில் ஆராயப்பட வேண்டிய தேவையுள்ளது.
தமிழ் அரசியல் பரப்பிலும் சரி, தமிழர்களின் வாழ்வியல் முறைகளிலும் சரி, கடந்த காலத்தில் காணப்பட்ட தமிழ்த் தேசியம்; சுயநிர்ணயம் போன்ற விடயங்கள், தற்போது கொதி நிலையில் இருந்து தளர்ந்து செல்வதை அவதானிக்க முடிகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே, இது சற்று மங்கிச்செல்வதாகச் சொல்லப்பட்டு வரும் நிலையில், இதற்கு பல்வேறு காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன.
தமிழ் அரசியல் தலைமைகளை வைத்தே, கம்பெரலிய திட்டத்தினூடான அபிவிருத்திகளை மேற்கொள்ள வைத்தமையும் தொடர்ச்சியாகத் தமிழ்த் தலைமைகள், மக்களின் அபிலாஷைகளுக்கு மாறாகவும் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டும், தொடர்ந்தும் மத்திய அரசாங்கத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியும் வருகின்றனர் என்ற வெறுப்புணர்வும், மக்கள் தாம் தனித்து விடப்பட்டதான உணர்வின் நிமிர்த்தம் தள்ளப்பட்டுள்ளனர்.
வெறுமனே மக்கள் மத்தியில் மாத்திரம் உணர்வும் கோரிக்கைகளும் நிறைந்திருக்க, அதனை ஈடேற்றிக்கொடுக்க வேண்டிய அரசியல் தலைமைகள், தமது நலன்சார் விடயங்களில் மாத்திரம் கரிசனை கொண்டு வருவதானது, உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சமூகத்துக்கு சற்றே தயக்கமான நிலையை உருவாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தற்போதைய ஆட்சியாளர்கள், ஆட்சிப்பீடம் ஏறவேண்டுமெனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட சில தமிழ்த் தலைமைகள் எந்தளவுக்கு ஆவல் கொண்டிருந்தனரோ, அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தில் ஒரு பேரம் பேசும் தளத்தை உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதும் வேதனைக்குரிய விடயமேயாகும்.
இந்நிலையிலேயே, 8ஆவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்யப்போகும் அடுத்தத் தேர்தலிலும், தமிழ் தலைமைகள் வெறுமனே வேட்பாளர்களது வாய்மூல வாக்குறுதிகளோடு ஆதரவை வழங்கப்போகின்றனரா, இல்லையேல் தம்மைப் பேரம்பேசும் தளத்தில் உயர்த்தி நின்று ஆதரவளிக்கப்போகின்றனரா என்பதே, தற்போதைய அரசியல் தளத்தில் வாதப்பொருளாக உள்ளது.
எவ்வாறிருப்பினும், காலச்சூழலில் தனது இனத்தின் நம்பிக்கையை வெல்லாத அரசியல் தலைமை, தமது அரசியல் தளத்தில் இருந்து அகன்று செல்லும் வாய்ப்பு அதிகமாக உள்ள நிலையில், தமது சமூகத்தின் முக்கிய தேவைகளை உணர்ந்து, அவற்றை நிவர்த்திக்க வேண்டிய பாதையை அவர்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
இற்றைக்கு 920 நாள்களைக் கடந்தும், தமது உறவுகளைக் காணவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் வீதியோரங்களில் உள்ள இவ்வுறவுகள், இன்று அனைத்து அரசியல் தரப்பினரையும் வெறுத்தொதுக்கும் நிலைக்குச் சென்றது மாத்திரமன்றி, தமது நியாயமான கோரிக்கைகளைத் தாமே இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்தும் செயன்முறையையும் மேற்கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
ஓ.எம்.பி அலுவலகத்தின் பிரதானியான சாலிய பீரிஸ், தமது பரிந்துரைகளை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என்பதான கருத்தை, அண்மையில் பதிவிட்டிருந்தார்.
இவ்விடயத்தினூடாக, குறித்த அலுவலகமும் அதன் ஆணையாளர்களும், எந்தளவுக்கு பலம் பொருந்தியவர்களாகவும் குறித்த அலுவலகம் பயனுள்ளதாக இருக்கும் என்பதும் வெளிப்படை.
இதனை அடிப்படையாக வைத்தே வவுனியாவில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் ஊடாக சந்திப்பின்போது, சர்வதேசத்துக்கான கண்துடைப்பாக இந்த அலுவலகம் திறக்கப்பட்டுள்ளதே தவிர, மக்களின் தேவைக்காக இது திறக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
“இதற்குமப்பால், நாங்கள் நீதிக்காகவே போராடுகின்றோம். பணத்துக்காகவோ சுகபோகத்துக்காகவோ போராடவில்லை. எமக்கும் வீடு இருக்கின்றது. பிள்ளைகள் இருக்கின்றனர். எனினும், நாம் வீதியோரங்களில் போராடுவது எமது உறவுகளுக்காகவே. எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்” எனவும் அவர்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்நிலையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டமானது முடிவின்றி தொடரும் நீண்ட பாதையாக காணப்படுகிறது.
எனவே, இவ்விடயங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டுச் செயற்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ளனர் என்பதை நினைவில் கொள்வதனூடாகவே, அடுத்து வரும் தேர்தல்களில் வெறுமனே ஆதரவு என்பதற்கப்பால் பேரம் பேசலுடனான ஆதரவையும் வழங்கும் நிலைமை ஏற்படும்.
ஓ.எம்.பி தொடர்பில் சிவசக்தி ஆனந்தன் எம்.பி விசனம்
அரசாங்கமானது, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் நோக்கில், காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டமூலத்தை ஆதரித்ததன் மூலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், பலிக்கடாவாகி இருக்கின்றார்கள் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்…
“காணாமற்போன உறவுகள், தங்களுக்கு நீதி வேண்டி, ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அந்தவகையில், இறுதிக்கட்டப் போரிலே, ஓமந்தை பகுதியில் வைத்து பல நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்களைச் சரணடையச் சொன்ன இராணுவம், அவர்களை பஸ்களில் ஏற்றிச் சென்றது.குறித்த சம்பவம் இடம்பெற்று இன்று 10 வருடங்களைக் கடந்தும், அவர்களுக்கு என்ன நிகழ்ந்ததென்பதை அறியமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
“அத்துடன், பெற்றோர்களோடு சேர்ந்து அவர்களது பிள்ளைகளும் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். ஒரு வயதிலிருந்து ஐந்து வயதான குழந்தைகள் வரை, பல நூற்றுக்கணக்கான சிறுவர்களும் பஸ்களில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 10 வருடம் கடந்தும், அந்தக் குழந்தைகளுக்குகூட என்ன நடந்ததென்பது தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“உண்மையில், தற்போது இருக்கக்கூடிய இந்த அரசாங்கம், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஓர் உருப்படியான தீர்வை இதுவரை எட்டவில்லை. குறிப்பாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் என்ற பெயரில், வெறும் கண்துடைப்புக்காக ஓர் அலுவலகத்தை அமைத்திருக்கிறார்கள்.இவ்வலுவலகத்தின் ஊடாக, எந்தவித நீதியையும் பெற்றுக்கொள்ள முடியாது. அதற்கான நட்டஈட்டைக்கூட பெற்றுக்கொள்ள முடியாது. “வெறுமனே ஒரு சான்றிதழை மட்டும் பெறுவதற்காகவே, இந்தக் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் உருவாக்கபட்டிருக்கிறது. சர்வதேச சமூகத்தையும் ஏனையோர்களையும் ஏமாற்றி, காலம் கடத்தும் செயற்பாட்டை முன்னெடுக்கவே இது உருவாக்கப்பட்டு இருக்கிறது.
“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குரிய அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்துக்கு வரும்போது, என்னைத் தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், குறித்த சட்டமூலத்துக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டிருக்கின்ற மக்களோடு, இந்த அலுவலகம் தொடர்பான சாதக, பாதக நிலைமைகள் என்ன என்பதைப் பகிர்ந்துகொள்ளாமல், அவசர அவசரமாக அரசாங்கம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகி இருக்கின்றார்கள்.
“இன்று வடக்கிலும் கிழக்கிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், தங்களுக்கு குறித்த அலுவலகத்தின்மீது நம்பிக்கை இல்லை. அந்த அலுவலகம் தேவையில்லை என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில், இந்த அரசாங்கம் எம்மவர்களையும் பலிகடா ஆக்கியிருக்கின்றது.
“ஆகவே, இந்த காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றவர்களுக்கு சர்வதேசச் சமூகம் விரைந்து ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்திலே, எல்லோர் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றேன்” என, அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
Average Rating