ஜாகிர் நாயக்கை நாடு கடத்தப் போவதில்லை? (உலக செய்தி)
சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு நாடு கடத்தப் போவதில்லை என மலேசியப் பிரதமர் மகாதீர் மொஹமத் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக் நாடு கடத்தப்படும் விவகாரத்தில் தமது முந்தைய நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
மலேசிய இந்தியர்கள், சீனர்கள் குறித்து மதப் போதகர் ஜாகிர் நாயக் அண்மையில் தெரிவித்த சில கருத்துகள் காரணமாக அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்தது.
புதிய விருந்தாளியான தாம், மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என சில தரப்பினர் விரும்புகிறார்கள் எனில், தமக்கு முன்பே அந்நாட்டுக்கு விருந்தினராக வந்த சீனர்கள், இந்தியர்கள் வெளியேற வேண்டும் என்று ஜாகிர் நாயக் கூறியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.
நாடு முழுவதும் ஜாகிர் நாயக் மீது இருநூறுக்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மலேசிய காவல்துறை அவரிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளது.
இதையடுத்து இன, மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்களுக்கு வெறும் எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட மாட்டாது என்றும், உரிய வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்றும் மலேசிய காவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் ஜாகிர் நாயக் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் எனும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், பிரதமர் மகாதீரின் திட்டவட்டமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் ஜாகிர் நாயக் குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவரால் (ஜாகிர்) எந்தச் சிக்கலும் எழாத வரை அவர் மலேசியாவில் இருக்கலாம்,” என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது முந்தைய நிலைப்பாட்டில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கை மலேசியாவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்த போதிலும், மலேசிய அரசு இம்முடிவை எடுத்துள்ளது.
இதற்கிடையே ஜாகிர் நாயக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற இருந்த பேரணி ரத்து செய்யப்பட்டுள்ளது.
´ஜாகிர் நாயக் தேவையில்லை, இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமைகள்´ என்ற கருப்பொருளின் கீழ் இந்தப் பேரணி சனிக்கிழமை நடைபெறுவதாக இருந்தது.
காவல்துறையிடம் முன் அனுமதி பெறாத காரணத்தால் இன்று (சனிக்கிழமை) பேரணி ரத்து செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சங்கர் கணேஷ் தெரிவித்ததாக மலேசிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மலேசிய கூட்டணி அரசில் பங்கு வகிக்கும் பிகேஆர் கட்சித் தலைவரும், மகாதீருக்கு அடுத்து பிரதமராக பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுபவருமான அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டதால் இந்த எதிர்ப்புப் பேரணி கைவிடப்பட்டதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
அன்வாரிடம் இருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு வந்த பின்னர், இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்ததாக சங்கர் கணேஷ் குறிப்பிட்டுள்ளார்.
அன்வார் தம்மை அழைத்து எதிர்ப்புக் கூட்டத்தை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும், இந்திய சமூகத்திற்கு உதவுவதாக அவர் உறுதியளித்தார் என்றும் சங்கர் கணேஷ் கூறியுள்ளார்.
நடப்புப் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்க தாம் அன்வாரை சந்திக்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அன்வார் அளித்த வாக்குறுதியை தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டாம் என்பது மலேசிய அமைச்சரவை ஒருமித்த கருத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு என அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா தெரிவித்துள்ளார்.
இதுவொரு தனி நபர் எடுத்த முடிவல்ல எனப் பலமுறை கூறிவிட்டதாக குறிப்பிட்ட அவர், இது குறித்து மேற்கொண்டு விவாதிக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்றார்.
“இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை எனில் உரிய தரப்பிடம் முறையிடலாம். மாறாக, எதற்கு எதிர்க்க வேண்டும்?” என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கேள்வி எழுப்பினார்.
சனிக்கிழமை அன்று நடைபெற இருந்த ஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியை குறிப்பிட்டே அவர் இவ்வாறு கூறியதாகத் தெரிகிறது.
அமைச்சரவையின் இந்த முடிவையும் மீறி ஜாகிர் நாயக் நாடு கடத்தப்பட வேண்டும் எனும் கோரிக்கை நீடித்தால் அரசு என்ன முடிவெடுக்கும் என்று செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் டத்தோ மர்சுகி யாயா, “அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டாம் என்பதுதான் மலேசிய அரசின் முடிவு,” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
Average Rating