ரசமே மருந்து!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 35 Second

ரசம் என்கிற வார்த்தைக்கே சுவை என்றுதான் அர்த்தம். சுவை மட்டுமின்றி, ஆரோக்கியத்தின் அஸ்திவாரமாகவும் அருமருந்தாகவும் இருக்கிறது ரசம். இன்றைய காலக்கட்டத்தில் ரசம் என்பது உடல்நிலை சரியில்லாதபோது உண்ணக்கூடிய உணவு வகைகளில் இணைந்து விட்டது.“அப்படியல்ல. தினமும் உணவில் ரசம் சேர்த்துக் கொள்வது என்பது உடல்நலனில் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன். ‘ரசம் என்பது மூலிகைகளின் கலவை’ என்பது அவர் கருத்து.அவரிடம் பேசினோம்.“அன்றாடம் நாம் எடுத்துக்கொள்ளும் ஆகாரத்தில் அவசியம் ரசம் என்ற திரவ உணவை எடுத்துக் கொண்டால், உடல் சரியில்லாத நிலை என்ற ஒன்றே வராது. உடல் ஆரோக்கியமும் மேம்படும். உப்பு இல்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதுபோல ரசம் இல்லா உணவு வீண் என்றே சொல்லலாம்.

ரசம் பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது?

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதுதான் நமது உயரிய கோட்பாடு. சில உணவுகளை மருந்தாக எடுப்பதற்கு அதன் அளவை மாற்றி பயன்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு பூண்டு, இஞ்சி, மிளகாய் போன்றவற்றைக் கூறலாம். சில மருந்துகளை உணவாக உட்கொள்ளும்போது அதனுடன் சேரும் கலவையைப் பொறுத்து அதன் அளவுகள் மாறுபடும். உதாரணமாக தூதுவளை, முடக்கத்தான், கல்யாண முருங்கை, முசுமுசுக்கை போன்றவைகளை கூறலாம். ஆனால், உணவும் மருந்தும் ஒரு சேர அமைந்தவை மிகச்சில மட்டுமே. அவற்றில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் ரசம்.ஆயுர்வேதம் மனிதனை இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு போன்ற அறுசுவை கலந்த உணவை எடுத்துக்கொள்ள சொல்லி அறிவுறுத்துகிறது. இதனால் நமக்கு மிகச்சிறந்த ஆரோக்கியம் கிடைப்பதோடு மட்டுமில்லாமல் மனநிலையும் சீராக இருக்கும்.

அறுசுவையை தவிர்த்து ஒரு சுவையை மட்டும் அதிகமாக பயன்படுத்தினால் எந்த சுவையை அதிகமாக பயன்படுத்துகிறோமோ அதன் தன்மையைப் பொறுத்து உடல் உபாதைகளும், எண்ணங்களில் மாற்றமும் ஏற்படும். ஆக ஆரோக்கிய வாழ்விற்கு அறுசுவை ஆகாரம் அவசியம். அப்படி அறுசுவை ஆகாரம் என்று சொல்கிறபோது அதில் ரசத்தின் பங்கு அளப்பரியது.தமிழர்களின் கலாச்சாரத்தில் உள்ள உணவு முறை ஒவ்வொன்றுக்கும் அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல நமது உணவு பரிமாறும் முறைகளிலும் மிகப் பெரிய அறிவியல் இருக்கத்தான் செய்கிறது. இலையில் முதலில் இனிப்பு வைத்து தொடங்குகிறோம்.

அதைத் தொடர்ந்து சாதத்தில் பருப்பு, நெய், சாம்பார், புளிக்குழம்பு, ரசம், மோர் என்ற வரிசையில் சாப்பிடுவது நம் வழக்கம். இதனை மாற்றி புளிக்குழம்பு, சாம்பார், மோர், ரசம் என்றோ, மோர், ரசம், சாம்பார், புளிக்குழம்பு என்றோ ரசம், புளிக்குழம்பு, சாம்பார், மோர் என்றோ மாற்றி பயன்படுத்த முடியாது. அவ்வாறு முயற்சி செய்தாலும் கிடைக்கப் போவது என்னமோ அஜீரணம்தான்.

உணவை எப்படி தயாரிக்க வேண்டும், அதை தயாரிக்கும் இடம், அடுப்பு, நெருப்பு போன்றவை எப்படி இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக எடுத்துரைத்த ஆயுர்வேதம், Dining Etiquette என்று சொல்கின்ற உணவை எப்படி இங்கிதங்களோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கியுள்ளது. அவ்வாறு விளக்கப்பட்ட பல்வேறு விஷயங்களில் ஒன்றுதான் முதலில் சிறிதளவு இனிப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. இதன்மூலம் நொதி கிரந்திகள் தூண்டப்பட்டு உணவு ஜீரணிக்க அதிகளவு நொதிகள் சுரக்கும். பின்பு எண்ணெய்ப்பசை கொண்ட உணவை சாப்பிட வேண்டும். அதாவது பருப்பு, நெய்யை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். இதன்மூலம் உணவு கூழ் நன்றாக உருவாக வழிவகை ஏற்படுகிறது. அதன் பின்பு புளிப்பு, உப்பு சுவை கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் உண்ட உணவு நன்றாக ஜீரணமடையும். இந்த உணவு முறை நாம் உட்கொண்ட உணவு கடினமானதாக இருந்தாலும் ஜீரணத்திற்கு உதவியாக இருக்கும். இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக ரசத்தை சொல்லலாம். இதற்கு பின்புதான் கார்ப்பு, துவர்ப்பு சுவையுடைய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமது உடலுக்குத் தேவையான சக்தியைப் பெறுவதற்கே உணவு உண்கிறோம்.

அதற்கு அந்த உணவு முழுவதும் நன்கு ஜீரணமடைந்து அதனால் கிடைக்கும் சக்தி முழுவதையும் உடல் கிரகிக்க வேண்டும். இப்படி அந்த உணவு ஜீரணமடைய ரசம் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. அஜீரணம் இருக்கும்போது ரசத்தைப் பிரதானமாகக் கொண்டு உணவு உண்டு வந்தால் மிக விரைவில் குணம் பெறலாம். ரசத்தில் சேர்க்கப்படும் பொருட்களும் அதன் மருத்துவப் பயன்களும் புளிக்கரைசல், வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகாய் வத்தல், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்றவையே ரசத்தில் சேர்க்கப்படும் பிரதான பொருட்களாக இருக்கிறது.

இவை அனைத்தும் ஜீரண சுரப்பிக்கான நொதியை சுரக்கச் செய்து, உணவை ஜீரணிக்கச் செய்து, உடலுக்குத் தேவையான சக்தியை கிரகிக்கச் செய்கிறது. அதோடு மட்டுமில்லாமல் குடலில் மாசுகள் சேராமல் தடுப்பதோடு, மலச்சிக்கல், வயிற்றுப்பொருமல், வலி, கிருமி போன்ற தொந்தரவுகள் ஏற்படாமலும் தடுக்கிறது.ரசத்தில் சேர்க்கப்படும் மேற்கண்ட கலவையில் ஏதேனும் ஒரு பொருள் அதிகமாக பயன்படுத்தப்பட்டால், அதன் பெயரிலேயே அந்த ரசம் அழைக்கப்படுகிறது. அதனை பொறுத்து அந்த ரசத்தின் செயல்பாடும் மாறுகிறது. உதாரணமாக வெங்காயம் அதிக அளவில் பயன்படுத்தினால் அதற்கு வெங்காய ரசம் என்று பெயர்.ரசத்தின் சில வகைகளையும், அவற்றின் பயன்பாட்டையும் பார்ப்போம்.

வெங்காய ரசம்

சின்ன வெங்காயத்தைப் பயன்படுத்தி இந்த ரசத்தை தயார் செய்யலாம். சளி, சைனஸ் பிரச்னை, வாயு தொந்தரவு, எலும்பு வியாதி போன்றவற்றுக்கு இந்த ரசம் நல்லது.

பூண்டு ரசம்

இது ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை சீராக வைக்கவும் உதவுவதோடு, வாயு தொந்தரவுகளைத் தடுக்கவும் உதவுகிறது.

மிளகு ரசம்

இது காய்ச்சல், சளி தொந்தரவு, ஒவ்வாமை மற்றும் உடல்வலி போன்ற பிரச்னைகளுக்கு நல்லது.
தக்காளி ரசம்

சுவை மிக்க இந்த ரசம் ஊட்டச்சத்து மிகுந்தது. சில மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது தக்காளி சாப்பிடக்கூடாது என்பதால் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்ளலாம்
.
கொத்தமல்லி ரசம்

இது உண்ட உணவின் சத்துக்களை நன்றாக கிரகிக்க வழிவகை செய்கிறது. இது புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு நல்லது. மேற்கண்ட ரசங்களைத் தவிர சில மூலிகைகள், பருப்பு வகைகள் மற்றும் பழங்களைப் பயன்படுத்தியும் ரசம் தயார் செய்யலாம். இதில் பயன்படுத்தப்படும் பொருளைப் பொறுத்து அதன் குணங்கள் மாறுபடுகின்றன.

கொள்ளு ரசம்

இது வறுத்த கொள்ளை கசாயம் வைத்து அல்லது கொள்ளுப்பருப்பை சேர்த்து தயார் செய்யப்படுகிறது. இது பித்தப்பைக்கல், சிறுநீரகக்கல், அதிகக் கொழுப்பு போன்றவற்றிற்கு மிகவும் உகந்தது. உடல்சூடு மற்றும் வயிற்றில் எரிச்சல் உடையவர்கள் இந்த ரசத்தைத் தவிர்க்க வேண்டும்.

கொடும்புளி ரசம்

இது சாதாரண புளிக்குப் பதிலாக கொடும்புளியைப் பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது. இது ரத்தத்தில் வரையறுக்கப்பட்ட கொழுப்பின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கு உகந்தது.

தூதுவளை ரசம்

இது தூதுவளை இலையைக் கொண்டு கசாயம் உண்டாக்கியோ அல்லது இலையை ரசத்தில் கலந்து கொதிக்க வைத்தோ தயார் செய்யப்படுகிறது. இது சளி தொந்தரவுகளுக்கு உகந்தது. யாரெல்லாம் தூசி நிறைந்த இடங்களில் பிரயாணம் செய்கிறார்களோ அவர்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டிய ரசம் இது.

முடக்கத்தான் ரசம்

இது முடக்கத்தான் இலையைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது முடக்கு வாதத்திற்கு மிகவும் உகந்தது.

நெல்லிக்காய் ரசம்

இது நீரிழிவு மற்றும் கண் நோயாளிகளுக்கு மிக நல்லது.
அன்னாசிப்பழ ரசம்

இது தலைவலி உள்ளவர்களுக்கு நல்லது.

கண்டந்திப்பிலி ரசம்

இது உடல் வலிக்கு நல்ல நிவாரணியாக இருக்கிறது.

கொண்டைக்கடலை ரசம்

இது கறுப்பு கொண்டைக் கடலையை அவித்த தண்ணீரில் தயார் செய்யப்படுகிறது. இது ஊட்டச்சத்து மிக்க ஒரு ரசம்.

எலுமிச்சை ரசம்

இது சாதாரண ரசத்தில் எலுமிச்சைச்சாறு கலந்து தயாரிக்கப்படுகிறது. இது உடல்சூடு, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்னைகளுக்கு நல்லது.

முருங்கை ரசம்

இது முருங்கைக் கீரை மற்றும் அதன் தண்டுகளைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. இது ரத்த சோகைக்கு உகந்தது.

எலும்பு ரசம்

இது ஆட்டின் மார்புப் பகுதி எலும்பை இடித்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரில் தயார் செய்யப்படுகிறது. இது நோயினால்பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதனால் உடல் பலகீனமாக இருப்பவர்களுக்கும் நல்லது.

நண்டு ரசம்

இது உடல்வலி, காய்ச்சல், சளித் தொந்தரவுகளுக்கு நல்லது”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வியர்வையில் குளிக்கிறீர்களா? (மகளிர் பக்கம்)
Next post ஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க…!! (அவ்வப்போது கிளாமர்)