இன்ஜினியராக ‘எஸ்ரோ’க்கு வாங்க!! (மகளிர் பக்கம்)
சென்னை நுங்கம்பாக்கம் சுதந்திர தின பூங்காவில் கடந்த 2007ம் ஆண்டு காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி எளிமையான முறையில் அந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது. ஆண்டுகள் 12 கடந்தும் இன்றும் ஆலமரம் போல் தனது கிளையை பரப்பி ஏழை மக்களுக்கு உதவி வருகிறது. தி.நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் பெயர் ‘கல்வி மற்றும் சமுதாய ஆராய்ச்சி நிறுவனம்’ (எஸ்ரோ). தமிழ்நாடு முழுவதும் 700க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கு உதவி வருகிறார் இந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர் இராஜேஸ்வரி.
எளிய குடும்ப பெண்ணாக காட்சி தந்த அவர் எம்.ஏ., பி.எட், பி.எல்.ஐ.எஸ் பட்டங்களை பெற்றவர். படிப்பு, வேலை என்று இருந்தாலும் இல்லத்தரசி என்ற தனது கடமையையும் சரியாக செய்து வருபவர். ‘‘கொடுப்பதை பலர் அரிய வழங்கினால் தான் நாமும் பலருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பிறருக்கு உருவாகும் என்று என் கணவர் அவ்வப்போது கூறுவார்’’ என்று பேசத் துவங்கினார் இராஜேஸ்வரி. ‘‘என்னுடைய இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என் கணவர் எனக்கு அளித்த ஊக்கம் தான்.
அவர் கல்வியாளர் மட்டுமில்லை அறிவியல் அறிஞர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் கூட. எவர் ஒருவர் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவரே மக்களை வாழ வைக்கிறார். பிறருக்கு உதவுவதன் மூலம் கிடைக்கும் திருப்திதான் நாம் வாழ்ந்ததற்கான அடையாளம்…’’ நம் நாட்டின் வளர்ச்சி நம் அடுத்த தலைமுறையின் கையில் இருப்பதாக தெரிவித்தார்.
‘‘பல ஏழை மாணவர்கள் பிளஸ் 2 முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். திறமையில்லாமல் இவர்கள் படிப்பை நிறுத்தவில்லை. படிக்க வசதியில்லாமல் அவர்களால் அதை தொடர முடிவதில்லை. இதன் காரணமாக நாம் பல எதிர்கால விஞ்ஞானிகள், டாக்டர்கள், இன்ஜினியர்களை இழந்து விடுகிறோம். இந்த இழப்பை சரிகட்டவே இந்த அறக்கட்டளையை தொடங்கியுள்ளேன். 12 ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக இயங்கி வருவதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்றவர் தான் உதவி செய்யும் மாணவர்கள் பற்றி விவரித்தார்.
‘‘உயர் கல்வி பெற வசதியில்லாத ஏழை மாணவர்கள், பிளஸ்2வில் அதிக மதிப்பெண் எடுத்தும் மேற்படிப்புக்கு வசதியில்லாதவர்கள், பெற்றோரை இழந்த மாணவ, மாணவிகள்… இந்த தகுதிகள் இருந்து தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் விண்ணப்பித்தால் உடனே அவர்களுக்கு நாங்க உதவிக்கரம் நீட்டுகிறோம். அவர்கள் குறிப்பிட்ட படிப்பு தான் படிக்க வேண்டும் என்றில்லை.
சிலர் நல்ல மதிப்பெண் எடுத்து இருப்பார்கள். அவர்கள் இன்ஜினியராகவோ, டாக்டராக வேண்டும் என்று நினைத்து இருப்பார்கள். ஒரு சிலர் பட்டப்படிப்பினை மேற்கொள்ள நினைப்பார்கள். அவர்கள் விரும்பும் படிப்பை ஏற்று படிக்கலாம். அதற்கான முழு நிதி உதவியினை எங்க அறக்கட்டளை மூலம் நாங்க ஏற்படுத்தி தருகிறோம். வருஷத்திற்கு 70 பேர் வீதம் இதுவரை 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து இருக்கோம். இந்த ஆண்டுக்கான மாணவர்கள் தேர்வு தற்ேபாது நடைபெற்று வருகிறது.
எங்கள் அமைப்பின் ஆலோசகர்கள் அனைத்து மாவட்டத்திலும் உள்ளனர். ஒவ்வொரு முறை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதும் யாருக்கு உதவவேண்டும் என்ற பட்டியலை தயார் செய்வோம். அதன் பிறகு அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஆலோசகர்கள் மூலம் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பம் பெறப்படும். இந்த ஆண்டுக்கான நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி செப்டம்பர் 28ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது’’ என்றவர் வேறு
சில சமுதாய நலப்பணிகளிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
‘‘கிராமப்புற நகர்ப்புற மேம்பாட்டுக்கு உதவுதல், மகளிர் தினத்தன்று பெண்களிடம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு உதவுதல், குழந்தைகள் மற்றும் பெண்களின் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு உணவு உடை வழங்கியும், பராமரிப்பு பணிகளையும் செய்து வருகிறோம்.
பார்வையற்றோருக்கு ஸ்டிக் உள்ளிட்ட கருவிகளை வழங்கி வருகிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்கியுள்ளோம். பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நவீன தையல் இயந்திரங்களையும் வழங்கி வருகிறோம்’’ என்று தன் சமூக நலப்பணிகளை பட்டியலிட்டார் இராஜேஸ்வரி.
Average Rating