ஜனாதிபதித் தேர்தல்: அவதானங்களும் அனுமானங்களும்!! (கட்டுரை)
விரைவில் தேர்தலொன்று நடைபெறுவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. நியாயப்படி பார்த்தால், அது மாகாண சபைகளுக்கான தேர்தலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், அந்தத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்டச் சிக்கலைக் காரணம் காட்டி, அதை ஒத்திப் போடுவதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
மாகாண சபைத் தேர்தலொன்று நடந்தால், அதில் ஐக்கிய தேசியக் கட்சி தோற்று விடும் என்கிற பேச்சு உள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளினூடாக, இந்த அனுமானத்துக்குப் பலரும் வருகின்றனர்.
ஐ.தே.கட்சிக்கும் இந்தப் பயம் உள்ளது போலவே தெரிகிறது. மாகாண சபைத் தேர்தலை, ரணில் அரசாங்கம் தொடர்ந்தும் பிற்போட்டு வருவதன் ஊடாக, இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டால், அடுத்து நடைபெறுவது ஜனாதிபதித் தேர்தலாகத்தான் இருக்கும். 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி, இறுதியாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. எனவே, இந்த வருட இறுதியில், மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெறும் என்று, எதிர்வுகூறப்படுகிறது.
“உலகம் அழியாது விட்டால், இந்த வருடம் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கும் டிசெம்பர் ஏழாம் திகதிக்கும் இடைப்பட்டதொரு தினத்தில், ஜனாதிபதித் தேர்தல் நடந்தே தீரும்” என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, உறுதிபடச் சொல்லி இருக்கின்றார். எனவே, இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு, மக்கள் முகம் கொடுக்க வேண்டிஏற்படும்.
சஜித் பிரேமதாஸ என்ன செய்வார்?
இந்தமுறை, ஜனாதிபதித் தேர்தல் மும்முனைப் போட்டியாக அமையும் என்று, இப்போதே பலரும் கூறத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில், ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன தரப்புகளிலிருந்து, மூன்று முக்கிய வேட்பாளர்கள் களமிறக்கப்படலாம் எனவும் எதிர்வுகூறப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, கரு ஜயசூரிய, சஜித் பிரேமதாஸ ஆகியோரில் ஒருவர் களமிறக்கப்படலாம் என்கிற பேச்சு இருந்து வந்தது. ஆனால், இப்போது கரு ஜயசூரியவையே, ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கப் போவதாக, உத்தியோகப்பற்றற்ற ரீதியில் செய்திகள் வெளியாகி வருகின்றன.
அநேகமாக, இது எதிர்பார்க்கப்பட்ட முடிவாகவே உள்ளது. சஜித் பிரேமதாஸவை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு, ரணில் அநேகமாக விரும்ப மாட்டார்.
ஏற்கெனவே, ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்தைக் கைப்பற்றும் ஆசையில், சஜித் பிரேமதாஸ உள்ளார். அவ்வாறான ஒருவரை, அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக்கி, அதில் அவர் வெற்றியும் பெற்று விட்டால், அடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றவே முயல்வர்; இதை ரணிலும் அறிவார்.
இன்னொருபுறம், தன்னை விடவும் கட்சிக்குள் கனிஷ்ட நிலையிலுள்ள சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதியாக்கிப் பார்க்கவும் ரணில் விரும்ப மாட்டார்.
எனவே, ஐ.தே.கட்சி சார்பில் களமிறக்கப்படும் ஜனாதிபதி வேட்டபாளர், சஜித் இல்லை என்கிற முடிவுக்கு வரலாம். ஆகவே, கரு ஜயசூரியவுக்கே அந்த இடம் கிடைக்கும் சாத்தியங்கள் உள்ளன. கரு, ஜனாதிபதியானாலும் தனது பேச்சைக் கேட்டு நடப்பார் என்கிற நம்பிக்கை, ரணிலுக்கு இருக்கக் கூடும். அண்மைக் காலங்களில், ரணில் தொடர்பில், கரு ஜயசூரிய காட்டிவரும் விசுவாசம் கவனிப்புக்குரியது.
ஆனாலும், சாதாரண சிங்கள மக்கள் மத்தியில், சஜித் பிரேமதாஸவுக்குள்ள ஆதரவு, கரு ஜயசூரியவுக்கு இருக்கிறதா என்கிற கேள்வியும் இங்கு முக்கியமானது.
இதேவேளை, சஜித் பிரேமதாஸவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ரவி கருணாநாயக்க போன்றோர், கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப் பிள்ளைகளில் ரவியும் ஒருவர் என்பதைப் பலரும் அறிவர். சஜித் பிரேமதாஸவை, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கக் கூடாது என்பதில், ரவி போன்றோர் விடாப்பிடியாக உள்ளனர். இந்த விடயத்தில், ரணிலின் மனதையே, ரவி பிரதிபலிப்பதாகவும் பேசப்படுகிறது.
கருதான், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் என்று முடிவு செய்யப்பட்டால், ஐ.தே.கக்குள் சஜித் தொடர்ந்தும் இருப்பாரா என்கிற கேள்விகளும் உள்ளன.
சிலவேளை, கரு ஜயசூரிய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சஜித் பிரேமதாஸ, இன்னும் ஓரங்கட்டப்படுவதற்கான சாத்தியங்களும் உள்ளன. எனவே. இன்னும் ‘இலவு காப்பதில்’ பயனில்லை என்கிற முடிவுக்கு சஜித் வந்தால், ஐ.தே. கட்சி உடையும் ஆபத்தை எதிர்கொள்ளக் கூடும்.
அரவணைப்பாரா மைத்திரி?
இன்னொருபுறம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக, சஜித் களமிறக்கப்படலாம் என்கிற அனுமானங்களும் வெளியாகத் தொடங்கியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலில், சுதந்திரக் கட்சி சார்பாகத் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறங்கினால், வெற்றிக்கான வாய்ப்புப் பெரிதாக இருக்காது என்று, அரசியல் நோக்குநர்கள், இப்போதே கூறத் தொடங்கி விட்டார்கள்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவை அடிப்படையாகக் கொண்டு, இந்த அனுமானம் வெளியிடப்பட்டிருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகள்தான், மைத்திரியின் வெற்றிக்கு, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பிரதானமாக அமைந்தன. அந்த வாக்குகள் இல்லாமல், ஜனாதிபதித் தேர்தலொன்றில் மைத்திரியால், மீண்டும் வெற்றிபெற முடியுமா என்பது சந்தேகம்தான்.
எனவே, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை, சஜித் பிரேமதாஸவுக்கு ஐக்கிய தேசியக் கட்சி வழங்காமல் விட்டு, அந்த ஆத்திரத்தில் கட்சியை விட்டு வெளியேறும் முடிவுக்கு சஜித் வருவாரேயானால், அவரை மைத்திரி அரவணைத்து, சுதந்திரக் கட்சி சார்பாக, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கக் கூடும் என்பதற்கான சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை. அவ்வாறு நடந்தால், அது ஐ.தே. கட்சிக்குப் பெரும் ஆபத்தாக அமைந்து விடும்.
மஹிந்த தரப்பு வேட்பாளர் யார்?
இவற்றுக்கு அப்பால், மஹிந்த ராஜபக்ஷ சார்பில், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, யார் களமிறக்கப்படுவார் என்கிற கேள்வியும் உள்ளது. இப்போதைக்கு அதற்கான பதிலாக, கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர்தான் முன்னிலையில் உள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளரும் மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ பற்றிய பல்வேறு விமர்சனங்கள் உள்ளபோதும், அவர் ஆளுமை மிக்க ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவர் ஒரு கறாரான பேர்வழி என்கிற விமர்சனமும் உள்ளது.
இதனால், மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் முக்கிய அரசியல்வாதிகள் பலரின் எரிச்சலையும் அதிருப்திகளையும் கோட்டா சம்பாதித்து வைத்திருக்கிறார். அரசியலுக்குத் தேவையான நெகிழ்வுத்தன்மை, பொறுமை ஆகியவை கோட்டாவிடம் இல்லை என்று, சிறுபான்மையின அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
எனவே, ஜனாதிபதி வேட்பாளராகப் பொதுஜன பெரமுன சார்பில், கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்படுவதை விடவும், பசில் ராஜபக்ஷ களமிறக்கப்படுவதே நல்லது என்கின்றனர், முஸ்லிம் அரசியல்வாதிகள். ஆனாலும், சாதாரண சிங்கள மக்கள் மத்தியில், கோட்டாவுக்கு இருக்கும் ‘ஹீரோயிஸம்’ பசில் ராஜபக்ஷவுக்கு இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இன்னொருபுறம், இவர்கள் இருவரையும் தவிர்த்து, மஹிந்தவின் மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷவை, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதே, பொதுஜன பெரமுனவுக்கு நல்லதாக அமையும் என்போரும் உள்ளனர்.
எது எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ களமிறக்கும் வேட்பாளர் எவராக இருந்தாலும், அந்த வேட்பாளருக்கு, மஹிந்த ராஜபக்ஷவுக்குரிய ஆதரவும் வாக்குகளும் கிடைக்கும் என நம்பலாம். மஹிந்த தனது முகத்தைக் காட்டியே, தான் களமிறக்கும் வேட்பாளருக்கு வாக்குக் கேட்பார்.
என்ன செய்ய வேண்டும் முஸ்லிம் தரப்பு?
இவ்வாறான சூழ்நிலையில், முஸ்லிம் அரசியல் கட்சிகள் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கும் என்பதுதான், முஸ்லிம் மக்களிடையே உள்ள பெரும் கேள்வியாக உள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகப் புரியப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில்தான், மைத்திரிபால சிறிசேனவுக்கு, முஸ்லிம் மக்கள் வாக்குகளை அள்ளி வழங்கியதோடு, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்கினார்கள்.
ஆனால், நிலைமை தலைகீழாக மாறியது. மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற எந்தவோர் அநீதிக்கும், இந்த ஆட்சியாளர்கள் நியாயம் பெற்றுக் கொடுக்கவில்லை. போதாக்குறைக்கு, மஹிந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தவற்றை விட, அதிகமாகவும் மோசமாகவும், பல அக்கிரமங்கள் இந்த ஆட்சியில் நடைபெற்றன.
அந்த வகையில் பார்த்தால், முஸ்லிம்களைப் பொறுத்த வரையில், மஹிந்த, ரணில், மைத்திரி ஆகியோர், ‘ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’தான். இவர்கள் எல்லோரின் ஆட்சிகளிலும், மிக மோசமான அனுபவங்களை முஸ்லிம்கள் பெற்றுள்ளனர். எனவே, ஜனாதிபதித் தேர்தலின் போது, மேற்படி நபர்கள் குறித்து, இவர்கள் களமிறக்கும் வேட்பாளர்கள் தொடர்பில், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள் என்பதை, முஸ்லிம் சமூகம் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
எனவே, முஸ்லிம்களின் பாதுகாப்பு, உரிமை, நிர்வாகப் பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் தீர்வைப் பெற்றுத் தருவதற்கு இணங்கும் ஜனாதிபதி வேட்பாளருடன், எழுத்து மூல ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதன் பிறகு, தமது ஆதரவை முஸ்லிம் அரசியல் தலைமைகள் வெளியிடுதல் அவசியமாகும்.
அரசியலில் தவறான முடிவுகளை எடுத்து விட்டு, பின்னர் மக்களுடன் சேர்ந்து தலையில் கை வைத்து அழுவதற்காக, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில்லை என்பதை, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் மனதில் பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஹக்கீம், ரிஷாட் பற்றிய அனுமானங்கள்
ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம் அரசியல் தலைவர்களில் யார், என்ன முடிவை எடுப்பார்கள் என்கிற அனுமானங்களும் மக்கள் மத்தியில் உள்ளன.
குறிப்பாக, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவானவர் என்பதும், அவர் ரணிலின் விசுவாசி என்பதும் அரசியலரங்கில் அறியப்பட்ட விடயங்களாகும். எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க வேட்பாளருக்கே, ஹக்கீம் தனது ஆதரவைத் தெரிவிப்பார் என்கிற பேச்சு, மக்கள் மத்தியில் உள்ளது.
ஆனால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், எந்தப் பக்கம் சாய்வார் என்பதை, அனுமானிப்பதில் சிக்கல்கள் உள்ளன. இப்போதைக்கு ஐ.தே.க கூட்டணியில் ரிஷாட் பதியுதீன் இணைந்துள்ளார்.
ஆனால், ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த சார்பாக பசில் ராஜபக்ஷ களமிறக்கப்பட்டால், அல்லது கோட்டாபய ராஜபக்ஷ களமிறக்கப்படாமல் விட்டால், மஹிந்த தரப்புக்கு ரிஷாட் ஆதரவளிக்கும் நிலை உருவாகலாம் என்கின்றனர் அரசியல் நோக்குநர்கள்.
பசில் ராஜபக்ஷவும் ரிஷாட் பதியுதீனும் நெருக்கமானவர்கள். அரசியலுக்கு அப்பாலும் இவர்களுக்கு இடையிலான நட்பு உள்ளது. ஆனால், கோட்டா தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு கசப்புணர்வு உள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மைத்திரிக்கு ஆதரவளிக்க ரிஷாட் பதியுதீன் தீர்மானித்தமையை அடுத்து, அவரைக் கோட்டாபய மிரட்டும் வகையில் நடந்து கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. எனவே, மஹிந்த தரப்பு களமிறக்கும் வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்து, ரிஷாட் பதியுதீனின் ஆதரவு அமையக் கூடும்.
இருந்தாலும், தத்தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சென்று, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சமூக அக்கறையுடன் தமது ஆதரவை வெளிப்படுத்துவதற்கு, முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்வர வேண்டும்.
இந்த நிலையில், சமூகத்தின் பாதுகாப்பு, எதிர்கால நலன்களை உத்தரவாதப்படுத்தும் தலைமைகளை அடையாளம் கண்ட பின்னரே, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் தீர்மானம் செலுத்த முடியுமென்றும் என்று, அமைச்சர் ரிஷா பதியுதீன், கிண்ணியாவில் தெரிவித்திருக்கிறார்.
இன்னாருக்குத்தான் எமது ஆதரவை வழங்க வேண்டுமென்ற எந்தக் கடப்பாடும், எமக்கு கிடையாதென்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும், “ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தற்போது கதையாடல்கள் இடம்பெறுகின்றன. நாம் எதற்கும் அவசரப்பட முடியாது. எழுந்தமானமான முடிவுகள், நமது எதிர்காலத்துக்கு ஆரோக்கியமாக அமையாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், முஸ்லிம் அரசியல்வாதிகள் எவ்வாறு ஒன்று பட்டோமோ, அவ்வாறே எதிர்கால அரசியல் தீர்மானங்களிலும் ஒன்றுபட்டு, சமூகம் சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இது நேர்மையான அறிவிப்பாயின் வரவேற்கத்தக்கதாகும்.
இந்த நிலையில், “ஜனாதிபதி தேர்தலுக்காக, பிரதான அரசியல் கட்சிகள், தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்ததன் பின்னர், அந்த வேட்பாளர் வெற்றிபெறுவதற்கான இயலுமை, அவர்களது கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்த்ததன் பின்பே, யாருக்கு ஆதரவு வழங்குவதென எமது கட்சி தீர்மானிக்கும்” என்று, ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கிறார்.
இவர்கள் சொல்வது போலவே செய்தால், அது முஸ்லிம் சமூகத்துக்கு மகிழ்ச்சிக்குரிய விடயமாகவே இருக்கும். மேலும், தங்களுக்கு பிரச்சினைகள் வரும் போது மட்டும், ஒற்றுமை பற்றி பேசுகின்றவர்களாக இருந்து விடாமல், முஸ்லிம் சமூகத்தின் வெற்றிக்காகவும் ஒற்றுமைப்பட்டு, ஜனாதிபதித் தேர்தலின்போது புத்திசாலித்தனமான முடிவினை எடுக்க வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அவாவாகும்.
Average Rating