பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறான் -முஷரப் தகவல்
சர்வதேச பயங்கரவாதி பின்லேடன் உயிருடன் தான் இருக்கிறான் என்று பாகிஸ்தான் அதிபர் முஷரப் தெரிவித்து இருக்கிறார். பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் பின்லேடன் டைபாய்டு காய்ச்சலால் இறந்து போய்விட்டதாக பிரான்சு நாட்டுப்பத்திரிகை செய்தி வெளியிட்டது. இந்த செய்தி உண்மையானது இல்லை என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி கர்சாய் கூறினார். தலீபான் அமைப்பும் பின்லேடன் சாகவில்லை. உயிருடன் தான் இருக்கிறான் என்று கூறியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அதிபர் முஷரப்பும் பின்லேடன் உயிருடன்தான் இருக்கிறான் என்று கூறி இருக்கிறார்.
அவர் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்தபேட்டியில் கூறி இருப்பதாவது:- பின்லேடன் இறந்து போனதான வெளியான செய்தியில் உண்மை இல்லை. அவர் இறந்து போனதாக கூறப்படுவது பற்றி எனக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனக்கு உறுதியாக தெரியாத எதையும் நான் கூறமாட்டேன். பிரான்சு நாட்டுக்கு கிடைத்த தகவலை வைத்து தான் அந்த நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது. எனவே பிரான்சு தான் உண்மை என்ன என்பதை உலகத்துக்கு தெரிவிக்கவேண்டும்.
பின்லேடன் உயிருடன்தான் இருக்கிறான். அவன் ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் உள்ள குனார் மாநிலத்தில் பதுங்கி இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன். குனார் மாநிலம் பாகிஸ்தானின் பஜாவுர் ஏஜென்சி பிரதேசத்தின் எல்லையில் உள்ளது. பஜாவுர் ஏஜென்சியில் உள்ள சில பகுதிகளில் அல்கொய்தா தீவிரவாதிகள் வசித்து வருகிறார்கள் என்பது தெரியும்.
பின்லேடனுக்கும், ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹெக்மாத்தியாருக்கும் தொடர்பு உள்ளது. அவன் செல்வாக்குக்கு உட்பட்டது தான் குனார் மாநிலம். இவ்வாறு முஷரப் கூறினார்.
இங்கிலாந்து குற்றச்சாட்டு
இதற்கிடையில் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவிசெய்து வருகிறது. உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. மூலமாக இந்த உதவி தீவிரவாதிகளுக்கு கிடைத்து வருகிறது என்று இங்கிலாந்து ராணுவம் குற்றஞ்சாட்டி உள்ளது.
லண்டன், ஆப்கானிஸ்தான், ஈராக் என்று எங்கு எங்கு தீவிரவாத தாக்குதல் நடக்கிறதோ அங்கு எல்லாம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கிறது. ஐ.எஸ்.ஐ. அமைப்பு கலைக்கப்படவேண்டும் என்று அந்த நாட்டு ராணுவ அதிகாரி கூறினார்.இந்த குற்றச்சாட்டை முஷரப் மறுத்தார்.
அவர் ஒரு டி.வி.க்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதவாது:- இங்கிலாந்து ராணுவத்தின் இந்த குற்றச்சாட்டு 200 சதவீதம் தவறானது. இதை நான் மறுக்கிறேன். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அமைப்பு மிகவும் கட்டுப்பாடானது.
அது தான் அல்கொய்தாவின் முதுகை உடைத்தது. ஐ.எஸ்.ஐ. அமைப்பு மட்டும் சிறப்பாக செயல்பட்டு இருக்காவிட்டால் 680 தீவிரவாதிகளை அது பிடித்து இருக்கமுடியாது.
இங்கிலாந்து ராணுவத்தின் குற்றச்சாட்டு பற்றி இங்கிலாந்து பிரதமரிடம் நான் புகார் செய்வேன். இவ்வாறு முஷரப் கூறினார்.