தோள் கொடுப்பான் மித்ர! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 18 Second

‘‘பிறந்தது வளர்ந்தது படிச்சது எல்லாம் பாண்டிச்சேரியில். எங்களுடையது ரொம்ப ஆச்சாரமான கூட்டுக்குடும்பம். பெண்கள் இந்த வேலை தான் செய்யணும். ஆண்கள் இது தான் செய்யணும்னு வரைமுறைப்படுத்தப்பட்ட குடும்பம். ஆனால் அதுவே பெண் குழந்தைகள் திறமையை என்றுமே எங்க குடும்பத்தில் ஒடுக்கியதில்லை. காரணம் எங்க குடும்பத்தின் தலைவி என் பாட்டி தான்’’ என்று பேசத் துவங்கினார் சவுந்தர்யா ராஜேஷ்.

இவர் ‘அவதார் – ஐ வின்’ என்ற பெண்களுக்கான வேலைவாய்ப்பு நிறுவனத்தை 2005ம் ஆண்டு துவங்கினார். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். குறிப்பாக, சில காரணங்களால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிறகு வேலைக்கு செல்ல நினைக்கும் பெண்களுக்காகவே இந்த நிறுவனத்தை நிறுவியுள்ளார் சவுந்தர்யா.

‘‘அவதார் – ஐ வின் உருவாக என்னுடைய வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட ஒரு சம்பவமே முக்கிய காரணம். 20 பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்து வந்தாலும், எங்க வீட்டில் ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. படிக்க விரும்புறியா படி… வேலைக்கு போகணுமா போன்னு எங்க வீட்டில் எல்லா பெண்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. காரணம் என் பாட்டிதான். அவங்க தான் குடும்பத்தை நிர்வகித்து வந்தாங்க. அதனால அவங்க எல்லாரையும் சமமாதான் பார்த்தாங்க. அந்தச் சூழலில் தான் நானும் வளர்ந்தேன்.

பள்ளிப்படிப்புக்கு பிறகு கல்லூரியில் எம்.பி.ஏ முடிச்சேன். படிப்பு முடிச்ச கையோடு தனியார் வங்கி ஒன்றில் வேலை கிடைச்சது. நல்ல சம்பளம். மூன்றே வருடத்தில் என்னுடைய கரியரில் நல்ல வளர்ச்சி அடைந்தேன். இதற்கிடையில் கல்யாணம், குழந்தை, குடும்பம்ன்னு என் வாழ்க்கை நகர ஆரம்பிச்சது. அதனால என்னால ெதாடர்ந்து வேலைக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.

அப்ப நிறுவனங்களுமே, பெண்கள் ஏன் கல்யாணத்திற்கு பிறகு தங்களின் வேலையை தொடர முடியலைன்னு யோசிக்கல. பெண்கள் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு அளிக்க எந்த நிறுவனங்களுக்குமே தெரியல. அப்பதான் இதற்கான ஒரு தீர்வை நாம ஏன் யோசிக்க கூடாதுன்னு தோணுச்சு. என்னதான் கல்யாணம், குடும்பம்ன்னு வந்தாலும் பெண்களுக்கான பொறுப்புகள் என்றுமே மாறப்போவது இல்லை.

அதில் மற்றொரு பங்கு வேலைக்கு போவது. நான் வேலையில் இருந்து விலகி மூணு வருஷமாச்சு. குழந்தையும் வளர்ந்துவிட்டதால, மறுபடியும் வேலைக்கு போக முடிவு செய்தேன். நேர்காணலுக்கும் சென்றேன். அங்கு தான் எனக்கு அந்த அதிர்ச்சி காத்து இருந்தது. என்னை நேர்காணல் கண்டவர் நான் வேலையில் இருந்து பிரேக் எடுத்ததை பார்த்திட்டு என்னை வேலைக்கு நியமனம் செய்த நிறுவன ஊழியரை கொஞ்சம் கடினமாக பேசினார்.

காரணம், பெண்களால் ெதாடர்ந்து வேலையில் ஈடுபட முடியாது, அப்படி இருக்கும் பட்சத்தில் எனக்கு எப்படி வேலை தரமுடியும் என்பது தான் அவரின் சிந்தனையாக இருந்தது. ஆனாலும் எனக்கு வேலை கொடுத்தார். அதுவும் நான் முன்பு வாங்கிய சம்பள தொகையில் இருந்து 40% குறைத்து கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சில குடும்ப காரணமாக வேலையை தொடர முடியாத காரணத்தால், திறமை குறைந்துவிடுமான்னு எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது’’ என்றவர் அதற்கான விடையை ‘அவதார்’ மூலம் பூர்த்தி செய்தார்.

‘‘பெண்கள் பொறுப்பானவர்கள், வீட்டின் கண்கள்…ன்னு சின்ன வயசில் இருந்தே சொல்லித்தான் வளர்க்கிறார்கள். அப்படி இருந்தும் அந்த பெண்ணால் மட்டும் ஏன் வேலை செய்யும் இடத்தில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடிவதில்லை. குடும்பத்ைத பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் இன்றும் பெண்களுடையது தான். இதெல்லாம் பார்த்துக் கொண்டே நீ வேலைக்கும் போறியா, அது உன் விருப்பம் என்பது தான் சமூகம் சொல்கிறது என்பதை புரிந்து கொண்டேன். 2000ம் ஆண்டு அவதார் துவங்கினேன்.

ஐந்து வருடம் பல நிறுவனங்களுக்கு சென்று பெண்கள் சந்திக்கும் பிரச்னைகள், அதனால் அவர்களால் வேலையை தொடர முடியாமல் போகும் நிலை பற்றி பேசினேன். என்னதான் பேசினாலும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெறும் பேச்சினால் புரிய வைக்க முடியாது என்று புரிந்து கொண்ேடன். அவர்களுக்கு ஆய்வு செய்யப்பட்ட எண்கள் தேவைப்பட்டது.

அடுத்த கட்டம் ஆய்வில் இறங்கினேன். ஒரு பெண் வேலையில் இருந்து சில காலம் விடுப்பு எடுப்பதால் அவளுக்கும் குடும்பத்துக்கும் ஏற்படும் நஷ்டம் என்ன என்று ஒரு சர்வே எடுத்தோம். அதை கொண்டு நிறுவனங்களை அணுகினோம். அதன் பிறகு தான் அவர்களின் பார்வை கொஞ்சம் மாறியது’’ என்றவர் 2005ம் ஆண்டு பெண்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்காகவே அவதார் – ஐவினை துவங்கியுள்ளார்.

‘‘ஐ வின் ஒரு பயங்கர ஆய்வுக்கு பிறகு தான் பிறந்தது. 2006ல் ஸ்கோப் நிறுவனம் எங்களுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தார்கள். உடனே பலதரப்பட்ட பெண்களை நேர்காணல் செய்தோம். அதில் நிறைய பேர் வேலையில் இருந்து பிரேக் எடுத்தவங்க. படிப்பறிவு, திறமை இருந்தும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்கவில்லை. முதல் வருடம் 148 பெண்களை வேலைக்கு சேர்த்தோம். அடுத்த வருடம் அதே நிறுவனத்தில் 480 பெண்களை வேலைக்கு நியமித்தோம்.

இது எங்களுக்கு பெண்கள் மேல் நம்பிக்கையை கொடுத்தது. சில காரணங்களால் வேலையில் இருந்து விலகிய பெண்கள் திரும்ப வேலைக்கு சேர முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்ட பெண்களுக்கு ஒரு வேலை வாய்ப்பை ஐ-வின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். இதுநாள் வரை 50 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்டுத்தி தந்திருக்கிறோம்’’ என்றவர் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஆதரவு
கண்டிப்பாக அவசியம் என்றார்.

‘‘ஒரு பெண் வேலையில் ஈடுபட்டால், அது அவ்வளவு எளிது கிடையாது. எந்த விதமான வேலையாக இருந்தாலும் வீட்டின் ஆதரவு அவர்களுக்கு மிகவும் அவசியம். முக்கியமா குழந்தையை பார்த்துக் கொள்ள ஆட்கள் இருக்கணும். அதுமட்டும் இல்லை வீட்டில் மாமனார், மாமியார் மற்றும் கணவரின் ஆதரவும் அவசியம். இவர்கள் எல்லாரும் அவர்கள் வேலையில் அடுத்த கட்டம் நகர்வதற்கான ஒரு ஏணிப்படிகள் தான். இந்த ஏணிப்படிகள் வேலைக்கு போகும் பெண்களுக்கு மட்டும் இல்லை… அவர்களின் சிறிய வயதில் இருந்தே அமைப்பினை ஏற்படுத்தி தரவேண்டும்.

வசதி உள்ளவர்கள் தங்கள் குழந்தைகள் விரும்பும் துறையில் படிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு வேலை சுலபமாக கிடைத்துவிடும். ஆனால் அதுவே தாழ்த்தப்பட்ட பொருளாதாரம் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களில் 60% தான் வேலைக்கு போறாங்க. இவர்கள் குறிப்பா வீட்டு வேலைக்கு தான் செல்கிறார்கள். அதில் ஒரு சிலர் பட்டப்படிப்பு முடித்திருப்பார்கள்.

ஆனால் படித்த படிப்பிற்கான வேலையில் இருப்பதில்லை. படிச்சு பட்டம் வாங்கிடலாம். திறமை இல்லை என்றால் எங்குமே அவர்களால் மிளிர முடியாது. ஆங்கில இலக்கியம் படிச்சிருப்பாங்க. ஆனால் ஒரு வாக்கியம் தவறில்லாமல் எழுதவோ பேசவோ தெரியாது. இவர்களாலும் நல்ல வேலைக்கு செல்ல முடியும். அதற்கு மூன்று விஷயம் அவசியம். முதலாவது மென்டார். என்ன செய்யணும்ன்னு வழிநடத்த ஒரு நபர். இரண்டாவது ரோல்மாடல். ஒருவரை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவரைப் போல் பின்பற்ற வேண்டும். மூன்றாவது கேரியர் கோச். திறமையை கண்டறிந்து வழிநடத்தும் நபர். இந்த மூன்று ஏணிகளை கொண்டு துவங்கப்பட்டது தான் ‘புத்ரீ’ திட்டம்.

புத்ரீ 2016ம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னை, கோவை, புதுவை உட்பட 46 பள்ளிகள் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். இதுவரை 8ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை 5000 பெண் குழந்தைகளை நாங்க வழி நடத்தி வருகிறோம். இதில் ஒரு சில குழந்தைகளுக்கு உதவித்தொகையும் கிடைத்துள்ளது’’ என்றவர் பெண்களின் பாதுகாப்பிற்கு ஆண்களுக்கும் சரியான வழிநடத்தல் தேவை.

‘‘எப்ேபாதுமே பெண்களை பற்றி தான் பேசுறோம். இவர்கள் வாழ்வில் ஆண்களின் பங்கு என்ன? இன்றைய காலக்கட்டத்தில் சின்ன குழந்தைகள் முதல் இளம் பெண்கள் ஏன் வயதானவர்கள் கூட பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள். பெண்களை ஆண்கள் ஒரு மோகப் பொருளாகத் தவறான கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள். ஒரு பெண் சந்திக்கும் பிரச்னையை பற்றி ஏன் ஆண் குழந்தைக்கு நாம் சொல்லி வளர்ப்பதில்லை. அதை புரிய வைக்கத்தான் ‘மித்ர’ என்ற திட்டத்தை துவங்கினோம்.

இப்போது சென்னையில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்த திட்டத்தில் (14 வயதிற்கு ேமற்பட்ட ஆண் குழந்தைகள்) 10 பள்ளிகள் இணைந்துள்ளனர். ஆண் குழந்தைகள் பெண்களை பற்றி பொய்யான எண்ணத்தில் தான் இருக்காங்க. பெண்கள் இந்திய வரலாற்றில் எவ்வாறு இடம் பெற்று இருக்காங்க. என்னென்ன கஷ்டங்களை அனுபவிச்சு இருக்காங்க. இன்று அவர்கள் வேலைக்கே சென்றாலும் அதில் பிரச்னைகளை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் எல்லாவற்றையும் ஆண் குழந்தைகளுக்கு சிறிய வயசில் இருந்தே பல விஷயம் மூலமாக புரிய வைக்கிறோம்.

இந்த திட்டம் துவங்கி ஆறு மாதம் தான் என்றாலும் குழந்தைகளின் மனநிலையில் நல்ல மாற்றம் தெரிவதாக அம்மாக்கள் தெரிவித்துள்ளனர். இது எங்களுக்கு ஒரு பாசிடிவ் எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. வளரும் தலைமுறைகள் பெண்களை இழிவாக பார்க்காமல் மதிப்புடன் நடத்துவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்று வருஷத்தில் 10 ஆயிரம் ஆண் குழந்தைகளை பெண்களை குறித்து நல்ல சிந்தனைகளோடு கொண்டு வரணும்ன்னு எண்ணம் இருக்கு. மேலும் சென்னை மட்டும் இல்லாமல் மற்ற இடங்களுக்கும் ‘மித்ர’ திட்டத்தை கொண்டு செல்லணும்’’ என்றார் சவுந்தர்யா ராஜேஷ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தூதுவளை!! (மருத்துவம்)
Next post திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)