வேண்டாமே விருதுகள்! (மகளிர் பக்கம்)
வெளியில் உள்ள கலைகள் நம்மை நோக்கி வரலாம். அதுவே நம்மை ஆட்படுத்திக் கொள்ளக் கூடாது.
– சுப்பிரமணிய பாரதியார்
கால சக்கரங்கள் வேகமாக சுழலுகின்றன. உலகமயமாக்கல் என்ற நிலையில் பழைய மரபுகள், கலாச்சாரங்கள், பூர்வீக நினைவுகள், பண்பாடுகள் போன்றவை நாளுக்கு நாள் மங்கலாகிக் கொண்டு வருகின்றன. கிராமங்களில் உயர்ந்து வளர்ந்த ஆலமரங்கள், வேம்பு மரங்களுக்குக் கீழ் அமைந்த மேடைகளில் அமர்ந்து பேசிய கிராமிய நாட்டுப்புறக் கதைகள், விடுகதைகள், தெம்மாங்கு பாடல்கள், நாட்டார் பண்பாடுகள், கலைகள் நாளுக்கு நாள் மறைகின்றன.
ஒரு நாட்டின் கலை, கலாச்சாரம் அச்சமூகத்தினை பிரதிபலிக்கும் சிறந்த கருவியாகும். கலை என்பது பொழுது போக்கிற்காக மட்டுமின்றித் தகவல் ஊடகமாகவும், கலாச்சாரப் பாதுகாவலனாகவும், மன உணர்வுகளின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. குறிப்பாக நாட்டுப்புறக் கலைகள் நமது மண்ணோடு, நம்மோடு தொடர்புடையவை. பாரம்பரியத்தையும் அடி ஆழத்து வேர்களையும் பிரதிபலிப்பவை.
நம் முன்னோர்களின் நம்பிக்கைகள், எண்ணங்கள், சிந்தனைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை நாட்டுப்புறக் கலைகள் மூலம் அறியமுடிகிறது. இக்கலைகளே சமுதாயத்தின் ஆவணமாகத் திகழ்கின்றன. இக்கிராமியக் கலைகளே தகவல் பரப்பும் ஊடகமாகவும், பழக்க வழக்க பண்பாட்டுப் பெட்டகமாகவும் திகழ்ந்துள்ளன. இச்சிறப்பு மிக்க நாட்டுப்புறக் கலைகள் இந்நாளில் எப்படி இருக்கிறது என்று நம்மோடு பகிர்கிறார் நாட்டுப்புற கலைஞர் சுகன்யா.
“கும்பகோணம் பூர்வீகம். சிறுவயதிலிருந்தே நாட்டுப்புறக் கலையின் மீது ஈர்ப்பு அதிகம். அதனால், பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு திண்டுக்கல் சக்தி கலைக் குழுவில் இணைந்து, நாட்டுப்புறக் கலைகள் பற்றிய படிப்பில் டிப்ளமோ முடித்தேன். கடந்த 12 ஆண்டுகளாக இத்துறையில் இயங்கி வருவதோடு, மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்து வருகிறேன். குறிப்பாக ‘மாற்று ஊடக மையம்’ காளீஸ்வரன் ஐயாவோடு இணைந்து பல கல்லூரிகள், பள்ளிகளில் நாட்டுப்புறக் கலைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றுக் கூறும் சுகன்யா கும்மியாட்டம், பறையாட்டம், கோத்தகிரி கும்மி, கோலாட்டம், தாண்டியா, ஒயிலாட்டம், அறுவடை ஒயிலாட்டம், லெசீம், கரகாட்டம், சக்கையாட்டம், குச்சியாட்டம், குறவன் குறத்தியாட்டம், முளைவிளை களியல், ஹோலி நடனம், பட்டாம் பூச்சி நடனம், விசிறி நடனம், வீதி நாடகம்…. என முப்பத்தேழு நடனங்கள் கற்றுள்ளார்.
இந்த கலைகளைப் பயன்படுத்தி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மக்களிடையே நேரடியாக செய்கிறோம் என்று கூறும் சுகன்யா, “நமது கலைகளைப் பயன்படுத்தி அந்தந்த மக்களின் மொழிகளில் நேரடியாக சொல்லும் போது, சொல்லவேண்டிய விஷயம் எளிமையாக அவர்களை சென்றடைகிறது.
பறை மக்களை ஈர்க்கும் இசைக்கருவி. ‘பறை’ என்றால் சொல்லுதல் என்று அர்த்தம். ஒரு மீடியா உள்ள போய் கருத்து சொல்வதற்கும், நாட்டுப்புற கலைஞர்கள் சென்று சொல்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. டி.வி. தொடர்களில் சொல்லும் கருத்தை விட எங்களுடைய கருத்து வீரியமானதாக இருக்கும். இதில் கவர்ச்சிக்கு இடம் இல்லை. மிகவும் எளிமையாக மக்களை சென்றடையும் படி கொண்டு போகிறோம்.
நம்முடைய பாரம்பரிய நடனங்களை இவ்வளவு கத்து வச்சிருக்கோம். ஆனால் நான் பத்தாம் வகுப்பு மட்டும் வரை தான் படிச்சிருக்கேன் என்பதாலோ என்னவோ, ஒரு சில பள்ளிகளில் நடனம் சார்ந்து வேலைக்கு விண்ணப்பித்தால், மரியாதையோ, அங்கீகாரமோ கிடைப்பதில்லை. ஏளனமாகப் பார்க்கிறார்கள். ராப், ஜாஸ், சும்பா போன்ற நடனங்களுக்கு இருக்கும் மரியாதை நம்முடைய பாரம்பரிய நடனங்களுக்கு கிடைப்பதில்லை. விதைக்கிற இடத்தில் சரியாக விதைத்தால் தான் எதுவாக இருந்தாலும் சரியாக வளரும். அதேபோல் நம் நாட்டுப்புற கலைகளும் பள்ளிகளில் பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.
இங்கு நாட்டுப்புற கலைஞர்கள் பாரம்பரியமாகவும், எங்களை போன்று டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள். வெளிநாட்டு நடனம், சண்டைப் பயிற்சிகள் தான் பெரும்பாலான பள்ளிகளில் சொல்லித்தராங்க. நமது கலைகளும் சொல்லிக் கொடுக்கும் போது, வரும் சந்ததியினர் தெரிந்து கொள்வதோடு, எங்களை போன்ற நாட்டுப்புற கலைஞர்களுக்கும் அது ஒரு வேலை வாய்ப்பாக அமையும்.
நம் வீட்டுச் சாளரத்தை திறந்து வைத்து வெளிக் காற்று வர அனுமதிக்கலாம். ஆனால் அந்த காற்றே வீட்டில் உள்ள பொருட்களை புயல் போல் அடித்து கீழே தள்ளுகின்ற நிகழ்வாக இருக்கக் கூடாது. என்னதான் மற்ற வேலைகளுக்குப் போனாலும், இந்த கலைகளை எங்களால் விட முடியாமல், இதுலையே சுழன்று கொண்டிருக்கிறோம். அரசாங்கம் எங்களை ஆதரிக்க வேண்டும்” என்றார்.
‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி மூலம் சென்னை நகரத் தெருக்கள் மற்றும் பூங்காக்களில் ஆண்டுக்கொரு முறை நாங்க நம்முடைய பாரம்பரிய கலைகளை நடத்தி வந்தோம். இது எங்களை போன்ற பல கலைஞர்களுக்கு ஊக்கமாக இருந்தது. ஆனால், இப்போது இந்த நிகழ்வும் முடங்கி போயிருக்கிறது என்று கூறும் சுகன்யா, “நான் ஒரு கலைஞர். அரசால் துவங்கப்பட்ட இந்த நிகழ்வை, தற்போது காளீஸ்வரன் என்ற ஒற்றை நபர் வீதி, வீதியாக உண்டியல் ஏந்தி வசூல் செய்து நடத்தி வருகிறார். அவர் நிறைய நாட்டுப்புற கலைஞர்களின் குழந்தைகளை படிக்கவும் வைத்து வருகிறார்’’ என்று கூறும் சுகன்யா மாற்று ஊடக மையம் சார்பாக ‘வீதி விருது’ பெற்றுள்ளார்.
‘‘அரசு நமக்கு விருது கொடுக்குமென்று எதிர்பார்க்க முடியாது. ஒன்று பணம் கட்ட வேண்டும், இல்லை என்றால் பரிந்துரை செய்ய வேண்டும். அதனால் நான் எப்போதுமே விருதினை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. எங்களை போன்ற கலைஞர்களுக்கு நலவாரிய அட்டை கொடுத்திருக்கிறார்கள்.
அதில் மிகக் குறைந்த அளவிலேயே சலுகைகள் இருக்கிறது. எங்களுக்கான சலுகைகளில் பேருந்தில் பயணிக்கும் போது இலவச பஸ் பாஸ், கலைப் பொருட்களை இலவசமாக எடுத்துச் செல்வதற்கு வழிவகை செய்யலாம். கலைஞர்கள் என்றால் பைசா கொடுத்தா ஆடிட்டு போய்டுவாங்க என்கிற மனநிலையில்தான் பலர் இருக்கிறார்கள். அவர்களின் உணர்வுகளை, திறமைகளை மதிப்பதில்லை. வெயில், மழையென்று பார்க்காமல் நாங்க நிகழ்ச்சியினை நிகழ்த்துகிறோம்” என்று தனது ஆதங்கத்தைப் பதிவு செய்யும் சுகன்யா சொந்தமாக ‘குடந்தை கலைக் குழு’ என்ற குழுவை உருவாக்கி இயங்கி வருகிறார்.
“திறமை இருக்கு. அதை பயன்படுத்துவதற்கான இடம் இல்லை. குழந்தைகளுக்குப் பயிற்சி தரமா கொடுக்க வேண்டும். இந்த 12 ஆண்டுகளில் ஒரு நான்காயிரம் பேருக்கு மேல் பயிற்சி கொடுத்திருப்பேன். நிறையக் கலைக்குழுக்கள் உருவாக்கி விட்டிருக்கிறேன். சொந்தமாக கலைக்குழு ஒன்றை ஆரம்பி என்று ஆலோசனை கூறி பதிவு செய்து கொடுத்தவர் காளீஸ்வரன் ஐயா. ஒரு பெண் கலைக்குழு ஆரம்பிக்க போறான்னா, இந்த சமூகத்தில் அவ்வளவு சீக்கிரம் முன்னேற விட மாட்டாங்க. குடும்பம் பின்னணி வேண்டும். பொருட்கள் வாங்குவதற்கு முதலீடு செய்ய வேண்டும். அதற்கு தற்போது முடியாததால், வாடகைக்கு தான் எடுத்து பயன்படுத்தி வருகிறோம். எங்களுக்கென்று நிரந்தர இடமும், கலைக்கருவிகளும்
கிடையாது.
சிலர் கலையையும் வியாபாரக் கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறார்கள். அதனால் பலரின் பார்வையில் எங்களுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இப்போது நிறைய தப்பாட்டக் குழுக்கள் வந்துவிட்டது. ஒருவர் ரூ.10,000 கேட்டா, இல்லை நாங்க ரூ.8000-க்கு பண்ணிக் கொடுக்கிறோம் என்று சிலர் கீழிறங்கி ஒத்துக் கொள்கிறார்கள். கலைஞரிடம் ஒற்றுமையில்லை. அப்படி ஒற்றுமையாக இருந்திருந்தால் பல மாற்றங்கள் நிகழ்த்தியிருக்கலாம். இந்த கலை என்னுடனே மறைந்துவிடக்கூடாது. நான் கற்றதை மற்றவர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நம் பாரம்பரியக் கலை என்றுமே அழிந்துவிடக்கூடாது. எந்த ஒரு கலையாக இருந்தாலும், பணமிருந்தால் தான் கற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் வசதியில்லாதவர்களின் நிலை? ஆர்வம் இருந்தும் அவர்களால் எந்த கலையையுமே கற்றுக் ெகாள்ள முடியாத நிலையில் தான் நாம் இருக்கிறோம்” என்றவர் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ேபாதிய அடையாளம் இல்லை என்பதை வலியுறுத்தினார்.
‘‘மற்ற நடனத்தை போல் நாட்டுப்புறக் கலைகளுக்கு போதிய விளம்பரங்கள் கிடையாது. இன்று இந்த கலைகள் கிராமியத் திருவிழாக்களில் நிகழ்த்தப்படுகிற ஒன்றாக மட்டுமே சுருங்கியுள்ளது. தொழில் திட்டத்தினரும், தொழில் பயில்வோரும் நமது கலைகளை வளர்ச்சிக்கான பாதை என்று கருதுவதில்லை. உலகளாவிய சந்தைப் பொருளாதார நெருக்கடியில் நமது கலைகளுக்கு போதிய முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை. தேசிய,
சர்வ தேசிய அளவில் பணியில் இருக்கும் கொள்கை வகுப்பாளர், திட்ட வடிவமைப்பவர் இருவரும் கலைகளையும், கலைஞர்களையும் ஒருங்கிணைப்பதில் இருக்கும் முக்கியத்துவத்தை உணர வேண்டும்.
இன்று தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியான தகவல் தொடர்பிற்கும், பொழுது போக்கிற்கும் பல்வேறு ஊடகங்கள் உருவாகி வருகின்றன. இம்மாறுதல் இயற்கையானதே. இவற்றினை நாம் எளிதில் புறக்கணித்துவிட முடியாது. காலத்திற்கு ஏற்ற மாறுதல்கள் தேவைதான். அதே சமயம் நம்முடைய பாரம்பரியத் தன்மைகளையும், கலை மரபுகளையும் ஒதுக்கிட அவசியமில்லை. அதை இழந்துவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை’’ என்றார் நாட்டுப்புற கலைஞரான சுகன்யா.
மணக்கும் ஜவ்வரிசி வடாம்!
கோடை காலம் வந்துவிட்டால் வீட்டு மொட்டை மாடியில் வடாம் காயவைப்பது வழக்கம். வடாம் வற்றல் செய்யும் போது இதை பின்பற்றுங்கள் தோழிகளே!
*வடாம், வற்றல் செய்யும்போது கூழ்மாவுடன் சிறிது நெய் கலந்து விட்டால் பொரிக்கும்போது கமகமஎன்று மணக்கும்.
*வடாம் வைக்கும்போது இடையிடையே மிளகாய் வற்றலை வைத்து விட்டால் அணில், காக்கை வராது.
*வடாம் வைக்கும் டப்பாவில் மிளகாயைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
*குழம்பு கருவடாம் செய்யும்போது சிறிது கறிவேப்பிலையை அரைத்துச் சேர்த்தால் சுவை கூடும்.
*வடாம், வற்றல் வைக்கும் டப்பாக்களில் வெந்தயம் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.
*ஜவ்வரிசி வற்றல் மாவில் காரச்சுவைக்கு மிளகு, சீரகப்பொடி கலந்தால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும். உடம்புக்கும் நல்லது.
*எந்த வடாமானாலும் பெருங்காயம் சேர்ப்பது வாசனையைக் கூட்டும். உடம்புக்கும் நல்லது.
*ஜவ்வரிசி வற்றலில் நீர் அதிகமாகி விட்டால் சிறிதளவு அவலை நீரில் ஊற வைத்து நீரை வடித்து அதில் கலந்து விட்டால் கூழ் கெட்டியாகிவிடும்.
*எந்த வடாமாக இருந்தாலும் சிறிது சோம்பு, லவங்கம், கசகசா ஆகியவற்றை வறுத்துப் பொடித்து கூழுடன் கலந்து விட்டால் மசாலா வடாம் ரெடி.
*வடாம் கூழில் சிறிது வேப்பம்பூவைச் சேர்த்தால் சுவை கூடும். உடம்புக்கும் நல்லது.
*ஜவ்வரிசி வடாம் கூழில் உப்பு அதிகமாகி விட்டால் மேலும் சிறிது ஜவ்வரிசியை வேக வைத்துக் கலந்துவிட்டு காய வைத்தால் போதும்.
Average Rating