‘ஒப்பரேசன் கிழக்கு’ – நோக்கம் என்ன? (கட்டுரை)

Read Time:14 Minute, 9 Second

‘எனது வாழ்நாளில் இந்த நாளைத் தான் காணக் காத்திருந்தேன்’ என, காஷ்மிர் பிரிக்கப்பட்ட விவகாரம் குறித்து, தனது ட்விட்டரில் கருத்திட்ட சுஷ்மா சுவராஜ் மறைந்துவிட்டார்.

2019 ஓகஸ்ட் மாதத்தின் முதல்வாரத்தில், காஷ்மிர் விவகாரத்தில், இந்தியா எடுத்திருக்கும் நடவடிக்கைகள், உலகத்திலேயே ஒரு களேபரத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இது வரலாற்றுப் பதிவாகிவிட்டது.

உலகம் முழுவதுமே, தேசியவாதமும் பாதுகாப்புவாதமும் தலைதூக்கி வருகின்றன. இஸ்‌ரேலின் பாலஸ்தீனம் மீதான நிலைப்பாடு, இலங்கையின் தமிழ் ஈழம் மீதான நிலைப்பாடு, மியான்மரின் றோஹிஞ்யா முஸ்லிம்கள் மீதான நிலைப்பாடு, சீனாவின் திபெத் நிலப்பகுதி, உய்குர் பகுதி முஸ்லிம்கள் மீதான நிலைப்பாடுகள் போன்றவைகளும் இதற்குள் உள்வாங்கப்படுகின்றன.

கிழக்கு மாகாணம், முழு இலங்கைக்கும் முன்னுதாரணமாக, கடந்த மாகாண சபையின் இறுதிப்பகுதியில் பேசப்பட்டது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் இன விகிதாசாரத்தைப் பார்க்கின்ற போது, ஓரளவுக்குச் சமமான நிலையையே எட்டிவருகிறது. அதிலும் முஸ்லிம்களின் வளர்ச்சி சதவீதம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதன் பின்னர், கடந்த 2015இல் உருவான நல்லாட்சி அரசாங்கம், தமிழர்களின் தேசியவாதத்தைத் தூக்கி வீசிவிட்டு, ஒருபடி மேலான, ஒற்றுமைவாதத்தை வெளிப்படுத்தியிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கிழக்கு மாகாண சபையில் அதிகமான ஆசனங்களைக் கொண்டிருந்தபோதிலும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு, முதலமைச்சர், இரண்டு அமைச்சர் பதவிகளையும் கொடுத்து ஆட்சியமைத்து, தனது பெருந்தன்மையை முழு உலகுக்குமே காட்டியது.

ஆனால், தமிழ் மக்கள் மத்தியிலோ அக்கட்சி மீது, பெரும் கோபத்தையும் எதிர்ப்புணர்வையும் இந்த அணுகுமுறை ஏற்படுத்தி இருந்தது. அது, இப்போதுவரை மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

இலங்கையில், பெரும்பான்மையினர் மீதான ஆதரவு நிலைப்பாட்டை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக, முஸ்லிம்கள் மீதான ஆதரவு நிலைப்பாட்டிலும் இருக்கிறது. ஆனாலும், மக்களின் உணர்வுபூர்வமான நிலைப்பாட்டைத் தணிப்பதற்க்கான வேலைகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடுவதாகத் தெரியவில்லை. அதற்குள்தான், ஒவ்வொரு கட்சியாக, கிழக்கைத் தம்வசப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

வடக்கிலுள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாடு சார் எதிர்ப்பு நிலை, கிழக்கில் பொருந்துமா என்று, எந்தக் கட்சியுமே சீர்தூக்கிப்பார்ப்பதாக இல்லை.

இதனால், அக்கட்சிகளின் முன்னெடுப்புகளால் கிழக்கில் நடைபெறப்போகும், தமிழர்கள் மீதான பாதக முடிவுகளை, யாரும் மனங்கொண்டு பார்ப்பதேயில்லை என்பதே எமக்குள்ள கவலையாகும்.

இப்போது கிழக்கில், தமிழர்களை, ஆங்காங்கே முஸ்லிம்கள் மதமாற்றம் செய்து கொண்டிருப்பதாகவும் தமிழர் கிராமங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதாகவும் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ற கேள்விகளை இளைஞர்கள் வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தம்பக்கம் சார்பான கருத்துகளை முஸ்லிம்கள் முன்வைத்து வருகின்றனர். இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதற்கு, இரு தரப்பிலும் பல ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின், பல தமிழ்க் கிராமங்கள், முஸ்லிம் கிராமங்களாக மாற்றம் பெற்றிருக்கின்றன என்றால், அதற்கு எதிர்க்கருத்துகள் வரத்தான் செய்கின்றன.

அம்பாறை மாவட்டத்தின் நீலாவணை முஸ்லிம் கிராமம், சாய்ந்தமருது, சம்மாந்துறை, வீரமுனை, திராய்க்கேணி என தமிழர்களின் கிராமங்கள், இப்போது முஸ்லிம் கிராமங்களாகக் காண்பிக்கப்படுகின்றன. இக்கிராமங்களில், தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு, அவர்களின் மரணப்பதிவுகளும் பிறப்புப் பதிவுகளும் ஆதாரங்களாக இருக்கின்றன.

அண்மையில், மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த, முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் ஓய்வு பெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன், 300 தமிழ்க் கிராமங்கள் பற்றி வெளியிட்டிருந்த கருத்துகள், பெரும் அமளியை முஸ்லிம் தரப்புகள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அவருடைய எண்ணிக்கையில் தவறிருக்க வாய்ப்பிருந்தாலும், தகவலில் உண்மையில்லை என்று ஒதுக்கி வைத்துவிடமுடியாது என்பது கிழக்கில் வாழும் தமிழர்களுடைய வாதம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர், மட்டக்களப்பில் சிவபதமடைந்த திசவீரசிங்கம் சற்குணம் என்பவரின் மரண அறிவித்தலில், ‘சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட’ என்ற வாசகம் இருந்தது. இதற்கு “இப்போதைய சாய்ந்தமருது வேறு; அவர்கள் குறிப்பிடும் இடம் வேறு” என்ற கருத்தை முன்வைக்க முடியுமா?

அதேபோன்று, நண்பர் ஒருவர் முகநூலில், இஸ்லாத்துக்கு தாமும் மாறி, தம்முடைய குடும்பத்தினரையும் மாற்றிக் கொண்டவர்களது பெயர் மாற்ற அறிவித்தல்களை அண்மையில் பதிவிட்டிருந்தார். ஆனால், முஸ்லிம்கள் எவரும் தமிழர்களான அறிவித்தல்கள் எதுவும் இதுவரையில் வெளிவந்ததாகத் தகவல் இல்லை.

இவற்றுக்கு, தமிழ் மக்களின் ஏழ்மையும், அச்சநிலையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, அரசியல் அதிகாரமும் பயன்பட்டது. இதனை யாரும் மறுப்பதற்கில்லை.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது, அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குக்கூட, மட்டக்களப்பில் ஒரு தனிப் பிரதேச செயலாளர் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. தங்களின் தனித்துவமான இருப்பு என்ற அடிப்படையில், தனியான முஸ்லிம் பிரதேசங்களாக, அந்தப் பிரதேச செயலாளர் பிரிவுகளை, அவர்கள் ஏற்படுத்திக் கொண்டார்கள்.

தமிழர்கள் இழந்து போயிருக்கின்ற அரசியல் அதிகாரத்தையும் பொருளாதார பலத்தையும் பெற்றுக் கொள்வதற்கான எந்தவொரு மாற்றையும் புலம்பெயர்ந்திருக்கின்ற தமிழர்கள் மேற்கொள்வதில்லை. இருந்தாலும், இங்கு ஒருவிதமான அரசியல் குழப்பத்தை மாத்திரம் வைத்துக் கொண்டிருப்பதற்கு, சகல விதமான உந்துதல்களையும் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தாலும், இன்றைய நிலையில் முஸ்லிம், தமிழர்களிடையே நடைபெற்றுவருகின்ற, இவ்வாறான வாதப்பிரதிவாதங்கள் அவர்களது உறவில் வளர்ச்சியை ஏற்படுத்துமா, கிளர்ச்சிகளைத் தூண்டிவிடுமா என்று கூறிக்கொண்டிருப்பதை விடவும், இதனைச் சரி செய்வதற்கான, தணிப்பதற்கான வேலைகள் தேவைப்படுகின்றன.

நாட்டில் தமிழ்த் தேசியவாதத்தைக் காக்க முனையும் கட்சிகள், தங்களுடைய எதிர்காலச் செயற்பாடுகள், திட்டங்கள் பற்றி முன்வைப்பதை மறந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான விமர்சனங்களையே முன்வைத்து வருகின்றன. இதன்மூலம் விளையும் பலாபலன் என்ன என்று அவர்களுக்கே தெரியாமலிருக்கிறது.

அண்டை நாடான இந்தியா, திடீரென்று எடுத்த முடிவு, மற்றுமொரு சிந்தனையை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

13ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டதன் பின்னர், மலர்ந்த மாகாண சபை அதிகாரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வடக்குக் கிழக்குத் தமிழர்களே. ஏனைய மாகாணங்கள் சிறப்பான பலாபலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

1987 முதல் அமுலுக்கு வந்த வடகிழக்கு இணைப்பை, 2006 ஒக்டோபர் 16இல் செல்லுபடியற்றதாக்குவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2007 ஜனவரி முதலாம் திகதி முதல் வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு மாகாண சபைகளும் பிரிக்கப்பட்டதன் பின்னர், கிழக்குத் தமிழர்களே மிகவும் மோசமாக நெருக்குதல்களுக்கு உள்ளாகிக் கொண்டு வருகிறார்கள்.

மத்தளத்தை விடவும், மிகவும் மோசமாக அடிபடுகின்ற கிழக்குத் தமிழர்களில் அக்கறை உள்ளவர்கள் நிறையவும் பேர் வந்து போகிறார்கள். இதுத் தேர்தல் நடைபெறப்போகின்ற காலம் என்பதால்தான் இது சூடு பிடிக்கிறது.

எல்லாவகையிலும் தோற்றுப் போன பலருக்கு இருக்கின்ற ஒருவழி புதிதாக முளைக்கின்ற, வருகின்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்வது அல்லது அவர்களே புதிதாக ஒன்றை உருவாக்குவதாகும். இவையெல்லாம், வெறும் வாக்குப்பிரிப்புகளைச் செய்யும் என்பதில் சந்தேகமேயில்லை.

வெளியே தெரியாமல் செய்துகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும். அரசியல் நகர்வுகளுக்கு, இவை எதனையும் செய்துவிடாது என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கு, பாதகம் ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு என்ன என்பதே, இப்போதைய அரசியல் கட்சிகளின் கிழக்கு வருகைக்கு அவர்கள் தேடும் காரணம்.

தமிழ் மக்களுக்குத் தலைமையேற்கப் போவது யார் என்பதை, அரசியல் தலைவர்கள், தமக்குத் தாமே தீர்மானிக்க முற்படுகிறார்களே தவிர, தமக்கு யார் தலைமையேற்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்ற நிலையில் உள்ள தமிழ் மக்களை, அவர்கள் மறந்து விட்டார்கள்.

இதிலிருந்து ஒன்றை மட்டும் நாம் முடிவு செய்து கொள்ளமுடிகிறது. தலைமைக்கு அடிபட்டுக் கொண்டே, நாட்டை வீணாக்கிவிடுவார்கள் என்பதுதான். அதன் ஒரு முக்கிய பகுதியாகத்தான் கிழக்கு இருக்கிறது.

ஒருபுறம் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்குமிடையிலான ஒற்றுமைக் குலைப்பு; ‘நாங்கள் சுத்தக்காரர்கள்’ என்று சொல்லும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே, ‘மக்களுக்காகத்தான் நாங்கள் வருகிறோம்’ என்று சொல்லும் கட்சிகளைத் தொடங்கும் அரசியல்வாதிகளின் சந்திபிரிப்பு நடவடிக்கைகள் மூலம், கருத்தொருமையில்லாத ‘ஒப்பரேசன் கிழக்கு’ காணப்போகும் முடிவுதான் என்ன?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பூமியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத இடங்கள்!! (வீடியோ)
Next post பூமியை தவிர மற்ற கிரகங்களில் நடக்கும் நிகழ்வுகள்!! (வீடியோ)