முஸ்லிம் தனியார் சட்டம்: குரங்கின் கையில் பூமாலை !! (கட்டுரை)
இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில், அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தில், காலத்துக்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில், பரவலாக உடன்பாடு காணப்படுகின்ற சூழ்நிலையில் கூட, இன்று இவ்விவகாரம் தேவையற்ற விதத்தில் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காண முடிகின்றது.
முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் வெளிச்சக்திகளும் வெளிச்சக்திகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் பேர்வழிகளும், மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இது ஒரு சர்வதேச பிரச்சினை போலவும் இதைத் திருத்தினால், நாட்டில் உள்ள எல்லாச் சீர்கேடுகளும் சீர்படுத்தப்பட்டு விடும் என்பது போலவும் இவ்விடயம் இன்று பூதாகரமாக்கப்பட்டுள்ளது. ‘ஓர் அழகான பூமாலை, குரங்குகளின் கைகளில் அகப்பட்டு, சின்னாபின்னமாகும்’ உவமானம், இந்த இடத்தில் நினைவுக்கு வருகின்றது.
இலங்கையில் பல பிரத்தியேக (தனியார்) சட்ட ஏற்பாடுகள் இருந்தன. தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் தனியார் சட்டம் என்பவையே அவையாகும்.
நாட்டில் பொதுவானதொரு சட்டம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, காலவோட்டத்தில் இதில் முதல் இரு சட்டங்களும் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போய்விட்டன (தேசவழமைச் சட்டம், யாழ்ப்பாணத்தவர்களால் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது).
ஆனால், முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து, அதனோடு தொடர்புபட்ட ஏனைய நடைமுறைகள் தொடர்பான வரண்முறைகளை விதந்துரைக்கும் முஸ்லிம் தனியார் சட்டம், இன்னும் நடைமுறையில் இருக்கின்றது. இது இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தை நடைமுறையாகக் கொண்டு, நாட்டுக்கு நாடு, சிறுசிறு மாற்றங்களுடன் நடைமுறைப்படுத்தப்படும் ஒரு சட்டமாகக் காணப்படுகின்றது.
1700களின் பிற்பகுதியிலேயே, முஸ்லிம்களுக்காக ஒரு பிரத்தியேக சட்ட ஏற்பாட்டை மேற்கொள்ள, கொலனித்துவ ஆட்சியாளர்களான ஒல்லாந்தர் முன்னின்றனர். இதற்காக, இந்தோனேசியாவில் இருந்த சட்டத் தொகுப்பு தருவிக்கப்பட்டது.
பின்பு, ஆங்கிலேயர் இதை அடிப்படையாக வைத்து, ‘முஹம்மதியர் தொடர்பான விசேட சட்டங்கள்’ என்ற ஒன்றை அமுலாக்கினர். 1806இல் இருந்து, தனியார் அல்லது தனியாள் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
அதன்பின்னர், நியாயம் தீர்ப்பதில் ஏற்பட்ட பல நடைமுறைச் சிக்கல்களைத் தொடர்ந்து, பல மீளாய்வுக் குழுக்களின் சிபாரிசுகளின் அடிப்படையில், அது மறுசீரமைக்கப்பட்டு, முஸ்லிம் தனியாள் சட்டம் என்ற பெயரில், 1951இல் அமுலாக்கப்பட்டது. இந்தச் சட்டமே, இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றது.
இலங்கை போன்ற பல்லினங்கள் வாழும் நாடொன்றில், அமுல்படுத்தப்படும் முஸ்லிம்களின் சட்டங்கள், அரபு நாடுகளின் சட்டங்களைப் போல அமையவியலாது. அது, நாட்டிலுள்ள பொதுவான சட்டத்துக்கு ஒத்திசைவானதாகவும் கட்டாயமான விடயங்களில் பிரத்தியேகமானதாகவும் அமைந்திருக்க வேண்டும் என்பதை, முஸ்லிம்கள் பல வருடங்களுக்கு முன்னரே உணர்ந்து விட்டனர்.
அத்துடன், அதன் காரணமாகவே, இன்றைய காலகட்டத்தில், இச்சட்டம் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் முஸ்லிம்கள் பொறுமையுடன் கையாள்கின்றனர் என்பதையும் ஏனைய சமூகங்கள் விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த அடிப்படையில், நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில், இதற்கு முன்னரும் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. மேலும், சில திருத்தங்களைக் கொண்டு வர வேண்டிய தேவை, இப்போது காணப்படுகின்றது.
இவற்றுள் ஒரு சில திருத்தங்கள், முஸ்லிம்களுக்குள் இருந்து உள்ளார்ந்தமாக உணரப்பட்டுள்ள திருத்தங்களாகும். இன்னும் சில திருத்தங்கள், வெளிச்சக்திகளின் செல்வாக்கால் திணிக்கப்பட்டவை எனலாம். இவ்வாறு திணிக்கப்படும் மாற்றங்களை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
தனித்துவ அடையாளத்துடனான முஸ்லிம் தனியார் சட்டத்தை, இல்லாதொழிப்பதற்கு முஸ்லிம் விரோத நாடுகள், பல்வேறு காய்நகர்த்தல்களைக் காலம்காலமாக மேற்கொண்டு வருகின்றன.
இலங்கையில், தற்போது வெளியில் இருந்து பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்புவோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுதல் ஆகியவற்றுக்கும், முஸ்லிம் விரோத நிகழ்ச்சி நிரலுக்கும் நிறையவே தொடர்பிருக்கின்றது.
இருப்பினும், நியாயமான அடிப்படையில் அதைத் திருத்த வேண்டும் என்ற விடயம் உணரப்பட்டமையால், 2009ஆம் ஆண்டு, அப்போது நீதியமைச்சராக இருந்த மிலிந்த மொறகொடவால், முஸ்லிம் தனியார் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய சிபாரிசுகளை முன்வைப்பதற்காக, அப்போது உயர்நீதிமன்ற நீதியரசராகக் கடமைபுரிந்த சலீம் மர்சூப் தலைமையில், 17பேர் கொண்ட உயர்மட்டக் குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்தக் குழு, சுமார் ஒன்பது வருடங்களாகக் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடத்தியது. முஸ்லிம்களின் திருமணம், விவாகரத்து நடைமுறைகள், இதில் பிரதான இடம்பிடிக்கின்றன.
குறிப்பாக, முஸ்லிம் பெண்கள், ஆண்களின் திருமண வயது, பலதார மணம், தாபரிப்புக்கான கொடுப்பனவு, காழி நீதிபதிகளாகப் பெண்களை நியமித்தல், வலியுறுத்தல் கட்டளை உள்ளடக்கங்கள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயப் பரப்புகளில் முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன.
இந்தக் குழுவில் அங்கம் வகித்த உறுப்பினர்களிடையே, ஓரிரு விடயங்களில் கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன. சமகாலத்தில் வெளியில் இருந்து ‘இச்சட்டத்தை திருத்த வேண்டும்’ என்றும், ‘ஷரிஆ அடிப்படையிலான சட்டத்தில் கைவைக்க யாருக்கும் உரிமை இல்லை’ என்றும் ஏட்டிக்குப் போட்டியான வாதங்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான பின்னணியில், இக்குழுவினர் இரு குழுக்களாகப் பிரிந்து, தனித்தனி அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். இந்தச் சிறிய விடயத்தில் கூட, முஸ்லிம் சமூகத்துக்குள் கருத்து ஒற்றுமை இல்லை என்பதை, இச்சம்பவம் வெளிப்படையாகக் காட்டியது. இதனால் முரண்பாடுகள், வாதப் பிரதிவாதங்கள் இன்னும் வலுவடைந்து, காலம் இழுத்தடிக்கப்பட்டது.
இச்சட்டத்தைத் திருத்துவதில், முஸ்லிம் விரோத மறைமுக நிகழ்ச்சி நிரல் இருந்தாலும் கூட, அரசாங்கத்துக்கு இதில் ஒரு சர்வதேச நலனும் உள்ளது. அதாவது, முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு சர்வதேசம், அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றது.
சர்வதேச நியமங்களுக்கு அமைவாக, விவாகம், விவாகரத்துச் சட்டத்தை அமைத்தாலேயே, வெளிநாட்டுச் சலுகைகள் சிலவற்றை, இலகுவாகப் பெறலாம் என்ற தோரணையில் இந்த அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.
எவ்வாறிருப்பினும், முஸ்லிம் தனியார் சட்ட மறுசீரமைப்புக்காக நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் தலைமையிலான மேற்படி குழு, பொதுவான விடயங்களில் உடன்பாடு கண்டிருந்தது.
ஆனாலும், இரண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டதாலும் அரசாங்கத்தில் அண்மைக் காலத்தில் ஏற்பட்ட குழறுபடிகள், இழுபறிகள் காரணமாக, இன்று வரை இச்சட்டத் திருத்தம் கைகூடவில்லை.
இந்நிலையில், இப்போது மீண்டும் முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்தும் விடயம், பேசுபொருளாகி இருக்கின்றது. சில முன்மொழிவுகள் தொடர்பில் நிபுணர்கள், மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணக்கமும் பெறப்பட்டுள்ளது.
குறிப்பாக, முஸ்லிம் பெண்களின் ஆகக் குறைந்த திருமண வயதை 18ஆக அதிகரித்தல், திருமண ஒப்பந்தத்தில் மணமகளின் கையொப்பத்தைக் கட்டாயமாக்கல், தகுதியுள்ள பெண் காழி நீதிபதிகளை நியமனம் செய்தல் போன்ற விடயங்களில், முற்போக்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக, பெண்களின் திருமண வயதை உயர்த்த, முஸ்லிம் எம்.பிகளும் ஒப்புதலை அளித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு ஒரு விடயத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதாவது, இலங்கையின் பொதுச் சட்டத்தில் 1995ஆம் ஆண்டு, 18ஆம் இலக்கத் திருத்தத்தின் மூலம்தான், ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண வயது 18 என்ற எல்லை நிர்ணயிக்கப்பட்டது.
அதற்கு முன்னர், 1907ஆம் ஆண்டில் 17ஆம் இலக்க திருமணம், விவாகரத்து கட்டளைச் சட்டத்தின் 15ஆம் சரத்தில், ஆணின் திருமண வயது 16 என்றும் பெண்ணின் திருமண வயது 12 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 1951 ஆம் ஆண்டு, முஸ்லிம் திருமணச் சட்டமும் இதே வயதெல்லையை மாற்றாமல் கொண்டுள்ளது என்றும் ஒரு தகவல் கூறுகின்றது.
அப்படியென்றால், தங்களது மார்க்க விடயத்தில், விடாப்பிடியானவர்கள் என்று கருதப்படுகின்ற முஸ்லிம் சமூகம், பெண்களின் வயதெல்லையை அதிகரிப்பது உள்ளிட்ட ஒருசில திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு, முன்வந்துள்ளமையை ஏனையோர் பாராட்ட வேண்டும்.
அதைவிடுத்து, சில குழுக்களும் அமைப்புகளும் நடைமுறைச் சாத்தியமில்லாத மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என்று கூறி, குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தை, மாற்றியமைக்க வேண்டும் என்று, பௌத்த கடும்போக்கு சக்திகள் கூறி வருகின்றன. அதேபோன்று, அண்மைக் காலமாக முஸ்லிம் முற்போக்குச் செயற்பாட்டாளர்கள் என்று கூறும் கூட்டமும் களமிறங்கியுள்ளது. இவர்கள், முன்வைக்கும் பல கோரிக்கைகள் நியாயமானவையே என்றாலும், அவர்களில் சிலர், முஸ்லிம்களின் ஆடைசார் ஒழுங்குகளைக் கூடப் பேணாமையும் உள்மத விவகாரத்ததைப் பொதுத்தளத்தில் கையாளும் விதமும், முஸ்லிம்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின்றது.
அவர்கள், ஏனைய சமூகத்தவரையும் சேர்த்துக் கொண்டு, வீதிக்கு வந்து, இதைத் திருத்த வேண்டும் என்று, மடித்துக் கட்டிக் கொண்டு நிற்பதை, வேறு கண்ணோட்டத்திலேயே சமூகம் நோக்குகின்றது.
இதையெல்லாம் தாண்டி, முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தப்பட வேண்டும். ஆனால். அது பற்றிப் பேசுவதற்கு, வேறு மதத்தவர்களுக்கோ வெளிச்சக்திகளுக்கோ உரிமை கிடையாது என்பதை முதலில் கவனிக்க வேண்டும்.
முஸ்லிம்களை நெறிப்படுத்தும் சட்டம், நியாயமான காரணங்களுக்காக அன்றி, வெளிச் சக்திகளின் உள்நோக்கங்களை அடைந்து கொள்வதற்காகத் திருத்தப்பட முடியாது என்பதையும் நன்றாக மனதில் கொள்ள வேண்டும்.
ஆகவே, எதற்கெடுத்தாலும் பெண்கள் உரிமை, ஜனநாயகம் என்று கூப்பாடு போட்டுக் கொண்டு, இஸ்லாத்துக்கும் ஷரீஆவுக்கும் மாற்றமான மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்ற கோதாவில், விதண்டாவாதக் கருத்துத் தெரிவிக்கின்ற குழுக்களின் கதையை கணக்கெடுக்கத் தேவையில்லை.
ஆயினும், முஸ்லிம் தனியார் சட்டத்தைக் கூர்ப்படையச் செய்யும் விதத்தில், அதில் நியாயமான சட்டத் திருத்தத்தைக் காலதாமதமின்றித் திருத்த வேண்டிய தேவை உள்ளது.
இலங்கைச் சூழலுக்கு ஏற்றவாறும், ஷரிஆ சட்டத்துக்கு உட்பட்டதாகவும் இத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், வெளித்தரப்பின் தேவையற்ற தலையீடுகளால், குரங்கின் கையில் கொடுத்த பூ மாலையாக முஸ்லிம் தனியார் சட்டம் சின்னாபின்னமாவது, தடுக்கப்படுவதும் அவசியமாகும்.
முகத்தை மூட தடைச் சட்டமா?
முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடும் விவகாரமானது, ஏற்கெனவே பல்வேறு சர்ச்சைகளையும் சமூகச் சிக்கலையும் ஏற்படுத்தியிருக்கின்ற ஒரு சூழ்நிலையில், இலங்கையில் முகத்தை மூடி ஆடை அணிவதை, நிரந்தரமாகத் தடை செய்வதற்குப் பகீரதப் பிரயத்தனங்கள் எடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முஸ்லிம் பெண்கள், உடலை முழுவதுமாக மறைக்க வேண்டிய கடப்பாட்டைச் சமய ரீதியாகக் கொண்டுள்ளனர். ஆனால், பல்லின நாடொன்றில் முகத்தை மூடுவது கட்டாயமா? என்பது தொடர்பில், இரு நிலைப்பாடுகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் காணப்படுகின்றன.
இவ்வாறிருக்க, ஏப்ரல் மாதம் வரைக்குமான அவதானிப்பின்படி, இலங்கை முஸ்லிம் பெண்களில் குறிப்பிட்ட சிலரே, முகத்தை மூடிய (புர்கா, நிகாப் ஆடைகளை ஒத்த) ஆடைகளை அணிபவர்களாக இருந்தனர். மற்றைய எல்லா முஸ்லிம் பெண்களும் சல்வார், சாறி, அபாயாவுடனான பர்தா (தலையின் பின்புறத்தை மூடும் சீலை) அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தமையும் நினைவு கொள்ளத்தக்கது.
ஆனால், என்ன நடந்தது?
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர், முஸ்லிம்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் போல பார்க்கப்படலாயினர்.
இச்சந்தர்ப்பத்தில், முகத்தை மூடும் ஆடை, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்று, அரசாங்கம் கருதியது. (சில அரச அலுவலகங்களுக்கு, அபாயா கூட அணிந்து செல்ல முடியாத நிலை, இன்றும் காணப்படுகின்றது)
அப்போது அவசரகாலச் சட்டத்தின் கீழ், முகத்தை மூடும் புர்கா, நிகாப், முழுமையான தலைக்கவசம் போன்ற ஆடைகளை, அரசாங்கம் தடைசெய்யும் அறிவிப்பை வெளியிட்டது. இது தொடர்பாக, அரச அலுவலர்களுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கை, முஸ்லிம் பெண் அரச அலுவலர்களின் நலன்கருதி பின்னர் திருத்தப்பட்டது.
முகத்தை மூடுவதும் திறப்பதும் அவரவர் உரிமை. உங்கள் உடம்பை மற்றவர்களுக்குக் காட்டுவதா, இல்லையா என்பதை வேறு மதத்தவரோ, அழுத்தக் குழுக்களோ, தீர்மானிக்க முடியாது. அந்த வகையில், இதை முஸ்லிம்கள் எதிர்த்திருக்கலாம்.
ஆனால், அப்படிச் செய்யவில்லை. இந்த நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மதிப்பளித்து, முகத்தை மூடும் ஆடைகள் அணிவதை 99 சதவீதமான முஸ்லிம் பெண்கள் கைவிட்டனர். அதன் பின்னர் முகத்தை மூடி, பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவித்த சம்பவங்கள் எதுவும் பதிவாகவும் இல்லை.
நிலைமை இப்படியிருக்க, முகத்தை மூடும் வகையில் ஆடை அணிவதை நிரந்தரமாகத் தடை செய்யும் நோக்கில், சட்டமூலம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக, நீதியமைச்சர் தலதா அத்துகோரள, இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியைப் பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.
விழுந்தடித்துக் கொண்டு ஓடிப் போய், அமைச்சர் பதவிகளைப் பொறுப்பேற்ற இரு கட்சிகளின் தலைவர்களும் இதன்போது ஆஜராகி இருந்ததாகவும் கூறப்படுகின்றது. ஆனால், அவர்கள் இந்த யோசனையை எதிர்த்ததாக, எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
முஸ்லிம்கள் தங்களது அடையாளங்களை ஒவ்வொன்றாக, தவணை முறையில் இழந்து கொண்டிருக்கின்றார்கள் என்று சொல்வதைத் தவிர வேறொன்றுமில்லை.
Average Rating