நாற்றமெடுக்கும் வெளிநாட்டு கழிவுகளின் பின்னணி !! (கட்டுரை)

Read Time:22 Minute, 26 Second

இன்றைய நவீன உலகத்தில், எல்லா நாடுகளுமே முகம்கொடுக்கும் மாபெரும் பிரச்சினைகளில் ஒன்று தான், கழிவுமுகாமைத்துவத்தைச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாமல் எப்படி முன்னெடுப்பது என்பதாகும்.

அதாவது, மலை போல்க் குவியும் கழிவுகளை, அதாவது குப்பைகளை மக்கள், உயிரினங்கள், தாவரங்கள், இயற்கைக்குப் பாதிப்பில்லாமல் எப்படி நீக்குவது என்பதாகும். எனினும், கழிவுகளை எப்படியாவது அகற்றி விடலாம்.

ஆனால், சுகாதாரமான முறையில், அவற்றை எவ்வாறு அகற்றுவது என்பது தான், மில்லியன் கணக்கான கேள்விகளை நம்முள் எழுப்புகின்றது. ஆனால் என்ன, விடைகள் கிடைக்கவா போகின்றன? அப்படியே கிடைத்தாலும், அவற்றை முறையாக நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் நிலைகளைப் பற்றி, பேசிப்பேசியே உரிய தீர்வொன்றைக் கொண்டுவருவோம் என்று கூறும் தலைமைகள், இன்னமும் தீர்வு காணாத நிலையே தொடர்கின்றது.

கழிவு முகாமைத்துவம் குறித்த அணுகுமுறையில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையிலுள்ள இலங்கை போன்ற நாடுகள் ஒரு புறம் இருந்தாலும், அபிவிருத்தியடைந்துள்ள நாடுகளில் கழிவு முகாமைத்துவம் குறித்த அணுகுமுறைகளில் ஏற்படும் சிக்கல்களை, ஏழை நாடுகளிடமே தமது கைவரிசைகளைக் காட்டிவிடுகின்றன. அந்த வகையில், தம்மால் கட்டுப்படுத்தமுடியாத பாரிய பிரச்சினைகளை, வளர்ந்துவரும் நாடுகளின் தலையில் கட்டிவிடுகின்றன.

அவ்வாறான நிலையில் தான், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற செல்வந்த நாடுகளில், மீள்சுழற்சி செய்யப்படாத கழிவுகள், ஏனைய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் பின்தங்கிய நிலையில் இருக்கும் நாடுகள், இன்னமும் மோசமாகப் பாதிக்கப்படுவதைப் பற்றி, உள்நாட்டு தலைமைகளோ சர்வதேச நாடுகளோ கவலைகொள்வதில்லை.

அதனால்தான், சில பிரச்சினைகள் அவ்வப்போது பூதாகரமான வெடித்து விடுகின்றன. பின்னர் அவற்றைச் சமாளிக்க முயல்வதும் போராடுவதுமாகக் காலம் கழிந்துவிடுகின்றது. அந்தவகையில், தற்பொழுது வெடித்துள்ள பிரச்சினை தான், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் கழிவுப்பொருள்கள் குவிக்கப்பட்டுள்ளமையாகும்.

இவ்வாறு குவிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருள்கள் தொடர்பில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கவனமும், நாடாளுமன்றின் கவனமும் செவ்வாய்க்கிழமை (23/7 திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தின் ஒரு பகுதியில் வௌிநாட்டுக் கழிவுப்பொருள்கள் கொட்டப்பட்டுள்ளன வென சந்தேகிக்கப்படுவதுடன், இக் கழிவுகள் இலங்கைக்குள் எவ்வாறு கொண்டுவரப்பட்டதென்றும், எங்கிருந்து கொண்டுவரப்பட்டன என்பது குறித்து ஆராயும்போதுதான், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வௌிவந்தன. இந்தக் குப்பைகள் வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டு கொட்டப்பட்டுவரும் குப்பைகள் என ஒருசில தரப்பினரும், இல்லை! இவை பிரித்தானியாவிலிருந்து 220 வரையான கொள்கலன்களில் கொண்டுவரப்பட்டுள்ளனவென்று இன்னொரு தரப்பினரும் தமது கருத்துகளை வெளியிட்டிருந்தனர்.

அந்தவகையில், கடந்த செவ்வாய்க் கிழமை (23) நாடாளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், வெளிநாட்டுக் குப்பைகள் மிக சூட்சுமமான முறையில் இலங்கைக்குக் கொண்டுவந்து கொட்டப்படுவதாகவும் இலங்கையைக் குப்பை மேடாக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கடந்த 2016ஆம் இந்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டு, இவை இன்னமும் மீள்சுழற்சி செய்யப்படாதுள்ளதாகவும் ஆகவே, பரப்பிவிடப்பட்டிருக்கும் இந்தக் கழிவுகள், யார், எவ்வாறு, எந்த நிறுவனத்தால் கொண்டுவரப்பட்டன என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டுமெனக் கூறியிருந்தமை அனைவரது கவனத்தையும் ஒரு பக்கம் ஈர்த்தது.

மீள்சுழற்சி செய்யும் நோக்கத்தில், குறித்த குப்பைகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தாலும், அவ்வாறான மீள்சுழற்சி செயற்பாடுகளைச் செய்வதற்கு, நாட்டுக்குள் வழிமுறையும் கட்டமைப்பும் இல்லை எனச் சுங்கத் திணைக்களம் தன்பக்கக் கருத்தை, இவ்விடயம்தொடர்பில் வெளியிட்டிருந்தது. அத்துடன், ஏதேனும் ஒரு விடயத்துக்காக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்துக்குள் பெருமளவிலான கழிவுகள் குவிக்கப்படுமாயின், முதலீட்டுச் சபையினுடைய அனுமதியைப் பெறவேண்டியது கட்டாயமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில், தமக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அதற்கான அனுமதியைத் தாம் வழங்கவில்லை எனவும் முதலீட்டுச் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். கழிவுகளை இறக்குமதி செய்வதற்கான சட்ட அனுமதியும் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இதேவேளை, அடுத்தவாரம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ‘க்ரீன் ஏர்த்’ (Green Earth) மாநாட்டின் போது, தற்பொழுது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில், வலய நாடுகளைத் தெளிவூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகச் சுங்கப்பிரிவு தெரிவித்திருந்தது.

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கழிவுகளை, இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் ஆசிய பசுபிக் வலயத்திலுள்ள நாடுகளுக்கு அனுப்பும் முறையற்ற செயற்பாடுகள் பல வருடங்களாக இடம்பெற்று வருகின்றமையும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 220 கொள்கலன்களில் 102 கொள்கலன்கள் சுங்கப் பிரிவினரால் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவற்றில் 94 கொள்கலன்களில் கழிவுகள் அடங்கியிருக்கின்றமை, கண்டறியப்பட்டிருந்தது.

அத்துடன், விசாரணைகளை அடுத்து, கழிவுகள் அடங்கிய குறித்த கொள்கலன்களை இலங்கைக்கு அனுப்பி வைத்த நாடுகளுக்கே, அவற்றை மீள அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகச் சுங்கப்பிரிவால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இலங்கை அதிகார சபையூடாகக் கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில், பிரித்தானிய அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகச் செய்திகள் வௌியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பிலான விசாரணைகளின் போது, துறைமுக வளாகத்திலிருந்து வெளியேற்றப்படாத 27 கொள்கலன்கள் தொடர்பிலும் கண்டறியப்பட்டுள்ளன. இவ்வாறு துறைமுக வளாகத்தில் அனுமதிச் சான்றிதழ் வழங்கப்படாத இந்தக் கொள்கலன்கள், எந்த நிறுவனத்தின் பெயரில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகின்றது.

மேலும், இவற்றைச் செய்பவர்கள் யார்? அவர்களுக்கும் இவற்றுக்கும் என்ன தொடர்பு இருக்கின்றது போன்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இந்தச் சந்தேகங்களுடனே, இவ்விடயம் பற்றி ஆழமாக ஆராய வேண்டியது அவசியமாகும்.

முதலில், இந்தச் சர்வதேச நாடுகளின் குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள், எங்கிருந்து, எவ்வாறு இலங்கை வந்தடைந்தன என்பது பற்றி, ஆராய்தல் வேண்டும். அதனடிப்படையில், பிரித்தானியா அனுப்பியதைப் போன்று, முறையற்ற வகையில் பல நாடுகளிலிருந்து, இந்தோனேஷியாவுக்கும் குப்பைகள் அடங்கிய கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதுடன், அந்தக் கொள்கலன்கள், இந்தோனேஷியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமையும் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இவற்றைக் கண்டுபிடித்து, வெளிக்கொணர்ந்த சுங்கப் பிரிவினரால், கழிவுகள் அடங்கிய 57 கொள்கலன்களை மீண்டும் அனுப்பிய நாட்டுக்கே திருப்பி அனுப்ப இந்தோனேஷியா தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜேர்மன், ஹொங் கொங் உள்ளிட்ட நாடுகளிலிருந்தே இந்தக் கழிவுகள் உள்ளடங்கிய கொள்கலன்கள், இந்தோனேஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவெனச் சுங்கப் பிரிவால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், சுங்க அதிகாரிகளின் முயற்சியால், பிரித்தானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகக் கருதப்படும் இந்த 102 கொள்கலன்களையும் கண்டுபிடிக்க முடியாது போயிருந்தால், இவை நாட்டுக்குள் வருவதைத் தடுக்க முடியாது போயிருக்கும் என்பது நிதர்சனமாகும்.

இனி, இந்தச் சர்வதேச குப்பைகளை நாட்டுக்குள் கொண்டுவர அனுமதித்தது யார், அதை எவ்வாறு வழங்கினர் என்பது குறித்துக் கவனம் செலுத்தல் அவசியமாகும். அந்தவகையில், கொழும்பு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 102 கழிவுக் கொள்கலன்களுக்கும் ‘ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் லிமிட்டட்’ நிறுவனத்துக்கும் (Hayles Free Zone ltd) தொடர்புள்ளதாகத் தகவல்கள் வெளியில் கசிந்திருந்தன. அதுதொடர்பில், குறித்த நிறுவனத்துடன் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு வந்தன.

கடந்த திங்கட்கிழமையன்று (22) இப்பிரச்சினை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில், குறித்த நிறுவன அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஊடகவிலாளர் மாநாட்டில், “கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 102 கொள்கலன்களுக்கும் ‘ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் லிமிடெட்’ (HFZ) நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என, ‘ஹெய்லிஸ் அட்வாண்டிஸ் லிமிடெட்’ நிர்வாக இயக்குநர் ருவன் வைத்தியரத்ன தெரிவித்திருந்தார்.

அத்துடன், தற்போது சுதந்திர வர்த்தக வலய வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 130 கொள்கலன்களில், இந்நிறுவனம் இதுவரை, 29 கொள்கலன் கழிவுகளைப் பதப்படுத்தி மீண்டும் ஏற்றுமதி செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், இந்த 130 கொள்கலன்களில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகள் காணப்படுவதாகவும், இந்த மெத்தைகளை ‘சிலோன் மெட்டல் பிராசசிங் கோர்ப்பரேஷன் (பிரைவட்) லிமிடெட்’ நிறுவனமே, இறக்குமதி செய்ததாகவும், குறித்த ஹெய்லீஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ருவன் மேலும் தெளிவுபடுத்தினார். அத்துடன், ‘ஹெய்லீஸ் ஃப்ரீ சோன்’ (Hayleys Free Zone) என்பது, 2013ஆம் ஆண்டின் வணிக மய்ய ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான நிறுவனமாகும் என்றும், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு, தளவாடச் சேவைகளை வழங்குவதற்கான சர்வதேச நிறுவனமாக இது செயற்படுவதுடன், முக்கியமாக மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளை மட்டுமே இந்நிறுவனம் வழங்கும் நோக்கத்துடன், வினைத்திறனான தளவாடங்கள் செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஈ.டி.எல் கொழும்பு (பிரைவேட்) லிமிடெட் (ETL Colombo (Pvt) Limited) நிறுவனத்துடன் இந்த HFZ நிறுவனமானது, ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்நிலையில், இது சிலோன் மெட்டல் பிராசசிங் கோர்ப்பரேஷன் (பிரைவேட்) லிமிடெட்டால் நியமிக்கப்பட்டதென்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் குறித்த ஒப்பந்தத்தின்படி, கேள்வி அதிகரித்துள்ள மெத்தைகளைப் பதப்படுத்தி மீண்டும் ஏற்றுமதி செய்யும் நோக்கத்துக்கான ஹப் ஒழுங்குமுறைப்படி (Hub Regulation) ETL கொழும்பு (பிரைவேட்) லிமிடெட், இந்தச் சரக்குகளை ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் நிறுவனத்துக்கு அனுப்புவதாகவும் தெரிவித்த நிர்வாக இயக்குநர் ருவன், ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் வளாகத்துக்கு வரும் எந்தவொரு சரக்குகள் குறித்த தகவல்களும் ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் நிர்வாகப் பிரிவுக்கு வழங்கப்பட்டேயாக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், 130 கொள்கலன்கள் அபாயகரமான சரக்குகள் என்ற ரீதியில் உரிய ஆவணங்களை ஆராய்ந்த பின்னர், அவை கேள்விக்குரிய சரக்குகள் என்பதால், அவற்றை மட்டுமே ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் வளாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அவரால் மேலும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், செயலாக்கத்தைப் பொறுத்தவரையில், மெத்தைகள், துணி வகைகள், கடற்பாசி ஆகியவற்றை அகற்ற ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் சேவைகளை வழங்கி வருவதாகவும், அதன் பின்னர் இலங்கைக்கு உலோகங்களின் தேவைக்கேற்ப மீள்ஏற்றுமதிக்கு அவை ஒவ்வொன்றையும் தனித்தனி கொள்கலன்களில் பொதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தற்போதைய சூழ்நிலையில், இந்தக் கொள்கலன் மெத்தைகளைப் பதப்படுத்தவும், நிறுவனத்தின் செலவில் அவற்றை விரைவாக ஏற்றுமதி செய்யவும் ஒரு முடிவை எடுத்துள்ளதாக ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ருவன் வைத்தியரத்ன மேலும் கூறினார்.

ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் வளாகத்திலுள்ள மெத்தைகள் சுற்றுச்சூழலுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்பதை உறுதிப்படுத்த மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதாகவும் ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் நிறுவனம் தெரிவித்ததுடன், எவ்வாறாயினும், குறித்த கொள்கலன் கழிவுகளை உடனடியாக ஏற்றுமதி செய்ய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ‘பாஸல்’ மாநாட்டில் (Basel Convention) இலங்கை கையொப்பமிட்டுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நாட்டின் அனுமதியின்றி கழிவுப்பொருள்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், இந்தக் கொள்கலன்கள் இலங்கை முதலீட்டு வாரியத்தின் ஒப்புதலின் கீழ், கட்டுநாயக்க ஏற்றுமதி செயலாக்க மண்டலம் எண் 4 இல் அமைந்துள்ள ஹெய்லீஸ் ஃப்ரீ சோன் நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த கொள்கலன்களில் மருத்துவமனை படுக்கைகள், மெத்தைகள், தரைவிரிப்புகள், பிளாஸ்டிக், பொலிதீன், இறந்த தாவரங்கள், பூஞ்சைகள், பறவை இறகுகள் போன்ற கழிவுகள் உள்ளடங்குவதாக கழிவு மேலாண்மை பிரிவின் வேதியியல் மற்றும் அபாயகரமான கழிவு முகாமைத்துவப் பிரிவின் இயக்குநர் அஜித் வீரசுந்தர தெரிவித்திருந்த நிலையில், அவற்றில் மனித கழிவுகளும் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த இந்த கழிவுகளை, அடுத்த வழக்குத்தவணை வரை சூழலுக்குப் பாதிப்பற்ற வகையில் அதே இடத்திலேயே வைத்திருப்பதாக, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்ததுடன், வெளிநாட்டுக் கழிவுகள் ஊடாக வெளியேறும் நச்சுப்பதார்த்தங்கள் காரணமாக புற்றுநோய், சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ரிட் மனு மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பும் அறிவித்துள்ளது.

மேலும், தேசிய சுற்றுச்சூழல் சட்ட ஏற்பாடுகள் மீறப்பட்டு, வெளிநாட்டிலிருந்து கழிவுகளை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள ஆவணங்களைச் செல்லுபடியற்றதாக்குமாறு குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறு வெளிநாட்டுக் கழிவுகள் இறக்குமதி செய்யப்படுவதைத் தடுப்பதற்கு இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்குமாறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதுள்ளது.

எது எவ்வாறெனினும், பொதுவாக நாட்டுக்குள் நடந்தேறிவரும் சில விடங்கள், அவை நன்மைகளை அளிப்பதை விட, பெரும்பாலும் தீமைகளையே விளைவிக்கின்றன.

இத்தகைய எத்தகையோ சவால்களை நாளுக்கு நாள் புதிது புதிதாகக் கண்டுகொண்டு தான் இருக்கின்றோம். இத்தகைய பிரச்சினைகள் நம்நாட்டுக்குப் புதிதல்ல என்றாலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற எத்தகைய சவால்களை சந்திக்கப்போகின்றோம் என்பது, வெளியில் தலைதூக்கும் வரை தெரியப்போவதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருக்கை மீன் குட்டி போடும் காட்சி!! (வீடியோ)
Next post பெண்ணின் பெருங்கனவு!! (அவ்வப்போது கிளாமர்)