முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன்.
முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன். சிங்கள மொழி மறந்து தமிழில் உரையாடும் இவர் மருத்துவமனையில் அனுமதி நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களச் சிறுவன் ஒருவர் தான் முற்பிறவியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ராஜி என்ற பெண் எனத் தெரிவித்துள்ளார். கந்தானை வித்தியாலோக மகாவித்தியாலையத்தில் கல்வி பயிலும் இந்த சிங்கள மாணவர் கடந்த 25 ஆம் திகதி முதல் தான் பெண் எனத் தெரிவித்து யாழ்ப்பாண யுத்தம் தொடர்பாக தமிழில் பேசி வருவதாக பாடசாலையின் அதிபர் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவற்துறையிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த கொச்சிக்கடை காவற்துறையினர், இந்தச் சிறுவனின் பெற்றோர் சிங்களவர் எனவும் இவர்கள் கந்தானை கபல்லகஸ் சந்திப் பிரதேசத்தில் வசித்து வருவதாகவும்; தெரிவித்துள்ளனர். 13 வயதான லக்ஸ்மன் அரவிந்த என்ற இந்தச் சிறுவனுக்கு சகோதரர் ஒரவர் உள்ளார் என்றும் குறித்த சிறுவன் தான் ஒரு பெண்பிள்ளை எனவும் பெண்கள் அணியும் பாடசாலை உடையை அணிய அதிபரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது தனது பெயர் சிறீராமச்சந்திரன் ராஜி எனவும் தகப்பனின்; பெயர் ராமச்சந்திரன் ரமேஸ்குமார் எனவும் தாயின் பெயர் ராமச்சந்திரன் ராசான் எனவும் இந்த மாணவன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான் 12 வருடங்களுக்கு முன் கொல்லப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை தற்போது முழுமையாக சிங்கள மொழியை மறந்து தமிழிலேயே உரையாடுவதாகவும் தனது தற்போதைய சகோதரனைத் தெரியாது எனவும் அவர் கூறிவருகின்றார்.
இதற்கிடையில் நீர்கொழும்பு கொச்சிக்கடை காவல் நிலையத்தின் சிறுவர் நலப்பிரிவின் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், இந்த சிறுவன் முற்பிறவியில் யாழ்ப்பாணம் சிறீபத்திரகாளி அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார். தனது தந்தை தன்னையும் தாய், மற்றும் சகோதரனை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில் தாய் தம்மை அழைத்துக் கொண்டு நீர்கொழும்பு பிரதேசத்தில் சென்று குடியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரது சகோதரர் ரமேஸ்குமார் என்பவர் றைகம் என்ற நிறுவனத்தின் பணிப்பாளராக கடைமை ஆற்றியதாகவும் ஒருவருடத்தின் பின் தாயார் வெளிநாடு சென்றவுடன் சகோதரர் தன்னை அழைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தபோது சனிக்கிழமை தினம் ஒன்றில் வீடுகள் நெரிசலாக உள்ள பிரதேசத்தில் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டபோது தான் உயிர் இழந்ததாகவும் இந்தச் சிறுவன் தெரிவிப்பதாக காவற்துறையின் சிறுவர் நல அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதேவேளை காளி கோவிலுக்கு நேத்திக்கடனைச் செலுத்த தனது தாயார் வரும் வரை தான் காத்திருப்பதாகவும் தனது சகோதரர் தான் விளையாட பந்து கொண்டு வருவார் எனத் தெரிவித்து வருவதாகவும் இந்த மாணவன் தெரிவிக்கும் நிலையில் தற்போது இவர் றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.