அந்நிய மண்ணில் அசத்திய சிறுமிகள்! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 12 Second

திறமையை எங்க கொண்டு போய் வைத்தாலும் அது கண்டிப்பாக ஒருநாள் வெளிப்பட்டுவிடும். திறமையை எப்போதும் மூடி வைக்கவே முடியாது. பத்து வயதைக்கூட எட்டாத, இன்னும் குழந்தைத்தனம் மாறாத இரு சிறுமிகள் உலக சாதனை படைத்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி மேலும் பல சாதனைகளையும் செய்திருக்கிறார்கள் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த அக்‌ஷயா, அனுசுயா ஆகிய குட்டிப் பெண்கள்.

இன்னும் சரியாக பேசக்கூட தெரியவில்லை. ஆனால் ஆர்டிஸ்டிக் யோகாவில் சாதனைகள் செய்து அசத்திக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்களின் பெற்றோரின் முயற்சியும் மிகப்பெரிய காரணம் என்றே சொல்லலாம். அவர்களோடு உரையாடியபோது அவர்களின் சந்தோஷங்களையும், பிரச்னைகளையும் நம்மோடு இயல்பாக பகிர்ந்து கொண்டார்கள்.

அக்ஷயா- அனுசுயாவின் அப்பா கோபி சுந்தர்.
“எங்க ஊர் கோபிச்செட்டிப் பாளையங்க. நான் ஐடி கம்பெனியில் வேலைப்பார்க்கிறேன். என் மனைவி கல்லூரியில் கணினிப் பிரிவில் துணைப் பேராசிரியராக பணியாற்றுகிறார். இரண்டு மகள்களும் ஐந்தாம் வகுப்பு படிக்கிறார்கள். நாலு வயசில் இருந்தே இருவரும் பரதமும் யோகாவும் கற்றுக்கொள்கிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யோகா போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அங்கே பலவிதமான யோகாக்கள் இருப்பது தெரிய வந்தது. அதில் ஆர்டிஸ்டிக் பேர் என்ற ஒரு யோகா போட்டி இருப்பதும் தெரிய வந்தது.

அதாவது டான்ஸ் வித் யோகா. அதில் பெரும்பாலும் வெஸ்டர்ன், ஃபோக், பாலே டான்ஸ் போன்ற டான்ஸ் வகைகளுடன் யோகா கலந்து எல்லாரும் செய்வார்கள் (ஜிம்னாஸ்டிக் போல இருக்கும்). என் மனைவிக்கு யோகாவும் பரதமும் தெரியும் என்பதால் எங்கள் பிள்ளைங்களுக்கு பரதத்துடன் கலந்து யோகா செய்ய கற்றுத்தந்தார். முதன் முதலாக பரதம் கலந்து ஆர்டிஸ்டிக் யோகா செய்தவர்கள் என் மகள்கள்தான்.

அதன் பிறகு அக்‌ஷயாவும் அனுசுயாவும் 2015 செப்டம்பர் மாதம் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற காமன்வெல்த் யோகா போட்டிகளில் கலந்து கொண்டார்கள். அங்கே இவர்கள்தான் வெல்கம் டான்ஸாக பரதம் ஆடினார்கள். அங்கே பலவிதமான யோகா போட்டிகள் நடைபெற்றன. தனித்தனி யோகா போட்டி களில் வெற்றிப்பெற்றதோடு முதன் முறையாக இன்டர்நேஷனல் அளவில் ஆர்ஸ்டிஸ்டிக் யோகா போட்டியிலும் தங்கம் வென்றார்கள். ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வாங்கினார்கள்.

2017ல் சிங்கப்பூரில் நடைபெற்ற ஏசியன் கேம்ஸ் ஃபார் யோகாவில் கலந்து கொண்டு மூன்று தங்கப்பதக்கங்கள் வாங்கினார்கள். சிங்கப்பூரிலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார்கள். சிங்கப்பூர் தமிழ்ச்சங்கத்திலும் பரதம் ஆடினார்கள். 2018 ஜனவரி மாதம் மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 20 நாடுகள் கலந்து கொண்டன. அங்கு ஆர்டிஸ்டிக் பேரில் பங்கேற்று வெற்றிப்பெற்று தங்கம் வென்றார்கள். மற்றபடி தனிப்பட்ட முறையிலும் அத்லெட்டிக் யோகா, ஓன் சாய்ஸ் யோகா என இரண்டிரண்டு போட்டிகளில் பங்கேற்றார்கள்.

வெள்ளி, 2 வெண்கலம் என வென்று வந்தார்கள். அதுமட்டுமின்றி 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் 38 நிமிடங்கள் தொடர்ந்து பரதம் ஆடி உலக சாதனை படைத்திருக்கிறார்கள் அக் ஷயாவும், அனுசுயாவும். 17 வயதுக்குட்பட்டோரின் சாதனை 44 நிமிடங்கள். மறுபடி மே மாதம் மலேசியாவில் நடைபெறவிருக்கும் யோகா போட்டியிலும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

அம்மா மயிலாவதி…
என்னோட இரண்டு பெண் குழந்தைகளும் ட்வின்ஸ். வேலைக்கும் போய்ட்டு குழந்தைகளை வளர்ப்பது ரொம்ப கடினமாகத்தான் இருந்தது. அம்மா கொஞ்சம் உதவியாக இருந்தாங்க. எனக்கும் பரதமும் யோகாவும் தெரியும். ஆனால் நான் மேடைகளில் ஏறியதில்லை. எனக்கு ஸ்டேஜ் ஃபியர் அதிகம் என்பதைவிடவும் என் குடும்பத்தினருக்கு இதன் முக்கியத்துவம் எல்லாம் தெரியவில்லை. அதனால் என்னால் பெரிய அளவில் சாதனை எதுவும் செய்ய முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு இருந்தது.

முதலில் ஆரோக்யத்திற்காக தான் பிள்ளைகளுக்கு யோகாவும் நடனமும் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அவர்கள் டிராயிங், கம்ப்யூட்டர் என எல்லாவிதத்திலும் திறமைசாலிகளாக இருந்தார்கள். பல பரிசுகள் பெற்றார்கள். அப்போதுதான் இவ்வளவு நாள் இத்தனை திறமை உள்ள பிள்ளைகளை கவனிக்காமல் விட்டோமே என நினைத்தேன். அதன் பின் அவர்களை சாதனையாளர்களாக ஆக்க வேண்டும் என்பது என் சிந்தனையாக மாறியது. அப்போது தான் பரதத்தையும், யோகாவையும் சின்சியராக எடுக்க ஆரம்பித்தோம். 2015ன் போது தான் ஆர்டிஸ்டிக் யோகா போட்டியைப் பற்றி அறிந்து கொண்டு அதற்குத் தேவையான கிரியேடிவ் ஸ்டெப்ஸ்களை நானே முயற்சிகள் செய்து பார்த்து அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன்.

தாய்லாந்தில் அக்‌ஷயாவும் அனுசுயாவும் ஏ. ஆர். ரஹ்மானின் வந்தே மாதரம் இசையில் ஆர்டிஸ்டிக் யோகா செய்தார்கள். முடிக்கும் போது நம் நாட்டு கொடியைப் பிடித்திருந்தார்கள். அதற்கு ஜட்ஜாக வந்திருந்தவர் யோகா ஃபெடரேஷன் ஆஃப் பாகிஸ்தானின் தலைவர். அவர் எங்கள் பிள்ளைகளுக்கு முதல் பரிசை அளித்தார். மிகவும் பாராட்டினார். நிறைய வெளிநாடுகளில் இருந்து பிள்ளைகள் கலந்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் இருந்தும் வந்திருந்தார்கள். ஆனால் இவர்கள் மட்டும்தான் பரதம் கலந்து ஆடினார்கள் என்பது தனித்தன்மை. அங்கே எங்கள் பிள்ளைகளை பாராட்டாதவர்களே இல்லை. இந்த நடனத்தில் சில ரிஸ்க்குகளும் இருக்கு. சுளுக்கு ஏற்படும். குடல் விழுந்துவிடும். எனக்கு பேஸிக்கான விஷயங்கள்தான் தெரியும். யோகாவில் நல்ல திறமையாளர்களை பார்க்கும்போது டிப்ஸ் மாதிரி ஒவ்வொரு விஷயமாக கேட்டுத் தெரிந்து கொள்வேன். யார் என்ன விஷயம் சொல்லிக்கொடுத்தாலும் நல்ல விஷயமாக இருந்தால் நான் கற்றுக்கொண்டு என் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்பேன்.

டிவியில் பார்த்து, வெப்சைட்டில் பார்த்து என மேலும் மேலும் டிப்ஸ் எடுப்பேன். அதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பேன். என்னைத்தவிர மற்ற மாஸ்டர்களிடமும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் எல்லாவற்றிற்கும் செலவழிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இவ்வளவு சாதனை புரிந்திருந்தபோதும் எங்களுக்கு அரசாங்க அளவில் எந்த உதவியும் கிடைக்கவில்லை. கிடைக்கும் என்று மட்டும் வாக்குறுதி கொடுத்திருக்கிறார்கள்.

எங்கள் இருவரின் சம்பளப் பணத்தில் தான் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கெல்லாம் அழைத்துப் போய் வர வேண்டி இருக்கிறது. பள்ளியில் ஓரளவு நிதி உதவி கிடைத்தது. அதுமட்டுமில்லாமல் பிள்ளைகளுக்கு லீவ் தேவைப்படும் போது கொடுக்கிறார்கள். என் கல்லூரியிலும் எனக்கு லீவ் தேவைப்படும் போது கொடுப்பார்கள். எல்லாவிதத்திலும் ரொம்ப பீஸ்ஃபுல்லான வேலை. அதற்காக கண்டிப்பாக என் மேனேஜ்மென்டுக்கு நன்றி சொல்லியே ஆகணும். ‘எத்தனை நாள் வேணா லீவு எடுத்துக்கோங்க.

பிள்ளைங்களை கூட்டிப்போய்ட்டு வாங்கன்னு’ சொல்லுவாங்க. நாங்க மிடில் கிளாஸ் தாங்க. அரசு சார்பில் உதவி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம். என் மகள்களின் திறமைக்கேற்றாற் போல என்னை விட நல்ல தேர்ந்த மாஸ்டர்கள் கிடைத்தால் இன்னும் நன்றாக இருக்கும். எங்கள் மகள்களுக்கு இந்த துறையில் நல்ல கைடுலைன், சிறந்த டிரெயினிங் கிடைத்தால் நான் மிகுந்த சந்தோஷப்படுவேன்.

நிறைய பிள்ளைகள் திறமைகளோடு இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சரியான உதவி கிடைத்தால் பல திறமையாளர்கள் சாதனையாளர்களாக வருவார்கள். ஜெயிக்கிறோம், தோற்கிறோம் என்பது முக்கியமில்லை. திறமையை வெளிப்படுத்த மேடை கிடைக்கும் போது பயன்படுத்திக்கணும். அதான் முக்கியம்” என தெளிவாக பேசுகிறார்.

அக்‌ஷயா, அனுசுயா…
“நாங்க கோபி வெங்கடேஸ்வரா சிபிஎஸ்ஸி பள்ளியில் ஃபிப்த் படிக்கிறோம். வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் காலையில் யோகா ஒரு மணி நேரம், ஈவினிங்கில் பரதம் ஒரு மணி நேரம் கிளாஸ் போவோம். சனி, ஞாயிறு, லீவு டைம் என ஃப்ரீ டைம் கிடைக்கும் போதெல்லாம் அம்மா கற்றுக்கொடுப்பாங்க. நாங்க இருவரும் தனியாகவும் ப்ராக்டீஸ் பண்றோம். எங்க இரண்டு பேருக்குமே இது ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப இன்ட்ரெஸ்ட்டிங்காகவும் இருக்கு. அதனால் என்ஜாய் பண்ணி பண்றோம்.

போட்டியின்போது நிறைய பேர் இருக்காங்களேன்னு பார்த்து நாங்க பயப்பட்டது கிடையாது. கஷ்டப்பட்டு பண்ணுவோம். ப்ரைஸ் கிடைக்கும். நிறைய பேர் எங்களை பாராட்டி கை கொடுப்பாங்க. அப்ப எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கும். பரதம் வித் யோகா ஆர்டிஸ்டிக் பேரில் நாங்கதான் நிறைய பேருக்கு ரோல்மாடலா இருக்கோம். அதே சமயம் நாங்க ரெண்டு பேரும் படிப்பிலும் ரேங்க் ஹோல்டர் தான். யோகா கற்றுக்கொள்வதால் மெமரி பவர் அதிகமாகுது.

அதனால் நல்லா படிக்க முடியுது. லீவ் நிறைய எடுத்தாலும் கிளாஸில் ஃப்ரீ டைம் கிடைக்கும் போது எழுதாம விட்டுப்போன பாடங்களை எல்லாம் எழுதி விடுவோம். வீட்டில் ஈவினிங் கிளாஸ் முடிந்ததும் படிக்க ஆரம்பித்துவிடுவோம். எங்களுக்கு சளி பிடித்தால் கூட ஒரு சில யோகாக்கள் செய்யும் போது உடனே எங்க உடம்பு குணமாயிடும். அப்பா அம்மா இரண்டு பேரும் எங்களுக்கு நிறைய கற்றுக்கொடுக்கிறாங்க. நிறைய ஹெல்ப் பண்றாங்க. எங்க அப்பா, கராத்தே மாஸ்டரும் கூட தெரியுமா” என்று சிரிக்கிறார்கள் குழந்தை மனம் மாறாத வாண்டுகள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post யோகா மரபணுவையே மாற்றும்!! (மருத்துவம்)