பிரபாகரன், இலங்கை அதிபரை சந்திக்க வருகிறார் நார்வே தூதர்

Read Time:3 Minute, 41 Second

Norway-jon_hansan-1.gifஇலங்கை அரசும், விடுதலைப் புலிகள் அமைப்பும் மீண்டும் அமைதிப் பேச்சை தொடங்குவது பற்றி விவாதிக்க நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்ஸன் பாயர், வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்கிறார். இலங்கை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண அமைதிப் பேச்சை மீண்டும் தொடர புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒப்புதல் தெரிவித்துள்ள நிலையில் ஜான் ஹான்ஸன் பாயரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்லும் ஹான்ஸன் பாயர் முதலில் இலங்கை அரசின் முக்கியத் தலைவர்களை சந்திக்கிறார். பின்னர் கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்கிறார். அமைதிப் பேச்சை எங்கு, என்ன தேதியில் தொடங்குவது என்பது குறித்து பிரபாகரனிடம் அவர் விவாதிப்பார்.

இலங்கையில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்ததும் நார்வே நாட்டின் சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் எரிக் சோல்ஹைம் இலங்கை சென்று அதிபரையும், புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்திக்க இருக்கிறார்.

இந்த ஆண்டு ஜனவரியில் சோல்ஹைம், புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து வன்முறைகள் ஓய்ந்து அமைதிப் பேச்சு தொடங்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. ஆனால் எதிர்பார்த்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. 2002-ல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு இருதரப்பினரும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாயினர். ஆயிரக்கணக்கானவர்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு வெளியேறினர்.

இதற்கிடையே இலங்கைக்கு நிதி உதவி செய்யும் நாடுகள் கூட்டம் வாஷிங்டனில் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இரு தரப்பினரும் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.

இந்தியாவும் இதே கருத்தை வலியுறுத்தி வந்துள்ளது. சமீபத்தில் தில்லி வந்திருந்த எல்.டி.டி.ஈ. ஆதரவு இலங்கை எம்.பிக்கள் மற்றும் புலிகள் எதிர்ப்பு இயக்கங்களான தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் வி.ஆனந்தசங்கரி, தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பின் தலைவர் டி.சித்தார்த்தன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த டி.ஸ்ரீதரன் ஆகியோரிடமும் இனப் பிரச்சினைக்கு விரைவில் சுமுக தீர்வுகாண வேண்டியதன் அவசியத்தை இந்தியா நேரில் வலியுறுத்தியது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எங்கிருந்தாலும் வாழ்க! ஆத்திரமும்_அவசரமும் அரசியலில் பலன்தராது: திருமாக்கு ஜெயலலிதா அறிவுரை
Next post முற்பிறவியில் தான் தமிழ்ப்பெண் எனக்கூறும் சிங்கள மாணவன்.