ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய மதிப்பு எவ்வளவு? (உலக செய்தி)
ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டி மதிப்பு எவ்வளவு? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.
சென்னை ஐகோர்ட்டில், சென்னையை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ´மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ரூ. 913 கோடி மதிப்புள்ள சொத்துகள் பல இடங்களில் உள்ளன. இந்த சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க வேண்டும்´ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதேபோல, வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்பட 4 சொத்துகளை முடக்கிவைத்துள்ளதாக வருமான வரித்துறையும் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா, தீபக் ஆகியோர் சார்பில் ஆஜரான வக்கீல்கள், ´ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபாவும், தீபக்கும் தான் வாரிசுகள். எனவே, வருமான வரி பாக்கியை அவர்கள் செலுத்த தயாராக உள்ளனர். எனவே, இவர்கள் இருவரையும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்க வேண்டும்´ என்று கூறினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை மட்டும் நியமிக்க வேண்டும். ஏற்கனவே இந்த சொத்துகள் எல்லாம் சொத்தாட்சியரின் பொறுப்பில் உள்ளது. அதனால் இவர்கள் இருவரும் வாரிசு உரிமையை கோரமுடியாது என்று மனுதாரரின் வக்கீல் வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தீபாவும், தீபக்கும் வாரிசுகள் இல்லை என்றால், ஜெயலலிதாவின் சொத்துகளை எல்லாம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்பது தான் மனுதாரரின் நோக்கமா? என்று கேள்வி எழுப்பினர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜராகன வக்கீல், ´ஜெயலலிதா மீது தற்போது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை´ என்று கூறினார். அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ´போயஸ் கார்டன் வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், அந்த வீடு மாவட்ட கலெக்டர் கட்டுப்பாட்டில் தான் உள்ளது´ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், ´ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிக்காட்டி மதிப்பு எவ்வுளவு? என்பது குறித்த முழு விவரங்களை வருமான வரித்துறை தாக்கல் செய்யவேண்டும். ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்றும் பணி தற்போது எந்த நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக தமிழக அரசும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்´ என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஆகஸ்டு 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Average Rating