ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது!! (உலக செய்தி)
ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் நேற்று கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாகாண பயங்கரவாத எதிர்ப்புத் துறை பதிந்த வழக்கு ஒன்றில் முன் ஜாமீன் பெறுவதற்காக குஜ்ரன்வாலா நோக்கி சென்றுகொண்டிருந்த போது அவர் கைது செய்யப்பட்டார்.
தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா அமைப்பின் மேல்மட்டத் தலைவர்களான ஹபீஸ் சயீத், அப்துல் ரெஹ்மான் மக்கி உள்ளிட்டோர் மீது பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, நிதி முறைகேடு உள்ளிட்ட சுமார் இரண்டு டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகள் 1997 ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டன.
ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், “ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவர்கள், தங்களின் தவா துல் இர்ஷத், மாஸ் பின் ஜபால் ட்ரஸ்ட், அல் இன்ஃபால் ட்ரஸ்ட், அல் மதினா அமைப்பு மற்றும் அல் அமத் அமைப்பின் மூலம் மிகப்பெரிய அளவில் பணம் சேகரித்தும், அது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு, தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்காக பணம் சேகரிப்பது. அது சட்டப்படி குற்றமாகும்.” என பஞ்சாபின் ஆளுநர் ஷாபாஸ் கில் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்புகள் அனைத்தும் அதிகாரிகளால் இந்த வருடம் மே மாதம் தடை செய்யப்பட்டது.
தனது மத நிறுவனத்துக்காக சட்டவிரோதமாக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் திங்களன்று, லாகூரில் உள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான நீதிமன்றம் ஒன்று சயீதுக்கு முன் ஜாமின் வழங்கியது.
இந்த நடவடிக்கை பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு செல்வதற்கான ஓரிரு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. இம்ரான் கான் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்புகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
லாகூர் உயர் நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கைகளுக்கு எதிராக மனு தொடுத்துள்ளதாக ஜமாத் உத் தவாவின் செய்தி தொடர்பாளர், நதீம் தெரிவித்தார்.
மேலும் “இதுகுறித்து உள்துறை அமைச்சகத்திடமிருந்தும், பயங்கரவாதத்திற்கு எதிரானத் துறையிடமிருந்தும் நீதிமன்றம் பதிலளிக்க கோரியுள்ளது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”
மேலும் முன் பிணை பெறுவதற்காக ஹபீஸ் சயித் குஜ்ரன்வாலாவிற்கு சென்றுக் கொண்டிருந்தபோது பயங்கரவாத தடுப்புத் துறையால் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை சட்டரீதியாக எதிர்கொண்டு ஜமாத் உத் தவா தலைவர்களுக்கு எதிரான கைது குறித்து நீதிமன்றத்தின் ஊடாக போராடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜமாத் உத் தவா அமைப்பு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்த வருடம் மார்ச் மாதம் தடை செய்யப்பட்டது.
பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய தாக்குதலுக்கு அந்த தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றன.
ஆனால் இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வெளியீட்டு நிறுவனம் மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்து வருகிறார்.
சயீத் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அமெரிக்க தெரிவித்திருந்தது.
Average Rating