எங்கிருந்தாலும் வாழ்க! ஆத்திரமும்_அவசரமும் அரசியலில் பலன்தராது: திருமாக்கு ஜெயலலிதா அறிவுரை
“ஆத்திரமும்_அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது. சகோதரி என்ற முறையில் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க!” என்று நேற்றுவரை அ.தி.மு.க கூட்டணியில் இருந்து 2 எம்.எல்.ஏக்களை பெற்றுக்கொண்டு திடீரென தி.மு.க. கூட்டணிக்கு தாவிவிட்ட விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமாவளவனுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அன்பு சகோதரியாக அறிவுரை கூறியுள்ளார்.
நடந்து முடிந்த தமிழக சட்ட பேரவை தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தி.மு.க. கூட்டணியில் சேர்த்துக் கொள்வதாகக் கூறி கடைசிவரை சேர்க்காமல் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திருமாவளவனை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பியுள்ளார் கருணாநிதி.
இந்நிலையில் திருமாவளவன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை ஓடிச்சென்று அவரது இல்லத்தில் சந்தித்து சட்டபேரவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் தன்னை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.
இந்த கோரிக்கையை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா திருமாவளவன் எதிர்பாராத அளவிற்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கு இடங்களை ஒதுக்கி முதல் ஒப்பந்தத்தை அவருடன் செய்து அவரை பெருமைப்படுத்தினார்.
அப்போது திருமாவளவன் “தலித்துகளின் விரோதி” கருணாநிதி தலித்துகளை மதிப்பவர் அன்பு சகோதரி ஜெயலலிதா. என்றென்றும் நான் அவருக்கு விசுவாசத்துடன் இருப்பதோடு அ.தி.மு.க. வெற்றிக்கு முழு மூச்சாக பாடுபடுவேன் என்றார்.
பின்னர் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா குறிப்பாக விடுதலைச் சிறுத்தைகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக 9 கட்சி கூட்டணி பலத்தையும் மிஞ்சி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு 2 இடங்களில் வெற்றிப் பெற்றது. போட்டியிட்ட மற்ற இடங்களில் சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.
இந்நிலையில் கூட்டணியில் சிறிய கட்சியாக இருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பை அ.தி.மு.க., ம.தி.மு.க., வி.சி. என்று 3_வது இடத்தில் வைத்து அணிசெய்து அவருக்கு முழுமரியாதை அளித்து. “அன்பு சகோதரர் திருமா என்று” இதய சுத்தியோடு அழைத்தார் ஜெயலலிதா.
இந்நிலையில் ஜெயலலிதாவின் பெருந்தன்மையில் 2 எம்.எல்.ஏ பதவியை பிடித்த திருமாவளவன் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன் உடன்பாடு கண்டபிறகு அந்த அணிக்கு துரோகம் செய்துவிட்டு நேற்று முன்தினம் திடீரென மாலை தி.மு.க. கூட்டணிக்கு தாவிவிட்டார்.
தலித் விரோதி என்று கருணாநிதியை அழைத்தவர் இன்று அவருடன் கூட்டணி கண்டுள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெருந்தன்மையுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:_
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் தொல் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க! சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான்_ “ஆத்திரமும், அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது”. இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.