அ.தி.மு.க அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம்? (கட்டுரை)

Read Time:13 Minute, 55 Second

தமிழ்நாடு சட்டமன்றம், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்காக ஜூன் 28ஆம் திகதியிலிருந்து கூடியிருக்கிறது.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, ஒவ்வொரு துறை ரீதியான மானியங்கள் விவாதிக்கப்பட்டு, இறுதியில் வளர்ச்சிப்பணிகள் தொடங்கும். ஆனால், இந்தச் சட்டப் பேரவைக் கூட்டம், ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.கவுக்கு அதிக தலைவலியையும் எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.கவுக்கு கூடுதல் பலத்தையும் அளித்திருக்கிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, மூன்று வருடமாக ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், பிரதான எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் இந்தச் சட்டப்பேரவை கூட்டத் தொடர், மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், இப்போது அ.தி.மு.கவுக்குள் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையில் நல்லுறவில் விரிசல் ஏற்பட்டு, கடும் பனிப்போரில், மிகப்பெரிய போட்டி, கட்சிக்குள்ளும் ஆட்சிக்குள்ளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தோல்விக்குப் பிறகு, அ.தி.மு.கவுக்குள் ராஜன் செல்லப்பா என்ற சட்டமன்ற உறுப்பினர் தொடக்கி வைத்த, ‘இரட்டைத் தலைமை’ பிரச்சினை, இன்னும் அடங்கியதாகத் தெரியவில்லை.

மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க அரசாங்கத்தில், அமைச்சர் பதவி பெறுவதில் ​தொடங்கிய இப்பிரச்சினை, இப்போது தங்கத்தமிழ்ச் செல்வனை அ.தி.மு.கவில் சேர்ப்பது வரை வந்து நிற்கிறது.

தங்கத்தமிழ் செல்வன், தினகரன் அணியிலிருந்து அ.தி.மு.கவுக்கு எதிரான 18 சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்தியவர். தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் தினகரன் கட்சியான அ.மு.மு.க படுதோல்வி அடைந்ததால், தங்கத்தமிழ் செல்வன் மீது தினகரனுக்கு கோபம். அதனால் அவர் வெளியேறி, அ.தி.மு.கவுக்குச் செல்லத் தயாராக இருந்தார்.

“வந்தால் வரவேற்போம்” என்று, அமைச்சர் ஜெயக்குமார் அழைப்பு விடுத்தார். ஆனால், ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் விரோதியான தங்கத்தமிழ் செல்வனைச் சேர்க்கக்கூடாது என்று, தேனி மாவட்ட அ.தி.மு.க தீர்மானம் எடுத்து, கட்சித் தலைமைக்கு அனுப்பியது.

ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் உள்ள பனிப்போர், இந்தத் தீர்மானத்திலும் எதிரொலித்தது. தேனி மாவட்ட அரசியலில், தனக்குப் போட்டியாக ஒருவரை நுழைக்க, எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார் என்று ஓ. பன்னீர்செல்வம் நினைத்தார். அதன் விளைவே இந்தத் தீர்மானம்.

ஆட்சியில் முதலமைச்சராக இருப்பவருக்கும், துணை முதலமைச்சராக இருப்பவருக்கும் இடையில், நடைபெறும் பனிப்போருக்கு இடையில்தான், இந்தச் சட்டமன்றப் பேரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.

இக்கூட்டம் தொடங்கும் முன்பே, தி.மு.க சார்பில் பேரவைத் தலைவராக இருக்கும் தனபால் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்மானத்தை, அவையில் உறுப்பினர் ஒருவர் முன்மொழியும் போது, 35 சட்டமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் விவாதத்துக்கு வரும்; வாக்கெடுப்புக்கும் வரும்.

அப்படி வாக்கெடுப்பு வரும் போது, பேரவைத் தலைவரைப் பதவியில் தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், தி.மு.க தலைவர் ஸ்டாலினே, “பேரவைத் தலைவரை நீக்குவது முக்கியமல்ல; அதைவிட முதலமைச்சரைத்தான் நீக்க வேண்டும்” என்று, தண்ணீர்ப் பிரச்சினை குறித்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.

தொடர்ந்து சட்டமன்றம் கூடிய, 28ஆம் திகதி, பேரவைத் தலைவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை, தி.மு.க திரும்பப் பெற்று விட்டது. ஆகவே, இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போகிறது தி.மு.க என்பதுதான், தற்போதைய தலைப்புச் செய்தி.

234 உறுப்பினர் கொண்ட தமிழ்நாடு சட்டப் பேரவையில், இப்போது தி.மு.கவின் பலம் 100. அதன் கூட்டணிக் கட்சிகளான இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (1), காங்கிரஸ் கட்சி (7) ஆகியவற்றின் எம்.எல்.ஏக்களையும் சேர்த்தால் தி.மு.க கூட்டணியின் பலம் 108. அதேநேரத்தில் அ.தி.மு.கவின் பலம் 123. டி.டி.வி தினகரன் இன்னொரு சட்டமன்ற உறுப்பினர். இவர் முதலமைச்சருக்கு எதிராக வாக்களித்தால், தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு இப்போது, 109 சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இருக்கிறது.

அ.தி.மு.கவுக்கு 123 உறுப்பினர்களின் பலம் இருந்தாலும், இரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் ஆகிய மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனின் ஆதரவாளர்கள் என்பதால், ஏற்கெனவே, கட்சித் தாவல் சட்டப்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் மூவரும் உச்சநீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றிருக்கிறார்கள்.

இவர்களைக் கழித்தால், அ.தி.மு.கவின் எண்ணிக்கை 120. இதில் அ.தி.மு.க சின்னத்தில் வெற்றி பெற்றாலும், தனிக்கட்சி உறுப்பினர்களாக தமீம் அன்சாரி, தனியரசு, நடிகர் கருணாஸ் ஆகியோர் இருக்கிறார்கள்.

அதனடிப்படையில் மூவரும் போர்கொடி தூக்கினால், அ.தி.மு.கவின் பலம் 117 ஆகும். இதில் கூட, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாசலம் என்ற அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் ஏற்கெனவே போர்க்கொடி தூக்கி, இப்போது அமைதியாக இருக்கிறார்.

ஆகவே, அ.தி.மு.கவின் தெளிவான எண்ணிக்கை என்பது, 116 ஆக இருக்கிறது. இந்தச் சூழலில் தமிழ்நாடு சட்டப் பேரவையில், அரசாங்கத்துக்கு எதிரான மனப்போக்கில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து வாக்களித்தால், தி.மு.கவின் பலம் 116 ஆகிவிடும். ஆகவே, அ.தி.மு.க ஆட்சி, ஒரு சட்டமன்ற உறுப்பினரின் பலத்தில், அதுவும் கூட, பேரவைத் தலைவராக இருக்கும் தனபாலின் வாக்கில்தான் தப்பிக்க முடியும் என்ற நிலை தோன்றியிருக்கிறது.

ஆகவே, அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வருவதும், பேரவைத் தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் பெறப்படுவதும் சற்று வித்தியாசமான பரபரப்பான அரசியல் சூழ்நிலையை தமிழகத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நிலவும் பனிப்போரால் ஆட்சிக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. ‘கத்தி மேல் நடப்பது போல்’ எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்த வேண்டிய கடும் இக்கட்டான நிலைக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகும், குறிப்பாக ஓ. பன்னீர்செல்வத்துடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகும் உருவாகியிருக்கிறது.

இப்போது, எடப்பாடி பழனிசாமிக்கு எஞ்சியிருப்பது மத்திய அரசாங்கத்தின் ஆதரவு மட்டுமே. அந்த ஆதரவும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்தது போல் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. “பா.ஜ.கவால் அ.தி.மு.க தோற்றது” என்று அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டியளிக்க, “அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததால்தான், பா.ஜ.க தோற்றது. மோடிக்கு எதிர்ப்பு அலை தமிழகத்தில் இல்லை” என்று பா.ஜ.க தரப்புத் தங்கள் தரப்பு வாதத்தை எடுத்து வைத்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் பேசிய தயாநிதி மாறன், “ஊழல் அடிமைகளை காப்பாற்றுகிறது பா.ஜ.க; அ.தி.மு.க அடிமை. அந்த அடிமை உங்களுக்கு மாஸ்டர்” என்ற வகையில் பேசி, அதனால் பா.ஜ.க எம்.பி.க்களே நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்த நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கிறது.

ஜூலை மாதத்தில் நடைபெறப் போகின்ற ராஜ்ய சபைத் தேர்தலில் தமிழகத்திலிருந்து மூன்று உறுப்பினர்களை அ.தி.மு.க அனுப்ப முடியும். அதற்கு யாரை நியமிப்பது என்பதில், அ.தி.மு.கவுக்குள் அடுத்த கட்டப் போர் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மூன்றில் ஒன்றை பா.ஜ.கவுக்குக் கொடுத்தால், அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஒழுங்காக வாக்குப் போட்டு, அ.தி.மு.க உறுப்பினர்களை வெற்றி பெற வைப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது. ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் கருத்து வேறுபாடு, ராஜ்ய சபை தேர்தலின் போது கடுமையாகவே எதிரொலிக்கும் என்ற பேச்சும் அ.தி.மு.கவுக்குள் வலம் வருகிறது.

எக்காரணத்தைக் கொண்டும், மூன்று ராஜ்ய சபை உறுப்பினர்களில் ஒன்றை பா.ஜ.கவுக்குக் கொடுக்கக் கூடாது என்ற அழுத்தமும் கட்சித் தலைமைக்கு முன்னனி அ.தி.மு.க நிர்வாகிகளால் கொடுக்கப்படுகிறது.

ஆகவே, மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றம் கூடியிருக்கிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக காட்சியளிக்கிறது. அ.தி.மு.கவுக்குள் உள்ள கோஷ்டி பூசல்கள், ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் பனிப்போர், மத்திய அரசாங்கத்தின் பரிபூரண ஆதரவு கிடைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகள் அணி வகுத்து நிற்கின்றன.

அதேவேளையில், மக்கள் மத்தியில் செல்வாக்கை மேலும் இழக்கும் வகையில் தண்ணீர் பிரச்சினை தமிழகத்தில் எங்கும் தாண்டவமாடுகிறது. ஆட்சியை தக்க வைப்பதா, கட்சியை தக்க வைப்பதா என்ற மனப் போராட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது இருக்கிறார்.

அந்த மனப் போராட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கி, அரசாங்கத்துக்கு எதிராக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொடுத்து, அதை வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று தி.மு.கவும் முனைப்புடன் செயல்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடல்புற்று நோயை தடுக்கும் தக்காளி !! (மருத்துவம்)
Next post ஆச்சர்யம் அனால் உண்மை !! வைரல் வீடியோ!! (வீடியோ)