மூட்டு வலிக்கு மருந்தாகும் பவளமல்லி!! (மருத்துவம்)
நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடை சரக்குகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மை உடையதும், காய்ச்சலை தணிக்க கூடியதும், வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றவல்லதுமான பவளமல்லியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது பவளமல்லி. இது பாரிஜாதம் என்றும் அழைக்கப்படும். பவளமல்லி வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க கூடியது, பித்தத்தை சமன் செய்யும். காய்ச்சலை தணிக்கும். பூஞ்சை காளான்களை போக்கும். நோய் கிருமிகளை அழிக்கும். ரத்த வட்ட அணுக்கள் குறையாமல் பாதுகாக்கும் மருந்தாக விளங்குகிறது. இதை மேல்பற்றாக பயன்படுத்தும்போது வலி நிவாரணியாக விளங்குகிறது.
பவளமல்லி இலைகளை பயன்படுத்தி முதுகு வலி, மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், பெருங்காய பொடி, சீரகம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதனுடன் 5 பவளமல்லி இலைகளை சிறு துண்டுகளாக்கி போடவும். பின்னர், சிறிது பெருங்காய பொடி, அரை ஸ்பூன் சீரகம் சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர முதுகு வலி, மூட்டு வலி பிரச்னைகள் குணமாகும்.
அற்புதமான மருந்தாக விளங்கும் பவளமல்லி காய்ச்சலை தணிக்கும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும்.
நோயில் இருந்து விடுவிக்கிறது. பவளமல்லி இலைகளை பயன்படுத்தி காய்ச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், இஞ்சி, தேன்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர்விடவும். இதில், 5 பவளமல்லி இலைகளை துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஒரு கிராம் இஞ்சியை நசுக்கி சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர், இதை வடிகட்டி தேன் சேர்க்கவும். இந்த தேனீரை காய்ச்சல் இருக்கும்போது காலை, மாலை வேளைகளில் குடித்துவர காய்ச்சல் குணமாகும்.
இன்றைய காலகட்டத்தில் நம்மை அச்சுறுத்தும் டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சலுக்கு பவளமல்லி மருந்தாக அமைகிறது. இந்த தேனீரை பருகுவதன் மூலம் ரத்த வட்ட அணுக்கள் அதிகரிக்கும். நோய் நீக்கியாக பயன்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது.பவளமல்லி இலையை பயன்படுத்தி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பவளமல்லி இலைகள், உப்பு, தேன். செய்முறை: பவளமல்லி இலை சாறு 5 முதல் 10 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் தேன், 2 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை என 3 வாரம் எடுத்துவர வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். பவளமல்லியின் இலைகள், பூக்கள், பட்டை ஆகியவை மருந்தாகிறது. தோல்நோய்களை குணப்படுத்துகிறது. பல் சொத்தையை தடுக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். பற்களை நாம் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தினமும் இருவேளை பல் துலக்குவது அவசியம். நாயுருவி பட்டை அல்லது வேர் ஆகியவற்றை கொண்டு பல் துலக்குவதால், பல் சொத்தை இல்லாமல் போகும். பல்லில் சொத்தை ஏற்படாமல் தடுக்கிறது.
Average Rating