சளி, இருமலுக்கு மருந்தாகும் தபசு முருங்கை!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில், சாலையோரத்தில், வயல்வெளிகளில் கிடைக்கும் மூலிகைகள், கடைச் சரக்குகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், சளி, இருமல் பிரச்னையை தீர்க்க கூடிய தன்மை கொண்டதும், அரிப்பு, தடிப்பு போன்ற தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கட்டிகளை கரைக்கவல்லதும், வலியை போக்கி வீக்கத்தை வற்றச் செய்வதும், சுவாசபாதையில் ஏற்படும் அடைப்பை நீக்க கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதுமான தபசு முருங்கையின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை தபசு முருங்கை. சாலையோரங்களில் காணப்படும் இது தும்பை பூவை போன்ற உருவத்தை கொண்டது. தபசு முருங்கைக்கு புன்னாக்கு பூண்டு என்ற பெயரும் உண்டு. பாம்பு கடிக்கு மருந்தாகி விஷத்தை முறிக்க கூடியதாக விளங்குகிறது. தோலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். வலி, வீக்கத்தை சரிசெய்யும். பல்வேறு நன்மைகளை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி சளி, இருமல், மூச்சிரைப்பை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தபசு முருங்கை, சுக்குப்பொடி, உப்பு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது சுக்குப் பொடி சேர்க்கவும். பின்னர், 20 முதல் 30 மில்லி வரை தபசு முருங்கை இலை சாறு மற்றும் உப்பு சேர்க்கவும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர சளி, இருமல், மூச்சிரைப்பு பிரச்னை குணமாகும். இந்த தேனீர் சுவாசப் பாதையில் உள்ள அடைப்பை சரிசெய்யும். கரையாத நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ளும். துளசியை போன்ற அமைப்பை உடைய தபசு முருங்கையை பயன்படுத்தி கட்டிகளை கரைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: தபசு முருங்கை இலை, விளக்கெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து வதக்கி கட்டிகளின் மீது பற்றாக போடும்போது கட்டிகள் வெகு விரைவில் கரைந்து போகும். அடிபட்ட இடங்களில் இதை போடும்போது ரத்த நாளங்கள் சிதைந்துபோன நிலைகூட சரியாகும். கல் போன்று கரையாமல் இருக்கும் கட்டிகள் மீது வைத்து கட்டுவதன் மூலம் கட்டிகள் கரையும். கட்டிகளால் ஏற்படும் வீக்கம், வலி சரியாகும்.
அற்புத மூலிகையாக விளங்கும் தபசு முருங்கையை பயன்படுத்தி தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மற்றும் தொற்றுவை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தபசு முருங்கை இலை, நல்லெண்ணெய். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனுடன், அரைத்து வைத்திருக்கும் தபசு முருங்கை இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை வடிகட்டி பயன்படுத்த தோலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு சரியாகும். தொற்றுவை போக்கும்.
Average Rating