சுண்டைக்காய்னா இளக்காரமா…!! (மருத்துவம்)
கீர்த்தி சிறிது… மூர்த்தி பெரிது…
இன்றைய அவசர கால வாழ்க்கை முறையில் காய்கறிகள், கீரைகள், பழங்கள் இவற்றை உணவில் தினசரி பயன்படுத்துவதே அரிதாக உள்ள நிலையில் சுண்டைக்காய் சமையலில் பயன்படுத்துவது என்பது கேள்விக்குறிதான்.‘அதெல்லாம் ஒரு சுண்டைக்காய் சமாச்சாரம்’ என்று மிகவும் கிண்டலாக வழக்கத்தில் பேசப்படும் சுண்டைக்காயில் நம் உடலை நோயின்றி காக்கும் சிறந்த மருத்துவ குணங்கள் நிறைந்தஅவற்றை நாம் இங்கு காண்போம்.சித்த மருத்துவர் மல்லிகா அதன் சிறப்புகளை இங்கே விளக்குகிறார்.
சித்த மருத்துவத்தில் சுண்டைக்காய் தனிச்சிறப்புடன் கூறப்பட்டுள்ளது. சுண்டைக்காய் குறுஞ்செடி வகுப்பைச் சேர்ந்த தாவரம் இதன் தாவரவியல் பெயர் Solanum Torvum என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Turf berry என்று அழைக்கப்படும்.
தற்பொழுது சுண்டைக்காய் பல்வேறு தாவரவியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதில் அதன் எண்ணிலடங்கா பயன்கள் தெரிய வந்துள்ளது. மேலும் சுண்டைக்காயில் அல்கலாய்டுகள், ஃப்ளேவனாய்டுகள், Saponins, Tannins, கிளைக்கோசைடுகள், வைட்டமின்-B, வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது.
சுண்டைக்காயை பச்சையாக சமைத்து உண்பது மிகவும் நல்ல பலனளிக்கும். பெரும்பாலான வீடுகளில் பாக்கெட்டுகளால் அடைக்கப்பட்டு மளிகை கடைகளில் விற்கப்படும் உலர்ந்த சுண்டைக்காய் வற்றலை வாங்கி எண்ணெயில் பொரித்தும், குழம்பாகவும் தயாரித்து உண்கின்றனர். இது போல் அதிக உப்பினால் பதப்படுத்தப்பட்ட சுண்டைக்காயைப் பயன்படுத்தும்போது உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறுகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.
சுண்டைக்காயை வற்றலாக பயன்படுத்துவதை விட, பச்சை சுண்டைக்காயை வாரம் ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை நம் உணவில் பயன்படுத்துவது அவசியம். அதை குழம்பு, கூட்டு துவையல் போன்று சமைத்தும் உண்ணலாம்.
சுண்டைக்காய் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. குறிப்பாக வயிறு, குடல் தொடர்பான நோய்களை வர விடாமல் தடுத்து உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.
டைபாய்டு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து என்று சுண்டைக்காயினை சொல்லலாம். டைபாய்டு காய்ச்சல் வந்தவர்களுக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் நோய் அதிகம் இருக்கும். அவர்களுக்கு சுண்டைக்காயால் செய்த உணவுகளை அடிக்கடி கொடுப்பது நல்லது.
கழிச்சலை உண்டாக்கும் பாக்டீரியாக்கள், அமீபாக்கள் போன்ற நோய்க்கிருமிகளை அழித்து உடலை நோயுறாத வண்ணம் சுண்டைக்காய் தற்காத்துக் கொள்கிறது.
பச்சை சுண்டைக்காயை விதையுடன் பயன்படுத்த வேண்டும். சுண்டைக்காயினை குழம்பு வைக்கும்போது அதை நல்லெண்ணெயில் நன்றாக வதக்கி பயன்படுத்த வேண்டும். அவ்வாறு பயன்படுத்தும்போது சுண்டைக்காயின் தோல் பகுதி மிருதுவாக இருக்கும். இதனால் எளிதில் செரிமானமாகும். சுண்டைக்காயை பொரியல், குழம்பு, சாம்பார் என பயன்படுத்தலாம். சுண்டைக்காயை எண்ணெயில் பொரித்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவு, பருகும் குடிநீர் இவற்றில் எண்ணிலடங்கா கிருமிகளும் கலந்து உணவுடன் சென்று வயிறு உணவுப்பாதையை பாதித்து உடலுக்கு நோயை உண்டாக்குகின்றன. சுண்டைக்காயை உணவில் சேர்த்து உண்ணும்போது அந்த கிருமிகளை அழிக்கிறது. மேலும் வயிற்றுப்புண்ணை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. அல்சர் நோய்க்கு அருமருந்தாக இருக்கிறது.
சுண்டைக்காய் சித்த மருத்துவத்தில் சுண்டை வற்றல் பொடி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. சுண்டை வற்றல் பொடியை 5 கிராம் எடுத்து அதை மோருடன் கலந்து சாப்பிட வயிற்றில் பொருமல், வயிற்றுவலி, வயிற்று இரைச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.
சுண்டை வற்றல் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது உடல் சூட்டால் உண்டாகும் நோய்கள் குறைகிறது, நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கிறது.
பசியின்மை, நெஞ்சுச்சளி, குடற்புழு போன்ற பிரச்னைகளை சுண்டைக்காய் தீர்க்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் சுண்டைக்காய் உணவை எடுத்துக் கொள்ளலாம்.
சுண்டைக்காயில் உள்ள கசப்புச்சுவை நீரிழிவை கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவும்.
Average Rating