டயட்டீஷியன்களின் டயட்!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 30 Second

ஊருக்கெல்லாம் ஆலோசனை சொல்கிறவர்கள் டயட்டீஷியன்கள். அவர்களின் தனிப்பட்ட வாழ்வின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கும், டயட் அவர்களுக்கு என்னென்ன விதத்தில் உதவி செய்கிறது? உணவியல் துறையில் நீண்ட அனுபவம் மிக்க டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன், தன்னுடைய உணவு ரகசியங்களை இங்கே சொல்கிறார்.

‘‘டயட் என்றால் இந்த காலத்தில் இதை சாப்பிடக்கூடாது. அதை சாப்பிடக் கூடாது என நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. உணவைத் தவிர்ப்பது எப்படி டயட் ஆகும்? உணவே மருந்து என்பதைப் போல உணவுதான் டயட் என்பதை உணர வேண்டும். டயட்டில் 5 வகை உணவு பயிர்களான தானியம், கோதுமை, அரிசி, பார்லி, மக்காச்சோளம் ஆகியவை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

தினசரி நாட்களில் எல்லாவித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்படியான உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்வேன். ஆனால், சில சமயங்களில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளும்போது மட்டும் என்னால் டயட்டைக் கடைப்பிடிக்க முடியாமல் போகும். இது எல்லோரும் எதிர்கொள்கிற பிரச்னைதான். அதனால் தேவையற்ற குற்ற உணர்வுக்கெல்லாம் ஆளாக மாட்டேன். எனவே, அந்த சமயங்களில் பழங்களையே உணவாக எடுத்துக் கொள்வேன். குறிப்பாக தக்காளி, வெள்ளரிக்காய், ஆப்பிள் போன்றவை எடுத்துக் கொள்வேன்.

பொதுவாக என்னுடைய சிறிய வயதிலிருந்தே உணவுகள் பற்றியும், காய்கறிகள் வாங்குவதிலும் நல்ல ஆர்வமும் கவனமும் இருந்தது. அதனால், எனக்கு அது கடினமானதாக தெரியவில்லை. எப்போதும் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என நினைத்தால் இதை எல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது எளிது. உதாரணமாக ஒரு பீட்சா வீட்டில் செய்ய வேண்டும் என்றால் அது சுலபமானது இல்லைதானே… அதேபோலதான் டயட். ஆனால், பீட்சா செய்வதை விட டயட் மிக எளிதானது.

கொழுப்பு ஊட்டப்பட்ட உணவுகள், ஐஸ்க்ரீம், கேக் போன்றவைகளை எப்போதாவது சாப்பிடலாம். ஆனால், அவற்றை அடிக்கடி சாப்பிடும் வழக்கத்துக்கு ஆளாகிவிடுவதுதான் ஆபத்தானது. டயட் என்றால் பிடித்த ஒன்றை சாப்பிடவே கூடாது என்று அர்த்தம் இல்லை. அதன் அடிமைத்தனத்துக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதுதான் முக்கியம்.

டயட் எப்போதுமே எனக்கு உதவி செய்து வருகிறது. முக்கியமாக, என்னுடைய கர்ப்ப காலத்தில் டயட் மிகுந்த பயன் அளித்தது. ஆரம்பத்தில் 58 கிலோவில் மிகவும் குறைந்த எடையில் இருந்தேன். அதன் பிறகு 85 கிலோவாக உடல் எடை கூடியது. அப்போது எனக்கு ரத்தக்கொதிப்பு, கொழுப்பு போன்ற பிரச்னைகள் இருந்தது. இதை எல்லாம் என்னுடைய கர்ப்ப காலத்திற்குப் பிறகு டயட் முலம் படிப்படியாக குறைத்துக் கொண்டேன். பிறகு அனைத்தும் சரியாகி சீரான உடல் எடை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் என்னுடைய டயட்தான்.

இப்போதும் நான் டயட்டை சரியாக கடைபிடிக்கிறேன். இதனால் எனக்கு போதுமான எதிர்ப்பு சக்தி உள்ளது என்பதை உணர்கிறேன். மேலும் எனது வீட்டில் இருப்பவர்களும் இதே டயட்டைப் பின்பற்றுவதால் அடிக்கடி ஜலதோஷம் பிடிப்பது, நோய்த்தொற்றுக்கு ஆளாவது போன்றவை எனக்கோ அல்லது எனது குடும்ப உறுப்பினர்களையோ எளிதில் தாக்கியதில்லை.

டயட்டீஷியனாக இருப்பதால் நான் மட்டும் இல்லாமல் என்னைச் சுற்றி இருப்பவர்களும் ஆலோசனைகள் தருகிறேன். இதனால் அவர்கள் நல்ல உணவுமுறையைப் பின்பற்றி குணமடைந்து ஆரோக்கியம் பெறுகின்றனர். அதை பார்க்கும்போது எனக்கு மிகமகிழ்ச்சியாக இருக்கும்.

குறிப்பாக என்னுடைய வீட்டிலேயே அதற்கான உதாரணம் உண்டு. என்னுடைய மாமியாருக்கு அவரது 15 வயதிலிருந்தே ஆஸ்துமா பிரச்னை இருந்தது. அதனால் காய்கறிகள், பழங்கள் சில உணவுப் பொருட்களை முடிந்தவரைத் தவிர்த்து வந்தார். என்னுடைய திருமணத்திற்கு பிறகு மாமியாரின் உணவுப்பழக்கத்தைக் கண்டு கவலைப்பட்டேன்.

காய்கறிகள், பழங்கள் போன்ற முக்கியமான சத்துக்களை இழக்கிறார் என்பதை சரி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதன்பிறகு அவருக்கு சரியான உணவுமுறையை ஏற்படுத்தி எல்லாவித உணவு பொருட்களையும் சாப்பிட வைத்தேன். தற்போது அவருக்கு 90 வயது ஆகிறது. இன்னும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் கட்டுப்பாடான உணவு முறைகள்தான். எனவே, இதுபோன்ற விஷயங்கள்தான் நான் ஒரு டயட்டீஷியனாக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்’’ என்கிறார்.

நவீன உணவியல் துறையின் மாற்றங்கள் பற்றி கற்றுக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் ஆர்வம் காட்டுகிற டயட்டீஷியன் திவ்யா தன்னுடைய உணவுப்பழக்கங்கள் பற்றி கூறுகிறார்.

‘‘டயட் என்றாலே சிலர் சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகமாக சாப்பிடுவது என தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் டயட் என்பது நமது உடலின் தேவையை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப ஊட்டச்சத்தான உணவுகளை சரியான அளவில் சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதுதான்.
தற்போதைய காலகட்டத்தில் விதவிதமான புதிய உணவுகள் வந்துகொண்டே இருக்கிறது.

அதனால் என்ன எந்த மாதிரியான உணவுகள் இறுதிவரை எடுத்துக்கொள்ள முடியும் என்பதை முன்பே தேர்வு செய்து கொள்வது அவசியம். குறிப்பாக, நான் பின்பற்றுவது மற்றும் பிறருக்கு அறிவுறுத்துவது நம் முன்னோர்களின் உணவு முறைகளும், அவர்களின் பழக்கவழக்கங்களைத்தான். ஏனெனில் அதுதான் சிறந்த உணவுமுறையாகும்.

கூழ், கேழ்வரகு, கைக்குத்தல் அரிசி போன்றவைதான் உடலுக்கு நல்லது. இதனால் நம் முன்னோர்களுக்கு சர்க்கரை நோயோ, தேவையற்ற உடல் எடையோ கூடியதில்லை.காலையில் எழுந்து இரவு தூங்கப் போகும் வரை நேரத்தை சரியாக கடைப்பிடித்ததால் தான் அவர்கள் நல்ல முறையில் வாழ்ந்தனர். அதாவது காலை சூரிய உதயமாவதற்கும் எழுந்து 7-8 மணிக்குள் காலை உணவை சாப்பிட்டு, இரவு சீக்கிரம் சாப்பிட்டு 8 மணிக்கெல்லாம் தூங்கச் சென்று விடுவார்கள். உண்மையாக இந்தமாதிரியான வாழ்வியல் முறைதான் சரியானது. ஆனால், இதை இன்று யாரும்பின்பற்றுவதில்லை.

நம்மிடம் இந்த ஸ்மார்ட்போன்கள் இல்லையென்றாலே நமது வாழ்க்கை ஒழுங்காக இருக்கும். நேரத்திற்கு சாப்பிடலாம், இரவு சீக்கிரம் தூங்கினாலே காலை விரைவில் எழுந்துவிடலாம். இதனால் சீக்கிரம் பசி எடுக்கும்; சீக்கிரம் சாப்பிடலாம். ஆகவே சரியான தூக்கம், சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டாலே உடல் தொடர்பான பாதி பிரச்னைகள் தீரும்.

காலை 5 மணிக்கு எழுவது எனது தினசரி பழக்கம். எழுந்தவுடன் காலை கடன் முடிப்பது அவசியமான ஒன்று. அது தவறும் பட்சத்தில் அதற்கு நான் சரியான உணவுகளை உட்கொள்ளவில்லை அல்லது நன்கு தூங்கவில்லை என அர்த்தமாகும். எனவே, அதனை சரி செய்துகொள்வேன்.பிறகு சைக்கிளிங் செய்வதற்கும், பேட்மின்டன் விளையாடவும் மைதானத்திற்கு செல்வேன். இதனால் எனக்கு இரண்டுவிதமான உடற்பயிற்சிகள் கிடைக்கிறது. பிறகு காலை உணவுடன் மோர், பிறகு பழம் எடுத்துக் கொள்வது எனது பழக்கம்.

மதியம் பருப்பு வகைகள், காய்கள் எடுத்துக்கொண்டு இரவில் மோர், சாதம் அல்லது சப்பாத்தி மற்றும் இரண்டு முட்டை எனது இரவு உணவில் கட்டாயமாக இருக்கும். அதேபோல படுக்கும் முன்பு உலர்ந்த பழங்களை சாப்பிட்டு உறங்கச் செல்வேன். இதனால் எனது உடலுக்குத் தேவையான முழு சத்தும் அன்று முழுவதும் எனக்குக் கிடைக்கிறது. மேலும் நன்கு தூங்கும்போது உடலுக்குத் தேவையான ஓய்வும் கிடைக்கிறது. இது தவறும் பட்சத்தில் உடல் சோர்வாகும். உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல் போகலாம்.

மேலும் என்னைப் பொருத்தவரையில் ஒருநாள் உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் அந்த நாள் உடல் மிகவும் சோம்பேறித்தனமாக இருக்கும். மேலும் அந்த நாள் முழுவதும் மிக மெதுவாக செல்வதுபோல தோன்றும்.எனக்கு சமீபத்தில் ஒரு விபத்து ஏற்பட்டு எனது கால் முட்டி உடைந்தது. அதனால் அறுவைசிகிச்சை செய்தனர். ஆனாலும் 3 மாதங்களிலேயே குணமடைந்து விட்டேன். என்னுடன் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் குணமாக வெகுகாலமானது. காரணம் என்னுடைய உடலில் நல்ல வலிமை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் என்னுடைய டயட்தான்.

நிறைய பேருக்கு பிரச்னையே உணவால்தான் வருகிறது. எனவே, அதை தடுக்கும் வழிமுறைகளும் உணவில்தான் உள்ளது. என்னிடம் வரும் நோயாளிகளுக்கு டயட் பின்பற்றச் சொல்லி அதை அவர்கள் முறையாக பின்பற்றி உடல் சரியாகிவிட்டது என கூறும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

குறிப்பாக விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், நீச்சல் வீரர்களுக்கு டயட் என்பது மிகவும் முக்கியம். எனவே, அவர்கள் எங்களிடம் சிகிச்சை பெற்றுக்கொண்டு அவர்கள் தங்கள் தொழில் வாழ்வில் வெற்றி அடைவதை பார்க்கும்போது நாங்களே வெற்றியடைந்தது போலபெருமையாக இருக்கும்!’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவின் வாயடைத்த இந்தியா! (வீடியோ)
Next post குழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்! (அவ்வப்போது கிளாமர்)