‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’; நல்ல நாடகம் !! (கட்டுரை)

Read Time:14 Minute, 8 Second

ஒவ்வொரு தேசங்களும் தங்களது மக்கள் நலன் கருதி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உலக வழமை. நம் நாட்டிலும் காலத்துக்குக் காலம், அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைக் கவரக் கூடிய வகையில் வண்ணமயமான வார்த்தை ஜாலங்களுடன் அவை நடைமுறைக்கு வருகின்றன.

அவற்றுக்கெனப் பொதுவான நோக்கங்கள் பல இருந்தாலும், தமிழர் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்போது, சில மறைமுக நோக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தன; கொண்டிருக்கின்றன; கொண்டிருப்பன என்பதே உண்மை.

அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை வினைதிறனான முறையில் இனங்கண்டு, குறுகிய காலம், நீண்ட காலம் ஆகிய அடிப்படைகளில் அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், நடைமுறைப்படுத்தப்படும் திட்டமே, ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ என்ற திட்டம் ஆகும். ‘இலங்கையின் சமூக, பொருளாதார, கலாசார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, பொதுமக்களுக்கான செயற் பணிகளுடன் ஒன்றினைவோம்’ என்பதே, இதன் கருப்பொருள் ஆகும். இத்திட்டம், ஜனாதிபதி செயலகத்தால், மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ என, முல்லைத்தீவில் கடந்த மூன்றாம் திகதி தொடக்கம், எட்டாம் திகதி வரை, ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தலைமையில், வெகு விமரிசையாக நடைபெற்றது. “நாட்டில் இன்னொரு பிரபாகரன் உருவாக இடமளிக்க முடியாது. வடக்கில் தோன்றிய பிரபாகரனாலேயே நாம், பெரும் பிரச்சினைகளைச் சந்தித்தோம்” என, ஜனாதிபதி அங்கு கருத்துத் தெரிவித்து உள்ளார். வார்த்தை ஜாலங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில், ஜனாதிபதி, வார்த்தை ஜாலங்களுடன் உரையாற்றினார்.

“விடுதலைப் புலிகள், தனது இனத்துக்காக இறுதி வரை போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதாலேயே, தமிழ் மக்கள் அவர்களை ஆதரித்தார்கள்; இதுவே உண்மை. ஆனால், விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள். அதில், மாற்றுக் கருத்துக்கு இடமில்லை” இவ்வாறு, சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்ததும் ஜனாதிபதியே.

தத்துவஞானி கார்ல் மாக்ஸ்ஸின் எண்ணக் கருத்துப்படி, “எதிரி ஆயுதம் ஏந்தாத வரை, விமர்சனம் என்பதே ஆயுதம்; ஆனால், எதிரி ஆயுதம் ஏந்தி விட்டால், ஆயுதம் என்பதே விமர்சனம்” என்கின்றார்.

சுதந்திரத்துக்குப் பின்னர், இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த ஆட்சியைத் தம்வசம் வைத்திருந்த பேரினவாதிகளிடம், தமிழ் மக்கள், தாங்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு, அஹிம்சை ரீதியில், விமர்சன ரீதியில் பல முறை கேட்டு வந்துள்ளனர்.

அவை அனைத்தும், வன்முறை, ஆயுத முனையில் தொடர்ந்தும் அடக்கப்பட்டு வந்தமையாலேயே, தமிழ் மக்கள் ஆயுதம் தூக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டது. ஆகவே, இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டம், தமிழ் மக்களின் பார்வையில், ‘விடுதலைக்கான புனிதப் போர்’ எனவும் பேரினவாதிகளின் பார்வையில் பயங்கரவாதப் போராகவும் தெரிகின்றது.

இது இவ்வாறிருக்க, நம்நாட்டில் ‘நாட்டுக்காக ஒன்றிணைதல்’ என்பது, எவ்வாறு புரிந்து கொள்ளப்பட்டுள்ளது? இது தொடர்பிலான, தெளிவான புரிதல் இல்லாத நிலைமையே இன்னமும் காணப்படுகின்றது. ‘நாட்டுக்காக ஒன்றிணைதல்’ என்ற வீ(வி)தி இன்னமும் செப்பனிடப்படாமலேயே உள்ளது.

இது, படம் வரைந்து, பாகம் குறித்து, வகுப்பு நடத்திப் புரியச் செய்கின்ற விடயம் அல்ல. மாறாக, எங்களுக்குள் இயல்பாக வர வேண்டும். இயல்பாக வளர வேண்டும் என்பதுடன் தொடர்ச்சியாக, நிலைத்தும் நிற்க வேண்டும். ஆனால், தமிழ் மக்களுக்கே, பெரும்பான்மையின அரசியல்வாதிகள், ‘தேசிய நல்லிணக்கம், நாட்டுக்காக ஒன்றிணைதல்’ எனக் காலங்காலமாக வகுப்புகள் எடுத்து வருகின்றனர். ‘நாட்டுக்காக ஒன்றிணைதல்’ என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக, ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ என்ற செயற்திட்டமும் உள்ளது.

தமிழ் மக்கள், தங்களது அன்றாடம் எதிர்கொள்ளும் அல்லது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு, பல தடவைகள், தங்களது பிரதிநிதிகள் மூலம், ஜனாதிபதியிடம் தெரிவித்தும், தாங்கள் நேரடியாக ஜனாதிபதியிடம் தெரிவித்தும், அவை எவையுமே சற்றேனும் கவனத்தில் கொள்ளப்பட இல்லை.

“நான் இன்று, (08.06.2019) மகிழ்ச்சியாகவே முல்லைத்தீவுக்கு வந்தேன். எனக்கு முன்னதாக ஐந்து நிறைவேற்று ஜனாதிபதிகள் இருந்தனர். நான் ஆறாவது ஜனாதிபதி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில், முல்லைத்தீவு மக்கள் 80 சதவீதமான வாக்குகளை எனக்கு அளித்தனர். நான் அதை மறக்க மாட்டேன்” எனவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்து உள்ளார். “இந்நாட்டில், ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர்களில், அதிக தடவைகள் முல்லைத்தீவுக்கு வருகை தந்தது நானே” எனவும், ஜனாதிபதி பெருமையுடன் கருத்துத் வெளியிட்டு உள்ளார்.

போர் அரக்கன் ஏற்படுத்திய கொடிய துன்பத்தால் துவண்டு, துக்கத்தில் வாடி வதங்கி இருக்கும் முல்லைத்தீவு மக்களுக்கு, மகிழ்ச்சியாகச் சென்ற ஜனாதிபதி, வழங்கிய மகிழ்ச்சியான செய்தி என்ன என்பதே, இன்றுள்ள கேள்வி ஆகும். நம் நாட்டில் நடக்கின்ற தேர்தல்களில், தமிழ் மக்களது வாக்களிப்பு வீதம், ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் குறைவானதே.

இவ்வாறான நிலையில், தமிழ் மக்கள் 80 சதவீத வாக்குகளைப் பாரிய எதிர்பார்ப்புகளோடு, ஜனாதிபதிக்கு அள்ளி வழங்கினார்கள்; தங்களது துன்பங்களுக்கு விடிவு கிடைக்கும் எனப் பலமாக நம்பினார்கள்; நல்லவை நடக்கும் என, நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள்.

ஜனாதிபதி, முல்லைத்தீவுக்கு அதிகப்படியாக வந்திருக்கலாம். ஆனால், அங்குள்ள தமிழ் மக்களுக்கு, அதிகப்படியாக எதனையும் செய்யவில்லையே. ஏன், ஆற்ற வேண்டிய வேலைகளைக் கூடச் செய்யவில்லை.

வன்னிப் போர், இறுதியில் அகோரத் தாண்டவம் ஆடிய மண், முல்லைத்தீவு. போரின் கொடிய பக்கங்கள் விதைக்கப்பட்ட மண், முல்லைத்தீவு.

இன்று வடக்கு, கிழக்கில் மாற்றுத் திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள், நுண்நிதிக் கடனால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், ஒப்பீட்டு அளவில் அதிகப்படியாக வாழும் மாவட்டமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளது. வெளிமாவட்ட மீனவர்களது அதிகரித்த வருகை, சட்ட விரோத மீன்பிடி ஆகியவற்றால் வளச்சுரண்டல்களுக்கு உள்ளான மாவட்டமாகவும் முல்லைத்தீவு உள்ளது.

அத்துமீறிய காணி அபகரிப்புகள், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடருகின்ற மாவட்டமாகவும் முல்லைத்தீவு உள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் சுமக்கும் பிரச்சினைகளில், காணி அபகரிப்பு என்பது மிகப் பெரிய சிக்கலுக்கு உரியதாகும்.

கடந்த ஆண்டு (2018) டிசெம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர், தமிழ் மக்களது காணிகள் விடுவிக்கப்படும் என, ஜனாதிபதி முன்னர் உறுதிமொழியும் வழங்கி இருந்தார். அதுவும் வழமை போலவே, காற்றில் பறந்து விட்டது.

இவை, வடக்கு, கிழக்கில் உள்ள மாவட்டங்களுக்கான பொதுவான பிரச்சினையாகக் காணப்பட்டாலும், முல்லைத்தீவு முன்னிலையில் உள்ளது. அடுத்த படியாக, இவை யாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல், இலங்கையில் வறுமையில் வாடும் மக்களை, அதிகப்படியாகக் கொண்ட மாவட்டமாகவும் முல்லைத்தீவே உள்ளது.

இவ்வாறான கொடுந் துயரங்களுக்கு நடுவே, மக்களின் பிரச்சினைகளை, வினைதிறனான முறையில் இனங்கண்டு, அவற்றுக்கான குறுகிய காலம், நீண்ட காலம் ஆகிய அடிப்படைகளில் உடனடித் தீர்வுகளைப் பெற்றுக் கொடுத்து, சமூக, பொருளாதார, கலாசார மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, பொது மக்களுக்கான செயற் பணிகளுடன், ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ என்ற செயற்றிட்டத்தின் இலக்கு, முல்லைத்தீவு மக்களுக்குப் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதா?

‘மைத்திரி ஆட்சி, பேண் தகு யுகம்’ – இது கூட, ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்தின் வாசகமே. இவ்வாறாகக் கருதியே, தமிழ் மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஜனாதிபதியை அரசாட்சியில் அமர்த்தி அழகு பார்த்தனர். ஆனால், இதுவரை எதுவுமே செய்யாத ஜனாதிபதி, மீதியாகவுள்ள ஐந்து மாதங்களில் என்னத்தைச் செய்யப் போகின்றார்?

நம் நாட்டில், ‘நாட்டுக்காக ஒன்றிணைதல்’ என்பது, எப்போதோ பொய்த்து விட்டது. ஆனால், அது இன்னமும் மெய்யான நிலைக்கு, மெய்யாக வரவில்லை. ‘இனத்துக்காக ஒன்றிணைதல்’, ‘மதத்துக்காக ஒன்றிணைதல்’ ஆகியவையே முன்னிலையில் உள்ளன. பேரினவாதிகளிடம் அதிகாரமும் அகங்காரமும் ஒருமித்துச் சங்கமித்து விட்டன. இதன் சிந்தனைகள், சிதறல்களை இந்நாட்டிலிருந்து விடுவிக்கக் கூடிய வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவில்லை. மறுவளமாக, மேலும் முடுக்கியே விடப்பட்டுள்ளது. இனத்தால், மதத்தால் நாடு சிதறுண்டு கிடக்கின்றது.

‘நாட்டுக்காக ஒன்றிணைதல்’ என்ற திட்டத்தில், முல்லைத்தீவில் தமிழர்களின் பூர்வீகக் குளங்களில் ஒன்றான, ‘ஆமையன் குளம்’ நன்கு புனரமைக்கப்பட்டு, ஜனாதிபதியால் ‘கிரிஇப்வன் வௌ’ எனப் பெயர் சூட்ட(மாற்ற)ப்பட்டு, சிங்கள மக்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இது, பெரும்பான்மையின மக்களினது பொருளாதார விருத்திக்கு பயன்படப் போகின்றது.

நாட்டை ஒன்றிணைக்காமல், மேலும் பிரித்து வைக்க இது ஒன்றே போதும். போரால் பல தடவைகள் நோகடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, வெறும் மாங்கன்றுகளும் தென்னங்கன்றுகளும் சமூர்த்தி அட்டைகளும் வழங்கி விட்டு, தமிழ் மக்களின் பூர்வீகக் குளத்துக்குச் சிங்களப் பெயர் திணித்து, போரின் நிறம் தெரியாத சிங்கள மக்களிடம் வழங்கி உள்ளார்கள். இதுவே, ‘நாட்டை ஒன்றிணைத்தல்’ என்ற சிறப்பு நாடகம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்? (அவ்வப்போது கிளாமர்)
Next post கண்ணீரால் இணைந்த நட்பு!! (மகளிர் பக்கம்)