புதிய நாடாளுமன்றம்: பா.ஜ.க – காங்கிரஸ் இணைந்து செயற்படுமா? (கட்டுரை)
திங்கட்கிழமை (17), 17 ஆவது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, இந்திய நாடாளுமன்றம் கூடுகிறது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவரின் உரை என்று, பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சி தொடங்குகிறது.
பா.ஜ.கவின் கட்சித் தலைவராக இருக்கும் அமித்ஷா, உள்துறை அமைச்சராகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நிர்மலா சீத்தாராமன் புதிய நிதித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டமை, முற்றிலும் ‘புதுமுகங்கள்’ என்ற முறையில், செயற்படத் தொடங்கி இருக்கிறது என்பதை, இந்த அமைச்சரவை வௌிப்படுத்தி நிற்கின்றது.
இந்தக் கூட்டத்தொடரில், இருவேறு முக்கிய நிகழ்வுகளும் நடைபெற இருக்கின்றன. ஒன்று, நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவு. இதைப் பொறுத்தமட்டில் வெறும் சம்பிரதாயமாகவே இருக்கும்.
ஏனென்றால், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க, தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினரில் ஒருவரை சபாநாயகராகத் தெரிவு செய்யும். இதில் போட்டிக்கோ, வாக்கெடுப்புக்கோ பெரிய அளவில் சாத்தியக் கூறுகள் இல்லை. ஆகவே, ஏகமனதாகவே சபாநாயகர் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன.
இன்னொரு தெரிவு, துணைச் சபாநாயகர் தொடர்பானதாகும். இதற்கென்று சில முன்னுதாரணங்கள் இருக்கின்றன. ஆளுங்கட்சி சபாநாயகர் பதவியையும் எதிர்க்கட்சி துணைச் சபாநாயகர் பதவியையும் வைத்துக்கொள்ளும் வழக்கம் நடைமுறையில் இருக்கிறது.
நாடாளுமன்றம் என்ற ஜனநாயகத் தேரை இழுத்துச் செல்ல, ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் இப்படியோர் ஒப்பந்தம் இருப்பது, கடந்த கால வரலாறு. ஆனால், இதிலும் சில விதிவிலக்குகள் தொடர்ந்திருந்து வந்திருக்கின்றன.
துணைச் சபாநாயகர் பதவி, எதிர்க்கட்சியாக உள்ள கட்சிக்கு முழுக்க முழுக்கப் போகாமல், ஆளுங்கட்சியின் கூட்டணிக் கட்சிக்கு அந்தப் பதவி கொடுக்கப்படும் வாய்ப்புகளும் நடைபெற்றுள்ளன.
அதிலும் குறிப்பாக, காங்கிரஸுக்குப் பிரதான எதிர்க்கட்சிக்குத் தேவையான, நாடாளுமன்றத்தின் மொத்த எம்.பிக்கள் எண்ணிக்கையில் பத்து சதவீத எம்.பிக்களை, இந்தமுறையும் பெறவில்லை என்பதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கும் அக்கட்சிக்கு வாய்ப்பில்லை; துணைச் சபாநாயகர் பதவிக்கும் யோகம் இல்லை. ஆகவே, பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுக்கோ அல்லது எதிர்காலத்தில் கூட்டணிக்கு வரும் கட்சிகளில் ஒன்றுக்கோ, இந்தத் துணைச் சபாநாயகர் பதவி செல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
சென்றமுறை, அ.தி.மு.கவுக்கு அந்த வாய்ப்புக் கிட்டியது. அக்கட்சியின் சார்பில் மு. தம்பித்துரை, துணைச் சபாநாயகர் பதவியில் அமர்த்தப்பட்டார். அதற்கு முக்கிய காரணம், அப்போது ஜெயலலிதா உயிரோடு இருந்தார். அதனால், அ.தி.மு.கவைத் தனது நட்புக் கட்சியாக பா.ஜ.க பார்த்தது. அதுமட்டுமின்றி, நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அ.தி.மு.கவுக்கு, அந்தப் பதவியை அளிக்க பா.ஜ.க முன்வந்தது.
கடந்த நாடாளுமன்ற நடைமுறைப்படி பார்த்தால், இந்தமுறை நாட்டின் மூன்றாவது கட்சியாக தி.மு.க வந்திருக்கிறது. அக்கட்சிக்கு, நாடாளுமன்றத் துணைச் சபாநாயகர் பதவி வழங்கப்படலாம். ஆனால், தி.மு.கவைப் பொறுத்தமட்டில், பா.ஜ.கவுடன் உடனடிக் கூட்டணிக்குத் தயாராக உள்ள கட்சியல்ல.
குறிப்பாக, அக்கட்சியின் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின், தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, வெற்றி பெற்று, முதலமைச்சர் ஆவதுதான் முதல் குறிக்கோள். ஆகவே, அதற்குப் பா.ஜ.கவுடன் இணக்கமாகச் செல்வது, சரிப்பட்டு வராது என்றே நினைக்கிறார்.
ஆகவே, கூட்டணிக்கோ அல்லது இணக்கமாகவோ வராத ஒரு கட்சிக்குத் துணைச் சபாநாயகர் பதவியைக் கொடுக்க, பா.ஜ.க முன்வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அதற்கு அடுத்தபடியாக இருக்கும் மம்தா பானர்ஜிக்கு, அந்த வாய்ப்பு, எட்டிப் பார்க்கவே வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு பா.ஜ.கவுக்கும் அவருக்கும், மேற்கு வங்கத்தில் தினமும் முட்டலும் மோதலுமாக இருக்கிறது.
எதிர்க்கட்சிகள் தரப்பில், இந்த இரு கட்சிகளுக்கும் வாய்ப்பு இல்லை என்பதால், பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதாத் தளத்துக்கு ஒரு யோகம் அடிக்கலாம். ஆனால் அதிலும் சிக்கல் என்னவென்றால், “அமைச்சர் பதவியே வேண்டாம்” என்று கூறிவிட்டு, அடுத்து, “மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில், தனித்துப் போட்டியிடுவோம்” என்று அறிவித்துள்ள பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி, துணைச் சபாநாயகர் பதவியை மட்டும் ஏற்றுக் கொள்ளுமா? இந்தக் கேள்விக்கும் சாதகமான பதில் இல்லை.
இந்நிலையில், எஞ்சியிருப்பது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி மட்டுமே. அதற்குத் துணைச் சபாநாயகர் பதவியை ஏற்பதில், ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆகவே, பா.ஜ.கவுடன் இணக்கமாக இருக்கும், அதேநேரத்தில் எதிர்க்கட்சி போல் இருக்கும் வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு, துணைச் சபாநாயகர் பதவி போகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
அதன் முதற்கட்டமாகவே, ஆந்திர மாநிலத்தில் வெற்றி பெற்ற வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்குத் துணைச் சபாநாயகர் பதவி வழங்க, பா.ஜ.க முன் வந்தது என்ற செய்திகள் வெளிவந்தன.
ஆனால், அக்கட்சியின் சார்பில், ஆந்திர முதலமைச்சராக இருக்கும் ஜெகமோகன் ரெட்டி, தனது வாக்கு வங்கிக்கு, ஆந்திர மாநிலத்தில் ஆபத்து வந்து விடுமோ என்றும், மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு மீண்டும் வாய்ப்பளிப்பது போல் ஆகி விடுமோ என்றும் தயக்கம் காட்டி வருகிறார்.
ஆகவே, பா.ஜ.கவுடன் கூட்டணியாக இல்லாத ஒரு கட்சிக்குத் துணைச் சபாநாயகர் பதவியைக் கொடுப்பதை விட, சபாநாயகர், துணைச் சபாநாயகர் பதவிகளை பா.ஜ.கவே வைத்துக் கொண்டால் என்ன என்ற சூழலும் எழலாம். அப்படி நிகழாது என்றும், தற்போது கூறிவிட முடியாது.
இது போன்ற பரபரப்புக் காட்சிகளுக்கு, இன்றைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பஞ்சமிருக்காது. என்றாலும், நாடாளுமன்ற விவகாரக்குழு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோசி, சோனியா காந்தியின் இல்லத்துக்குச் சென்று, “நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் ஒத்துழைப்பு வேண்டும்” என்று கோரியது, வித்தியாசமான நிகழ்வாக இருக்கிறது.
பலமில்லாத காங்கிரஸ் கட்சியுடன், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் நட்புடன் நடந்து கொள்ளவே, பா.ஜ.க விரும்புகிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என்பதை வெளிப்படுத்துகிறது.
கடந்த நாடாளுமன்றத்தில், இது போன்றதொரு நெருக்கத்தை ராகுல் காந்தியுடன் உருவாக்கிக்கொள்ள பா.ஜ.க விரும்பவில்லை. ஆனால், இந்த முறை அதிலிருந்து மாறுபட்டு, சோனியா காந்தியைச் சந்தித்து, ஆதரவு கேட்டிருப்பது புதுமுயற்சியாகும்.
இராஜ்ய சபையில், காங்கிரஸின் ஆதரவு இருந்தால் பல சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்று பா.ஜ.க நம்புவதால், இந்த முயற்சி என்று தோன்றுகிறது. இதற்கு, சோனியா காந்தி சாதகமான பதிலைச் சொன்னாலும், வெளித்தோற்றத்தில் வித்தியாசமாகப் பேசி வருகிறார்.
குறிப்பாக, ‘ரேபரலி’ தொகுதியில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், “பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றி கண்ணியமான வெற்றியல்ல” என்ற கடும் தாக்குதல் ஒன்றைத் தொடுத்திருக்கிறார். வயநாட்டில் நன்றி சொன்ன ராகுல் காந்தியும் மோடி மீது கடும் வார்த்தைப் பிரயோகத்தைச் செய்திருக்கிறார்.
இந்தத் தாக்குதல்கள் எல்லாம், நாடாளுமன்றத்துக்குள் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் ஒற்றுமையை ஒருங்கிணைப்பை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தக் கசப்புணர்வு தொடருமேயானால், இரு கட்சிகளும் ‘எலியும் பூனையும்’ போல், மீண்டும் இந்த ஐந்து வருடமும் செயற்படும் சூழ்நிலை உருவாகும்.
கடந்த மக்களவையில் பா.ஜ.கவுக்குப் பலமிருந்தது. ஆனால், இராஜ்ய சபையில் பலமில்லை. அதனால் முக்கிய சட்டமூலங்களை அந்தக் கட்சியால் நிறைவேற்ற முடியவில்லை. “காங்கிரஸ் கட்சியால்தான் முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்ற முடியவில்லை” என்ற பிரசாரத்தை, மக்கள் மத்தியில் பா.ஜ.க கொண்டு போய்ச் சேர்த்தது. காங்கிரஸின் தோல்விக்கு, அதுவும் ஒரு காரணம்.
இந்தமுறை “ஒத்துழைப்புக் கொடுங்கள்” என்று சோனியாவைச் சந்தித்துக் கோரியிருக்கிறது பா.ஜ.க. ஆனால், சோனியாவின் பா.ஜ.க மீதான தாக்குதல், வேறு திசையில் செல்கிறது. ஒத்துழைப்புக்குப் பதில், இரு தரப்பும் மேலும் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் என்றே தோன்றுகிறது.
ஆனால், இரு கட்சிகளுக்குமே அது நல்லதல்ல. நாட்டின் நலன் கருதி இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியும் பா.ஜ.கவும் ஒருங்கிணைந்து செயல்படுவதே, தேர்தலுக்குப் பிறகான கண்ணியமான அரசியலாக இருக்க முடியும்.
இராஜ்ய சபையில், ‘பா.ஜ.கவுக்குத் தற்சமயம் பெரும்பான்மை இல்லை’ என்ற ஒரே காரணம், அக்கட்சிக்கு மக்களவையில் வாக்களித்த மக்களின் நம்பிக்கையைப் பொய்மையாக்கி விடக்கூடாது. காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை என்ற ஒன்று மட்டுமே, அக்கட்சிக்கு மதிப்பளிக்க வேண்டியதில்லை என்றும் நிலை மாறி விடக்கூடாது.
தேர்தல் முடிந்தாகி விட்டது. இனிப் பரஸ்பர, காரசார வார்த்தைப் போர்களுக்கு இடமில்லை. இரு கட்சிகளுமே தேசியக் கட்சிகள்; நாட்டை ஆண்ட கட்சிகள். ஆகவே, இரு கட்சிகளுமே நாட்டின் முக்கிய பிரச்சினைகளில், ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
மக்களின் எதிர்பார்ப்புகளை, இரு தேசியக் கட்சிகளும் நிறைவேற்றுமா? இதுதான், புதிய நாடாளுமன்றத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று, இரு கட்சிகளுக்கும் வாக்களித்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Average Rating