கோவையில் தொடரும் தேடுதல் – நேற்று இரவும் முவர் கைது!! (உலக செய்தி)
பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறி கோவையில் மேலும் மூவர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமையால் வேறு ஒரு நபரும் வெள்ளியன்று கைது செய்யப்பட்டள்ளார்.
கோவை மாநகர காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் விசாரணை நடத்தி வந்த முகமது உசைன், ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய மூன்று சந்தேக நபர்களை வெள்ளி இரவு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு பிறகு அவர்கள், இன்று, சனிக்கிழமை காலை, மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டில் முன்னிலைப் படுத்தப்பட்டனர்.
அவர்களை வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இவர்கள் மூவரும் ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும், கோவையில் அந்த அமைப்புக்கு அடித்தளம் அமைத்து தீவிரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் கோவை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்திக் குறிப்பு கூறுகிறது.
தேசிய புலனாய்வு முகமையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஷேக் இதயத்துல்லா என்பவரும் வெள்ளியன்று கைது செய்யப்பட்டுள்ளார். 38 வயதாகவும் இதயத்துல்லா கோவை தெற்கு உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்.
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் குற்றம்சாட்டப்படும் சஹ்ரான் ஹாஷ்மி உடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்தது, தமிழ்நாடு மற்றும் கேரளாவில் தாக்குதல்கள் நடத்தும் நோக்கத்துடன் ஐ.எஸ் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்புக்கு, மூளைச் சலவை செய்து ஆட்களைச் சேர்க்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் கோவையைச் சேர்ந்த ஆறு பேர் மீது தேசிய புலனாய்வு முகமை மே 30 அன்று வழக்குப்பதிவு செய்தது.
மே 12 அன்று கோவையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனைகளைத் தொடர்ந்து மொகமது அசாருதீன் என்பவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து. ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிக் மூமன்ட் ஆஃப் இந்தியா எனும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும், ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் ஷேக் இதயத்துல்லா கைது செய்யப்பட்டுள்ளார் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவிக்கிறது.
சோதனைகளுக்குப் பிறகு மொகமது அசாருதீன், சேக் இதயத்துல்லா, இப்ராகிம், அக்ரம் சிந்தா, சதாம் உசைன், அபுபக்கர் ஆகிய ஆறு பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் கொச்சி – எர்ணாகுளத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜப்படுத்தப்படுவார் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Average Rating