இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண சமரச பேச்சை தொடங்க பிரபாகரன் சம்மதம்

Read Time:5 Minute, 6 Second

SL.KEHELIYA RAMBUKWELLA.3jpg.jpgஇலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண மீண்டும் சமரச பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக இலங்கை மந்திரி கெகலியா ராம்புக்வெல்லா தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு கேட்டு போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் நார்வே நாடு ஈடுபட்டது.

இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் துப்பாக்கி சத்தம் ஓய்ந்து அமைதி ஏற்பட்டது.

மீண்டும் போர்

இந்த நிலையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் போர் நிறுத்தம் சீர்குலைந்தது. இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பேர் பலி ஆனார்கள். இரு தரப்பினரும் தொடர்ந்து மோதிக் கொள்ளும் நிலை இருந்து வருகிறது.

இதனால் இலங்கை அரசு-விடுதலைப்புலிகள் இடையே சமரச பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. இதுதொடர்பாக நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் கடந்த வாரம் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசினார்.

பிரபாகரன் சம்மதம்

இந்த நிலையில் சமரச பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக இலங்கை கொள்கை திட்ட வகுப்பு இலாகா மந்திரியும் அரசின் செய்தித் தொடர்பாளருமான கெகலியா ராம்புக்வெல்லா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:- கடந்த வாரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வனை சந்தித்து பேசிய நார்வே தூதர் ஹன்ஸ் பிரட்ஸ்கர் சில ஆக்கபூர்வமான யோசனைகளுடன் திரும்பி இருக்கிறார்.

பேச்சு வார்த்தையை மீண்டும் தொடங்க பிரபாகரன் சம்மதம் தெரிவித்து உள்ளார். ஆனால் இதுதொடர்பாக அவரிடம் இருந்து எங்களுக்கு உறுதியான தகவல் வேண்டும். இந்த விஷயத்தில் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் தெரிவிக்கும் கருத்துக்களை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது. பிரபாகரன் உறுதி அளிக்க வேண்டும் என்று அதிபர் ராஜபக்சே விரும்புகிறார். எனவே சமரச பேச்சுவார்த்தையை மீண்டும் எப்போது தொடங்குவது என்பது பற்றி பிரபாகரன் உறுதியாக தெரிவிக்க வேண்டும். இதுபற்றி இன்னும் 2 அல்லது 3 தினங்களில் அதிபர் ராஜபக்சே முடிவு செய்வார்.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் சம்மதம் தெரிவித்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

அடுத்த மாதம்

அக்டோபர் மாத தொடக்கத்தில் நிபந்தனை இன்றி மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க விடுதலைப்புலிகள்-இலங்கை அரசு ஆகிய இரு தரப்பினருமே ஒப்புக்கொண்டு இருப்பதாக 2 வாரங்களுக்கு முன்பே நார்வே தெரிவித்தது.

எனவே நார்வேயில் உள்ள ஆஸ்லோ நகரில் அடுத்த மாத தொடக்கத்தில் சமரச பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழு ஈடுபட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post “டான்” தொலைக்காட்சி உரிமையாளர் கைது
Next post திடீர் திருப்பம்: அதிமுக கூட்டணி உடைந்தது; திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள்