‘கலைத்து விடுவோம் காங்கிரஸை’ காந்தியின் கனவு நிறைவேறுகிறதா? (கட்டுரை)
காங்கிரஸை கலைத்து விடுங்கள்” என்று மகாத்மா காந்தி கூறியது, பலித்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு இந்தியத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. “தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுகிறேன்” என்று ராகுல் காந்தி காங்கிரஸின் உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் அறிவித்தாலும், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் தலைவர் பதவியில், ராகுல் காந்தி நீடிக்கிறாரா இல்லையா என்பது இன்னும் தெளிவாகவில்லை. நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் கட்சிக்குள் அனைத்துத் தலைவர்களுமே சுதந்திரமாகத் திரிந்த நிலை, இரண்டாவது தடவையாகக் காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்திருக்கிறது.
ஜவஹர்லால் நேரு காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி இப்படியொரு தோல்வியை அடுத்தடுத்துப் பெற்றதில்லை. குறிப்பாக, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் இதுபோன்ற மரண அடி விழுந்ததும் இல்லை.
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 44 தொகுதிகள் என்றால், இந்த முறை 52 தொகுதிகள், 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் பத்து சதவீத வெற்றியைக் கூடப் பெற முடியாமல் ராகுல் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்குச் சோதனை வந்திருப்பது, நாட்டில் நிலவும் இரு கட்சி ஆட்சி முறைக்கு, முடிவு கட்டிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
1980களுக்கு முன்பாக, காங்கிரஸ் மட்டுமே தனிப்பெரும் தேசியக் கட்சியாக விளங்கியது. அதற்குப் பிறகும் கூட, ஆட்சி அமைக்கும் வாய்ப்பைப் பெறாமல் போயிருக்கிறது. ஆனால், 40, 50 தொகுதிகளுக்குள் காங்கிரஸின் வெற்றி நின்றதில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக சீத்தாரம் கேசரி போன்றவர்கள் இருந்த போது கூட, இந்த நிலை ஏற்பட்டதில்லை.
ஆனால், ‘காந்தி’ குடும்பத்தின் கீழ் உள்ள காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ச்சியாக இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் கிடைத்துள்ள தோல்வி, அக்கட்சிக்கு வேறு யாராவது தலைமை தாங்க வேண்டுமா என்ற கேள்வியை உசுப்பி விட்டுள்ளது என்னவோ உண்மைதான்.
அந்த உணர்வில்தான் ராகுல் காந்தி, “என் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்து விடுகிறேன். வேறு தலைவரைத் தெரிவு செய்யுங்கள்” என்று கூறியிருக்கிறார்.
ராகுலின் இராஜினாமாக் குறித்து, காங்கிரஸ் இன்னோர் உயர் நிலைக்குழுக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்குமா அல்லது ராகுல் இருக்கட்டும் என்று அமைதி காக்குமா என்பது தெரியவில்லை.
ஆனால், சூப்பர் ஸ்டார் ரஜினி காந், “ராகுல் தனது இராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும்” என்று கூறி விட்டார். மஹாராஷ்டிர தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியிருக்கிறார். தமிழ்நாட்டிலிருந்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி இிருக்கிறார். பீஹார் சிறையில் இருக்கும் லாலு பிரசாத் யாதவ் “ராஜினாமா செய்யக்கூடாது” என்று கூறியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பல மாநிலத் தலைவர்களும் இதே கருத்தைப் பிரதிபலித்து வருகிறார்கள்.
ஆனால், உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சி மக்களிடமுள்ள தொடர்பை இழந்து விட்டது என்பதுதான். அதுமட்டுமல்ல, மக்கள் செல்வாக்குள்ள மாநிலத் தலைவர்களையும் பறி கொடுத்து விட்டது என்பதும் அதைவிட உண்மை.
1960களில் காங்கிரஸ் கட்சி, மாநிலக் கட்சிகளிடம் தனது வாக்கு வங்கியை இழந்தது. உதாரணமாகத் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம், பஞ்சாபில் அகாலிதளம், ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி, ஒடிசாவில் பிஜு பட்நாயக் போன்றவர்களிடம் பறிகொடுத்தது. பிறகு உத்தரப்பிரதேசத்தில் கன்சிராம், மாயாவதி, முலயாம் சிங் யாதவ் ஆகியோரிடம் காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்தது.
அடுத்ததாக, காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களைப் பறிகொடுத்ததால், மாநிலங்களில் இருந்த செல்வாக்கையும் காங்கிரஸ் கட்சி இழந்தது. அப்படிப் பார்த்தால், தமிழ்நாட்டில் காமராஜர், மூப்பனார், இப்போது ஜி.கே.வாசன் போன்றவர்களை இழந்து விட்டது. ஆந்திரபிரதேசத்தில் மறைந்த ஒய் எஸ். ஆர் ராஜசேகர் ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை ஓரங்கட்டியதால் செல்வாக்கை இழந்தது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியை புறக்கணித்ததால் அங்கு ஆட்சியை இழந்தது. மஹாராஷ்டிராவில் சரத்பவாரை தூக்கியெறிந்ததால் காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்தது.
இப்படிக் காங்கிரஸ் கட்சி தொடங்கிய பிறகு, மூன்று முக்கியக் கட்டங்களில் தனது வாக்கு வங்கியைப் பறிகொடுத்துத் தவித்தது. ஆனால், ராகுல் காந்தியின் தலைமையின் கீழ்தான் தேசிய சிந்தனை கொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, முற்படுத்தப்பட்ட வாக்கு வங்கியை இழந்துள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்தே பயணித்து வந்த முற்படுத்தப்பட்டோர் வாக்கு வங்கி, இந்தத் தேர்தலில் ‘பேயாட்டம்’ போட்டு வெளியேறியிருக்கிறது என்பதைத்தான் தேர்தல் முடிவுகளும் கடுமையான தோல்வியும் அக்கட்சிக்குப் பாடமாக அமைந்துள்ளன.
இன்றைய நிலையில், ராகுல் தலைமையே நீடித்தாலும் கூட்டுத் தலைமை ஒன்றும், மாநிலக் கட்சிகளுடன் இணக்கமாக விட்டுக் கொடுத்து உறவு வைத்துக் கொள்வதும் ஒன்றுமே காங்கிரஸின் எதிர்காலத்தை உறுதி செய்யும். அப்படியில்லையென்றால், “காங்கிரஸை கலைத்து விடலாம்” என்ற காந்தியின் கனவு நிறைவேறிவிடும் ஆபத்து இருக்கிறது.
காங்கிரஸின் இடத்தைப் பிடிக்க பாரதிய ஜனதாக் கட்சி மிகுந்த போராட்டம் நடத்தியது. ஆனால், மதவாதம் என்ற போர்வையைப் போர்த்தி, அக்கட்சியின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு வந்தது. வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள் கடும் உழைப்பை அர்ப்பணித்தார்கள்.
ஆனாலும் வாஜ்பாய் காலத்தில் கூட, அமோக வெற்றி பெற முடியவில்லை. மாநிலக் கட்சிகளின் தயவுடன் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டிய நிலை வாஜ்பாய்க்கே ஏற்பட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்காக பொது வேலைத் திட்டம் தயாரிக்க வேண்டிய கட்டாயம் அத்வானிக்கும், வாஜ்பாய்க்குமே நேர்ந்தது.
ஆனால், இதை முறியடித்தவர் நரேந்திர மோடிதான். அவர் ஆட்சியில் அமர்ந்து விட்டால், பதவியிலிருந்து இறக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பதை பா.ஜ.கவினர் கூறி வந்தார்கள். இப்போது இந்திய மக்கள் கூறத் தொடங்கி விட்டார்கள். அந்த அளவுக்குத் தேர்தல் யுக்தியும் மக்களைக் கவரும் பேச்சும் அறிந்தவர் நரேந்திர மோடி.
வாஜ்பாய்க்கு அத்வானி கிடைத்தது போல், மோடிக்கு கிடைத்தவர்தான் அமித்ஷா. தற்போது இந்தியாவின் உள்துறை அமைச்சராக ஆகியிருக்கும் அமித்ஷாவின் தேர்தல் வியூகங்களை முறியடிக்க முடியாமல், இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் (2014,2019) காங்கிரஸ் கட்சியை மூச்சுத் திணற வைத்துள்ளார்.
அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவையும் பிரதமர் நரேந்திர மோடி பெற்றிருக்கிறார் என்பதே தேர்தல் முடிவில் எதிரொலிக்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவு எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், அவர்களின் ஆதரவும் அவருக்கு இருந்திருக்கிறது என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
பிரசாரத்துக்கு ஆங்காங்கே இந்துத்துவா பற்றி நரேந்திர மோடி பேசினாலும், மக்கள் அவரை ‘வளர்ச்சி நாயகனாகவும்’, ‘ஊழலற்ற அரசாங்கத்தை நடத்துபவருமாகவே’ பார்க்கிறார்கள்.
கொம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மம்தா பானர்ஜிக்கும் மட்டுமே இருந்த மேற்கு வங்க அரசியல், பா.ஜ.க மயமாகி விட்டது. ‘மாயாவதி- முலயாம்’ ஆகியோரின் அரசியலாக இருந்த உத்தரபிரதேச அரசியல், பா.ஜ.க மயமாகி விட்டது. ஏன், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியல் களமாக இருந்த ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பா.ஜ.கவின் தேர்தல் களமாகி விட்டது.
ஆகவே, முதற்றரமான தேசியக் கட்சி என்ற அந்தஸ்த்துக்கு உயர்ந்து விட்ட பா.ஜ.க இரு முறை தனிப்பெரும் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்து விட்டது. ஆகவே தேசிய அந்தஸ்தில், ‘மோடி- அமித்ஷா’ தலைமையிலான பா.ஜ.கவை எதிர்கொள்ள இன்றைக்கு காங்கிரஸும் இல்லை; மாநிலக் கட்சிகளும் இல்லை என்ற நிலை உறுதியாகி விட்டது.
இந்திய அரசியலில் கொம்யூனிஸ்ட் கட்சிகளின் அடையாளம் படு வேகமாக மறையத் தொடங்கி விட்டது. மேற்கு வங்க மாநிலத்தில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில், 22 சதவீத வாக்குகளைப் பெற்ற அந்தக் கட்சி, இந்தத் தேர்தலில் வெறும் ஆறு சதவீதத்தைப் பெற்று 16 சதவீத வாக்குகளைப் பறிகொடுத்திருக்கிறது.
தொண்டர்கள் மயமான கொம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்துள்ள இந்தச் சோதனை இந்திய வரைபடத்திலிருந்து அக்கட்சியின் செல்வாக்கு மறைந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. அக்கட்சியின் சித்தாந்தம் நிலைத்து நிற்க முடியாமல், மேற்கு வங்கம் போன்ற மாநிலத்திலேயே தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
ஆகவே பா.ஜ.கவுக்கு மாற்றுச் சக்தியாகவோ, காங்கிரஸ் இடத்தைப் பிடிப்பதற்கோ கொம்யூனிஸ்ட் கட்சிக்கு வழியும் இல்லை; வாய்ப்பும் இல்லை. காங்கிரஸ் வரலாறு காணாத வகையில், பலவீனமடைந்து நிற்பதால் இந்தியாவில் ‘இரண்டு தேசியக் கட்சி அரசியல்’ என்பதற்குப் பதில், ஒரே தேசியக் கட்சி, அதுவும் பா.ஜ.க என்ற திசையை நோக்கி வெகு தூரம் கடந்து வந்து விட்டது.
இனி, இந்தத் தூரத்தை எட்டிப் பிடித்து ஓடி வருவதற்கு, புதிய தேசியக் கட்சி உருவாகுமா என்பது, மில்லியன் டொலர் கேள்வியாகும்.
Average Rating