இன நல்லிணக்கமும் முஸ்லிம்களின் சுயமும் !! (கட்டுரை)

Read Time:21 Minute, 39 Second

இவ்வருடம் ஏப்ரல் மாதத்தில், பயங்கரவாதக் குழுவொன்று மேற்கொண்ட வன்செயலால் உயிரிழந்தவர்கள் கிறிஸ்தவர்கள் என்றாலும், உண்மையில் பல கோணங்களிலும் நெருக்கடிகளைச் சந்தித்திருப்பவர்கள் முஸ்லிம்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது.

முஸ்லிம்கள் பெரும்பாலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவது ஒருபுறமிருக்க, இத்தருணத்தைப் பயன்படுத்தி, இனவாத சக்திகளும் முஸ்லிம்கள் மீது, வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன.

இவற்றையெல்லாம் எவ்வாறு சரிப்படுத்துவது என்பதுதான், இலங்கை முஸ்லிம்கள் முன், இன்றிருக்கின்ற மிகப் பெரிய வினாவாகும். இந்தச் சந்தர்ப்பத்திலேயே அவர்கள், இன நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் முயற்சிகளை அதிகரித்திருக்கின்றனர்.

ஆனாலும், அவையெல்லாம் சில தரப்பினரால் வேறு கண்கொண்டு பார்க்கப்படுவது மட்டுமன்றி, முஸ்லிம்கள் தங்களது மனித உரிமை, மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை போன்றவற்றையும் விட்டுக்கொடுக்க வேண்டிய ஓர் இக்கட்டான நிலைமையும் ஏற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

‘பௌத்த சிங்கள நாடு’ என்று அழைக்கப்படுகின்ற இலங்கைத் தேசத்தில், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களின் பின்னணியில், முஸ்லிம்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம்களை இலக்கு வைத்து, இனவெறுப்புப் பேச்சுகள் மட்டுமன்றி, வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படுகின்ற சூழலிலும் கூட, முஸ்லிம்களே நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று, ஏனைய சமூகங்கள் கருதுவதாகத் தெரிகின்றது.

‘நீங்கள்தான் பிழை செய்திருக்கின்றீர்கள்; எனவே, நீங்கள் இவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, அடங்கியொடுங்கி, நல்லிணக்கத்தை வெளிப்படுத்த வேண்டும்’ என்று, மறுதரப்பினர் குறிப்புணர்த்துவதாகக் கருத முடியும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நல்லிணக்கமும் மதச் சகிப்புத்தன்மையும் எல்லா இன – மத குழுமங்களிடமிருந்தும் வௌிப்பட வேண்டும். ஆனாலும், முஸ்லிம்கள் சில விடயங்களில், சற்று இறங்கிப் போக வேண்டிய ஒரு சூழலை, காலம் ஏற்படுத்தி இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த இடத்தில்தான், ஒரு பிரச்சினையும் குழப்பமும் எழுகின்றது. அதாவது, முஸ்லிம்கள், இனநல்லிணக்கம் என்ற பெயரில், மற்ற மதங்களின் குறிப்பாக, பௌத்த மத நிகழ்வுகளில் பங்கேற்கும் போது அல்லது, அவற்றில் பங்களிப்பு வழங்கும் போது, தமது எல்லைக் கோடுகளைக் கடந்து செல்ல நேரிடுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமது மத அடையாளம், கொள்கை, தனித்துவங்களை உள்ளடக்கியதான சுயத்தைக் கொஞ்சமேனும் இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றதா என்பது, அதன் துணைக் கேள்வியாக அமைகின்றது.

புராதன இலங்கையில், மதங்களையும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கான தனித்துவ அடையாளங்களையும் கண்டறிவது கடினமான காரியமாகும். இந்த நாட்டில், நான்கு மதங்களும் அவற்றைப் பின்பற்றுகின்ற இனக் குழுமங்களும் இரண்டறக் கலந்தே வாழ்ந்து வந்திருக்கின்றன. சிங்களம், தமிழ், முஸ்லிம் கலப்பினத் திருமணங்கள் பரவலாக இடம்பெற்றிருக்கின்றன.

அந்தக் காலத்தில், இனங்கள் இருந்தன; இனவாதம் இருக்கவில்லை. மதங்கள் இருந்தன; ஆனால், எமது மதமே பெரியது எனத் தூக்கிப்பிடிக்கும் மதவாதம் இருக்கவில்லை.

வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் வாழ்வியல் சடங்குகளுக்குள், தமிழர்களின் பாரம்பரியங்களின் தாக்கமும் சிங்களப் பிரதேசங்களில், சிங்கள பண்பாடுகளின் தாக்கமும் இருப்பதை இன்றும் கூடக் காணலாம்.

அதேபோல் மறுதலையாக, சிங்கள, தமிழ் மக்களின் சம்பிரதாயங்களுக்குள் இஸ்லாமியரின் ஒரு சில பழக்கவழக்கங்கள் ஊடுருவி இருப்பதையும் உன்னிப்பாகப் பார்க்கின்றபோது தெரியும். பல்லின, பல்கலாசார நாடொன்றில், இப்பண்பு தவிர்க்க முடியாததும் சிலவேளைகளில், இன நல்லிணக்கத்துக்கு அடிப்படையானதுமாக அமைகின்றது.

ஆனால், இலங்கையில் நடைபெற்ற யுத்தம், முஸ்லிம்கள் மீதான வன்முறைகள், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் எனக் கடந்த நான்கு தசாப்தங்களில் இடம்பெற்ற சம்பவங்கள், இன நல்லிணக்கத்தைப் பின்தள்ளி இருக்கின்றன. எல்லாச் சமூகங்களுக்கும் இடையிலான நல்லிணக்கமும் நம்பிக்கையும் இன- மத சகிப்புத்தன்மையும் அண்மைய குண்டுவெடிப்புகள், முஸ்லிம்கள் மீதான வாய்மொழிமூல மற்றும் ஆயுதத்தினாலான தாக்குதல்களின் பின்னர், கிட்டத்தட்ட பூச்சியத்தில் வந்து நிற்கின்றன.

அண்மையில், முஸ்லிம் பெயர்தாங்கிய குழுக்களால் இணைந்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களால், முஸ்லிம்கள் பற்றிய விம்பம் சற்று நொருங்கி இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

முஸ்லிம்கள் மீதான நம்பிக்கை, பரவலாக ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் குறைவடைந்திருப்பதுடன் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுகின்ற நிலையும் தோன்றியுள்ளது. சிங்கள, தமிழ் கடும்போக்குச் சக்திகளின் வெறுப்புப் பேச்சுகள், இதற்கு எண்ணெய் ஊற்றுபவையாக அமைந்திருக்கின்றன.

எனவே, நாம் இந்தப் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்லர் என்பதையும் இந்த நாட்டில் வாழ்கின்ற இனங்களுடன் எப்போதும் போல, இணக்கத்துடன் வாழவே விரும்புகின்றோம் என்பதையும் எல்லா வழிமுறைகளிலும் பகிரங்கப்படுத்த வேண்டிய ஒரு காலத்தின் கட்டாயம், முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும்.

கடந்த காலங்களில், முஸ்லிம்கள் தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட நல்லிணக்கச் சமிக்கைக்கு, மற்றைய சமூகங்கள், குறிப்பாகப் பெரும்பான்மையினர் தந்த பிரதியுபகாரங்கள் பற்றி, முஸ்லிம்களிடம் நிறையக் கேள்விகள் இருக்கின்றன. நாங்கள் மட்டும்தான், நல்லிணக்கத்தைக் காண்பிக்க வேண்டுமா? உங்களுக்கு இதில் பங்கேதும் இல்லையா, என்ற வினாவும் கேட்கப்படாமலேயே இருக்கின்றது.

ஆயினும், அதையெல்லாம் தாண்டிப் பொதுவெளியில், நல்லிணக்கம் மீது ஈடுபாடு கொண்டவர்களாகத் தம்மை, இன்னும் அதிகமாகப் பிரதிபிம்பப்படுத்த முஸ்லிம்கள் முயற்சிப்பதைக் காண முடிகின்றது.

இந்நிலையில், இம்முறை வெசாக் பண்டிகையை முன்னிட்டு, முஸ்லிம் இளைஞர், யுவதிகள் வெசாக் கூடுகள், அலங்காரங்களை மேற்கொண்டதையும் வெசாக் கொண்டாட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதையும் காணக் கூடியதாக இருந்தது. அத்துடன், முஸ்லிம் யுவதிகள், கையில் மலர்த்தட்டுடன் போகின்ற புகைப்படம் ஒன்றும், ஜம்மியத்துல் உலமா சபையினர், கையில் விளக்குடன் நின்ற காட்சிகளையும் காண முடிந்தது.

வடமேல் மாகாணத்தில், இனவாதக் காடையர்கள் கொழுத்திய தீ, முற்றாக அடங்குவதற்கு இடையில், தென்னிலங்கை முஸ்லிம்கள் இவ்வாறான ஒரு பங்களிப்பை வழங்கியிருந்தனர். முஸ்லிம்கள் மீதும் இனவெறுப்பு உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டும் மூன்று, நான்கு முஸ்லிம் அரசியல்வாதிகளைக் குறிவைத்துப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டும் இருந்த சமகாலத்திலேயே, ஒரு தொகுதி முஸ்லிம்கள், இவ்விதம் வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர். முஸ்லிம்களின் ஹபாயாக்கள் கூட விமர்சிக்கப்பட்டுக் கொண்டும், கப்பலின் சுக்கான் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்த முஸ்லிம் பெண் கைது செய்யப்பட்டிருந்த காலகட்டத்திலேயே, இவ்வாறு முஸ்லிம்கள் செயற்பட்டனர் என்பதை மறந்து விடக் கூடாது.

சரி, பிழை என்ற விவாதங்களுக்கு அப்பால், இது அபூர்வமானது. ஏனெனில், தற்கொலைப் பயங்கரவாதிகள், முஸ்லிம்களால் அங்கிகரிக்கப்பட்டு அடைக்கலம் கொடுக்கப்பட்டவர்களாக இல்லாத ஒரு பின்புலத்தில், அவர்கள் செய்த மாபெரும் மிலேச்சத்தனத்துக்காகத் தம்மீது மேற்கொள்ளப்படுகின்ற நெருக்குவாரங்களை எல்லாம் பொருட்படுத்தாது, முஸ்லிம்கள் நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியது போல, ஏனைய சமூகங்கள் வெளிப்படுத்துமா என்பது சந்தேகமே.

எனவே, வெசாக் கொண்டாட்டங்களில், முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பை, சிங்கள பௌத்த முற்போக்குச் சக்திகள் சரியான கண்ணோட்டத்தில் நோக்கின. ஆனால், குறுகிய மனப்பாங்கு கொண்ட சிங்களச் செயற்பாட்டாளர்கள் சிலர், இதனை வேறுவிதமாக நோக்கினார்கள் என்பதே மனவருத்தத்துக்கு உரியது.

முஸ்லிம்கள் போலியாக நடிப்பதாகச் சிலரும், இதனால் நல்லுறவு வந்து விடுமா என்று சிலரும், முஸ்லிம்கள் அச்சமடைந்து விட்டார்கள் என்று வேறு சிலரும், சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பரிமாறியிருந்தார்கள். அதுபோதாதென்று, தமிழ்ச் சமூகத்தில் இருந்து ஓரிருவரும், இதனை மட்டகரமாக நையாண்டி செய்திருந்தமை கவனிப்புக்கு உரியது.

இந்தச் சூழலில், இவ்வாறு முஸ்லிம் யுவதிகள் மலர்த்தட்டு எடுத்துச் சென்றமை, வெசாக் கூடு கட்டியமை, இளைஞர்கள் தோரணம் அமைத்தமை, உலமா சபை தலைவர் விளக்குடன் நின்றமை உள்ளிட்ட புகைப்படங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே பாராட்டுதல்களைவிட, சற்று அதிகப்படியான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன எனலாம்.

‘கடும்போக்குச் சக்திகள் இவ்வளவு அட்டூழியங்களைச் செய்தும், இப்படி இறங்கிப் போகின்றீர்களே’ என்ற தோரணையில் இவ்விமர்சனங்கள் அமைந்திருந்தன. குறிப்பாக, மலர்தட்டு, விளக்கு ஏந்துவது என்பது, முஸ்லிம்கள் தமது மார்க்கத்தின் எல்லைக் கோடுகளைக் கடப்பதற்கு ஒப்பானது என்ற விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டன.

புர்காவுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஹபாயா அணிவதும் பெரும் சிரமமாகியுள்ள சூழலில், குருநாகல் வன்முறைகளின் அதிர்வுகள் இன்னும் ஓயாத நிலையில் (உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட ஒரு குழுவினரின் செயலுக்காக) முஸ்லிம்கள் இந்தளவுக்குத் தங்களது இன, மத அடையாளத்தையும் சுயத்தையும் இழந்து போக வேண்டுமா என்ற ஒரு வினா, இவ்விடத்தில் முன்வைக்கப்படுகின்றது.

எல்லாவற்றுக்கும் முன்னதாகப் பிற சமூகங்கள் இவ்விடயத்தில், முஸ்லிம்களைக் கேலி செய்வதை நிறுத்த வேண்டும். அதேவேளை, இவ்விவகாரத்தை மிக நுணுக்கமாகவும் நடைமுறை யதார்த்தம் பற்றிய புரிதலுடன் பக்குவமாகவும் நோக்க வேண்டியிருக்கின்றது. அந்தவகையில், இரண்டு கோணங்களில் இதைப் பார்க்க வேண்டும்.

முதலாவது, இலங்கையில் முஸ்லிம்கள் முன்னரை விட, நல்லிணக்கத்தைச் சற்று அதிகமாக வெளிப்படுத்த வேண்டியுள்ளது. குறிப்பாக, சிங்கள மக்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களுக்கு, இது இன்று அவசியமாகியுள்ளது என்பதைச் செறிவான முஸ்லிம் பிரதேசங்களில் வாழ்வோர் உணர்ந்து கொள்ள வேண்டும். அத்துடன், மேற்குறிப்பிட்ட புகைப்படங்கள் எந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்டன, உண்மையில் அங்கு என்ன நடந்தது என்பதை, நன்றாக அறிந்து விமர்சனங்களை முன்வைக்கப் பழக வேண்டும்.

இரண்டாவது கோணம் என்னவெனில், முஸ்லிம்கள் தமது இனத்துவ அடையாளத்தையும் சுயத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் சமகாலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா வகையான மத, இன உரிமைகள் அடையாளங்களையும் இழந்து, சுயத்தைத் தொலைத்துத்தான் ஏனைய இனங்களுடன் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என்ற எந்த நிர்ப்பந்தமும் இல்லை.

எனவே, அரபு நாட்டைப் போல இலங்கையில் முஸ்லிம்கள் வாழ எதிர்பார்க்க முடியாது. மாறாக, ஏனைய இனங்களுடன் விட்டுக் கொடுப்புடனும் இன, மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் வாழ்வதுடன், எதற்கு அப்பால் செல்ல முடியாது என்ற எல்லைக் கோடுகளையும் நிர்ணயித்துக் கொள்ளுதலே நல்லது.

ஹபாயா முதல் சுக்கான் வரை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், முஸ்லிம்கள் மீதான இன, மத உரிமைகள் மீதான நெருக்குவாரங்கள், வேறு ஒரு பரிணாமம் எடுத்திருக்கின்றன.

முஸ்லிம்கள் நலிவடைந்திருக்கின்ற சந்தர்ப்பத்தைப் பார்த்து, இரு முனைகளில் இருந்து இனவெறுப்புப் பேச்சுகள் உமிழப்படுவதுடன், முஸ்லிம்களின் உடமைகள்,பள்ளிவாசல்களைத் தாக்கியழிக்கும் வன்முறைகளும் தவணை முறையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

மறுபுறத்தில், பயங்கரவாதக் குழுவினர், முஸ்லிம் சமூகத்தில் வாழ்ந்திருக்கின்றார்கள் என்ற பின்புலத்தின் அடிப்படையில், முஸ்லிம்கள் இன்று சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதுடன் அவசரகால ஒழுங்குவிதிகளும் சற்றுக் கடுமையாகவே, தம்மீது பிரயோகிக்கப்படுவதாக முஸ்லிம்கள் உணரத் தலைப்பட்டுள்ளனர்.

இலங்கையில் முகத்தை மூடும் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புர்கா, நிகாப் ஆடைகளுக்குத் தடை அமுலில் உள்ளது. எனவே, இந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டியது முஸ்லிம்களின் கடமை. இல்லாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம். அதுவேறு விடயம். ஆனால், பல இடங்களில் முகத்தை மூடாத ஆடையான ஹபாயா, பர்தா அல்லது ஸ்காப் அணிந்து வந்த பெண்கள், பாரபட்சத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

ஓரிரு பாடசாலைகளில், ஆசிரியர்கள் தமது கடமையைச் செய்ய, பாடசாலைச் சமூகம் இடமளிக்கவில்லை. ஒரு வைத்தியசாலையில் ஹபாயாவைக் கழற்றுமாறு பணிக்கப்பட்டதாகவும் கொழும்பில் தனது பிள்ளைக்குத் தடுப்பூசி ஏற்றுவதற்காக வந்த தாய், அபாயாவுடன் இருந்தமைக்காக அச்சேவை மறுக்கப்பட்டதாகவும், அதேபோன்று, ஹபாயா அல்லாத (புடவை போன்ற) ஆடைகளை அணியுமாறு முஸ்லிம் பெண்கள் நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவை, அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும். குறிப்பாக, புர்கா தடை விதிமுறையைப் பயன்படுத்தி இவ்விடத்தில் இனக் குரோதமே வெளிப்படுத்தப்படுகின்றது. முஸ்லிம்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தும் இனநல்லிணக்கத்தை வெளிப்படுத்தியும் வாழ வேண்டும் என்று சிலர் நினைப்பதாகத் தோன்றுகின்றது.

இதில் மிகப் பாரதூரமான சம்பவம், ஹசலக பிரதேசத்தில் இடம்பெற்றிருக்கின்றது. சுக்கான் எனப்படும் கப்பலின் திசைதிருப்பும் கருவியின் மாதிரியுரு பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்திருந்த குடும்பப் பெண் ஒருவர், தர்மச்சக்கரத்தைப் பொறித்த ஆடையை அணிந்து, பௌத்த மதத்தைக் கொச்சைப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதாகி, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போலென்றாலும் தர்மச்சக்கரமும் சுக்கானும் வேறுபட்டவை ஆகும். துறைமுக அதிகார சபையின் சின்னமும் சுக்கானே என்பதுடன் பொலிஸாரின் ஆடையிலேயே உண்மையான தர்மச்சக்கரமும் பொறிக்கப்பட்டுள்ள போதும், இவற்றுக்கிடையிலான வித்தியாசம் தெரியாதவர்களாகச் சட்டத்தை அமுல்படுத்துவோர் நடந்திருக்கின்றமை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவசரகாலச் சட்டத்தின் ஆபத்தைக் குறிப்புணர்த்துவதாகக் கூட இதனைச் சிலர் நோக்குகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிக உடலுறவு வைத்து அந்த இடத்தில் புற்றுநோய் வந்த தமிழ் நடிகைகள்!! (வீடியோ)
Next post உடலுறவின் போது விந்து விரைவாக வெளிப்படுதலை தடுக்கும் சில முறைகள்!! (அவ்வப்போது கிளாமர்)