உயிரும் நீயே… உடலும் நீயே…!! (மகளிர் பக்கம்)
மழைக்காலம் மற்றும் குளிர் காலத்திற்கென சில பிரச்னைகள் உண்டு. அதிலும் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கவனமாய் இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்கள் தங்களை இந்த மழைக்காலத்தில் எப்படிப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ரம்யா கபிலன்.
* ‘‘மழைக்காலம் என்றாலே பொதுவாக எல்லாரும் கவனமாய் இருக்க வேண்டும். எனினும் அடிக்கடி நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ள கர்ப்பிணிகள் கூடுதலாய் கவனத்துடன் இருக்க வேண்டும்.
* நோய்த்தொற்று அதிகம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மழை நேரத்தில் சுத்தம் மிக அவசியம். கர்ப்பிணிப்பெண்கள் ஒரு நாளுக்கு இரண்டு முறை சுடுநீரில் குளிக்க வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள் வெயில் காலத்தில் மட்டுமல்ல, மழைக்காலத்திலும் இறுக்கமான ஆடைகள் அணியக்கூடாது. உங்களுக்கு வசதியான அதே சமயம் கொஞ்சம் தளர்வான பருத்தி ஆடைகளை அணியலாம். குளிரான சமயங்களில் வெதுவெதுப்பான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். ஆனால் சின்தடிக், நைலான் போன்ற ஆடைகள் வேண்டாம்.
* மழைக்காலத்தில் சரியாக உலராத ஆடைகளை அணியக்கூடாது. பூஞ்சை பிடித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். எனவே நன்கு உலர்ந்த ஆடைகளைத்தான் போட வேண்டும். துணிகளை உலர வைக்க வெயில் வரவில்லை என்றால் துணிகளை இஸ்திரி போட்டு வெதுவெதுப்பாக அணிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகள் மழையில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம். அப்படியே செல்ல நேர்ந்தால் ரெயின் கோட், குடை போன்றவற்றை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை மழையில் நனைந்து வீட்டுக்கு வந்தால் உடனே குளிக்க வேண்டும். பின் தலை மற்றும் உடம்பை நன்கு துவட்டி உலர விட வேண்டும். முடிந்த வரை கை கால்களையாவது ஆன்டிசெப்டிக் போட்டு கழுவ வேண்டும். மழையில் நனைந்த துணிகளை டிட்டெர்ஜென்டில் துவைத்து டெட்டால் போட்டு அலசி நன்கு காய வைத்து எடுக்க வேண்டும்.
* வெறும் கால்களோடு வெளியே செல்ல வேண்டாம். பூஞ்சைத் தொற்று ஏற்படலாம். மழையில் ரப்பர் செருப்புகள் அணிந்தும் வெளியே செல்ல வேண்டாம். சேறு இருக்கும் இடங்களில் வழுக்கி விட்டு விடும் ஆபத்து உண்டு. சாதாரண காலணிகளை அணிந்து செல்லுங்கள். வீட்டுக்குள் தரை சில்லென்று இருந்தால் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம்.
* வெளியே செல்லும்போது உணவுகளை கைவசம் எடுத்துச் சென்று விடுங்கள். வெளி உணவுகள் வேண்டாம். நீர் மூலம் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. தெருவில் நறுக்கி விற்கப்படும் பழங்கள், காய்கறிகளைக் கூட வாங்கி சாப்பிடாதீர்கள். அதிலிருக்கும் ஈரப்பதத்தால் வெளிக் காற்றில் வைத்து அவற்றை விற்கும்போது அதில் பாக்டீரியாக்கள் உண்டாகி இருக்கும்
* தண்ணீரை சுட வைத்து ஆற வைத்துக் குடியுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளுக்கு 10 முதல் 12 டம்ளர் தண்ணீராவது கட்டாயம் குடியுங்கள். சூப் வகையறாக்கள், மூலிகை டீ வகைகளும் குடிக்கலாம். ஃப்ரெஷ்ஷான பழங்கள் வாங்கி சாப்பிடலாம். குளிர்பானங்கள் குடிக்க வேண்டாம். குளிர்நேரத்தில் சிலருக்கு அஜீரணக் கோளாறுகள் ஏற்படுவதுண்டு. எனவே அவர்கள் அசைவ வகைகளை சூப் போல செய்து சாப்பிடலாம்.
* இந்த சமயத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் தவிர்க்க, நம் உடம்பில் எதிர்ப்புச் சக்தியோடு இருக்க, நல்ல ஆரோக்யமான காய்கறிகளுடன் கூடிய உணவு வகைகளை சாப்பிட வேண்டும். கீரை வகைகளையும் சாப்பிடவும். ஆனால் மழைக்காலம் ஆதலால் கீரையில் இருக்கும் மண், சேறு போன்றவற்றை நன்கு கழுவி சாப்பிடவும். கசப்பான காய்கறிகளும் சாப்பிடவும். பச்சைக் காய்கறிகள் சாப்பிட வேண்டாம்.
* கொசுக்கடியால் மலேரியா, டெங்கு போன்ற காய்ச்சல் வரலாம். எனவே கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசு வராமல் இருக்க வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள்.”
Average Rating