ஹேப்பி ப்ரக்னன்ஸி! (மகளிர் பக்கம்)
ஹேப்பி ப்ரக்னன்ஸி தொடரில் முதல் டிரைமஸ்டர் பற்றி பார்த்து வருகிறோம். முதல் டிரைமஸ்டரில் செய்ய வேண்டிய பரிசோதனைகள் பற்றி பார்க்கும் முன்பு முதல் டிரைமஸ்டரின் ஒவ்வொரு நிலையிலும் கரு என்ன வடிவில் இருக்கும்… எப்படி இருக்கும் என்பதைப் பார்த்து விடுவோம்.
1 & 2வது வாரங்கள்
இந்தக் காலக்கட்டத்தில் கர்ப்பம் தரித்திருப்பதே பெரும்பாலான பெண்களுக்குத் தெரிந்திருக்காது. இந்தக் கால கட்டத்தில்தான் ஆணின் உயிரணுவைச் சுமந்த கருமுட்டை ஃபெலோப்பியன் டியூப் வழியாகப் பயணித்து கர்ப்பப்பையை அடைந்திருக்கும். கண்விழியில் செவ்வரி படர்ந்திருப்பதைப் போன்ற நிலையிலேயே கரு இந்த வாரங்களில் இருக்கும் என்பதால் அதன் வடிவத்தைத் தெளிவாக உணர முடியாது.
3 & 4வது வாரங்கள்
இந்தக் காலகட்டத்தில் கரு குண்டூசியின் முனையளவே இருக்கும். ஒரு கருவைப்போல அல்லாமல், ஒன்றுடன் ஒன்று கூடி வேகமாகப் பல்கிப்பெருகும் பலநூறு செல்களின் திரட்டைப் போலத்தான் இருக்கும். இந்த செல்திரட்டின் வெளிப்பகுதி ப்ளெசென்ட்டாவாகவும், உட்பகுதி எம்ப்ரியோ எனும் கருவாகவும் உருவெடுக்கும். ஆரோக்கியமான ஒரு பெண்ணால், நான்காவது வாரத்தில் மாதவிலக்கு சுழற்சி தவறியதை வைத்துத்தான் கர்ப்பம் என்பதை ஒருவாறு அனுமானிக்க இயலும்.
5வது வாரம்
கரு இன்னமும் சின்னதாகவே இருக்கும். ஆனால், அடுக்கடுக்கான செல் அமைப்பு மூளையாகவும் இதயமாகவும் உருவெடுக்கத் தொடங்கும். கருவின் வளர்ச்சிக்கு உதவும் ப்ளெசென்ட்டா, கருவைப் பாதுகாக்கும் சுற்றுச்சூழல் போன்றவையும் இன்னும் வளர்ச்சி நிலையிலேயே இருக்கும்.
தொப்புள்கொடி உருப்பெற்று தாய்க்கும் கருவுக்குமான பந்தம் உருவாகி இருக்கும். மாதவிலக்குத் தள்ளிப்போனதால் கர்ப்பம் என்று அறிவார்கள். அதிகாலை நேரத்தில் வாந்தி, தலைசுற்றல், மயக்கம், சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், மார்பகங்களில் மாறுபாடு, காம்புகள் கறுப்பு நிறமாதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
6வது வாரம்
இந்த வாரத்தில் கரு கிட்டதட்ட ஒரு குட்டித் தலைப்பிரட்டையின் வடிவில் இருக்கும். கண்கள் மற்றும் இமைகள் உருவாகி இருக்கும். அடுக்கடுக்கான செல் அமைப்பில் இருந்து இதயம் உருவாகி இருக்கும். அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் குழந்தையின் இதயத்துடிப்பை உணர முடியும்.
சிலரின் எடை அதிகரித்து இருக்கும். மார்னிங் சிக்னெஸ் அதிகம் உள்ள பெண்கள் சிலருக்கு எடைக்குறைப்பும் நிகழ்ந்திருக்கும். இதுவும் இயல்பான விஷயம்தான். எனவே, அச்சப்படத் தேவை இல்லை. ஆடைகள் வயிற்றுப்பகுதியில் இறுக்கமாவது, கர்ப்பப்பை விரிவடைவது உட்பட உடலில் வெளிப்படையாகச் சில மாற்றங்களை உணர முடியும்.
7வது வாரம்
கரு வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் காலம் இது. மூளை, இதயம், நுரையீரல், குடல், வயிற்றுப்பகுதிகள், முதுகெலும்பு, மூக்கு, வாய், கண்கள் என அனைத்தும் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் பருவம் இது. கர்ப்பமானது பிறர் கண்களுக்கு வெளிப்படையாக இன்னும் தெரியாது. ஆனால், மார்னிங் சிக்னெஸ் உள்ளிட்ட அறிகுறிகள் இன்னமும் நீங்கி இருக்காது.
8வது வாரம்
உங்கள் கரு, குழந்தையாக வளரத் தொடங்கிய ஆறாவது வாரம் இது. முதல் டிரைமஸ்டர் வளர்ச்சியின் முக்கியமான வளர்ச்சிக் கட்டமும்கூட. கண் இமைகள் நன்கு வளர்ச்சி பெற்று, திறந்து மூட இயலும். கைகளில், கால்களில் வளர்ந்தும் வளராத பிஞ்சு விரல்கள் அரும்பியிருக்கும். கர்ப்பப்பையில் குழந்தை நீந்தத் தொடங்கும் காலம் இது. தாயின் உடலில் ரத்தம் பெருகும். இதயம் ரத்தத்தைச் செலுத்தும் வேகத்தை 50 சதவிகிதம் வரை அதிகரித்து, கருவளர்ச்சிக்குத் தேவையான ஊட்டத்தை வழங்கும். சிலருக்கு, சிலவகை வாசனைகளால் ஒவ்வாமை, படபடப்பு, எரிச்சல், அசெளகர்யமான மனநிலை இருக்கும்.
9வது வாரம்
வயிற்றில் உள்ள கரு ஒரு வேர்க்கடலையின் வடிவை அடையும் காலம் இது. கருவின் தலை மேலும் இறுக்கமாகி இருக்கும். கழுத்து உருவாகி இருக்கும். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனையின் போது குழந்தையின் அசைவை உணர இயலும். ஆனால், தாயால் அசைவை உணர இயலாது. தாயின் கர்ப்பப்பை வளர்ந்துகொண்டே இருக்கும். வயிற்றுப்பகுதி மேடிடுவதை தாயால் மட்டும் உணர முடியும். ஆனால், மற்றவர்களுக்கு இன்னமும் வெளிப்படையாகத் தெரியாது. வாந்தி, மயக்கம், சோர்வு, நெஞ்செரிச்சல் உள்ளவர்களுக்கு எடை அதிகரிப்பது இன்னமும் தொடங்கி இருக்காது.
10வது வாரம்
கரு இன்னமும் சிறிதாகவே இருக்கும். ஆனால், கை, கால்கள் அனைத்தும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும். மூட்டுகள் வளர்ச்சி பெற்றிருக்கும் என்பதால், கை, கால்களை மடக்க முடியும். முதல் மும்மாதங்களுக்கான அசதி, சோர்வு, வாந்தி போன்ற அறிகுறிகள் தாய்க்கு இன்னமும் நீங்கி இருக்காது. சற்று தளர்வான ஆடைகளாக அணிவது நல்லது.
11வது வாரம்
முதல் மும்மாத வளர்ச்சியின் இன்னொரு முக்கியமான வாரம் இது. குழந்தையின் பிறப்புறுப்புகள் வளர்ச்சியடையும் பருவம் இது. ஆனால், ஆணா? பெண்ணா? என்பதைத் தெளிவாக உணர முடியாது. ஆணோ பெண்ணோ ஆரோக்கியமாக வளர்வதுதான் முக்கியம் என்பதால் இதை விட்டுவிடுவோம். இந்தக் காலக்கட்டம் தாயின் உடலில் ப்ரக்னன்ஸி ஹார்மோன்கள் தீவிரமாக செயல்படும் பருவம். தாயின் உடலில் வேகமான நக வளர்ச்சி, கூந்தல் வளர்ச்சி இருக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்னை, எண்ணெய் பிசுக்கான சருமம் உருவாகும்.
12வது வாரம்
பல் முதல் கால் நகங்கள் வரை வயிற்றில் உள்ள கருவின் அனைத்து உடல் பாகங்களும் வளர்ச்சி அடையத் தொடங்கும் காலம் இது. உட்புற உறுப்புகள், வெளிப்புற உறுப்புகள் அனைத்தும் வடிவு பெற்று வளரத்தொடங்கிவிட்ட காலம் என்பதால், இந்த வாரம் முதல் கரு கலைவதற்கான வாய்ப்புக் கணிசமாகக் குறைகிறது. தாயின் வயிறு ஓரளவு மேடிட்டு இருக்கும். உபாதைகள் இருக்கும் என்றாலும் அதை எதிர்கொள்வதற்கான தெம்பு உடலாலும் மனதாலும் உருவாகி இருக்கும். எடை அதிகரிக்கும்.
Average Rating