பெண்களுக்காக ஒரு சினிமா!! (மகளிர் பக்கம்)
அழகு, அன்பு, அற்புதம், காதல், காமம், வீரம்… இப்படி சினிமாப் பெண்களுக்கு அரிதாரம் பூசப்படுகிறது. இதுவரை சமூகம் பெண்களுக்கு என வரைந்து வைத்திருக்கும் கோடுகளை தாண்டாமல் திரைக்கதை அமைத்து அவர்கள் சகித்துக் கொள்ளும் தியாகிகள் அல்லது கோடுகளை தாண்டும் தவப் புதல்விகளாகவும் எடுத்தியம்பியது. ேகாடுகளை கண்டு கொள்ளாமல் தனது தீரம் உள்ள வரை எல்லையற்று இயங்கும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள். அப்படியொரு பெண் ‘பிரபாவதி’.
தனக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக ஆயுதம் எடுக்கும் அவளது கதையே ‘பிரபா’. பூனைகள் கூடிப் போராடி எலிகளுக்கு விடுதலை கிடைக்காது என்ற பெரியாரின் கருத்து இன்றைய மாடர்ன் பெண்ணான பிரபாவதியை தனக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராட வைக்கிறது. ெபண்கள் கரை மீறாமல் தீராது போராட்டம் என்பதே இந்தப் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ‘பிரபா’ கதைக்கருவே பெண்களுக்கான சிறகுகளோடு பின்னப்பட்டுள்ளது.
அதை படமாக்கும் பணியிலும் இயக்குனர் நந்தன் பெண்களின் பங்களிப்பை அள்ளி வழங்கியுள்ளார். ‘பிரபா’ படத்தின் இசை அமைப்பாளர், பாடகி, பாடலாசிரியர்கள், காஸ்ட்யூம் டிசைனர் என புதிய பெண்களை அறிமுகம் செய்துள்ளார். ‘பிரபா’ படத்தின் மையப்புள்ளியே குட்டிச் செல்லம் தமிழிசை. அவளுக்கும், தாய்க்கும் இடையில் நடக்கும் பாதுகாப்பு போராட்டமே புதுப்புது அர்த்தங்களை உருவாக்குகிறது. “பெண்ணின் போராட்டங்களைப் பற்றி ஆண்டாண்டு காலமாக ஆண்களே பேசிக் கொண்டிருப்பதற்கு பதிலாக பெண்களின் உணர்வுகளை பெண்களே பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது எண்ணம்” என்கிறார் இயக்குனர் நந்தன்.
‘‘அடிப்படையில் நான் பெரியார் சிந்தனையாளன். எனது படைப்பும் அதையே பிரதிபலிக்கிறது. பெண்களுக்கான கதையை நான் கட்டமைத்திருந்தாலும் அதை பெண்களின் உணர்வுகளால் வெளிப்படுத்த நினைத்தேன். அப்படியான ஒரு கதையை வழக்கறிஞர் அருள்மொழியிடம் கொடுத்து கருத்து கேட்டேன். இன்றைய காலகட்டத்து பெண்களுக்கு தேவையான செய்தியை புதிய கோணத்தில் சொல்கிறது படம் என்றார். அவரது பாராட்டு எங்களுக்கு புதிய உற்சாகத்தை தந்தது.
படத்தின் கதைக்கு உயிர் சேர்ப்பது இசை. அதுவும் பெண் இசையமைப்பாளராக இருக்க வேண்டும் என்று அடுத்த தேடல் துவங்கியது. எனது நெருங்கிய நண்பர் சங்கர் கணேஷ். அவரது சகோதரி மகள் எஸ்.ஜே. ஜனனி. சிறு வயது முதல் இசையில் தனது தனித்தன்மையை ஜனனி வெளிப்படுத்தினார். ஜனனியின் இசைப்பயணத்துக்காக திருமணம் கூட செய்து கொள்ளாமல் சங்கர் கணேஷ் தனது வாழ்வையே அர்ப்பணித்துள்ளார்.
இதை நான் அருகில் இருந்தே பார்த்து வருகிறேன். வெள்ளம், அப்துல் கலாம் இறப்பு என மனதை பாதிக்கும் எந்த விஷயம் நடந்தாலும் அதற்காக மியூசிக் கம்போஸ் செய்து பாடல் வெளியிடும் ஜனனியின் வேகம் எப்போதும் மலைக்க வைக்கும். ‘பிரபா’ படத்துக்கு இசையால் மெருகேற்றித் தரும் பொறுப்பை ஜனனியிடம் கொடுத்தோம். இப்படித்தான் ஜனனி இப்படத்தின் இசையமைப்பாளர் ஆனார். பாடல்களை கேட்கும்போது அவர் அறிமுக இசையமைப்பாளர் என்ற எண்ணம் மறந்து போகும்.
அந்தளவுக்கு நவீனமும், நேர்த்தியும் போட்டி போடுகிறது. படத்தின் ரீ-ரெக்கார்டிங்கிலும் ஜனனியின் இசை மிரட்டலாக வந்துள்ளது. இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யையான ஜனனி இப்படத்தின் ‘‘பூவே பேசும் பூவே’’ பாடலை பாலமுரளி கிருஷ்ணாவுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் பாலமுரளி கிருஷ்ணா பாடிய கடைசி திரைப்பாடல் என்ற வரலாற்றுப் பதிவாகவும் மாறியுள்ளது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு பின்னர் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.
படத்தில் பாடலாசிரியர்களாக ஸ்ரீதேவி, சபிதா போஜன் என இரண்டு பெண்கள்அறிமுகமாகியிருக்கிறார்கள். இதில் ஸ்ரீதேவி எழுதிய பெண் குழந்தைக்கான தாலாட்டுப் பாடல் ‘பூவே பேசும் பூவே’. இது பெண்களுக்கான தன்னம்பிக்கை பாடலாக மலர்ந்துள்ளது. படத்தின் கதையை இந்தப் பாடலின் இரண்டு வரிகளில் கொடுத்துள்ளார். ‘‘ஆண் சொன்ன மொழி ஆணையில்லையடி… நீ சொல்லும் மொழி உலகை ஆளுமடி…. கரை மீறாமல் தீராது போராட்டமே’’ என்பதே அந்த வரிகள்.
சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் வரும் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் போல இந்தப் பாடலும் ஹிட் ஆகும். சபிதாபோஜன் ‘நீரு காவேரி நீரு… வழிக்கு கொண்டு வரப் பாரு’ என்ற பெண்களுக்கான ஜாலியான ஒரு பாடலை எழுதியுள்ளார். அது ஆண்களை புரட்டியெடுக்கும் பாடலாக இருக்கும். ஜனனியின் கல்லூரித் தோழி சவுமியா தணிகாச்சலம் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.
தேன்மொழி நந்தன் ஆடை வடிவமைப்பாளர் பொறுப்பில் தனக்கான தனித்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார். சூழலுக்கும் கதைக்கும் ஏற்ற வண்ணங்களை அறிமுகம் செய்துள்ளார். பேபி தமிழிசை தனது மழலை நடிப்பால் மெய்சிலிர்க்க வைத்துள்ளார். எல்லாவற்றுக்கும் மேலாக படத்தின் கதாநாயகி ஸ்வாசிகா துணிச்சலான பெண் வேடத்தை அநாயசமாக செய்து கொடுத்துள்ளார்.
விரைவில் வெளிவர இருக்கும் ‘பிரபா’ திரைப்படம் அத்தனை பெண்களையும் உயர்வாய் எண்ண வைக்கும். பெரும்பான்மை பெண்களின் பங்களிப்பில் உருவாகியுள்ள படம் இது. இந்த சமூகத்தில் போராடத் துடிக்கும் அத்தனை பெண்களும் மறைமுகமாக என்னை இயக்கியுள்ளனர், ’’ என்கிறார் இயக்குனர் நந்தன்.
Average Rating