வழக்கம் முக்கியம்! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 41 Second

இனிது இனிது வாழ்தல் இனிது – பாலியல் மருத்துவரும் மேரிடல் தெரபிஸ்ட்டுமான காமராஜ்

திருமணத்துக்குப் பிறகும் பெண்கள் தமக்கான ரொட்டீனை பின்பற்ற வேண்டியது மிக முக்கியம். உதாரணத்துக்கு வேலையைத் தொடர்வது, உடற்பயிற்சி செய்வது போன்றவை… ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவரையும் புகுந்த வீட்டாரையும் திருப்திப்படுத்த பெண்கள் வேலையைத் துறக்கிறார்கள். எத்தனை பெரிய பதவியில் இருக்கும் பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், கணவர்கள் மனைவிக்காக அப்படி எந்தத் தியாகத்தையும் செய்வதில்லை. வேலையை விடத் துணிகிற பெண், அதைத் தொடர்ந்து சந்திக்கப் போகிற பிரச்னைகளைப் பற்றி யோசிப்பதில்லை.

முதல் விஷயம் பொருளாதார ரீதியாக கணவரைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறாள். கணவரை வேலைக்கு அனுப்பிவிட்டு, அவர் வீடு திரும்பும் வரை திசை தெரியாத பறவை மாதிரி காத்திருக்கிறாள். என்ன செய்வது, யாரிடம் பேசுவது எனத் தெரியாத அந்தத் தவிப்பு மிக மோசமானது. அதற்குப் பதில் கணவன்மனைவி இருவரும் சேர்ந்து பேசி, மனைவி வேலையை விடுவதற்கு மாற்று இருக்கிறதா என யோசிக்கலாம். தியாகம் என்பது ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவரும் சேர்ந்து செய்வதாக இருக்க வேண்டியது உறவுகளில் மிக முக்கியம்.

திருமணத்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் எனப் பல நடிகைகள் அறிக்கை விட்டு மண வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதைப் பார்க்கிறோம். திருமணத்துக்கு முன்பு வரை அந்த நடிகை விருதுகள் பல வென்ற, வெற்றிகரமான, முன்னணி நடிகையாக வலம் வந்திருப்பார். ஆனால், திருமணம் என வரும் போது எதைப் பற்றியும் யோசிக்காமல் அத்தனையையும் ஓரமாக ஒதுக்கி வைத்துவிடத் தயாராவார்கள். இது நடிகைகள் என்றில்லாமல் பிரபலமாக இருக்கிற பெரும்பாலான பெண்களுக்கும் ஏற்படுகிற பிரச்னையே. அதுவே திருமணம் என்கிற புதிய உறவு எந்த ஆணையும் அவனது பழைய வாழ்க்கையை அப்படியே தொடரச் செய்வதற்குத் தடையாக அமைவதில்லை.

திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணிடம் அவளது புகழோ, திறமையோ, பிசினஸ் சாதுர்யமோ இப்படி ஏதோ ஒன்று ஈர்த்து, அவளைக் காதலித்து ஒரு ஆண் திருமணம் செய்திருப்பான். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அவள் மறக்க வேண்டிய முதல் விஷயமாகவும் அந்தப் புகழும் திறமையும் சாதுர்யமுமாகவே இருப்பதுதான் கொடுமை. ஆண் தன்னை சக்தி வாய்ந்த நபராகக்கற்பனை செய்து கொள்கிறான். தான் சொல்வதுதான் விதி… வைத்ததுதான் சட்டம் என்கிற நினைப்பில் தனது ஆற்றலை துஷ்பிரயோகம் செய்கிறான். நான்கு பேர் பாராட்டும் இடத்தில் பெயரோடும் புகழோடும் ஆளுமையோடும் இருந்த தன் மனைவியை இப்படி அடக்கி வீட்டுக்குள் முடக்குவது அவளுக்கு மட்டுமல்ல தனக்குத் தானே பாதகம் ஏற்படுத்திக் கொள்கிற செயல் என்பதைப் பெரும்பாலான ஆண்கள் உணர்வதில்லை.

கணவருக்கு விருப்பமில்லாமல் வேலையை விடுகிற பெண்கள் 50 சதவிகிதம் என்றால், கணவர் அப்படிச் சொல்லாமல் தாமாகவே முன்வந்து வேலையை விடுகிறவர்கள் 50 சதவிகிதம் என்பதும் உண்மை. இரண்டிலுமே சம்பந்தப்பட்ட பெண் தன் சுயத்தை இழக்கிறாள். தன் தனித்தன்மையைத் தொலைக்
கிறாள். முழுமையான மனுஷியாக வாழ முடியாமல் தவிக்கிறாள். திருமணத்துக்கு முன்பு அனேகப் பெண்கள் தம்மை கவனித்துக் கொள்வதில் நிறையவே அக்கறை காட்டுகிறார்கள். அழகிலிருந்து ஆரோக்கியம் வரை எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறவர்கள், திருமணத்துக்குப் பிறகு தலைகீழாக மாறிப் போகிறார்கள். அதனால் அதிக பருமனாகிறார்கள். அந்தப் பருமன் தோற்றம் அவர்களைத் தனிமைப்படுத்துவதுடன், மன அழுத்தத்திலும் தள்ளுகிறது.

திருமணத்துக்கு முன்பு நிறைய நட்புடன் வாழ்கிறவர்கள், திருமணமானதும் நட்பை மறக்கிறார்கள். இந்த விஷயத்திலும் ஆண்கள் விதிவிலக்கானவர்கள். திருமணம் என்கிற விஷயம் அவர்களது நட்புக்கு எந்த வகையிலும் தடையாக அமைவதில்லை. இப்படிப் பல விஷயங்களாலும் மாறிப் போகிற பெண்ணுக்கு நாளடைவில் ஒரு குழப்பம் வருகிறது. காலையில் கணவர் வேலைக்குப் போனதிலிருந்து மாலை வீடு திரும்பும்வரை அவனுக்காகக் காத்திருக்கிறாள். வந்ததும் தன்னைக் கவனிக்க வேண்டும்… தன்னிடம் பேச வேண்டும்… தான் பேசுவதை எல்லாம் கவனிக்க வேண்டும்… அன்பு செலுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறாள். ஆனால், கணவன் அப்படி நினைப்பதில்லை.

இருவரும் வேலைக்குப் போகிற போது இருவருக்கும் இடையில் ஒரு ஆரோக்கியமான இடைவெளி இருக்கும். ஆனால், மனைவி வேலைக்கும் போகாமல் தன்னை பிசியாக வைத்துக் கொள்கிற மாதிரி எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் இருக்கும்போதுதான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. கணவன் எப்போது வீட்டுக்கு வருவான் என மனைவி காத்திருக்க, கணவனோ மனைவியிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம் என யோசிக்கிறான். வேலை அதிகம், மீட்டிங், வெளியூர் பயணம் என்றெல்லாம் காரணங்களைச் சொல்லி, வீட்டுக்கு வருகிற நேரத்தைக் குறைக்கிறான். திருமணத்துக்குப் பிறகு தான் முழுமையாக கைவிடப்பட்டதாக உணர்கிறாள் மனைவி. தன்னை கவனிக்க ஆளில்லை எனக் குமுறுகிறாள்.

தன்னைத் தானே கவனித்துக் கொள்கிற மனநிலைக்கு வந்து விட்டால் பெண்கள் இதைத் தவிர்க்கலாம். அதற்கு ஒரே வழி, திருமணத்துக்கு முன்பிருந்த நட்பையும் சமூக வாழ்க்கையையும் ஈடுபாடுகளையும் திருமணத்துக்குப் பிறகும் அவள் அப்படியே தொடர்வதுதான். சாந்தினியை திருமணத்துக்கு முன்பிலிருந்தே எனக்குத் தெரியும். மிகவும் கலகலப்பானவள். பயங்கர புத்திசாலி. யாருடனும் சட்டென நட்பாகிவிடக்கூடியவள். அவள் திருமணம் செய்த விக்கியோ அவளுக்கு அப்படியே நேரெதிர் குணாதிசயம் கொண்டவன். திருமணத்துக்கு முன்னாடி நீ எப்படி வேணா இருந்திருக்கலாம். இனிமே நான் சொல்ற படிதான் இருக்கணும்… இப்படி எல்லார்கூடவும் சிரிக்கிறதும் பேசறதும் எனக்குப் பிடிக்காது. ஃப்ரெண்ட்ஸ் யாரும் வீட்டுக்கெல்லாம் வரக்கூடாது.

நீயும் அவங்களோட சுத்தக் கூடாது… என சாந்தினிக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் விதிக்க, விக்கியை பிடித்த காரணத்தால் அவன் கண்டிஷன்களையும் ஏற்றுக் கொண்டாள். சிரமமாக இருந்தாலும் தன்னை மாற்றிக் கொண்டாள். கொஞ்ச நாட்களிலேயே அவளது சிரிப்பு, கலகலப் பேச்சு, நட்பு பாராட்டுகிற மனசு என எல்லாம் காணாமல் போனதைப் பார்த்தேன். விக்கி திடீரென வெளியூரில் ஒரு பயிற்சிக்காக சென்றுவிட, பேசக்கூட ஆளில்லாமல் தனிமையில் தள்ளப்பட்டாள் சாந்தினி. தனக்கு இனி யாருமே இல்லையே….என்கிற பயம் அதிகமாகி, அது நாளடைவில் மனஅழுத்தத்தில் தள்ளி, மனத்தளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு, தற்போது மனநல சிகிச்சையில் இருக்கிறாள் சாந்தினி.

இந்த மாதிரி ஏகப்பட்ட சாந்தினிகள் மன அழுத்தத்தில் உழன்று கொண்டுதான் இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு மனைவியை முழுக்க முழுக்க தனக்கேற்றபடி மாற்ற நினைக்கிற எந்தக் கணவனும் அவளுக்கேற்றபடி தன்னை ஒரு சதவிகிதம்கூட மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்பதில்லை. இத்தகைய உறவுகளில் காதல் என்பதே இருக்காது. திருமணத்தில் தன்னைத் தொலைக்காமலிருக்க வேண்டும் என நினைக்கிற பெண்கள், திருமணத்துக்கு முன்பே சில விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். திருமணம் என்பது ஒரு உறவு. இருவரும் சேர்ந்து வாழப் போகிற வாழ்க்கை. பெண் என்பவள் அத்தனை நாள் தன்னுடன் இருந்த அடையாளங்களைத் தூக்கிப் போட்டுவிட்டு, முழுக்க முழுக்க வேறொரு புது மனுஷியாக புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்க வேண்டும் என அவசியமில்லை.

திருமணத்துக்கு முன்பு உங்களுக்கு இருந்த வங்கிக் கணக்கை அப்படியே உங்கள் பெயரிலேயே தொடருங்கள். அதை கணவரின் பெயருக்கு மாற்றி அவரைச் சார்ந்திருக்கிற நிலையை நீங்களே உருவாக்காதீர்கள். திருமணத்துக்கு முன்பு உங்கள் தேவைகளுக்காக நீங்கள் எப்படி செலவழித்தீர்களோ, திருமணத்துக்குப் பிறகும் அப்படியே செய்யுங்கள். உங்களது பொருளாதார சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட கணவரைக் கேட்டுக் கொண்டு செலவழிக்க நினைக்காதீர்கள். அதனால் கணவனும் மனைவியும் அவரவர் விருப்பப்படி இஷ்டத்துக்கு செலவு செய்து கொள்ளலாம்… யாரும் யாரிடமும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம் என்று தப்பர்த்தம் செய்து கொள்ள வேண்டாம். திருமண உறவில் ஒரு சின்ன இடைவெளி வேண்டும் என உங்கள் கணவர் நினைக்கலாம்.

அவர் அப்படி நினைப்பதை தவறாகப் புரிந்து கொண்டு, உங்களை அவர் ஒதுக்குவதாகவோ, உங்களுக்குத் தெரியாமல் வேறொரு தனிப்பட்ட வாழ்க்கையைத் தேடிக் கொள்ள நினைப்பதாகவோ கற்பனை செய்யாதீர்கள். அவரது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அந்த இடைவெளியை அனுமதியுங்கள். இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு அமைதி வரலாம். அதை அப்படியே அனுமதியுங்கள். பதறியடித்துக் கொண்டு எதையாவது பேசி அந்த அமைதியைக் கலைக்காதீர்கள். மவுனமாக இருப்பது பல நேரங்களில் மாயங்கள் செய்யும். வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருக்கிற எல்லா பெண்களுக்கும் கணவரின் வருகை எதிர்பார்ப்பைக் கொடுப்பது சகஜமே.

8 முதல் 10 மணி நேரம் யாருமற்ற தனிமையில் வீட்டில் இருக்கும் போது, கணவர் வந்ததும் அவரது மொத்த நேரத்தையும் தனக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என நினைப்பதும் அவர்களது இயல்பே. ஆனால், கணவரின் இடத்திலிருந்து யோசிக்கப் பழகுங்கள். 10 மணி நேரம் வேலை பார்த்த களைப்பில் வருகிறவருக்கு வீட்டுக்கு வந்ததும் டி.வி. பார்ப்பது, பேப்பர் படிப்பது போன்ற சில விஷயங்களில் ரிலாக்ஸ் செய்யலாம். அவரது நேரத்தை அனுமதித்தால் பல
பிரச்னைகளைத் தவிர்க்கலாம். ‘என்னை கொஞ்ச நேரம் தனியா விடு’ எனச் சொன்னால் உடனே காயப்பட்டு கண் கலங்காதீர்கள். அது உங்கள் மீதுள்ள வெறுப்பினால் வெளிப்படுகிற வார்த்தைகள் என எடுத்துக் கொள்ளாதீர்கள். அவரது தனிமையை அனுமதியுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள் !! (மருத்துவம்)
Next post மத்தளை விமான நிலையம்!! (வீடியோ)