பிணங்களின் தோழி!! (மகளிர் பக்கம்)
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் ‘‘சார், இன்னிக்கு மட்டும் ஆறு அனாதை புணம் வந்துருக்கு, அதுல 4 ஆம்பள புணம், 2 பொம்பள புணம்…’’ ‘‘ஓகே, ஓகே, பாடிகளை குயிக்கா போஸ்ட் மார்ட்டம் பண்ணச்சொல்லு…’’ அதிகாரியின் உத்தரவிற்கிணங்க அனாதை பிணங்கள் ஆறும் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கே உள்ள ஊழியர்களிடம் பிணங்களை கொண்டு செல்பவர்களில் ஒருவர் கூறுகிறார்.
‘‘ஏய், இன்னைக்கு ஆறு அனாதை பாடிங்க, உறவுன்னு சொல்லிக்க ஒரு மனுஷன் இல்ல, துட்டும் ஏதும் தேறாது’’ என்றவரிடம், ‘‘ஏன் தேறாது, எங்களுக்கு தேறும். ஆறு புணம் வந்துருக்குன்னு ஒரு போன் போட்டா போதும், அந்த மேடமே வந்து பாடிகள தூக்கிக்குனு போயிடும். செத்துப்போன அனாதைங்களுக்கெல்லாம் அவங்க தான் ஆதரவு. ஒத்த பொம்பளயா நின்னு அனாதை பிணங்களை சுடுகாட்டுக்குக் கொண்டு போய் குளிப்பாட்டி, சுத்தம் செய்து புதுத்துணிகளை வாங்கி கட்டி, இறுதி காரியம் பண்ணி, அடக்கம் செய்வாங்க. சொந்த புள்ளங்கள கண்டுக்காம, செலவு செய்ய வருத்தப்பட்டு ஒதுங்கிற இந்த காலத்தில இப்படியும் ஒரு பொம்பள இருக்காங்கன்னா பார்த்துக்கங்க…’’ என்றான் அந்த ஊழியன். அந்த பெண் யார்? சென்னை தண்டையார் பேட்டை நேதாஜி நகரில் வசிக்கும் நீலா தான் அவர்.
‘உத்ரா உதவும் சேவை மையம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அவர் 2005ம் ஆண்டு அமைப்பை பதிவு செய்து நடத்தி வருகிறார். இந்த அமைப்பை தொடங்கும் முன்னரே இந்தப் பணியில் இறங்கிய நீலா, தனது சொந்த, பந்தங்களின் அறிவுரைகளை, பழிந்துரைகளை பொருட்டாக எண்ணவில்லை. அந்த அளவுக்கு அனாதை பிணங்கள் மீது இவருக்கு அக்கறை… இப்படி ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம். ஆம். இவருக்கு, ஒரு காலக்கட்டத்தில் வாழ்க்கையில் வெறுப்பு, விரக்தி ஏற்பட, உறவுகள் எல்லை தொலைவில் சென்று விட்டதாகவும், தான் தனித்து விடப்பட்ட அனாதை போல் நிற்கிறோம் என்கின்ற நினைப்பும் இவரை அனாதை பிணங்களின் தோழியாக்கின.
திருச்சி மலைக்கோட்டை பாபு ரோடு பகுதியைச் சேர்ந்த குருசாமி – பக்கிரி அம்மாளுக்கு ஒன்பதாவது மகளாக பிறந்த நீலாவுக்கு இரண்டு அண்ணன், ஒரு தம்பி, மூன்று அக்கா, ஒரு தங்கை என உடன் பிறப்புகள் இருந்தனர். பியூஎஸ்சி படித்து வந்த நீலாவுக்கு பதினெட்டாவது வயதில் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பிசினஸ்மேன் ஒருவரோடு திருமணம் நடந்தது. திருமண வாழ்க்கை சிறப்பாக சென்று கொண்டிருந்த நிலையில் ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள். மகனுக்கு 7 வயதும், மகளுக்கு 11 வயதும் ஆன நிலையில் குடும்பத்தை விட்டு விலகி இருந்தார் அவர் கணவர். இதனால் வருமானத்துக்கு வழியின்றி தவித்த நீலா, குழந்தைகளை காப்பாற்ற தனியார் நிறுவனமொன்றில் வேலைக்கு சென்று வந்தார். அந்த வருமானத்தை சேமித்து வைத்து தனது வீட்டை விவரித்துக் கட்டினார்.
தனது நிலத்தில் மேலும் இரண்டு வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டார். அந்த வருமானமும் அவருக்கு கை கொடுத்தது. பிளஸ் டூ முடித்த மறு ஆண்டு மகளை மணமுடித்துக் கொடுத்தார். எஸ்எஸ்எல்சி படித்து விட்டு மகன் வேலைக்குச் சென்று வந்தான். பின்னர் அவனும் மணம் புரிந்து கொண்டான். தனித்து இருந்த நீலா வீட்டிற்கு ஒரு நாள் இரவு அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து குழந்தைகள் பெற்று வசதியாக வாழ்ந்து வந்த வேலாச்சி என்ற முதுமை நிரம்பிய பெண் வந்து கதவை தட்டினாள். காரணம் கேட்ட நீலாவிடம், ஏதும் உரைக்காமல் கண்ணீரை மட்டும் பதிலாய் தந்த வேலாச்சி, அரை மணி நேரத்திற்கு பின்னர் ‘‘எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பார்த்து பார்த்து வளர்த்தாலும் நமக்கு முடியாத காலத்தில நம்மள கவனிக்க எந்த ஆளும் கிடையாது.
எவ்வளவு சொந்த பந்தம் இருந்து எதுக்கு… நான் இப்போ அனாதை. உனக்குன்னு துட்ட சேத்துவை. இல்லன்னா உனக்கும் என் நிலைமைதான்’’ என்ற பாட்டி ஓவென அழத் தொடங்கினார். அவரை சமாதானம் செய்த நீலா, அவருக்கு சாப்பிட தோசை கொடுக்க, ‘எனக்கு இதெல்லாம் வேண்டாம். கொஞ்சம் காப்பித்தண்ணி இருந்தா கொடும்மா நான் போறேன்’ என்றார். உடனே அவருக்கு காபியை நீலா கொடுத்தார். அதை வாங்கி அருந்திவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்ற வேலாச்சி அதே தெருவிலுள்ள ஒரு திருமண மண்டப வாசலில் சென்று படுத்துள்ளார். மறுநாள் காலை மரணமான நிலையில் பிணமாக கிடந்தார்.உறவுகள் யாரும் முன்வராத நிலையில் நீலா இறுதிச்சடங்கு செய்தார். அதன் பிறகு அவர்கள் உறவுகள் வர, நானே எல்லாம் பார்த்துக்கிறேன் என்றவாறு நீலாவே அந்த பாட்டியின் சடலத்தை அடக்கம் செய்துள்ளார்.
அன்றிலிருந்து அனாதை பிணங்கள் இருந்தால் தேடிச் சென்று எடுத்து வந்து இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்யும் எண்ணத்தை கொண்டுள்ளார். அதையே சமூக சேவையாக கொண்டுள்ளார்.இதுவரை 279 அனாதை பிணங்களை அடக்கம் செய்துள்ளார். இதற்காக 30க்கும் மேற்பட்ட விருதுகளும் பெற்றுள்ளார்.இப்போது மகன், மருமகள், மகள், மருமகன், பேரன், பேத்தி, கணவன் என உறவுகளோடு வாழ்ந்தாலும் அனாதை பிணங்களை எடுத்து அடக்கம் செய்வதை நிறுத்த வில்லை. மாலைகள், வெட்டியான் கூலி, புத்தாடை, கொண்டு செல்லும் வாகனச் செலவு என ஒரு அனாதை பிணத்தை காரியம் செய்து அடக்கம் செய்ய மூவாயிரம் வரை செலவு செய்கிறார். நீலா போன்றோரின் சேவை, நமது ஊருக்கு தேவை என்று சொல்லி அவரை வாழ்த்துவோம்.
Average Rating