இனப்படுகொலை: சர்வதேச சட்டமும் அதன் பொருந்துத்தன்மையும் !! (கட்டுரை)
சர்வதேச மனித உரிமைகள் சமவாயங்கள் மற்றும் சர்வதேச சட்ட விதிமுறைகள், இனப்படுகொலை என்பது ஒரு இன, மொழி, மத சார்பான மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கவேண்டி, அவ்வாறாக அழிக்கும் நோக்கத்துடன் கட்டவிழ்க்கப்படுகின்ற வன்முறை என விளிக்கின்றன.
இனப்படுகொலை தொடர்பான எண்ணக்கரு முதல் முதலில் 1944 இல் ராபியேல் லெம்கின் Axis Rule in Occupied Europe எனும் நூலில் வெளியிடப்பட்டிருந்தது. குறிப்பாக இது இரண்டாம் உலகப்போரின் போதான ஹோலோகாஸ்ட் (Holocaust) இனப்படுகொலையை சித்தரிக்க பயன்பட்டிருந்தது. லெம்கின் இனப்படுகொலையை தனது நூலில் பின்வருமாறு விபரித்திருந்திருந்தார்.
“இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தின் மக்கள் குழாமை அல்லது ஒரு தேசிய இனத்தை முழுமையாக அந்நாட்டிலிருந்து வெகுஜன படுகொலைகளால் அழித்துவிடுதல் என்பது மட்டுமல்லாது, குறித்த தேசிய இனத்தின் வாழ்க்கையின் அத்தியாவசிய அத்திவாரங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு ஒருங்கிணைந்த திட்டமாகும்.
இரண்டாம் உலகப் போரின்போது, நாஸி ஜேர்மனி மற்றும் அதன் நட்பு நாடுகளால் நடத்தப்பட்ட Holocaust இனப்படுகொலைக்கு பின்னர், லெம்கின் இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச பிரசாரங்கள், இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச சட்டங்களை உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்வதற்கு வழிவகுத்தது. அதன்பிரகாரம், 1946ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதல் அமர்வு, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை என்பது ஒரு குற்றமாகும் என முதல் முதலில் தீர்மானம் நிறைவேற்றியது. ஆயினும், அத்தீர்மானம், குறித்த குற்றம் பற்றிய முழுமையான சட்ட விளக்கத்தை வழங்கவில்லை. ஆயினும், 1948ஆம் ஆண்டில், ஐ.நா பொதுச் சபை, இனப்படுகொலை குற்றத்தை தடுக்கும் மற்றும் இனப்படுகொலை குற்றத்தை தண்டிப்பதற்கான சர்வதேச சமவாயத்தை ஏற்றுக் கொண்டது. இச்சமவாயமே முதல் முதலில் இனப்படுகொலை என்ற குற்றத்தை சர்வதேச சட்டவலு உடையதாய் விபரணம் செய்தது.
மேற்குறித்ததன் பிரகாரம், ஒரு இனத்தை பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ, மனித இனம் சார்ந்த, இன ஒதுக்கல், சமய வேற்றுமை அல்லது தேசிய இன வேற்றுமை போன்ற காரணங்களால், உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லை கொடுப்பது, கொல்ல நினைப்பது அல்லது அழிப்பது, இனவேறுபாட்டைக் காரணங்காட்டி குழந்தைப் பிறப்பை தடுப்பது, குழந்தைகளை இடம் பெயரச் செய்வது, வேறு எவ்வகையிலாயினும் இனவேறுபாடு காட்டுவது போன்றவை குற்றமுறை செயல்களாக, இனப்படுகொலைக் குற்றங்களாக சர்வதேச தடைச்சட்டத்தின்படிக் குற்றச்செயலாகும்.
இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை பொறுத்தவரை, வரலாற்றில் நியூரம்பெர்க் தீர்ப்பாயம் முதன்மையானது. இது நாஸி தலைவர்கள், யூதர்கள், போலந்து, ஜிப்சீஸ் இனக்குழுக்களை பெருமளவில் இனப்படுகொலை செய்தமைக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்ட வரலாற்றின் முதலாவது நிகழ்வாகும்.
ஆயினும், குறித்த சமவாயம் செயற்பாட்டுக்கு வந்ததன் பின்னராக நடைபெற்ற குற்றவியல் நடைமுறையில், முன்னாள் யுகோஸ்லாவாக்கியாவுக்கு எதிரான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் முதன்மைபெறுகின்றது. அது, 2001 ஆம் ஆண்டில், 1995 செப்ரெசிகாவில் நடைபெற்ற படுகொலைகள் ஒரு இனப்படுகொலை ஆகும் என்று தீர்ப்பளித்திருந்தது. இதுவே முதன்முறையில் ஒரு சர்வதேச நீதி பொறிமுறை இனப்படுகொலைக்கு எதிரான சமவாயத்தின் அடிப்படையில் இனப்படுகொலை தொடர்பாக தீர்ப்பளித்த முதலாவது சர்வதேச குற்றவியல் நடைமுறை ஆகும்.
இரண்டாவது உதாரணம், ருவாண்டாவின் இனப்படுகொலையை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஆகும். இது, ருவாண்டா பிராந்தியத்தில் நிகழ்த்தப்பட்ட சர்வதேச சட்டத்திற்கு முரணான இனப்படுகொலை மற்றும் பிற கடுமையான உரிமை மீறல்களுக்கு பொறுப்பான குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையால் உருவாக்கப்பட்டிருந்ததுடன், இன்றுவரை 27 குற்றவாளிகள் இனப்படுகொலை செய்தமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
மூன்றாவது உதாரணம், கம்போடியாவின் இனப்படுகொலைக்கு எதிரான சர்வதேச நீதிப்பொறிமுறை ஆகும். இது, கம்போடியாவின் அரசாங்கமும் ஐக்கிய நாடுகளும், 1975-1979 காலப்பகுதியில் கெமர் ரோஜ் ஆட்சியின் காலத்தில் கெமர் ரோஜின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் பொருட்டு 2003 இல் நிறுவப்பட்டிருந்ததுடன், குறித்த நீதிப்பொறிமுறை இன்று வரை செயல்பாட்டில் உள்ளது.
இவ்வாறான நீதிப்பொறிமுறைகளை தாண்டி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சில இனப்படுகொலைகளை ஐ.நா சபையின் பாதுகாப்பு சபையின் பரிந்துரைகளின் கீழ் நேரடியாகவே விசாரித்து தீர்ப்பளித்துள்ளதுடன், அதன் பிரகாரம் இனப்படுகொலை செய்த அதிகாரிகளுக்கு வாழ்நாள் சிறை போன்ற கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. டாபர், சூடானை பொறுத்தவரை, 2003இல் தொடங்கிய சூடானில் நடத்திய மோதல், அது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாயம் என்பது இதற்கு மிகப்பெரிய உதாரணமாகும்
இச்சட்ட வரம்புகளின் மத்தியிலேயே அண்மைய மியன்மார் – றோகிஞ்சா படுகொலைகள், இலங்கை , ஆப்கானிஸ்தான், புரூண்டி, லிபியா, யேமனில் இடம்பெற்ற/இடம்பெறும் வன்முறைகள் மற்றும் படுகொலைகள் பார்க்கப்படவேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும்.
Average Rating