முஸ்லிம்களுக்கும் சோதனைக் காலம் !! (கட்டுரை)

Read Time:21 Minute, 2 Second

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்திலும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களால் ஏற்பட்ட அதிர்ச்சி, மரணஓலங்கள், அச்சஉணர்வு என்பவற்றால், முடங்கியிருந்த நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு, மிகவும் வரையறுக்கப்பட்ட அடிப்படையில், இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது.

என்னதான் நடந்தாலும், தமது குடும்பத்துக்காகவும் வருமானத்துக்காகவும் எல்லாவற்றையும் கடந்து பயணிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை, நம் ஒவ்வொருவர் மீதும், வாழ்க்கை ஏற்றி வைத்திருக்கின்றது.

எனவே, இத்தனை வலிகளையும் உயிர்ப்பயத்தையும் சுமந்து கொண்டு, நிச்சயமற்ற இன்றைய சூழலில் கூட, தமது வாழ்க்கைச் சக்கரத்தை உருட்ட வேண்டியவர்களாக, மக்கள் இருக்கின்றனர்.

இந்தப் பத்தி எழுதப்படும் சந்தர்ப்பத்தில், குண்டுச் சத்தங்கள் ஓரளவுக்கு ஓய்ந்திருந்தாலும், சுற்றி வளைப்புகள், கைதுகள், வெடிப்பொருள்கள் மீட்புகள் போன்ற பாதுகாப்புப் படைகளின் நடவடிக்கைகள் இன்னும் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றன.

யுத்தம் நிலவிய காலத்தில் காணப்பட்டது போல, ‘எப்போது, எங்கு, என்ன நடக்குமோ, எங்கு வெடிப்பு இடம்பெறுமோ’ என்ற அச்சவுணர்வு, இலங்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் வாழும் மக்களிடையே இருந்து கொண்டுதானிருக்கின்றது. அவ்வுணர்வு நீங்க, இன்னும் நீண்டகாலம் எடுக்கலாம்.
ஆயுதங்கள் மீது நம்பிக்கை வைத்து, தாக்குதல்கள் நிகழ்த்தும் குழுக்களுக்கு, வழக்கமாகவே ஒரு தற்சார்பு நியாயம் இருக்கும். அது இந்த உலகத்துக்குத் தவறாகத் தெரிந்தாலும், அவர்கள் அதைச் சரி என்றே சொல்வார்கள். அதனாலேயே அவர்கள், அந்தச் செயலைச் செய்கின்றார்கள்.

அரபுலகையும் முஸ்லிம் நாடுகளையும் ஆக்கிரமிக்கும் வெளிநாட்டுப் படைகள் செய்வது, நியாயமற்ற செயல் என, இலட்சக்கணக்கான மக்கள் சொன்னாலும், அவர்கள் தரப்பில் ஒரு காரணம் சொல்லப்படுகின்றது.

உலகெங்கும் உள்ள எல்லா இனம், மதம் போன்ற குழுமங்களின் பெயர்சொல்லி இயங்குகின்ற, தீவிரவாதக் குழுக்கள் செய்கின்ற நாசகாரச் செயல்கள் எல்லாவற்றுக்கும், அவர்கள் ஒரு காரணத்தைச் சொல்கின்றார்கள். அஹிம்ஷையைப் போதித்த காந்தியைக் கொன்றவனுக்கும், ஒரு காரணம் இருந்தது.

இலங்கையில், ஜூலைக் கலவரத்தில் தமிழர்களைத் துன்புறுத்தியவர்களுக்கும் ஒரு தற்சார்புக் காரணம் இருந்தது. அதுபோல, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் உட்பட, பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்ட குறிப்பிட்ட தமிழ் இயக்கம் போன்ற அமைப்புகள், தமது செயற்பாடுகள் நியாயமானவை என்ற கற்பிதத்தோடே அதைச் செய்தன.

இப்படிப் பல தரப்பினராலும், வெளியுலகுக்கு சொல்லப்படும் காரணங்களை, ஒரு பிரிவினர் ஏற்றுக் கொண்டிருந்தாலும், மனிதாபிமானத்தோடு நோக்குகின்ற மக்கள் யாருமே, இப்படிப்பட்ட செயல்களை, முழு மனதோடு தர்மம், நியாயம் என்று ஏற்றுக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களையும் முஸ்லிம்கள் இவ்விதமே நோக்குகின்றனர். இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் அல்லது தீவிர மதச் சிந்தனையுடையோர், அதை எவ்விதம் நோக்குகின்றார்களோ தெரியாது.

ஆனால், அச்சிறுகுழுவினர் தவிர்ந்த, இலங்கையில் வாழ்கின்ற ஏனைய எல்லா முஸ்லிம்களும் இந்தத் தாக்குதலையோ அதற்காகக் கூறப்படும் கற்பிதத்தையோ ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, அது ‘வரலாற்றுத் தவறு’ என்றே, அநேகர் உணர்வதாகக் குறிப்பிடலாம்.

இதற்காக, முஸ்லிம் சமூகம் அனுதாபத்தையும் கவலையையும் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றது. அத்துடன், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தொடர்பில், பாதுகாப்புத் தரப்பினருக்குத் தெரியப்படுத்தி வருகின்றார்கள். அதைப் பாதுகாப்புத் தரப்பே சிலாகித்துப் பேசிவருகின்றது.

முஸ்லிம்களின் ஒத்துழைப்பு இல்லையென்றால், ஒருவார காலத்துக்குள், நிலைமையை இந்தளவுக்காவது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முடியாமல் போயிருக்கலாம் என்பதை, ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இனங்களுக்கு இடையிலான உறவும் கொஞ்சமேனும் இருந்த நிம்மதியும் இல்லாது போய்விட்டன என்ற கவலை, எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. ஏனைய சமூகங்கள், முஸ்லிம்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பது, எல்லாவற்றையும் விடக் கொடூரமான வேதனையாகக் காணப்படுகின்றது.

யாரோ செய்த செயலுக்காக, நாம் அனுபவிக்க வேண்டியிருக்கின்றதே என்ற மனக்கிடக்கையுடன், கடந்த ஒருவார காலத்தை, இலங்கை முஸ்லிம்கள் கடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இலங்கையில் இடம்பெற்றிருப்பது சாதாரணமான சம்பவம் அல்ல. அந்தவகையில், அது தொடர்பான ஆட்கள், சூத்திரதாரிகள், ஆதரவாளர்களைச் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வருவதும், நாட்டில் பொதுவான அமைதியையும் இயல்பு வாழ்க்கையையும் உறுதிப்படுத்துவதும் அவசியமாகின்றது.

அந்த அடிப்படையில், தாக்குதலை மேற்கொண்டவர்கள் முஸ்லிம் நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கின்ற பின்புலத்தில், முஸ்லிம் பிரதேசங்களில், வீடுகளில் சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் இடம்பெறுவதும் கைதுகள் மேற்கொள்ளப்படுவதும் தவிர்க்க முடியாதது என்பதை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியாது.

ஆனால், ஒரு குழுவினர் செய்த காரியத்தால், நாட்டில் வாழும் அப்பாவி முஸ்லிம் மக்கள் எல்லா வகையிலும், நெருக்கடிகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிட்டிருக்கின்றது.

தமது இன, மத அடையாளத்தை வைத்துக் கொண்டிருந்தால் கைதுசெய்யப்பட்டு விடுவோமா என்று அஞ்சும் அளவுக்கு, முஸ்லிம்களின் மனோநிலை இன்றுள்ளது. இழக்கக்கூடிய எதை இழந்தேனும், படையினரின் சோதனைகளில் ‘சந்தேகமற்றவர்’ எனத் தம்மை நிரூபிக்க வேண்டிய நிலை, அப்பாவி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

இதேவேளை, இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் மீதான கெடுபிடிகள் ஆங்காங்கே அளவுகடந்து செல்வதாகவும், ‘புர்கா தடை’ போன்றவற்றால், வழங்கப்பட்டிருக்கின்ற சட்ட அதிகாரம், தவறாக அல்லது விளங்கிக் கொள்ளாமல் பிரயோகிக்கப்படுவதாகவும் முஸ்லிம்களிடையே இரு தினங்களாகக் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெறுவதையும் காண முடிகின்றது. இது முஸ்லிம் மக்களிடையே, பெரும் மனக் கிலேசத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்று குறிப்பிடலாம்.

முஸ்லிம் பிரதேசங்களில், கடுமையான தேடுதல்கள் இடம்பெறுகின்றன. ஓரிரு பள்ளிவாசல்களுக்குள், முஸ்லிம்கள் அசுத்தமானவை எனக்கருதும் நாய்களைக் கொண்டும், தேடுதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இரண்டாம் கட்டத் தாக்குதல் இடம்பெற்ற பிராந்தியம் என்ற வகையில், அம்பாறை மாவட்டத்தில் முப்படையினரும் சல்லடைபோட்டுத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்பகுதியில் இருந்து மட்டுமன்றி, கொழும்பு உள்ளடங்கலாக ஏனைய பகுதிகளில் இருந்தும், பெருமளவிலான வாள்கள், வெடிப்பொருள்கள், குண்டுகள், டெட்டனேட்டர்கள், சந்தேகத்துக்கு இடமான ஆடைகள், வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பொருள்கள் எல்லாம், பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டவையா என்பதையும் கைதானவர்கள் எல்லோரும் அக்குழுவைச் சேர்ந்தவர்கள்தானா என்பதையும் கண்டறிவது, பாதுகாப்புத் தரப்பினரின் கடமையாகின்றது.

இச்சந்தர்ப்பத்தில், பாதுகாப்புத் தரப்பினரின் விரைவானதும் அதேநேரம், மிகவும் பக்குவமானதுமான செயற்பாடுகள், இவ்விடத்தில் பாராட்டத்தக்கன.

இப்படியான ஒரு நிலையில், முஸ்லிம்கள் எல்லோரும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான இடங்கள், சல்லடை போட்டுத் தேடப்படுவதும் தவிர்க்க முடியாதது.

அப்படிச் செய்ய இடமளிப்பதன் மூலம், முஸ்லிம்கள் தங்களைப் பயங்கரவாதத்துக்குத் துணைபோகாதவர்கள் எனக் காட்டுவதற்கும், அதேபோன்று தங்கள் வீடுகளில் ‘அப்படி எதுவும் இல்லை’ என வெளிக்காட்டுவதற்கும் ஓர் அவகாசம் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எவ்வாறிருப்பினும், இன்று மேற்கொள்ளப்படுகின்ற சோதனைகள், சுற்றிவளைப்புகள் காரணமாக, சாதாரணமாக இஸ்லாமிய மார்க்கத்தைப் போதிக்கும் நூல்களைக் கூட, வீட்டில் வைத்திருக்கப் பயப்படும் நிலை தோன்றியுள்ளது.

மார்க்கம் பற்றிய சாதாரண சஞ்சிகைகள், இஸ்லாமியக் கையேடுகளை வைத்திருந்தாலும் தாம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்பட்டு விடுவோமா என்ற அச்சம் உருவாகியுள்ளது. வீட்டுப் பாவனைக்கான கத்தியைக் கூட, பயந்து பயந்தே முஸ்லிம்கள் வீட்டில் வைத்திருக்கும் நிலை, இன்று காணப்படுகின்றது.

முகத்தை மூடிய ‘புர்கா’ ஆடைகளை அணிவதற்கு, அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதிலுள்ள நியாயங்களை முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்றே சொல்ல வேண்டும்.

ஆனால், சில இடங்களில் முகத்தை மூடாத ‘அபாயா’ போன்ற ஆடைகளை அணிந்து செல்கின்ற பெண்களை, பாதுகாப்புத் தரப்பினர் அல்லது அரச, தனியார் நிறுவன உத்தியோகத்தர்கள், ‘புர்கா’ அணிந்திருப்பவர்களைப் போல நடத்துவதாகவும், தலையை மூடியுள்ள ‘ஸ்காப்’ அல்லது ‘ஹிஜாப்’ போன்ற துணிகளைத் தலையில் இருந்து முற்றாக அகற்ற வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் முஸ்லிம்களிடையே பேச்சடிபடுகின்றது.

நாட்டில் பொதுவாக, எல்லா இன மக்களும் நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, முஸ்லிம்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.

தாடிவைத்து, தொப்பி வைத்தவர்கள் தூரஇடங்களுக்குச் செல்வதற்குக் கூட, பல தடவை யோசிக்கும் நிலைமை உருவாகியிருக்கின்றது.

மறுபுறத்தில், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, முஸ்லிம்கள் எல்லோரையும் பயங்கரவாதிகள் போல காண்பிக்கவும் முஸ்லிம் அரசியல்வாதிகளை இதற்குள் சிக்கவைக்கவும் சில சக்திகள் முயற்சிக்கின்றன. அதற்குச் சில ஊடகங்களும் துணைபோவதைக் காணக் கூடியதாகவுள்ளது.

சுருங்கக் கூறின், இந்தத் தாக்குதல்கள், வேறு மதக் குழுமத்தை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டாலும் கூட, அதன்விளைவாக, முஸ்லிம்களே அதிக நெருக்குவாரங்கள் மற்றும் கெடுபிடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

இத்தனைக்கும், இலங்கை முஸ்லிம்கள் இந்தக் கொடூர தாக்குதல்களைக் கண்டிக்கின்றார்கள்; அதற்காகக் கவலை கொள்கின்றார்கள். பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றார்கள். ஆனால், தவிர்க்க முடியாதபடி சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மிகவும் அவதிப்படுகின்றார்கள்.

சுருங்கக் கூறின், இது முஸ்லிம்களுக்கும் ஒரு சோதனைக் காலம்தான். இப்பேர்ப்பட்ட காலம், மெதுமெதுவாகவேனும் மாற வேண்டும்.

முகம் மூடும் ஆடைகள் பற்றிய குழப்பங்கள்

முகத்திரை அல்லது முகத்தை மூடும் விதத்தில் ஆடை அணிவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஜனாதிபதி இவ்வறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

இவ் வர்த்தமானி அறிவித்தலில்,

‘ஒருவரை அடையாளம் காண்பதற்கு எந்தவோர் அடிப்படையிலும் தடையாக இருக்கின்ற முகம் முழுவதும் மறைக்கக்கூடிய எந்தவோர் ஆடையையோ அல்லது வேறு எந்தப் பொருளையுமோ எந்தவொரு பொது இடத்திலும் யாரும் அணியக் கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் ‘முழுமுகம்’ என்பது, ‘காதுகளையும் உள்ளடக்கியதே’ என்றும் இதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்புக் காரணங்களுக்காக, ‘நிகாப்’ அணிவது, அவசரகாலச் சட்டத்தின் கீழ், தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் சட்டம் இயற்றி, ‘நிகாப்’ அல்லது ‘புர்கா’வை நிரந்தரமாகத் தடைசெய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று, ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில், நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான சூழலில், அரசாங்கம் எடுத்திருக்கின்ற இந்த நடவடிக்கை, தவிர்க்க முடியாதது என்பதை, முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்கின்றனர். குறிப்பாக, பொது இடத்தில் அதனை அனுசரித்துச் செயற்படும் கடமை, எல்லா முஸ்லிம்களுக்கும் உள்ளதை மறுக்கவியலாது.

‘முழுமுகத்தையும் காதுவரை திறத்தல்’ வேண்டும் என்பதே மேற்படி வர்த்தமானியில் வலியுறுத்தப்பட்டுள்ள விடயமாகும். மாறாக, கழுத்தில் தொடங்கி, தலைப்பகுதி வரை மூடுவதற்குச் சட்டத்தில் எந்தத் தடையும் இல்லை. இதனை அரசாங்கமும் ஹர்ஷ டி சில்வா போன்ற சகோதர இன அரசியல்வாதிகளும் கூட, தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இந்தத் தெளிவு, சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் தனியார் நிறுவன பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றதா என்ற ஐயப்பாடு இப்போது ஏற்பட்டுள்ளது.

முகத்தை மூடும் ஆடையான ‘புர்கா’ மற்றும் ‘நிகாப்’ ஆகியவற்றை அணிவதே சட்ட முரணானதாகும். மாறாக உடம்பை முழுமையாக மறைக்கும் ‘அபாயா’வையோ தலையை மூடும் விதத்தில் ‘ஹிஜாப்’ அல்லது ‘பர்தா’ அன்றேல் துப்பட்டாவையோ அணிவது இலங்கையில் தடை செய்யப்படவில்லை.

இதனைக் கணிசமான பாதுகாப்பு அதிகாரிகள் விளங்கியுள்ளனர். ஆனால் ஒரு சில உத்தியோகத்தர்கள், ‘ஹிஜாப்’, ‘பர்தா’ போன்றவற்றையும் அகற்றுமாறு கோரும் சம்பவங்கள் ஆங்காங்கு இடம்பெறுவதாக, முஸ்லிம்களிடையே சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரிமாறப்படுகின்றன.

அந்தவகையில், சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளதாக, இணைய ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தி முக்கியமானது.

“முகத்தை மூடும் ‘புர்கா’ ஆடைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், முஸ்லிம் பெண்கள் அவமதிக்கப்படக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளுக்கு அமைவாக, அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று, அவர் வலியுறுத்தியுள்ளதாக இதில் கூறப்பட்டுள்ளது.

எனவே, ‘புர்கா’ தடை தொடர்பில் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்ளவும், முஸ்லிம்களில் ஒரு சிலர் செய்த தவறுக்காக ஏனைய அனைவர் மீதும், எவ்வகையிலும் ‘அத்துமீறல்கள்’ இடம்பெறாவண்ணமும் சட்டம் அமுலாக்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்யவும் வேண்டும் என முஸ்லிம்கள் கோரி நிற்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எய்ட்ஸை கண்டறிய புதிய கருவி!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கடலில் ஒதுங்கிய கடல் கன்னியின் சடலங்கள்!! (வீடியோ)