நான் கிராமம் சார்ந்த தமிழ்ப் பெண் !! (மகளிர் பக்கம்)

Read Time:26 Minute, 13 Second

சிலரது பெயர்களை சொல்லும்போதே நம் மனக்கண்ணில் சில பிம்பங்கள் விரியும். பாரதி என்றதும் முறுக்கு மீசையும், காந்தி என்றதும் வட்டக் கண்ணாடியும் தான் முதலில் வந்துபோகும். அவர்களது பணிகளை போலவே, தோற்றத்திலும் தனி அடையாளங்களை நம் மனதில் விதைத்துவிட்டு போவது, சிலருக்கு மட்டுமே சாத்தியம். தமிழச்சியும் அப்படித்தான். தலைநிறைய பூவும், கைநிறைய கண்ணாடி வளையல்களும், டெரகோட்டா ஜிமிக்கிகளும், முகம் நிறைந்த புன்னகையுமாக அவருக்கென்று ஒரு அடையாளத்தை நம் மனதில் அழுந்தப் பதித்தவர். விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறில் பிறந்து வளர்ந்தவர். பேராசிரியர், கவிஞர், சமூக ஆர்வலர், களப்பணியாளர் என பல்வேறு முகங்களை கொண்டவர். தற்போது அரசியலில் வேகம் கூட்ட தொடங்கி இருக்கிறார். எப்போதும் அவரிடமிருந்து வெளிப்படும் அதே புன்னகையும், உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்க, பல்வேறு விஷயங்களைப் பற்றி உரையாடினார். இனி தமிழச்சி தங்கபாண்டியன்…

கவிதைக்கான மொழியை எப்படி அடையாளம் கண்டு கொண்டீர்கள்?

‘‘கவிதைக்கான மொழி ஒரு நாளில் வசப்பட்ட விஷயம் கிடையாது. தொடர்ச்சியான பயணம். என்னுடைய ‘என்சோற்றுப் பெண்’ கவிதைத் தொகுப்பு வெளியான போது, ‘இதென்ன கதை நடையில் இருக்கிறது? அதனால் இதை முழுவதுமாக கவிதை வடிவம் என்று சொல்லிட முடியாது’ என பலரும் சொன்னார்கள். ‘ஆங்கில இலக்கியங்களில், தங்கள் கிராமங்களை விவரிப்பதை ‘லேக் பொயட்ஸ்’ என்ற பெயரில் ஏற்றுக் கொள்வீர்கள். அதுவே, இங்கு என் மண்ணை பற்றி பேசினால், அதை கவிதையாக ஏற்றுக் கொள்ள மாட்டீர்களா?’ என வாதிட்டேன். அதுவே, ‘வனப்பேச்சி’ எழுதியபோது, என் மொழி நடையில், நிறைய மாற்றங்களை என்னால் உணர முடிந்தது. கவிதை மொழி வசப்படுவது ஒரு தொடர்ச்சியான பயணத்தின் வாயிலாக மட்டுமே ஏற்படும்’’.

ஒரு கவிதை உருவாகும் தருணத்தை விவரிக்க முடியுமா?

‘‘திடீரென ஒரு சிறந்த கவிதையை எழுதிவிட முடியாது. சிறந்த கவிதை என்பதை அளவிடும் அளவுகோல் எது? ஒரு கவியரங்கத்தில், ஒரு தலைப்பை கொடுத்து எழுதப்படும் கவிதைகள், செய்யப்படுபவை. அது தானாக உருவாவது அல்ல. இதை நான் பகிரங்கமா ஒப்புக்கொள்வேன். அதை கவிதைகள் என்ற வட்டத்துக்குள் கொண்டு வர முடியாது என்பது தான் என் அபிப்ராயம். அதற்காக அதை குறைத்தும் மதிப்பிட முடியாது. சினிமாவுக்கு பாட்டு எழுதுபவர்கள் கவிஞர்கள் என்று சொல்ல முடியாது என்பர். இதில் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு. சினிமாவுக்கு எழுதுவது, வேறு விதமான சவால். மற்றபடி ஒரு கவிதை என்பது, தனிப்பட்ட ஒரு மனதினுடைய அகமயமான உந்துதலில் வருவது தான்’’.

தாக்கத்தை ஏற்படுத்திய எழுத்துக்கள்?

‘‘இன்ஸ்பிரேஷன்னு பார்த்தா, சங்க இலக்கியமும், ஆண்டாளும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. மேற்கத்திய இலக்கியங்களில், ஜான் டன் சொல்லலாம். ஷேக்ஸ்பியரை விட சிறந்த கவிஞர் என்று உணர்ந்திருக்கேன்.அப்புறம் பாரதியை சொல்லாமல் இருக்க முடியாது. அவர்களுடைய எழுத்தையெல்லாம் படிச்சிட்டு, பெயருக்கு முன்னால் கவிஞர் என்று போட்டுக் கொள்ளவே தோணாது. முனைவர் என்பது படிச்சு வாங்கிய பட்டம். அதை போட்டுக் கொள்ளலாம். கவிஞர் என்று போட்டுக் கொள்வதில், உடன்பாடு இல்லை. இன்குலாப் அய்யாவும் அதைத்தான் சொல்வார். அவரது பெயருக்கு முன்னால், கவிஞர் என்று போட்டுக் கொள்வதை அவர் விரும்பியது இல்லை’’.

சினிமா அனுபவம் எப்படி இருக்கிறது?

‘‘சினிமாவுக்கு பாடல் எழுதுவதில், முதலில் எனக்கு தயக்கம் இருந்தது. என்னால் அது முடியும் என நான் நினைக்கவில்லை. ‘பிசாசு’ படத்தில் எழுத வாய்ப்பு வந்த போது இயக்குனர் மிஷ்கின், அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதால், என்னுடைய தயக்கத்தை புரிந்து கொண்டார். முதலில் நீங்கள் எழுதுங்கள், அதற்கு நான் மெட்டு போட்டுக் கொள்கிறேன் என சொல்லி, பாடலின் சூழலை விவரித்தார். அது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.

பாலா இயக்கத்தில், இளையராஜா இசையில், ‘நாச்சியார்’ படத்தில் ஒரு பாடல் எழுதினேன். ‘குவீன்’ இந்திப்படம் தமிழில், ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற பெயரில் ரீ-மேக் ஆகி உள்ளது. அதில், வசனங்களும் இரண்டு பாடல்களும் எழுதியிருக்கிறேன். எங்கள் ஊர் விருதுநகரை மையமா வச்சு எழுதப்பட்ட கதாபாத்திரம் என்பதால், அந்த பணியை, ரொம்பவே அனுபவித்து செய்ய முடிந்தது. இந்த படத்தில், முதல் முறையா ஒரு குத்து பாட்டு வேற எழுதியிருக்கேன். பாடலை கேட்டப்ப எனக்கே ஆச்சரியமா இருந்தது. எனக்கு குத்துப்பாட்டெல்லாம் எழுத வரும்னு நான் நினைக்கவில்லை’’.

சுமதி ஏன் தமிழச்சி ஆனார்?

‘‘நான் எழுத வந்தபோது, சுமதி மணிமொழினு ஒரு கவிஞர் எழுதிட்டு இருந்தாங்க. வழக்கறிஞர் சுமதி இருக்காங்க. அதே பெயர்ல எழுத வேண்டாம்னு நினைச்சேன். நான் கிராமம் சார்ந்த தமிழ்ப் பெண். என்னுடைய வேரும் ஊரும் எனக்கு மிக முக்கியம். எனவே, அந்த அடையாளத்துக்காக, தமிழச்சி என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன்.’’

ஆடைகள் அணிவதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் உங்களுக்கென்று தனி அடையாளத்தை கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எப்படிப்பட்ட எதிர்வினைகள் வந்துள்ளன?

‘‘கல்லூரி பேராசிரியர், கவிஞர், அரசியல்வாதி இப்படித்தான் உடை உடுத்த வேண்டும், அலங்காரம் செய்து கொள்ள வேண்டும் என, நம்மவர்கள் ஒரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். நான் நிறைய பூ வைத்துக் கொண்டு கண்ணாடி வளையல்கள் அணிந்து கொண்டு, டெரக்கோட்டா ஜிமிக்கிகள் போட்டுப் போனால், என்னங்க, அரசியல்ல இருந்துகிட்டு, இவ்வளவு பெரிய கம்மல் போட்டு இருக்கீங்கனு கேட்குறாங்க. அப்படி கேட்பவர்களில் சிலர், 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள வைர தோடு போட்டிருப்பது தான் நகைமுரண். நான் ஒரு கிராமத்து பெண், நான் என்னை இப்படி வெளிப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறேன். மற்றவர்கள் என்ன நினைப் பார்கள் என்பதைப் பற்றி கவலைப்பட தொடங்கும் போது தான், எல்லா விதமான ‘ஹாரஸ்மென்ட்’களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். ஆங்சான் சூயி தலையில் பூ இல்லாமல் நீங்கள் பார்த்ததுண்டா?’’

உங்கள் கடிதங்களை தொகுப்பாக வெளியிட்டுள்ளீர்கள். கடித இலக்கியம் மீது காதல் வந்தது எப்படி?

‘‘கடித இலக்கியம் என்பது மிக முக்கியமான கவிதை வகை. உலக இலக்கியத்தில் கீட்சுடைய கவிதைகளை விட, அவருடைய கடிதங்கள் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். கடிதங்கள் என்பது ஒருவர் மற்றொருவருக்காக எழுதிய தனிப்பட்ட எழுத்து என்பதால், அது தணிக்கை செய்யப்படாமல், அசலாக இருக்கும். அதில் இருக்கும் உண்மை தன்மையும், நம்பகத்தன்மையும் அதன் கூடுதல் பலம்.என்னுடைய அப்பா, மிசாவில் ஒன்றரை வருடங்கள் மதுரை சிறையில் இருந்தார். சிறையில் இருந்து எழுதப்படும் கடிதங்கள் அத்தனையும் சிறை அதிகாரிகளால் ‘சென்சார்’ செய்யப்படும்.

அதனால், எப்போதாவது சிறை வார்டன் பார்க்காத நேரத்தில், அவருக்கு தெரியாமல், கர்ச்சீப்புக்குள் வைத்து மறைத்து, கடிதங்களை எங்களிடம் கொடுப்பார். அதை அம்மா, எங்களுக்கு படித்துக் காட்டுவார். ஒன்றரை வருடங்கள், யாருமின்றி தனிமையில் இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு, அம்மா கஷ்டப்பட்ட காலகட்டம் அது. அந்த தனிமையான காலத்தில், அம்மாவுக்கு அப்பா எழுதிய கடிதங்கள், அவ்வளவு ஆறுதலாக இருக்கும். அதை இன்றும் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன். அது, அம்மாவுக்கு அப்பா எழுதிய கடிதங்கள் என்பதால், அதை பிரசுரிக்கும் உரிமை எனக்கில்லை.

எனக்கு எழுதி இருந்தால் பிரசுரித்து இருப்பேன். கடிதத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்த தருணம் அது.ஒரு கடிதத்தை பர்சனல் என்று நீங்கள் சொன்னாலும், அதன் மூலமாக அன்றைய சூழ்நிலையில் இருந்த மனித வாழ்க்கை, உறவு சிக்கல்கள், அவர்களுடைய மொழி, உணவு என்று எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள முடியும். அது ஒரு கலாச்சாரத்தினுடைய, பண்பாட்டினுடைய ஆவணம். எனவே, அதை பகிர்ந்து கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. அதனால் தான் அந்த கடிதங்களை புத்தகமாக கொண்டு வந்தேன். அதன் பின் வந்த கடிதங்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை, புத்தகமாக தொகுத்து அடுத்த ஆண்டு வெளியிட இருக்கிறேன்.’’

சமீபத்திய படைப்புகள் பற்றி…?

‘‘இந்த ஜனவரியில், என்னுடைய மூன்று புத்தகங்கள் வெளிவந்து இருக்கிறது. ‘முட்டு வீடு’ என்ற சிறுகதை தொகுப்பு. ஒரு வார இதழில் நான் எழுதிய ‘சொட்டாங்கல்’ என்ற கட்டுரைகளின் தொகுப்பு. அது முழுக்க முழுக்க என்னுடைய பால்யத்தின் பதிவு. மூன்றாவது, என்னுடைய வனப்பேச்சி கவிதை தொகுப்பின் சில குறிப்பிட்ட பகுதிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கிலத்தில் வந்துள்ள என்னுடைய முதல் மொழிப்பெயர்ப்பு. சென்னை பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் மேனாள் தலைவர், பேராசிரியர் இந்திரா அந்த மொழிபெயர்ப்பை செய்திருக்கிறார். இந்த புத்தகம் பிப்ரவரி 1ல், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் வெளியாகிறது.’’

சினிமா கவிஞர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம், தீவிர இலக்கியத்தில் இயங்குபவர்களுக்கு கிடைப்பதில்லை என நினைக்கிறீர்களா?

‘‘இது ஒரு மித் தான். தமிழ்நாட்டில் தான், கொஞ்சம் பிரபலமாக இருந்தால் போதும், நீங்கள் எதைப் பற்றியும் கருத்து சொல்லலாம். அந்த மனோபாவம் தான் இங்கே வேலை பார்க்கிறது. ஆனால் கவிஞர்கள் இலக்கியவாதிகள் அதை பொருட்படுத்துவது கிடையாது. எத்தனை தமிழ் கவிஞர்கள், எங்கோ ஒரு இடத்தில் அவர்கள் நம்புகிற விஷயத்தை செய்து கொண்டே இருப்பார்கள்.
தமிழ்ப் பெண் கவிஞர்கள் என்றால் ஏன் ஐந்தாரு பேரை மட்டுமே நாம் போக்கஸ் செய்கிறோம். எனக்கு தெரிந்து, எழுதுகிற 15 பெண் கவிஞர்களின் பெயர்களை என்னால் வரிசையாக சொல்ல முடியும். ஆனால் உண்மையான இலக்கியவாதி, அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது. அவர்கள் பெரிய ஆரவாரம் இல்லாமல் தான் இருப்பார்கள்.’’

பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கு குடும்பத்தின் சப்போர்ட் மிகவும் முக்கியம். உங்கள் குடும்பம் உங்களை எப்படி சப்போர்ட் செய்கிறது?

‘‘இதை நான் இரண்டு விதமாக பார்க்கிறேன். குடும்பம் என்ற நிறுவனம், தமிழ் வாழ்க்கையில் முக்கியமான பங்கு வகிக்கிறது. என்னை மாதிரி பொதுப் பணியில் இருக்கிறவர்களுக்கு குடும்பத்தின் சப்போர்ட் மிகவும் முக்கியம். எங்க அம்மா, பஞ்சாயத்து போர்டு பள்ளி ஆசிரியை. அப்பா, பரபரப்பான அரசியல் வாழ்க்கையில் இருந்தார். ஆனாலும் ரொம்பவே சப்போர்டா இருந்தார். இரவு எந்த நேரம் வீட்டுக்கு வந்தாலும், நாங்கள் சாப்பிட்டோமா, அம்மா சாப்பிட்டார்களா என்று, கேட்டுவிட்டு தான் அவர் படுக்க போவார். என்னுடைய எல்லா விழாக்களிலும் அவர் இருப்பார்.‘‘அந்த புரிதல் ரொம்ப முக்கியம். இப்ப, நான் துணி துவைச்சா, நீ காயப்போடணும். நான் சட்னிக்கு தேங்காய் துருவினா, நீ அதை அரைக்கணும்.

இப்படி நாம குடும்பம் நடத்த முடியாது. பணியாற்றும் இடத்தில் அதிக கவனத்துடன் செயல்படுவதைப் போல, அதே நேரத்தை குடும்பத்துக்கு செய்வதில் என்ன இருக்கிறது. அதையே மற்றவர்கள் அட்வாண்டேஜாக எடுத்துக் கொள்ளும் போது நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும். குடும்ப சுமைகள் முழுவதும், உங்கள் மேல் இருப்பதை, உங்கள் கணவரோ, பிள்ளைகளோ புரிந்து கொள்ளவில்லை என்றால், கண்டிப்பாக நீங்கள் ரிபெல் செய்து தான் ஆக வேண்டும். அந்த காலம் மாறிப்போச்சு. நான் இதை செய்தா நீ இதை செய்யணும் என்று கட்டமைக்காமல் மற்றவருக்கு அந்த எண்ணம் தானாகவே வர வேண்டும். என் கணவர் வேலையில் இருந்த போது நான் கல்லூரி பேராசிரியராக இருந்தேன். பிள்ளைகளின் படிப்பு, டியூஷன் எல்லாம் நான் பார்த்துக் கொண்டேன். அவர் ஓய்வு பெற்றுவிட்டார். அவருக்கு நிறைய நேரம் இருக்கிறது. நான் பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டேன். இப்போது பிள்ளைகளை அவர் பார்த்துக் கொள்கிறார். இந்த புரிதல் ரொம்பவும் முக்கியம்.’’

கூகுள் தலைமுறையின் காதலை எப்படி பார்க்கிறீர்கள்?

‘‘பெற்றோர்கள் காதலுக்கு எதிரிகள் கிடையாது என்பதை இந்த தலைமுறை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 13 – 14 வயதில் முடிவு எடுக்க தெரியாது. அவர்களது உடல் சம்பந்தமான விஷயங்களை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். காதல் என்பது, வாழ்க்கையின் ஒரு அங்கமாக தான் இருக்க வேண்டும். அதைத் தாண்டி உங்களுக்கு வேற விஷயங்களும், வேலைகளும் இருக்கிறது. எல்லாவற்றையும் கடந்து, 26 வயது வரும் போது தான் முதிர்ச்சியுடன் முடிவுகள் எடுக்க முடியும். அந்த வயது வரும் வரை, உங்களுக்கு வரும் காதல் என்பது வெறும் ஈர்ப்பு தான் என்பதை அவர்கள் புரிந்து கொண்டாலே போதும்.’’

கவிதைகள் என்றாலே, காதல் கவிதைகள் தான் என்பது போன்ற தோற்றம், வெகுஜன வாசகர்கள் மத்தியில் இன்றைக்கும் நிலவுகிறதே?

‘‘மேலோட்டமான கிளர்ச்சி மற்றும் அந்த நேரத்தில் படித்துவிட்டு கடந்து போகும் உணர்வை கொடுப்பது கவிதை கிடையாது. பரந்துபட்ட வாசிப்பு தான் கைகொடுக்கும். பாரதியார் கவிதைகளோ அடுத்தடுத்து உள்ள பெரிய கவிஞர்களை தேடித்தேடிப் படிக்க வேண்டும். கணியன் பூங்குன்றனார் கவிதை வரிகள், ‘பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே…’ இந்த வரிகளுக்கு எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன. இப்படி பார்த்து பார்த்து படிக்கும் போது தான், நாமும் பக்குவப்படுவோம். எந்த படைப்புகள் உங்களை வியக்க வைக்கிறதோ, தூங்கவிடாமல் செய்கிறதோ, துரத்திக் கொண்டே வருகிறதோ, அது தான் உங்கள் ரசனையை வளர்க்கும்’’.

மீ டூ?

‘‘ ‘மீ டூ’ வரவேற்கத்தக்க விஷயம் தான். பெண்கள் அப்ப ஏன் பேசல இப்ப ஏன் பேசுறாங்க. இந்த கேள்வியே அனாவசியம். எல்லா பெண்களுக்கும் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் பேச முடிவதில்லை. என் சூழல் வேறு, உங்கள் சூழல் வேறு. இன்றைக்கு கண்டிப்பாக 100 ரூபாய் சம்பாதித்தால் தான் உலையே வைக்க முடியும். அந்த 100 ரூபாய் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் போது உங்களால் பேச முடியாமல் போகும். அதுவே, மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் போது, நிலைமை வேறு. ‘அப்ப ஏன் வாய மூடிக்கிட்டு இருந்தா. இப்ப ஏன் வாய திறக்கிறா?’ என்று, கேள்வியை நீங்கள் கேட்க முடியாது. அவர்கள் இப்போதாவது கேள்வி கேட்கிறார்களே. அதற்கான ஸ்பேஸ் கிடைத்திருக்கிறதே. அது நல்ல விஷயம். அதுக்காக தேவையில்லாமல் அட்வாண்டேஜ் எடுத்தா, அது அவர்களுக்கும், மற்றவர்களுக்குமான பிரச்னை. அதுக்குள்ளே நான் போக விரும்பவில்லை. பெண்கள் எல்லாவற்றையும் பேச வழி கிடைத்திருக்கிறது. அது சந்தோஷமான விஷயம்.’’

பெண்ணியம் உங்கள் பார்வையில்?

‘‘பெண்ணியத்தை பொறுத்தவரை, குறிப்பாக மேலைநாட்டு பெண்ணியம், ஐரோப்பிய ஃபெமினிசத்தை அப்படியே நம்ம இந்தியாவுக்கு, நம்முடைய கிராமங்களுக்கு பொருத்திப் பார்க்க முடியாது. நமக்கு இருக்கிற பெக்யூலியர் பிரச்னை சாதி. மேலைநாடுகளில் சாதி பிரச்னை கிடையாது. அவர்களுக்கு வர்க்கமும் நிறமும் தான். இந்த நிற பேதம், மத பேதம், சாதி பேதம் என்பதெல்லாம் நம் இந்தியர்களுக்குள் இருக்கும் பெக்யூலியர் விஷயம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த பெண்கள், நிறைய ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள். அவர்களை அவமானப் படுத்துவதற்கு முதலில் கை வைப்பது அவர்களின் உடலில் தான். எத்தனை தலித் பெண்கள் மேல் சாதியினரால் அவமானப்படுத்தப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.

இது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால், இங்கு வெஸ்டர்ன் ஃபெமினிசத்தை அப்படியே கொண்டு வந்து பொருத்திப் பார்க்க முடியாது.நமக்கான பிரச்னைகளோடு, அந்தந்த பிராந்தியத்தில் இருக்கும் பெண்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, சரியான விழிப்புணர்வு மூலமாக அதை வெளியே கொண்டு வர வேண்டும். எனக்கு பூ வைக்க பிடிக்கும். அதற்காக பூக்காரம்மாவிடம் போய் என்னுடைய கவிதைகளை சொல்ல முடியாது. அது எவ்வளவு பெரிய வன்முறை. மேலைநாடுகளில் பெரிய பெரிய போராட்டங்களுக்கு பிறகு தான் பெண்களுக்கான உரிமை கிடைத்தது. 19ம் நூற்றாண்டில்தான் வெளிநாட்டு பெண்களிடம் மாற்றம் ஏற்பட்டது.’’

ஆண்கள் அணியும் உடைகள் எல்லாவற்றையும், பெண்கள் அணியலாம். அதில் தப்பே கிடையாது. சுடிதார், ஜீன்ஸ் அணிந்து கொள்வது நமக்கு வசதியாக இருக்கிறது. அதை ஒப்புக் கொள்ளலாம். பிரச்னை இல்லை. ஆனால் ஒரு ஆண் இறுக்கமான உடை அணிகிறான் என்பதற்காக பெண்ணும் இறுக்கமான உடை அணிவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஆண் மது குடிக்கிறான், சிகரெட் பிடிக்கிறான் என்பதற்காக, பெண்ணும் அதை செய்வது பெண்ணியம் கிடையாது. மது குடிப்பது ஒரு பழக்கம். அதை யார் குடித்தாலும் கெடுதல் தான். ஆண் செய்யும் எல்லாவற்றையும் பெண்ணால் செய்ய முடியும் என்பதில் சந்தேகம் கிடையாது. இறுக்கமான உடை அணிவதில் தான் பெண்ணியத்தை சொல்ல வேண்டும் என்றில்லை. அதை தேர்வு செய்யுற உரிமை என்னிடம் தான் உள்ளது. எங்க ஊர்ல படிக்காத பெண்கள் இருக்காங்க. அங்க ஒரு அம்மா, வீட்டுக்காரர் இறந்த பிறகும் பெரிய பொட்டு வச்சிக்கிறாங்க. கேட்டா நான் வயசு வந்த காலத்தில் இருந்தே வச்சிட்டு இருக்கேன். இப்ப மட்டும் ஏன் எடுக்கணும்னு கேட்குறாங்க. அது தான் பெமினிசம். அதை அவங்களுக்கு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருக்கு. பெண்கள் படிச்சு இருந்தா தான் பெண்ணியவாதிகளா இருக்கணும் என்ற அவசியம் கிடையாது.’’

உங்களுக்கும் கனிமொழிக்குமான நட்பு?

‘‘கனிக்கும் எனக்கும் ஒரு அழகான உறவு. இரண்டு விதத்தில் நீங்க பார்க்கலாம். ஒன்று அவங்க கவிஞர், எழுத்தாளர். அந்த விதத்தில் இரண்டு பேருக்குமான தளம் ஒன்று. அது போக அவங்க தலைவரோட பொண்ணு. அந்த விதத்தில் பார்க்கும் போது, தலைவரோட குடும்பத்துக்கு எப்படி நாங்க மரியாதையா இருக்கிறோமோ அதே மாதிரி தலைவர் மகள் என்ற மரியாதை இருக்கு. தெளிவா சிந்திக்கிற சமூக அக்கறை கொண்ட பெண். சம வயது தோழிகள்னு சொல்லிக்கலாம். இருவருக்கும் இடையில் ஒரு அழகான, மரியாதை கலந்த ஒரு உறவுன்னு சொல்லலாம்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்த பரிசோதனையிலேயே கருவக புற்றுநோயை கண்டறியலாம்!! (மருத்துவம்)
Next post இனி பிறந்த குழந்தையின் இரத்தம் வீணாவதைத் தடுக்கலாம்!! (மருத்துவம்)