சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை மேற்கு திரிபுராவின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு!!
மேற்கு திரிபுராவின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
* 4ம் கட்ட தேர்தலில் 64 சதவீதம் வாக்குப்பதிவு
கடந்த 11, 18, 23ம் தேதிகளில் 3 கட்ட வாக்குப்பதிவுகள் 302 தொகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் நேற்று 4வது கட்டமாக 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதுதவிர ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது கட்டமாக குல்காம் மாவட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 64% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 76.47 சதவீதம் பதிவானது. மாநிலம் வாரியாக ராஜஸ்தானில் 62%, உத்தரப் பிரதேசம் 53.12%, மத்தியப் பிரதேசம் 65.86%, மகாராஷ்டிரம் 52%, ஒடிசா 64.05%, பீகார் 53.67%, ஜார்க்கண்ட் 63.42% வாக்குகள் பதிவாகின. குல்காமில் மட்டும் 10.3 சதவீத வாக்குகளே பதிவாகின.
ஒடிசாவில் 6 மக்களவை தொகுதிகள் மற்றும் 41 சட்டபேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 60 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதமாக தொடங்கியது.
பட்குரா தொகுதியில் பிஜூ ஜனதா தளம் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு மட்டும் மே 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினர் இடையே மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. பாரபானி பகுதியில் ஏற்பட்ட வன்முறையில், மத்திய அமைச்சரும் பாஜ வேட்பாளருமான பாபுல் சுப்ரியோவின் காரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுெதாடர்பாக அமைச்சர் பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தமாக 0.44 வாக்குப்பதிவு இயந்திரமும், 0.46 கட்டுப்பாட்டு இயந்திரமும், 1.81 சதவீதம் விவிடேட் இயந்திரமும் பழுதானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மேற்கண்ட 72 தொகுதிகளின் வாக்குப்பதிவை, நேற்று நடந்த வாக்குப்பதிவோடு ஒப்பிட்டு பார்த்தால் கடந்த முறை 63.05 சதவீதமாகவும், நேற்று 63 சதவீதமாகவும் கிட்டதிட்ட 1 சதவீதம் அளவிற்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது.
இந்நிலையில், திரிபுரா மாநிலத்தை பொறுத்தவரை கடந்த 11ம் தேதி நடந்த முதற்கட்ட தேர்தல் 1,679 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடந்தது. அதில், பல வாக்குச்சாவடிகளில் மோசடி மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யாததால், 464 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த மா.கம்யூ. கட்சி வலியுறுத்தியது. அதையடுத்து துணை தேர்தல் கமிஷனர் வினோத் ஜூஷ்ஷி நியமிக்கப்பட்டு 846 வாக்குசாவடிகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதேபோல், திரிபுரா மாவட்ட நிர்வாக மாஜிஸ்திரேட் சந்தீப் மகாத்மி, வாக்குப்பதிவு மோசடி குறித்து தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அதையடுத்து மேற்கு திரிபுரா தொகுதியின் 131 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடந்த சிறப்பு அதிகாரியும், மாவட்ட அதிகாரியும் ஆணையத்துக்கு பரிந்துரை செய்துள்ளனர். வரும் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கும் மே 6ம் தேதி அல்லது மே 12ம் தேதி 131 வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப்பதிவு தொடர்பான அறிவிப்பு வௌியாக வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தேர்தலில் ஒரே தொகுதியில் அதிகபட்சமாக புகாரை தொடர்ந்து மறுவாக்குப்பதிவு நடக்கும் தொகுதியாக மேற்கு திரிபுரா இருக்கும்.
Average Rating