தமிழகத் தேர்தல்: அனல் காற்று ஓய்ந்தது; ஆட்சி தப்பிக்குமா? (கட்டுரை)

Read Time:14 Minute, 11 Second

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்திருக்கிறது. வேலூர் நீங்கலாக 38 நாடாளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைச் செலுத்தியிருக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடும் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் அதிகபட்ச வாக்குப்பதிவும் (80.49 சதவீதம்), தி.மு.கவின் சார்பில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் குறைந்தளவு வாக்குப்பதிவும் (56.41 சதவீதம்) ஆகியிருக்கிறது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 77.72 சதவீத வாக்குகள் விழுந்துள்ளன.

முன்னாள் இந்திய நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கைத் தொகுதியில் 69.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரகுமார் போட்டியிடும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் 74.75 சதவீத வாக்குகள் பதிவாகி, தமிழகத் தேர்தல் களத்தில் வீசிய அனல் காற்று சற்று ஓய்ந்திருக்கிறது.

தற்போது இருக்கும் அ.தி.மு.க ஆட்சி தொடருமா அல்லது தொடராதா என்பதைத் நிர்ணயிக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலைப் பொறுத்தமட்டில், 75.57 சதவீத வாக்குகள் பதிவானாலும், அதிகபட்ச வாக்குப்பதிவு (82.26 சதவீதம்) சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில்தான் பதிவாகியிருக்கிறது.

தமிழகத்தில் தேர்தல் களம், இதுவரை இல்லாத அளவுக்குத் தனி நபர் தாக்குதல்கள் நிறைந்ததாக அமைந்தது. அ.தி.மு.க ஆட்சி பற்றியும் பா.ஜ.க ஆட்சி பற்றியும் விமர்சனங்களைத் தொடங்கிய ஸ்டாலின், பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியையும் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியையும் ‘விஷவாயு’, ‘மண்புழு’, ‘காவலாளி அல்ல களவாணி’ என்றெல்லாம் பிரசாரம் செய்ததைப் பார்க்க முடிந்தது.

பதிலுக்கு எடப்பாடி பழனிசாமி “நான் விமர்சித்தால் காது சவ்வு கிழிந்து விடும்” என்ற அளவுக்குச் சென்றாலும், பிரதமர் நரேந்திரமோடி தமிழகத்தில் தனி நபர் பிரசாரத்தில் ஈடுபடவில்லை.

திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாக விமர்சிக்காமல், காங்கிரஸை விமர்சித்து அதன் மூலம் தி.மு.கவை மறைமுகமாகவே விமர்சித்தார்.

தேர்தலுக்கு முந்தைய பேட்டிகளில் கூட, “தேர்தலுக்குப் பிறகு ஆட்சியமைக்க காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கூடக் கேட்பேன்” என்று நரேந்திர மோடி பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.

எட்டு வருடங்களுக்கு மேல் தி.மு.க ஆட்சியில் இல்லை என்பதால், நேரடியாக அக்கட்சியை விமர்சிக்கப் புதிய காரணங்கள் ஏதும் அ.தி.மு.கவுக்கும் கிடைக்கவில்லை; பா.ஜ.கவுக்கும் கிடைக்கவில்லை.

அதனால் கோவை குண்டு வெடிப்பு சம்பவம், 2ஜி அலைக்கற்றை ஊழலில் தி.மு.க மீது காங்கிரஸ் அரசு வழக்குப் போட்டது போன்றவற்றைச் சுட்டிக்காட்டி “தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி முரண்பட்ட கூட்டணி” என்ற விமர்சனத்தை முன் வைத்தார்கள்.

தி.மு.க கூட்டணியில் இருந்த வைகோதான் முதலமைச்சர் பழனிசாமியின் தீவிர தாக்குதலுக்கு உள்ளானவர் என்றாலும், அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் டொக்டர் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் தி.மு.கவின் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

ஆகவே, தமிழகத் தேர்தல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இருந்த காலங்களை விட, வரலாறு காணாத தனிநபர் தாக்குதலை இந்தத் தேர்தல் சந்தித்தது. தமிழகத் தேர்தலில் ‘இந்து’ அல்லது ‘இந்து அல்லாதோர்’ என்ற பிரசாரம் தலை தூக்கியதில்லை.

திராவிட கழகத் தலைவர் கிருஷ்ணக் கடவுளை விமர்சிக்க, அதற்கு தி.மு.க ஆதரவு என்று சித்திரிக்க, “தி.மு.க இந்து விரோத கட்சி” என்ற பிரசாரம் 1971க்குப் பிறகு முதன் முதலில் அதிக அளவில் தலை தூக்கியது. “90 சதவீதம் இந்துக்கள் உள்ள கட்சி தி.மு.க” என்று, பதிலடி கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. ஆகவே இந்த முறை தேர்தல் பிரசாரம் வண்ண மயமான பிரசாரங்களைச் சந்தித்தது என்பதுதான் முத்தாய்ப்பானது.

இரு பெரிய கூட்டணிக் கட்சிகளும், மக்களுக்குப் புதிதாகச் சொல்வதற்கு ஏதுமில்லை என்ற நிலையில், தமிழக வாக்காளர்களுக்கு இவர்களில் ஒருவருக்கு பெரும்பான்மையாக வாக்களித்து விட வேண்டும் என்ற தூண்டுகோல் ஏதும் இந்தத் தேர்தலில் அமைந்துள்ளதாகத் தெரியவில்லை.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஓர் அலை, தமிழகத்தில் இருப்பது தி.மு.க அணிக்குச் சாதகமாக இருக்கிறது.

ஆகவே, இந்த வாக்குப் பதிவு, நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்தமட்டில், தி.மு.க அணிக்கு ஆதரவாக மாறுவதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தேர்தல் கணிப்புகள் கூட அவ்வாறே பிரதிபலித்தன.

அதேநேரத்தில், சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிகப்படியான வாக்குப் பதிவுகள், இதுவரை ஆளுங்கட்சிகளுக்கே சாதகமாக அமைந்திருக்கின்றன.

ஏனென்றால், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சி, இடைத் தேர்தலில் தன் ஆளுமையை முழுமையாகப் பயன்படுத்த முடியும். இந்தமுறை ஆட்சியிலிருக்கும் அ.தி.மு.கவுக்கு 18 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்றுள்ள இடைத் தேர்தல்களில், ஒரு சம வெற்றி வாய்ப்பு உருவாகலாம்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில், பல பத்தாண்டுகளாக இடைத் தேர்தல் வெற்றி என்பது, ஆளுங்கட்சிக்குச் சொந்தமாகவே இருக்கிறது. அந்தக் கடந்த கால வரலாறு, மீண்டும் வருமென்றால், அ.தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் உருவாகலாம்.

அதேநேரத்தில் மக்களுக்கு, மத்திய – மாநில ஆட்சிகள் மீதுள்ள அளவு கடந்த கோபம், அந்த இடைத் தேர்தல்களிலும் பிரதிபலித்திருந்தால், ஆளுங்கட்சிக்கே வெற்றி என்ற கடந்த கால வரலாற்றை முறியடிக்குமா? இன்றைக்கு அனைத்து வாக்காளர் மனதிலும் எழுந்துள்ள கேள்வி இதுவாகும்.

தி.மு.க, அ.தி.மு.க அணிகளின் பலமும் பலவீனமும் இப்படியிருக்க, இந்த இரண்டு அணிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனின் பிரசாரம் இளம் வாக்காளர்களை பெரிதும் கவரும் விதத்தில் இருந்தது.

கடும் குடிநீர் வறட்சியில் பல மாவட்டங்கள் தடுமாறிக் கொண்டிருக்கின்ற வேளையில் “ஒவ்வொருவருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் தருவதே என் இலட்சியம்” என்ற கமலின் பிரசாரம் முதல் முறை வாக்காளர்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரது ‘டோர்ச்லைட்’ அவருக்கு நம்பிக்கை அளிக்கிறது என்ற அளவில், பிரசாரத்தின் வீச்சு இருந்ததைப் பார்க்க முடிந்தது.

அதேபோல், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பிரசாரம் அதற்குச் சற்றும் இளைத்தது போல் இல்லை என்பதை விட, அவருடைய பிரசாரத்தில் சுற்றுப்புறச்சூழல் விடயங்கள் முன்னிலை வகித்தன.
தமிழக அரசியல் கட்சிகளில் இயற்கை மாற்றங்கள் தொடர்பான விடயங்களை விரிவாக இளைஞர்கள் மனதில் கொண்டு போன தலைவராக சீமான் திகழுகிறார்.

அ.தி.மு.கவில் இருந்து பிரிந்த டிடிவி தினகரனின் பிரசாரமோ, அ.தி.மு.க, பா.ஜ.க, தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளையும் விமர்சிக்கும் வகையில் அமைந்தது.

தமிழ்நாட்டில் ‘மூன்றாவது சக்தி’க்கு ஒரு பத்து சதவீத வாக்குகள் தொடர்ந்து பதிவாகி வந்திருக்கிறது. இது பெரும்பாலும் “தி.மு.கவும், அ.தி.மு.கவும் வேண்டாம்” என்று கருதும் வாக்காளர்கள்.

மூப்பானார் தனிக்கட்சி அமைத்த போதும், வைகோ, டொக்டர் ராமதாஸ் போன்றோர் கட்சி தொங்கிய காலங்களிலும் இந்த வாக்காளர்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள்.

பிறகு விஜயகாந்த் தனிக் கட்சி தொடங்கிய போது, இந்த வாக்காளர்கள் அவர் பக்கம் இரு தேர்தல்களில் வலுவாக நின்றார்கள்.

ஆனால், தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு மாற்று என்று வரும் கட்சிகள் எல்லாம், அந்தத் திராவிட கட்சிகளுடனேயே கூட்டணி வைக்கும் கரையும். அந்த விதத்தில்தான் விஜயகாந்த் வரை மாற்றாகத் தோன்றியவர்களின் கட்சியின் வாக்கு வங்கிகள் கரைந்து போயின.

இந்த வாக்கு வங்கி தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகளுக்குப் போட்டியாக தேர்தலில் போட்டியிட்ட நடிகர் கமல், சீமான், டி.டி.வி. தினகரன் ஆகிய மூன்று பேரில் யாருக்குப் போகப் போகிறது என்பது புதிராக இருக்கிறது.

மே 23ஆம் திகதி வாக்கு எண்ணிக்கையின் போது இதற்கு விடை கிடைக்கும்.
ஆனால், இந்த மூவருமே தமிழக வாக்காளர்கள் மத்தியில் புதியதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்தத் தாக்கம், வாக்குகளாக மாறி, அவர்களுக்கு உரிய அங்கிகாரத்தைக் கொடுக்குமா என்பது நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றாலும், அடுத்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த மும்மூர்த்திகளும் ‘மாற்றத்துக்கான அரசியலின் தூதுவர்’களாகத் தமிழகத்தில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

தி.மு.க, அ.தி.மு.க கட்சிகள் தங்களது கொள்கை முழக்கங்களில் தமிழக வாக்காளர்களைக் கவரும் திட்டத்தைக் கொண்டு வரும் நிர்பந்தத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

ஆனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி, அதிக இடங்களில் வெற்றி பெறும். அதேநேரத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அ.தி.மு.கவுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும். அது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போதுமா? என்பதுதான் தற்போதைய கேள்வி.

இதுவரை பல கண்டங்களைச் சந்தித்து, ஏறக்குறைய இரண்டு வருடங்கள் ஆட்சியை முடித்து விட்டு, மூன்றாவது வருடத்தில் நிற்கும் எடப்பாடி பழனிசாமிக்கு ‘அனல் காற்று ஓய்ந்தது; ஆட்சி தப்பிக்குமா’ என்ற கவலையுடன் மே 23ஆம் திகதியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 14 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது! (சினிமா செய்தி)
Next post மக்களை உயிரோடு நாய்களுக்கு இரையாக்கும் கொடுங்கோல் அதிபர்!! ( வீடியோ)