ஒரிஜினல் ஹெல்த் டிரிங்க்! வடிகஞ்சி!! (மருத்துவம்)
சமையலில் இப்படி எல்லாம் ஒரு ட்விஸ்ட் இருக்கும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்? ஆமாம்… விஷயம் வடிகஞ்சியைப் பற்றித்தான்.சாதம் வெந்துவிட்டது, இனி தேவையில்லை என்று கொட்டப்படும் வடிகஞ்சியில் அனேக… அனேக சத்துக்கள் அடங்கி இருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.இது முன்னரே தெரிந்துதானோ என்னவோ நம் முன்னோர்கள் வடிகஞ்சியை அருந்தும் பழக்கத்தை தினசரி வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.
குக்கர் கலாசாரத்துக்கு முழுமையாக மாறிப் போய்விட்ட சூழலில் மீண்டும் அந்த பழைய சமையல் முறைக்கே நாம் திரும்புவது நல்லது என்பதை உணர முடிகிறது சித்த மருத்துவர் லாவண்யா சொல்லும் வார்த்தைகளில் இருந்து…வடிகஞ்சியின் பெருமையை அறிந்துகொள்வோமா…
‘‘பானையில் உலை வைத்து பதம் பார்த்து சோற்றை வடித்து அந்த தண்ணீரை குடிக்கும் பழக்கம் நம்மிடம் குறைந்துவிட்டது. நவீன வாழ்க்கையின் வேகத்துக்கேற்ப சமையல் செய்ய பழகிவிட்டோம். குக்கரில் அரிசி வைத்து விசில் அடித்தவுடன் இறக்கி விடுகிறோம். இதனால் வடிகஞ்சி என்ற ஒன்று நம் வாழ்க்கையில் இல்லாமலேயே போய்விட்டது. அந்த வடிகஞ்சி நமக்கு எண்ணற்றஆரோக்கியத்தை வழங்கக் கூடியது.
சித்த மருத்துவ அடிப்படையில் உடலில் வாதம், பித்தம், கபம் சம அளவு இருந்தால்தான் உடல் ஆரோக்கியமா இருக்கும். அந்த வகையில் சோறு வடித்த கஞ்சியை பருகும்போது பித்தம், கபம், வாதம் மூன்றும் சீராக இயங்கும். மேலும் கோடை காலத்தில் உண்டாகும் வயிறு எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, சன் ஸ்ட்ரோக், நீர் இழப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளுக்கும் வடிகஞ்சி நல்ல நிவாரணம் என்று சொல்லலாம். சோறு வடித்த தண்ணியை குடிக்கும்போது உடல் குளிர்ச்சியடைந்து வெப்பத்தால் வரும் நோய்கள் தடுக்கப்படுகிறது.
உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருவதோடு உடலுக்கு உடனடி சக்தியைத் தர வல்லதாகவும் இருக்கிறது’’ என்கிற சித்த மருத்துவர் லாவண்யா, வடிகஞ்சியின் பலன்களைத் தொடர்ந்து பட்டியலிடுகிறார்.
*வடிகஞ்சியில் சிறிதளவு வெண்ணெய் சேர்த்து பெண்கள் சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் நோய் கட்டுப்படும். ஆறிய கஞ்சி தண்ணியை முகத்தில் நன்றாக தேய்த்து உலர்ந்த பிறகு முகம் கழுவி வந்தால் முகம்பொலிவு அடைந்து முகப்பரு மறைகிறது.
*ஆறிய வடிகஞ்சியில் சிகைக்காய் தூளை போட்டு குளித்து வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு, முடி பிளவு, வறட்சியை தடுத்து. முடி பளப்பளப்பாகிறது, முடி உதிர்வது நின்று முடி வலுவாகிறது.
*மனச்சோர்வையும், உடல் சோர்வையும் போக்கி மூளைக்கு ரத்த ஓட்டத்தை தருகிறது வடிகஞ்சி. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் வடி கஞ்சியை காலை உணவாக அருந்தி வரலாம்.
*சோறு வடித்தகஞ்சியை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் பருகலாம். காய்ச்சல் நேரத்திலும் நோய்வாய்ப்பட்டவர்களும், உணவை உட்கொள்ள சிரமம் உள்ளவர்களும், முதியவர்களும் அருந்த வேண்டிய ஒன்றாகும்.
*நீர்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் B, C, E மேலும் நம்மை வெயிலிருந்து காக்கக் கூடிய மூலக்கூறான Oryzanol இதில் காணப்படுகிறது. உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர் வடிகஞ்சியை உணவு வேளைக்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு குடித்து விட்டு உணவருந்தலாம். உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புவர் வெறும் வடிதண்ணீரை மட்டுமே அருந்தினால் பலன் கிடைக்கும்.
*வயிறு சம்பந்தமான பிரச்னை உள்ளவர்கள் சீரகப்பொடியை போட்டு குடிக்கலாம். இருமல் உள்ளவர்கள் பனங்கற்கண்டு போட்டு குடிக்கலாம். வடிகஞ்சியின் முழுபயன் கிடைக்க கைகுத்தல் அரிசி பயன்படுத்தினால் முழுமையான சத்துக்கள் கிடைக்கும்.
*கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் வடிகஞ்சி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பு போடாமல் அருந்தலாம்.
*குழந்தைகளுக்கு அரிசியை வறுத்து, அதை கொதிக்க வைத்து அதிலிருந்து தண்ணீரை வடித்து கொடுத்து வந்தால் எளிதில் சீரணமாவதோடு குழந்தைகளும் ஊட்டமாகவளர்வார்கள்.
Average Rating