மழலைச் சொல் கேட்கும்!! (மருத்துவம்)
‘குங்குமம் டாக்டர்’ மாதம் இருமுறை இதழ் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை முன்னிட்டு, சென்னை ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. செப்டம்பர் 6 ஞாயிறு அன்று வடபழனியில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமை தினகரன் நிர்வாக இயக்குநர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டாக்டர் ஜெயராணி காமராஜ், டாக்டர் காமராஜ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெற்ற இம்முகாமில் 718 பேர் கலந்துகொண்டனர். குழந்தையின்மைக்கான சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் பெறுவதற்காக 284 பேர் வந்திருந்தனர். இவர்களில் பலர் சமீபத்தில் திருமணம் ஆன இளம் தம்பதியர் என்பது குறிப்பிடத்தக்கது.அனைவருக்கும் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இதயம் மற்றும் நுரையீரல் சோதனை, ரத்த அணுக்கள், ஹீமோகுளோபின் அளவு பரிசோதனை ஆகியவற்றுடன் உயரம் மற்றும் எடைஆகியனவும் முறையாக பரிசோதிக்கப்பட்டது.இந்தப் பரிசோதனைகளை மேற்கொண்டவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனை களுடன் மாத்திரைகளும் இலவசமாக அளிக்கப்பட்டன.
மருத்துவ முகாமின் குறிப்பிடத்தக்க அம்சமாக குழந்தையின்மை பற்றி விளக்கும் கண்காட்சி அமைந்திருந்தது. இதில் இடம் பெற்றிருந்த விளக்கப் படங்கள் இளம் தம்பதியர் உள்பட அனைவரையும்வெகுவாகக் கவர்ந்தது. அவற்றில், உலக அளவில் 15 சதவிகிதம் தம்பதிகளுக்குக் குழந்தைப்பேறு இல்லை என்பதும், குழந்தையின்மைக்கு சராசரியாக 50 சதவிகிதம் வரை ஆண்களே காரணமாக உள்ளனர் என்பதும் ஆய்வின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருமுட்டை உற்பத்தி ஆவதில் உள்ள கோளாறு தொடங்கி அதனுடைய பல்வேறு வளர்ச்சி நிலைகள், கர்ப்பப்பை பிரச்னைகள் (பிறவிக் குறைபாடு, நீர்க்கழலைகள், கருப்பையில் தசை ஒட்டிக்கொள்ளுதல்), கருமுட்டை தானம் குறித்த விவரங்கள், தாய்மை அடையும் காலத்தில் தோன்றும் முக்கிய நோய்கள் போன்ற விளக்கப் படங்களும் பலரையும் கவனிக்க வைத்தன.
குழந்தையின்மை சிகிச்சைக்காக வந்திருந்த சந்திரசேகர் – சொர்ணபத்மா தம்பதியிடம் இந்த முகாம் மற்றும் கண்காட்சி பற்றி கேட்டபோது, ‘‘எங்களுக்குத் திருமணம் தாமதமாக நடந்தது. அதனால், கர்ப்பம் அடைவது தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது. இங்கு வருவதற்கு முன்னால் வேறொரு மருத்துவரிடம் சிகிச்சைக்காக சென்று கொண்டு இருந்தோம். எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ‘குங்குமம் டாக்டர்’ நடத்தும் இந்த முகாம் பற்றி கேள்விப்பட்டு வந்தோம். எங்களைத் தனித்தனியாக மருத்துவர்கள் பரிசோதனைகள் செய்தார்கள். முக்கிய ஆலோசனைகள் சொன்னார்கள்.
இலவசமாக மாத்திரைகள் தந்ததோடு, அடுத்த வாரமே மீண்டும் பரிசோதனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். மனம் தளர்ந்து இருந்த எங்களுக்கு விரைவிலேயே மழலைப் பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இந்த மருத்துவ முகாம் தந்திருக்கிறது’’என்றனர்.‘‘குங்குமம் டாக்டர் இதழுடன் இணைந்து ஒரு முக்கியமான மருத்துவ முகாமை நடத்துவது ஆத்ம திருப்தியை அளிக்கிறது. முக்கியமாக, குழந்தையின்மை ஒரு சமூகப் பிரச்னையாக இருக்கிறது.
அந்தப் பிரச்னைக்கு நம்மால் முடிந்த வரை தீர்வு காண இந்த மருத்துவ முகாம் உதவும். சிகிச்சைக்காக வந்த தம்பதியரில் ஆண்களுக்கு விந்துப்பரிசோதனையும், பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் இலவசமாக செய்யப்பட்டது. ஏற்கனவே சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களுக்கு அடுத்தகட்ட சிகிச்சைக்கான ஆலோசனைகளைக் கூறியிருக்கிறோம்’’ என்றார் டாக்டர் காமராஜ்.
முகாம் தொடக்க விழாவில் திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, நடிகைகள் வித்யா பிரதீப், தியா மேனன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Average Rating