நகரத்துப் பெண்களை தாக்கும் பிரச்னை!! (மருத்துவம்)
குழந்தை இன்மைக்கான காரணங்கள் ஆண், பெண் இருவரிடமும் உண்டு என்பதையும் யாருக்கு என்ன மாதிரியான பிரச்னைகள் வரலாம் என்பதையும் பார்த்தோம். இனி வரும் அத்தியாயங்களில் அந்தப் பிரச்னைகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவாக அலச இருக்கிறோம்.
முதலில் பிசிஓஎஸ் எனப்படுகிற Poly Cystic Ovary Syndrome. பாலிசிஸ்டிக் ஓவரிஸ் அல்லது சினைப்பை நீர்க்கட்டிகள் என்கிற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். குழந்தையில்லாத பெண்கள் பலரும் சந்திக்கிற பரவலான பிரச்னை இது. பெண்மை மலரும் பருவத்தில் தொடங்கி, மெனோபாஸ் வரை எல்லா வயதுப் பெண்களையும் பாதிக்கிற இது, குழந்தையில்லா பெண்களிடம் குரூரமாக நடந்து கொள்கிறது.
“பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை, குழந்தை தன் தாயின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே தாக்கக்கூடியது. எனவே, அதை மரபணு சம்பந்தப்பட்ட ஒன்றாகவும் பார்க்கலாம். கிராமத்துப் பெண்களிடம் இந்தப் பிரச்னையின் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. காரணம், அவர்களது உடல் உழைப்பு. உயரத்துக்கேற்ற எடையுடன் இருக்கும் அவர்களது உடல்வாகு. நகரத்துப் பெண்களுக்கோ இதன் தாக்கம் ரொம்பவே அதிகம்.
நகரத்து வாழ்க்கை முறை, மாறிப் போன உணவுப்பழக்கம், அதனால் ஏற்படுகிற பருமன், அதன் தொடர்ச்சியாக ஹார்மோன் கோளாறுகள் என இதற்கு நிறைய காரணங்கள் உண்டு…’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் லோகநாயகி. பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்னைக்கும் கருத்தரித்தலுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், அந்தப் பிரச்னையைப் பற்றிய அறிமுகத்தையும் அழகாக சொல்கிறார் அவர். கருப்பையின் செயல்திறனை பாதிக்கிற ஒருவகையான ஹார்மோன் கோளாறுதான் பிசிஓஎஸ் எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை.
உலக அளவில் 7 சதவிகித பெண்கள் பிசிஓஎஸ் பிரச்னையால் குழந்தையின்றித் தவிக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். தெற்காசிய நாடுகளில் இதன் தாக்கம் சற்றே அதிகம் என்பது உப தகவல்.ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கம் கட்டுப்பாடுகளை இழப்பதே இதற்கான பிரதான காரணம். அதன் விளைவாக அவளது மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போவதில் இருந்து, கருத்தரிக்காதது வரை எதுவும் நடக்கலாம். உங்களுடைய தோற்றத்தை மாற்றலாம். சரியான நேரத்தில் கவனித்து சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அது நீரிழிவு, இதய நோய்கள் வரக்கூட காரணமாகலாம்.
பிசிஓஎஸ் உள்ள பெரும்பாலான பெண்களுக்கு சினைப்பையில் சின்னச்சின்ன கட்டிகள் உருவாகும். அந்தக் கட்டிகள் ஆபத்தானவை அல்ல என்றாலும், அவைதான் ஹார்மோன் சமநிலையின்மைக்குக் காரணமாகின்றன. பிசிஓஎஸ் பிரச்னைக்கு இதுதான் காரணம் எனத் துல்லியமாக எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை. ஆனால், பரம்பரைத்தன்மை அதில் பெரும்பங்கு வகிக்கிறது. அதனால், குடும்பத்தில் யாருக்கேனும் பிசிஓஎஸ் இருந்தால் அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் அது தொடரும் வாய்ப்புகள் அதிகம். இது அம்மாவழியில் இருந்தோ, அப்பா வழியில் இருந்தோ மகள்களுக்குத் தொடரலாம். இன்சுலின் ஹார்மோனின் அளவு சராசரியைவிட மிக அதிகமாக இருப்பதுகூட பிசிஓஎஸ் பிரச்னைக்குக் காரணமாகலாம்.
பிசிஓஎஸ் என்ன செய்யும்?
பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெண்களுக்கு AMH என்கிற ஹார்மோனின் அளவு 6.7க்கு மேல் இருக்கும். அது 2 முதல் 6.7க்குள் இருப்பதுதான் இயல்புநிலை. சில பெண்களுக்கு இது 12, 13… 18 வரைகூட போய், தீவிர பிரச்னையாக மாறுவதுண்டு.
இந்தப் பிரச்னை உள்ள பெண்களுக்கு மாதவிலக்கு முறைதவறி வரும். அதாவது, 6-7 மாதங்கள் ஆனால் கூட மாதவிலக்கு வராது. அப்படியே வந்தால் 40 நாட்களுக்குக்கூட ரத்தப்போக்கு தொடரும். பூப்பெய்திய புதிதில் இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முறையற்று இருப்பதை பல அம்மாக்களும் அலட்சியமே செய்கிறார்கள். `வயசுக்கு வந்த புதுசுல அப்படித்தான் இருக்கும். போகப் போக சரியாயிடும்…’ என்றும் `கல்யாணமானா தானா சரியாயிடும்…’ என்றோ சமாதானம் சொல்கிறார்கள். அந்த அலட்சியம் கூடாது. முறையான மருத்துவப் பரிசோதனையின் மூலம்தான் அதைக் கண்டறிய முடியும்.
பிசிஓஎஸ் பாதித்த பெண்களுக்கு முகம் மற்றும் உடல் முழுக்க ரோம வளர்ச்சி இருக்கும். முகத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும். அவர்களது முகத்தை வைத்தே இந்தப் பிரச்னை இருப்பதைக் கணிக்கலாம். பிசிஓஎஸ் பிரச்னை உள்ள பெரும்பாலான பெண்கள் பருமனானவர்களாகவும் இருப்பார்கள்.
பிசிஓஎஸ் Vs கர்ப்பம்
* கருமுட்டைகளை உருவாக்கி, கர்ப்பப்பையை கருத்தரிக்கத் தயார்படுத்துகிற செயலை இந்தப் பிரச்னை பெருமளவில் பாதிக்கும். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு கருமுட்டைகள் ஸ்டாக் இருந்தாலும், அது வெளிப்படுவதில் சிக்கல் இருக்கும். கருமுட்டைகள் தரமின்றி இருக்கும்.
* பருமனும் பிசிஓஎஸ்ஸும் சேர்ந்து கொள்ளும் போது அது Sub-fertility என்கிற குழந்தையின்மைப் பிரச்னைக்கு வழி வகுக்கிறது. இத்துடன் இன்சுலின் ரெசிஸ்டென்ஸ் தன்மையும் சேர்ந்து கொள்வதால் 40 சதவிகிதப் பெண்களுக்கு அது கருத்தரித்தலைத் தடை செய்கிறது.
* Insulin Resistance இருந்தால் கருத்தரித்தாலுமே அந்தப் பெண்களுக்கு நீரிழிவு வரலாம். ஆகவே, கர்ப்பகால நீரிழிவாலும் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். 80 சதவிகிதப் பெண்களுக்கு இந்தப் பிரச்னை வருகிறது. பிற்காலத்தில் நீரிழிவு வருவதற்கான ஒரு முன்னோட்டமாகவும் அமைகிறது இது.
* கர்ப்பம் தரித்தாலும் அடிக்கடி அது கலைந்து போகும். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு ஆண் ஹார்மோன் சுரப்பு அதிகமிருக்கும். அதனால் Hyperandrogenism என்கிற பிரச்னை வந்து, ஆண்களைப் போல முகம் மற்றும் உடல் முழுக்க முடி வளர்ச்சி காணப்படும்.மாதவிலக்கு முறையாக நடைபெறாத காரணத்தினால் கர்ப்பப்பையின் உள் லைனிங் பகுதிகள் சுத்தம் செய்யப்படாமல் அங்கே புற்றுநோய் தாக்கும் அபாயமும் அதிகரிக்கும்.
மாதந்தோறும் கருமுட்டை வெளிப்படாததால் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு, மற்ற பெண்களைவிட கருப்பையின் உள் சவ்வுப் பகுதிகளில் புற்றுநோய் தாக்கும் ஆபத்தும் 3 மடங்கு அதிகம்.சினைப்பை நீர்க்கட்டி என்பதை பிரச்னைகளின் பெட்டகம் என்றே சொல்லலாம். இடியாப்ப சிக்கல் மாதிரி ஏகப்பட்ட பிரச்னைகளை தன்னகத்தே கொண்டுஒவ்வொன்றாக உங்களுக்குக் கொடுக்கக்கூடியது. இப்படிப் பலமுனை தாக்குதல் செய்கிற பிசிஓஎஸ் பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கவும், சரி செய்யவும் முடியும். அதன் மூலம் குழந்தையின்மைக் கவலையில் இருந்து தப்பிக்கவும் முடியும். அவற்றைப் பற்றி அடுத்த இதழில்…
Average Rating