நோபல் பரிசும் 4 ஆயிரம் குழந்தைகளும்!! (மருத்துவம்)
ஜூலை 25ம் தேதியை ‘உலக ஐ.வி.எஃப்’ தினமாகக் கொண்டாடுகிறது மருத்துவ உலகம். அதையொட்டி, தங்களது மருத்துவமனையில் குழந்தையின்மைக்கான காரணங்களும், நவீன சிகிச்சை முறைகளுக்கான கண்காட்சியை நடத்தினார்கள் மருத்துவர்கள் டி.காமராஜ் மற்றும் ஜெயராணி காமராஜ். இந்த நான்கு நாள் கண்காட்சி, குழந்தையின்மை தொடர்பான மக்களின் சந்தேகங்களைத் தீர்த்ததுடன், ஐ.வி.எஃப். சிகிச்சை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக அமைந்தது.
1978ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி முதன் முதலாக பேராசிரியர் சர் ராபர்ட் ஜியோப்ரி எட்வர்ட், ஐ.வி.எஃப். சிகிச்சை மூலம் லூயிஸ் பிரவுன் என்ற குழந்தையை உருவாக்கினார். இதற்காக, அவர் நோபல் பரிசும் பெற்றார். அந்த நாளை உலகம் முழுவதும் ஐ.வி.எஃப். தினமாக கொண்டாடுகிறது. சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற இந்த ஐ.வி.எஃப் கண்காட்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட 4 ஆயிரம் குழந்தைகளும் அன்னைகளும் பங்கேற்றனர். கலந்து கொண்ட 24 முதல் 58 வயது வரையிலான தம்பதியர் அனைவருக்கும் ஐ.வி.எஃப். எனப்படுகிற InVitro Fertilisation முறையில் குழந்தைகள் பிறந்தது குறிப்பிடத்தக்கது.
“ஐ.வி.எஃப். மூலம் பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்களா? இந்தச் சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால், இப்போது எங்கள் மருத்துவமனையில் பிறந்த 4 ஆயிரம் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்த போது, அவர்கள் ஆரோக்கியமாகவும் புத்திக்கூர்மையுடனும் இருப்பது தெரியவந்துள்ளது. ஐ.விஎஃப். சிகிச்சையில் பிறக்கும் குழந்தைகள் நூற்றுக்கு நூறு சதவிகிதம் ஆரோக்கியத்துடன் இருப்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது…’’என்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.
“15 சதவிகித தம்பதியருக்கு குழந்தையின்மை பிரச்னை இருக்கிறது. 10 சதவிகித தம்பதியருக்கு சாதாரண சிகிச்சைகளிலேயே பலன் கிடைத்து விடும். மீதமுள்ள 5 சதவிகிதத்தினருக்கு ஐ.வி.எஃப். போன்ற செயற்கை சிகிச்சைகள் தேவைப்படும். அப்படியொரு சிகிச்சையை முயற்சிகூட செய்து பார்க்காமலேயே குழந்தையின்மைக்காக விவாகரத்து செய்கிற தம்பதியரையும் பார்க்கிறோம். சமீப காலமாக ஐ.வி.எஃப். சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு ஓரளவு அதிகரித்திருப்பதன் விளைவாக, குழந்தையின்மையைக் காரணம் காட்டி செய்யப்படுகிற விவாகரத்து எண்ணிக்கை குறைந்திருக்கிறது’’ என்கிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.
இந்தக் கண்காட்சியில் குழந்தையின்மை அனுபவத்தைக் கடந்து, ஐ.வி.எஃப். சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்ற பெற்றோர் தங்களது நெகிழ்ச்சியான உண்மைக் கதைகளைப் பகிர்ந்து கொண்டார்கள். அது குழந்தைக்காகக் காத்திருக்கும் பெற்றோருக்கு நம்பிக்கையைத் துளிர்க்கச் செய்ததைப் பார்க்க முடிந்தது. “குழந்தையில்லாத தம்பதியருக்கு தத்து எடுப்பது, மறுமணம் என முன்பு இரண்டே வழிகள்தான் இருந்தன. ஐ.வி.எஃப். சிகிச்சை இவர்களுக்கான வரமாக இன்று மாறியிருக்கிறது. இன்னும் ஏராளமான மருத்துவ முன்னேற்றங்களின் மூலம் தம்பதியரின் குழந்தைக் கனவை நனவாக்க முடிகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நன்றி!’’என்கிறார் மருத்துவர் ஜெயராணி.
Average Rating