கைது செய்யப்பட்ட ஜனாதிபதி சிறையில் அடைப்பு!! (உலக செய்தி)
சூடானின் முன்னாள் ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இராணுவம் அவரை கைது செய்து ஆட்சியை கவிழ்த்தது. இந்நிலையில் ஒமர் தற்போது அதிகப்படியான பாதுகாப்பு நிறைந்த சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக அவர் கடும் கண்காணிப்பில் அதிபருக்கான வீட்டில் சிறைவைக்கப்பட்டிருந்தார் என செய்திகள் வெளியாயின.
அவர் கடுமையான பாதுகாப்புடன் தனிமை சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சூடானில் மாதக்கணக்கில் நடந்துவந்த போராட்டங்கள் பல ஆண்டு காலமாக ஆட்சி செய்து வந்த அதிபரை கைது செய்ய அடிகோலியது.
இதற்கிடையில் உகாண்டாவின் வெளியறவு துறை அமைச்சர் ஹென்றி ஒரீம் ஓகேலோ ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசியபோது பதவியிறக்கப்பட்ட சூடான் ஜனாதிபதி தஞ்சம் கோரி விண்ணப்பித்தால் அவருக்கு புகலிடம் அளிப்பது குறித்து ஆலோசிப்போம் என கூறினார்.
ஓமர் அல் பஷீருக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமது மூன்று தசாப்த கால ஆட்சியின்போது ஒமர் அல் பஷீர் அவரது பல்வேறு அரசியல் எதிரிகளை கோபர் சிறையில் அடைந்திருக்கிறார். தற்போது அதனால் தான் பஷீரும் அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என உறவினர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக ஜனாதிபதிக்கான வீட்டில் ஒமர் அல் பஷீர் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது நிலை முற்றிலும் வேறாக இருக்கிறது.
ஒமர் அல் பஷீர் அவர் செய்த அத்துமீறல்களுக்காக தண்டிக்கப்படுவர் என சூடான் மக்களில் பலர் நம்புகின்றனர்.
தற்போது நாட்டை வழிநடத்தும் இராணுவ ஜெனெரல்கள் “பஷீரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க மாட்டோம் சூடானிலேயே சிறை வைப்போம்” என்று தெரிவித்திருந்தனர்.
போராட்டக்காரர்கள் பஷீர் சிறையில் இருப்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கிடைத்தால் குடியாட்சிக்கு அழைப்பு விடுப்பர்.
முன்னாள் இராணுவ அதிகாரியான ஒமர் 1989 இல் இராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பில் அதிகாரத்தை பிடித்தார்.
அவரது ஆட்சி உள்நாட்டு போருக்காக அடையாளப்படுத்தப்படுகிறது. நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட உள்நாட்டு மோதல் 2005 இல் முடிவுக்கு வந்தது. 2011 தெற்கு சூடான் சுதந்திரம் பெற்றது.
நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள டர்ஃபர் பிராந்தியத்திலும் மற்றொரு உள்நாட்டு மோதல் ஏற்பட்டது. போர் குற்றங்களை ஒருங்கிணைத்ததாகவும் மனிநேயமற்ற குற்றங்கள் நிகழ்த்தியதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சர்வதேச பிடி ஆணையை வழங்கியுள்ள போதிலும் 2010 மற்றும் 2015 தேர்தல்களில் அவர் தொடர்ச்சியாக வென்றார். இருப்பினும் அவரது கடைசி வெற்றி என்பது முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் கிடைத்தது.
ஒமர் அல்-பஷீர் மீதான கைது ஆணை அவருக்கு சர்வதேச பயணத்தடையை உண்டாக்கியது. இருப்பினும் ராஜாங்க ரீதியாக அவர் எகிப்து, செளதி அரேபியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் கொண்டுள்ளார். ஜூன் 2015 இல் தென் ஆப்ரிக்காவில் நீதிமன்றமொன்று கைது ஆணை பிறப்பிக்க ஆலோசனை செய்து கொண்டிருந்தநிலையில் அவசர அவசரமாக தென் ஆப்ரிக்காவிலிருந்து அவர் கிளம்பினார்.
வாழ்வாதார செலவு உயர்வை தொடர்ந்து போராட்டங்கள் உச்சம் பெற்றன. இதையடுத்து மக்கள் ஜனாதிபதியை பதவி விலகக்கூறி போராட்டம் நடத்தினார்கள்.
போராட்டங்களுக்கு இடையூறு செய்யவேண்டாம் என காவல்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை மேற்கொள்ளப்பட்டதாக போராட்டக்குழுக்கள் அரசை சாடின.
கடந்த டிசம்பர் முதல் உண்டான அமைதியின்மையை அடுத்து பொதுமக்கள் 38 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனித உரிமை கண்காணிப்பகம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என கூறுகிறது.
பிப்ரவரி மாதம் ஒரு கட்டத்தில் ஜனாதிபதி ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஷீர் நாட்டில் அவசர நிலையை அறிவித்தார்.
Average Rating