டெஸ்ட்டிங்… ஒன் டூ த்ரீ!! (மருத்துவம்)

Read Time:13 Minute, 9 Second

சுகப்பிரசவம் இனி ஈஸி

நீங்கள் மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு ‘பிக்னிக்’ போக முடிவு செய்தவுடன் என்ன செய்கிறீர்கள்? காரில் பெட்ரோல் இருக்கிறதா, இன்ஜினில் ஆயில் இருக்கிறதா, பிரேக் நல்ல நிலைமையில் இருக்கிறதா, டயர்களில் காற்று போதுமா என பலவற்றையும் பரிசோதித்துக்கொண்ட பிறகுதானே கிளம்புகிறீர்கள்?

நான்கு மணி நேரம் பயணம் செய்யவேண்டிய ஒரு வாகனத்துக்கே இத்தனை பரிசோதனைகள் தேவைப்படும்போது, மொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துவதற்கு, அம்மாவின் வயிற்றில் ஒன்பது மாதமும் ஒரு வாரமும் தங்கி வளரும் புத்தம்புதிய ஓர் உயிரின் பயணம் இனிதாக அமைய, பல பரிசோதனைகள் தேவைப்படுவது சகஜம்தானே!

பொதுவான பரிசோதனைகள்

‘நாள் தள்ளிப்போய்விட்டது’ என்று முதல் ‘செக்கப்’புக்குப் போகும்போது, சிறுநீர், ரத்தம் மற்றும் வயிற்று ஸ்கேன் மூலம் ‘கர்ப்பம்’ தரித்திருப்பது உறுதியாகிவிட்டது என்றால், நீங்கள் செய்து கொள்ள வேண்டிய பொதுவான பரிசோதனைகள் இவை: ரத்த அழுத்தம், உடல் எடை, பி.எம்.ஐ அளவு, சிறுநீரில் ஆல்புமின் மற்றும் சர்க்கரை அளவு, ரத்தவகை, ஆர்.ஹெச். பிரிவு, ரத்தத்தில் சர்க்கரை, ஹீமோகுளோபின், ஹீமெட்டோகிரிட், பிளேட்லெட் அளவுகள், தைராய்டுக்கான பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். இவை தவிர ஹெபடைட்டிஸ் பி பரிசோதனை, வி.டி.ஆர்.எல். மற்றும் ஹெச்.ஐ.வி பரிசோதனையும் முக்கியம்.

இவற்றில் ரத்த அழுத்தம், உடல் எடை, சிறுநீர் ஆகியவற்றை நீங்கள் டாக்டரிடம் செல்லும் ஒவ்வொரு முறையும் சோதித்துகொள்ள வேண்டும். முக்கியமாக, உடல் எடை அந்தந்த மாதங்களுக்கு ஏற்ப இருக்கிறதா என்று பார்க்க வேண்டியது கட்டாயம். ஒரேயடியாக எடை அதிகரித்தாலும், குறைவாக இருந்தாலும் காரணம் தெரிந்து சிகிச்சை பெற இது உதவும்.

‘கர்ப்ப கால நீரிழிவு’ ஏற்படுகிறதா என்பதை அறிய 16-வது கர்ப்ப வாரத்தில் GTT மற்றும் HbA1C பரிசோதனைகள் அவசியப்படும். ஹீமோகுளோபின் பரிசோதனையை 28 மற்றும் 36-வது வாரங்களில் மறுபடியும் மேற்கொள்ள வேண்டும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்

காதுக்குக் கேட்காத ஒலி அலைகளை வைத்து எடுக்கப்படும் ஸ்கேன் பரிசோதனை இது; கர்ப்பிணிக்கோ, கருப்பையில் வளரும் குழந்தைக்கோ எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத சிறந்ததொரு பரிசோதனை. கர்ப்பிணிகள் ‘ஒவ்வொரு டிரைமெஸ்டரிலும் ஒரு முறை’ என்ற கணக்கில் மொத்தம் மூன்று முறை இந்த ஸ்கேன் எடுத்துக்கொள்வது நல்லது.என்றாலும், சிலருக்கு சில முறை கூடுதலாகவும் தேவைப்படலாம்.முதல் ஸ்கேன், 11 முதல் 14 வரையிலான கர்ப்ப வாரத்துக்குள் செய்யப்படும்.இதில் என்னவெல்லாம் தெரியும்?

*கருவில் இருப்பது ஒற்றைக் குழந்தையா, ஒன்றுக்கும் மேற்பட்டதா, பொய் கர்ப்பமா போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

*குழந்தை வளர்வது கருப்பைக்கு உள்ளேயா, வெளியேவா என்பது தெரியும்.

*குழந்தையின் வளர்ச்சி அந்த வாரத்துக்கு ஏற்றபடி இருக்கிறதா, இதயத்துடிப்பு சரியாக இருக்கிறதா என்பதை அறியலாம்.

*கருக்குழந்தையின் வயதைக் கணிக்கலாம்.

*பிரசவ தேதியைக் கணிக்கலாம்.இரண்டாவது ஸ்கேன், 20-லிருந்து 22-வது வாரத்தில் எடுக்க வேண்டும். குழந்தையின் கை, கால், முதுகுத்தண்டு, மண்டை ஓடு, இதயம், வயிறு போன்ற உறுப்புகளின் வளர்ச்சியை இதில் காண முடியும். மூன்றாவது ஸ்கேன் 32வாரங்கள் முடிந்த பின் எடுக்க வேண்டும்.

இதில் குழந்தை நல்லபடியாக வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா, நஞ்சுக்கொடி சரியான இடத்தில் இருக்கிறதா எனப் பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும். பிரசவத்துக்குத் தோதாக குழந்தையின் தலை கீழ்ப்புறமாகத் திரும்பியிருக்கிறதா அல்லது இடுப்பு கீழே இறங்கியிருக்கிறதா என்று குழந்தையின் ‘பொசிஷன்’ பார்த்து சுகப்பிரசவமா, சிசேரியனா என்பதையும் முடிவு செய்துவிடலாம்.

பிரசவ தேதி நெருங்கியும் பிரசவ வலி வராதபோது, பனிக்குட நீர் போதுமானதாக இருக்கிறதா, சுகப்பிரசவத்துக்குச் சாத்தியமா, பிரசவத்துக்காக இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாமா போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள பிரசவதேதிக்கு நெருங்கிய தினங்களில் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதும் உண்டு.

நியூக்கல் ஸ்கேன் முக்கியம்!

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனில் பிரத்யேகமான சாஃப்ட்வேர் ஒன்றை இணைத்து மேற்கொள்ளப்படும் டெஸ்ட் இது. சிசுவின் கழுத்தின் பின்புறம் சேரும் நிணநீர் அளவை அளந்து, அதற்குப் பிறவிக் கோளாறு இருக்கிறதா, இல்லையா என்று கண்டுபிடிப்பதுதான் இதன் ஸ்பெஷாலிட்டி!கர்ப்பமான பெண்ணுக்கு 11-லிருந்து 14 கர்ப்ப வாரங்களுக்குள் இது செய்யப்படுகிறது.

இந்த காலகட்டத்தில்தான் சிசுவின் கழுத்தில் தோலுக்கும் தோலடித் திசுவுக்கும் நடுவில் நிணநீர் தேங்குகிறது. அப்போது கழுத்துத் தோலின் தடிமன் கூடுகிறது. இது 3 மி.மீ. எனும் அளவில் இருந்தால், அந்தக் குழந்தை ‘நார்மல்’ எனவும், 3 மி.மீட்டருக்கு மேல் அதிகரித்தால் டவுன் சிண்ட்ரோம், டிரைசோமி- 18 போன்ற மரபுசார்ந்த குறைபாடு உள்ளது என்றும் கணிக்கிறார்கள்.

அப்படி இருந்தால், அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவும், கருக்கலைப்பு போன்ற ‘முக்கியமான முடிவு’களை எடுக்கவும் இத்தகைய பரிசோதனைகள் மிக அவசியம். பின்னால் வருவதை முன்னால் சொல்லும்!குழந்தையின் வளர்ச்சியில் பின்னால் வரப்போகும் டவுன் சிண்ட்ரோம், தசை வாதம்(Muscular dystrophy) போன்ற மரபணு பிரச்னைகளை முன்னரே தெரிவிக்கும் ரத்தப் பரிசோதனைகளும் இருக்கின்றன. அவற்றுக்கு ‘பயோமார்க்கர்ஸ்’ என்று பெயர். PAPP-A, Free Beta hCG டெஸ்டுகள் இந்த ரகம்.

இவற்றில், மரபணு குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதற்கு எவ்வளவு சாத்தியம் உள்ளது என்பது தெரிந்துவிடும். குறைவான சாத்தியம் எனில், கர்ப்பிணிக்கு எவ்விதமான மருத்துவக் கண்காணிப்பு தேவை என்பதை அறிவுறுத்துகிறார்கள்.

அதிகப்படியான சாத்தியம் எனில், அடுத்தக்கட்ட தீவிர பரிசோதனைகளான ஈஸ்டிரியால், பனிக்குட நீர் பரிசோதனை(Amniocentesis), கோரியானிக் வில்லஸ் சாம்ப்ளிங்(Chorionic villus sampling) ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறார்கள்.

‘டிரிபிள் ஸ்கிரீனிங்’ எனப்படும் இவற்றை 15 முதல் 20 வரையுள்ள கர்ப்ப வாரங்களில் செய்துகொள்ள வேண்டும். இவற்றால் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்பதால், கர்ப்பிணிகள் பயப்படத் தேவையில்லை.

யாருக்கு அவசியம்?
கர்ப்பிணிகள் எல்லோருக்கும் பயன்படுகிற டெஸ்டுகள்தான் இவை. என்றாலும், 35 வயதுக்கு மேல் முதல்முறையாக கர்ப்பம் தரித்தால், சொந்தத்தில் திருமணம் செய்திருந்தால், முந்தைய குழந்தைக்கு மரபணு குறைபாடு இருந்தால், பரம்பரையில் யாருக்காவது மரபு சார்ந்த பிரச்னை இருந்தால் அந்த கர்ப்பிணிகளுக்கு இந்த டெஸ்டுகள் மிகவும் அவசியம்.

வேண்டாத டெஸ்ட்!

கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டிய டெஸ்ட் ஒன்றும் இருக்கிறது. எதற்கெடுத்தாலும் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்படும் இன்றைய சூழலில், கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் அதிலும் முக்கியமாக முதல் மூன்று மாதங்களில் எக்ஸ்-ரேஎடுக்கக்கூடாது. அதன் கதிர்வீச்சு கருப்பையில் வளரும் சிசுவைப் பாதிக்க நிறைய சாத்தியங்கள் உள்ளன. குறிப்பாக, மூளை- நரம்பு தொடர்பான குறைகளுடன் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பிருக்கிறது.

அப்படியும் எக்ஸ்-ரே எடுக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது என்றால், நீங்கள் கர்ப்பமாக இருப்பதை டாக்டரிடம் கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும். அப்போதுதான் எக்ஸ்-ரே எடுப்பதை நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாடு செய்ய டாக்டரால் முடியும்.

அடிக்கடி ஸ்கேன் எடுக்கலாமா ?

கர்ப்ப காலத்தில் இத்தனை முறைதான் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்ற வரையறை எதுவுமில்லை. ஏற்கனவே சொன்ன கால கட்டங்களில் ஸ்கேன் எடுக்கப்படுவது நடைமுறை. என்றாலும், எல்லா குறைபாடுகளையும் ஒரே நேரத்தில் இதில் கண்டுபிடிப்பது கடினம். உதாரணத்துக்கு, குழந்தையின் மூளையில் திரவம் சேரும் நிலை(Hydrocephalus)முதலில் எடுக்கப்படும் ஸ்கேனில் தெரியாமல் போகலாம்.

அது கர்ப்பத்தின் பிற்காலத்தில் தெரிய வரலாம். இப்படி சந்தேகம் உள்ளவர்களுக்கு இடைப்பட்ட காலத்திலும் ஒரு ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு. கருப்பையில் குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்தும் சில கோளாறுகளை வழக்கமான ஸ்கேனில் காண முடியாமல் போகும். அப்போது சில நாட்கள் கழித்து வரச்சொல்லி, மறுபடியும் ஸ்கேன் எடுப்பார்கள்.

இந்த இடைப்பட்ட நாட்களில் குழந்தை சற்றே நகர்ந்திருக்கும். அதனால் அப்போது சில பாகங்கள் சரியாகத் தெரியும். ஒல்லியான உடல்வாகு உள்ளவர்களுக்கு எளிதாக குழந்தையின் குறைபாடுகளைக் காண முடியும். ஆனால், உடல்பருமன் உள்ளவர்களுக்கு அவ்வளவு எளிதாகப் பார்க்க முடியாது. அப்போது அவர்களுக்குக் கூடுதலாக சில முறை ஸ்கேன் எடுக்கப்படுவதுண்டு. நீரிழிவு உள்ளவர்களுக்கும் இது பொருந்தும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! (அவ்வப்போது கிளாமர்)
Next post சுவாசமே சுகம்!! (மகளிர் பக்கம்)