கருச்சிதைவு அச்சம்!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 29 Second

உயிருக்குள் உயிர் சுமக்கும் பெண்ணுக்கு மட்டுமே புரியும் சுமந்த உயிரின் இழப்பும், வலியும். ஒரே நாள் கருவானாலும் தாய் என்பவள், அந்த உயிருடன் அது உறுதியான நிமிடத்திலிருந்தே உறவாடத் தொடங்கிவிடுவாள். கருவை இழப்பதைவிடவும் அதை இழந்துவிடுவோமோ என்கிற பயம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதிக வேதனையைத் தரக்கூடியது.

கர்ப்ப காலத்தில் லேசான உதிரப்போக்கு தென்பட்டாலே பதைபதைத்துப் போகிறவர்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற உதிரப்போக்கு பற்றிய சில சந்தேகங்களைத் தெளிவாக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

ஏழில் ஒரு கரு சிதைகிறது. அவற்றில் பெரும்பாலானவை 6 முதல் 10 வாரங்களில் சிதைந்து போகின்றன. குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்குக் கருச்சிதையும் வாய்ப்புகள் அதிகம். இவர்களுக்கு பத்தில் ஒரு கரு வீதம் சிதையலாம். 35 வயதுக்கு மேலானால் ஐந்தில் ஒரு கரு கலைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

* கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உதிரப்போக்கும், தசைப்பிடிப்பும் ஏற்பட்டு, அதன்பிறகு ரத்தப்போக்கு நின்ற சுமார் 50 விழுக்காடு பெண்களுக்கு கர்ப்பம் எந்தவித சிரமமும் இல்லாமல் சாதாரணமாக இருக்கும். ஆனால், அதிக ரத்தப் போக்கும், தீவிரமான தசைப்பிடிப்பும் மாறும் சூழலில் கருச்சிதைவைத் தவிர்க்க இயலாது. இதை தவிர்க்க இயலாத கருச்சிதைவு என்பர்.

பரிசோதனையில் கருப்பைக் கழுத்து சிதைந்து திறக்க ஆரம்பித்திருப்பதையும், கருவானது, கருப்பைக் கழுத்தின் வெளிப்புறத் திறப்பு வழியாகத் தொங்கிக் கொண்டிருப்பதையும் மருத்துவரால் கண்டறிய இயலும். இந்த நிலையில் எந்த சிகிச்சையாலும் இத்தகைய கருச்சிதைவை தடுக்க இயலாது.

* மூன்று மாத கர்ப்பத்தில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படலாம். இதற்கு அச்சுறுத்தும் கருச்சிதைவு என்று பெயர். இந்த நிலையில் உதிரப்போக்கு குறைவாகவோ அல்லது மாதவிலக்குக் காலத்தில் ஏற்படுவதைப் போன்றோ இருக்கும். ஒரு நாளைக்கு சில மணி நேரம் வரையிலோ அல்லது சில நாட்கள் வரையிலோ கூட உதிரப் போக்கு இருக்கலாம். இந்த நிலையைப் பார்த்து கர்ப்பம் கலைந்துவிட்டதாகப் பலர் நினைத்துக் கொள்வார்கள்.

உடனடியாக மருத்துவரை அணுகினால், இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்பதை அல்ட்ராசவுண்டு பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடுவார். புறகர்ப்பம், குழந்தை சரியாக உருவாகாத நிலை போன்ற சில நிலைகளில் இத்தகைய அச்சுறுத்தும் கருச்சிதைவு உண்டாக வாய்ப்பிருக்கிறது.

பயம் காட்டுமே தவிர, குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்காமல் தடுத்துக்கொள்ளலாம். சிலவேளைகளில் பிரச்னை தீவிரமாக இருந்தால் கருச்சிதைவை தவிர்க்கவும் இயலாது.வைட்டமின்-ஈ மாத்திரைகள், படுக்கையில் முழுமையாக ஓய்வு எடுத்தல் போன்று மருத்துவரின் ஆலோசனையை சரியாகப் பின் பற்றினால் அச்சுறுத்தும் கருச்சிதைவைத் தடுத்துக் கொள்ளலாம்.

* சிலருக்கு பிரசவத்தை நெருங்கும் காலத்தில் உடை நனைகிற அளவுக்கு ரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு பேற்றுக்கு முன்னான ரத்தப்போக்கு அல்லது ஆன்டிபார்ட்டம் ஹெமரேஜ் என்று பெயர். கருப்பைக் கழுத்துப் பகுதியில் தோன்றும் பிரச்னையால் இவ்வாறு ஏற்படுகிறது.

பனிக்குடமானது தான் அமைந்துள்ள இடத்தைவிட்டு நகர்ந்துவிடும் நிலையில் உதிரப்போக்கு ஏற்படுவதுண்டு. இதை நஞ்சுக்கொடி முந்து நிலை அல்லது பிளசென்டா ப்ரேவியா என்கிறார்கள். தற்செயலாக உதிரப்போக்கு ஏற்படுவதை கருக்கொடை விலகல் அல்லது அப்ரப்டோ ப்ளசன்டே என்கிறார்கள். இதில் இருவகைகள் உள்ளன. கொஞ்சமாக விலகுவது மற்றும் அதிகமாக விலகுவது.

முப்பதாவது வாரங்களில் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையில் பனிக்குடத்தைத் தெளிவாகப் பார்த்து பிரச்சினைகளைத் தெரிந்து கொள்ளலாம். இதன் மூலம் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கும். ரத்த இழப்பை ஈடுகட்ட ரத்தம் செலுத்த வேண்டிய தேவையிருப்பதால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு ரத்தம் செலுத்த வேண்டியிருக்கும்.

குழந்தை உயிரோடு இருந்தால் பிரச்னை அதிகமாவதற்கு முன்பே பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தை விரைவுப் படுத்தி குழந்தையைப் பிறக்கச் செய்துவிடலாம். இது இயல்பான பிரசவமாகவோ, சிசேரியன் பிரசவமாகவோ இருக்கக்கூடும். பத்தில் நான்கு பேருக்கு இயல்பான பிரசவம் நடக்கிறது. பத்தில் ஆறு பேருக்கு சிசேரியன் தேவைப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருமுட்டை இனி அவசியம் இல்லை!! (மருத்துவம்)
Next post கர்ப்ப கால உடல்பருமன்!! (மகளிர் பக்கம்)