அப்யங்கம்!! (மருத்துவம்)
பெருகி வரும் நவீன உலகத்தில் தொழில் சார்ந்த நோய்கள் என்று பல உருவாகியுள்ளன. ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் அதற்கேற்றாற்போல் நோய்கள் ஏற்படும். இதனை தடுக்கும்பொருட்டு ஆயுர்வேதம் பல்வேறு வழிமுறைகளை கூறியுள்ளது.
ஆயுர்வேத மருத்துவத்துறையின் முக்கிய நோக்கமே நோய் வராமல் தடுப்பதும், வந்த நோயை குணமாக்கி மேற்கொண்டு அந்த நோய் திரும்ப வராமல் தடுப்பதே ஆகும். இப்படி ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ள பல்வேறு வழிமுறைகளில் ஒன்றுதான் அப்யங்கம் என்ற எண்ணெய் தேய்க்கும் முறை.
‘அப்யங்கம் ஆசரேத் நித்யம்’ என்கிறது ஆயுர்வேதம். அதாவது தினமும் எண்ணெய் தேய்க்கும் முறையை தவறாது மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.இயந்திரங்கள் உராய்வு இன்றி எளிதாக இயங்க எண்ணெய் பசை எவ்வளவு முக்கியமோ அதேபோல் மூட்டுகள் உராய்வு ஏற்படாமல் இருக்கவும் உடல் உறுப்புகள் எளிதாக இயங்கவும், நரம்புகள் ரத்தக்குழாய்கள் சீராக இயங்கவும் எண்ணெய் தேய்க்கும் முறை மிக முக்கியம்.
இம்முறையை மேற்கொள்ள செக்கில் ஆட்டி எடுத்த நல்லெண்ணெயை அல்லது எண்ணெயின் கஷாயமோ,. சாறோ அல்லது மூலிகைப் பொடிகளையோ கலந்து செறிவூட்டப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்தலாம்.
இதன்மூலம் உடல் வலுப்படும். எளிதாக வேலை செய்ய முடியும். முதிர்ச்சியைத் தடுக்கும். கண்களுக்குத் தெளிவையும், உடலுக்கு புஷ்டியையும் கொடுக்கும். தோல் மென்மையாகும். நல்ல தூக்கம் ஏற்படும்.
வாதம் என்ற தோஷம் சமனப்படும்.இவ்வளவு பயனுள்ள அப்யங்கம் என்ற எண்ணெய் தேய்க்கும் முறையை எவ்வளவு நேரம் செய்து கொள்ளலாம் என்றால் குறைந்தபட்சம் 20 நிமிடம் முதல் அதிகபட்சம் 45 நிமிடம் வரை எண்ணெய் தேய்க்கலாம். தேய்த்த பின்பு இளஞ்சூடான தண்ணீரில் குளிக்க வேண்டும்.
யாரெல்லாம் இந்த எண்ணெய் தேய்க்கும் முறையை மேற்கொள்ளக்கூடாது என்றால் அஜீரணம் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், சளி, மூக்கு ஒழுகுதல், வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் இம்முறையை மேற்கொள்ளக்கூடாது.உடல் எங்கும் எண்ணெய் தேய்க்க வேண்டும் என்பது இம்முறையின் பொதுவான நியதி. அதிலும் முக்கியமாக மூன்று இடங்களில் எண்ணெய் தேய்க்க வேண்டும்.
அவை தலை, இரண்டு காது, இரண்டு பாதங்கள்.உடலெங்கும் எண்ணெய் தேய்க்காவிட்டாலும் குறைந்தபட்சம் இந்த மூன்று இடங்களில் கட்டாயம் தேய்த்து குளிக்க வேண்டும். மேற்கண்ட மூன்று இடங்களில் ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனி பலன்கள் இருக்கின்றன. அதில் பாதத்தில் எண்ணெய் தேய்ப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
யாரெல்லாம் தினமும் பாதங்களில் எண்ணெய் தேய்க்க வேண்டும்?
* நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்கள்.
* வாகனங்களில் நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்கள்.
* நீண்ட தூரம் நடைபயணம் செய்பவர்கள்.
* பாரம் தூக்குபவர்கள்.
* மலையேற்றம், படியேற்றம் அடிக்கடி மேற்கொள்பவர்கள்.
* கரடு, முரடான இடங்களில் அதிக பிரயாணம் மேற்கொள்பவர்கள்.
* நடைபயிற்சி மேற்கொள்பவர்கள்.
மேற்கண்ட வகையினர் பாதங்களில் எண்ணெய் இடுவதின் மூலம், இடுப்பு வலி ஏற்படாது. கால்களில் உள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள் சீராக செயல்படும். இதன்மூலம் நீண்ட தூரம் இயல்பாக நடக்க முடியும்.காலில் சொர சொரப்பு, பித்த வெடிப்பு நீங்கி மென்மையான பாதங்களைப் பெற முடியும். கால் மரத்துப் போகுதல், நரம்பு வீக்கம் போன்றவைகள் ஏற்படாது. மேலும் சிறப்பாக கண்களில் பிரகாசம் ஏற்படும்.
கண்களின் பார்வையில் குறைபாடு வராமல் தடுப்பதற்கும், கண்ணில் நோயுள்ளவர்களும் கட்டாயம் பாதத்தில் எண்ணெய் தேய்த்துக்கொள்ள வேண்டும்.உடலின் கடைசி பகுதியான பாதத்தில் உள்ள சிரைகள் பலவாறாக கண்களை அடைவதாக ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே, பாதத்தில் இடப்படும் எண்ணெய் பசை மற்றும் ஒப்பனைகள் அனைத்தும் கண்களுக்கு உகந்தது.
பாதத்தில் மருதாணியிடுவதும், கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படுத்த செய்யப்படும் ஓர் ஆரோக்கிய வழிமுறை. எனவே, பாதத்தில் எண்ணெயிட்டு கண் பார்வையின் பிரகாசத்தைப் பெற்றுக் கொள்வோம். இவ்வளவு தன்மைகள் கொண்ட பாதத்தில் எண்ணெயிடும் முறையை எப்போது மேற்கொள்ளலாம் என்றால் காலை குளியலுக்கு முன்பு அல்லது இரவு தூங்கும்முன் கால்களை நன்றாக சுத்தம் செய்த பின்பு தேய்த்துக் கொள்ளலாம். காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.
அதிக தூரம் நடைபயணம், வாகனப் பிரயாணம் செய்பவர்கள் ஆயுர்வேத மருத்துக்கடையில் கிடைக்கும் ‘தான்வந்தற தைலம்’ என்ற மருந்தையும், உள்பாதங்களில் எரிச்சல் உடையவர்கள். ‘பிண்டத் தைலம்’ என்ற மருந்தையும், நீரிழிவு நோயாளிகள் பாதத்தை பராமரிக்க ‘கஜீத பிண்டத் தைலம்’ என்ற ஆயுர்வேத மருந்தை பாதங்களில் தேய்த்துக் கொள்ளலாம்.
Average Rating