ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் !! (கட்டுரை)
தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.
“ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க – பா.ம.க கூட்டணியை முதலில் முடிவு செய்து கொண்டார் முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.கவும் தி.மு.கவும் 50 சதவீத இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்து, தேர்தலில் போட்டியிடுகின்றன.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளும், சட்டமன்றத்துக்கு இடைத் தேர்தல் நடக்கும் 18 தொகுதிகளும் இப்போதைக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளன. இடைத் தேர்தல்களில் வெற்றி பெறுவது, அ.தி.மு.கவுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. அதேபோல் தி.மு.கவுக்குக் கௌரவப் பிரச்சினை.
2011க்குப் பிறகு தேர்தல் வெற்றியைச் சுவைக்க முடியாத ஏக்கத்தில் தி.மு.க தொண்டர்கள் இருக்கிறார்கள். அக்கட்சியின் தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பிறகு, கட்சியை ஸ்டாலின் கட்டுக்கோப்புடன் கொண்டு சென்று விட்டாலும், இந்தத் தேர்தல் முடிவுகள் தான், அவருடையை தலைமைக்கு ஓர் அடையாளத்தைக் கொடுக்கும்.
ஏனென்றால், தி.மு.க தலைவரான உடன் சந்திக்கும் நாடாளுமன்றத் தேர்தல் இது. 18 இடைத் தேர்தல் தொகுதிகளுமே பொதுவாக அ.தி.மு.கவுக்கு வலுவான தொகுதிகள். ஆனால், இப்போது இருப்பது பழைய அ.தி.மு.க அல்ல. டி.டி.வி தினகரன் பிரித்துக் கொண்டு போன பிறகு, எஞ்சியிருக்கும் அ.தி.மு.க, இப்போது முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இருக்கிறது.
ஆகவே, வருகின்ற தேர்தலில் குறைந்தபட்சம் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், அதிக பட்சமாக எட்டு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஜூன் மூன்றாம் திகதிக்குப் பிறகும் அ.தி.மு.க ஆட்சி தொடரும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் சட்டமன்ற ரீதியாக வாக்குக் கேட்டுப் போகிறார்கள்.
பா.ஜ.கவையும் சுமக்க வேண்டியது, ஒரு பெரிய தலைவலியாக எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. என்றாலும், அந்தக் கட்சியைத் தவிர்த்து விட்டு, கூட்டணி அமைக்க இயலவில்லை. இரண்டு வருடங்களாக ஆட்சியில் நீடிக்க பா.ஜ.க கொடுத்த தார்மீக ரீதியிலான ஆதரவை, அவ்வளவு எளிதாக எடப்பாடி பழனிசாமியால் மறந்து விட முடியாது. ஆனாலும் அக்கட்சிக்குத் தொகுதிகளை அள்ளிக் கொடுக்காமல் கிள்ளிக் கொடுத்தார்.
தற்போதைக்கு 18 இடைத் தேர்தல் தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, அ.தி.மு.க திடமாக நம்புகிறது. அதை நோக்கித்தான் அதன் தேர்தல் பிரசாரங்கள் அமைந்திருக்கின்றன. “ஸ்டாலின் எதிர்ப்பு” பிரசாரம், எடப்பாடி பழனிசாமிக்கு அந்த யோகத்தைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியால் ஐந்து தொகுதிகளுக்கு மேல் பிடிப்பது என்பது இமாலய சாதனையாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
அகில இந்திய அளவில் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளும் சமீபத்தில் எடுக்கப்பட்ட, லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு முடிவுகளும் இப்படித்தான் சுட்டிக்காட்டுகின்றன.
இப்போது அமைச்சராக இருந்த துரைமுருகன் வீட்டில் நடத்தப்பட்டுள்ள சோதனை நடவடிக்கைகள், அதில் 11 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல்; விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரிடமிருந்து சில கோடிகள் பணம் பறிமுதல் போன்ற தேர்தல் ஆணையகத்தின் நடவடிக்கைகள், நெருக்கடியைக் கொடுக்கும் என்று அ.தி.மு.க நம்புகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைவோம் என்ற சோகத்தில், அ.தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வேகமாகவே பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
தி.மு.க கூட்டணியைப் பொறுத்தமட்டில், மத்திய, மாநில அரசாங்கங்கள் மீது இருக்கும் அதிருப்தியை ஒரு மூலதனமாக வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அதற்குச் சற்று வலுச் சேர்த்துள்ளது.
வைகோ, கொம்யூனிஸ்ட் கட்சிகள், திருமாவளவன் போன்றோர் இருப்பதால் ‘மோடி எதிர்ப்பு அலை’யின் புண்ணியத்தில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 35இல் வெற்றி பெற்றுவிட முடியும் என்று, திடமாக நம்புகிறது. அதனால்தான் சட்டமன்றத் தொகுதியாக பிரசாரம் செல்லாமல், பொதுக்கூட்டங்கள் வாயிலாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
இந்த ‘மோடி எதிர்ப்பு அலை’யைத் திசை திருப்ப, “தி.மு.க இந்துகளுக்கு விரோதி” என்ற பிரசாரத்தை பா.ஜ.க தரப்பில் முன்னெடுத்துச் செல்கிறது. கடந்த காலங்களில், இந்தப் பிரசாரம் வெற்றி பெற்றதில்லை.
ஆனால் இப்போது கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லா களத்தில் இதை வைத்து, மோடி எதிர்ப்பு அலையை திசை திருப்பினால், பா.ஜ.கவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மேலும் சில வெற்றிகள் கிடைக்கும் என்று திட்டமிடப்படுகிறது.
இதை உணர்ந்துதான், தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், “தி.மு.க இந்துக்களுக்கு எதிரியல்ல; அது பொய்ப்பிரசாரம். என் மனைவியே கோவிலுக்குப் போகிறார். அதை நான் தடுத்ததில்லை” என்று பதிலடி கொடுத்தார் திராவிட இயக்கத் தலைவர் கி. வீரமணி. கிருஷ்ணரை அவமதிக்கும் வகையில் பேசி விட்டார் என்று, பூதாகரமாகப் போராட்டங்கள், சமூக வளைதளங்கள் மூலமாகப் பரப்பிட பா.ஜ.கவும் அதன் துணை அமைப்புகளும் வீரியத்துடன் களத்தில் நிற்கிறார்கள்.
ஆண்டாள் சர்ச்சை போல், இந்தக் கிருஷ்ணர் சர்ச்சையை, ஊதிப் பெரிதாக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுவதற்குப் பின்னனி இல்லாமல் இல்லை. வீரமணி எப்போதுமே அப்படிப் பேசுபவர்தான். ஏனென்றால், அவர் கட்சித் தேர்தல் பாதையில் பயணிக்கவில்லை. “கடவுள் இல்லை” என்ற பெரியாரின் வழியில், அக்கட்சி இயங்கிக் கொண்டிருக்கிறது.
வீரமணி எப்போதுமே தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் அடிக்கடி காட்சியளிக்க மாட்டார். தி.மு.க தலைவராக, கருணாநிதி இருக்கும் வரை அது நீடித்தது. ஆனால், இப்போது ஸ்டாலின் தலைவரான பிறகு, வீரமணி தி.மு.கவின் தேர்தல் மேடைகளில் காட்சியளிக்கிறார்.
குறிப்பாக ராகுல் காந்தி – ஸ்டாலின் கலந்து கொண்ட நாகர்கோவில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கூட பங்கேற்றார். இந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி, வீரமணி பேசினால் தி.மு.க பேசியதுதான் என்பது போன்ற பிரசாரத்தை பா.ஜ.க.வில் உள்ளவர்கள் மேற்கொள்கிறார்கள். ஆனால் அது, தமிழகத்தில் எடுபடுமா என்பது, இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
இது தவிர, தி.மு.க நிர்வாகிகள், வேட்பாளர்கள் மத்தியில் “நாம்தான் வெற்றி பெறப் போகிறோம்” என்ற அதீத நம்பிக்கை தென்படுகிறது. அதுவே, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குத் தடைக்கல்லாக முடிந்து விடக்கூடாது என்பதே, தி.மு.கவுடன் இருக்கும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது.
எது எப்படியிருந்தாலும், மோடி எதிர்ப்பு அலை, தி.மு.க வெற்றிக்கு வித்திடும் ஒரு காரணியாக இருக்கப் போகிறது. இடைத் தேர்தல்கள் நடக்கும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் 13 தொகுதிகளில் தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்றே அக்கட்சி நம்புகிறது. மீதியுள்ள ஐந்து தொகுதிகளிலும் வெற்றியைப் பெற்று, இப்போதுள்ள அ.தி.மு.க அரசாங்கத்தை வீழ்த்திவிட வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது. ஆகவே தி.மு.க கூட்டணி நாடாளுமன்றத்தில் 35 சட்டமன்ற இடைத் தேர்தலில் 13 என்ற இலக்கை நோக்கி இப்போதைக்கு சென்று கொண்டிருக்கிறது.
ஜூன் மூன்றாம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அன்றைய தினத்தில் தமிழக தேர்தல் முடிவு எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியா அல்லது ஸ்டாலினுக்கு தலைவலியா என்பது தெரிந்து விடும்.
டெல்லியில் ஆட்சி மாற்றம் என்றால், எடப்பாடி பழனிசாமிக்கு திருகுவலியாக அமையும். தமிழகத்தில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் நரேந்திரமோடி ஆட்சி என்றால் ஸ்டாலினுக்கு எதிர்கால அரசியல் பெரும் தலைவலியாக மாறும்.
ஒருவேளை அ.தி.மு.கவுக்குப் பத்து நாடாளுமன்றத் தொகுதிகள் கிடைத்து டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லாமல் வேறோர் ஆட்சி என்றாலும், இந்தப் பத்து எம்.பி.க்களின் தயவில் மீதியுள்ள இரு வருடங்களை, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அ.தி.மு.க அரசாங்கம் கடத்தி விடும். ஏனென்றால், தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால், 10 எம்.பி வைத்துள்ளவர்களுக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு டெல்லியில் கிடைக்கும் என்பதே இந்திய அரசியலின் கடந்த கால வரலாறு.
ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் எதிர்கால அரசியல், இப்போதைக்கு வாக்களிக்கப் போகும் ஆறு கோடி தமிழக வாக்காளர்கள் கையில் இருக்கிறது.
Average Rating