ஜெனீவா ஏமாற்று வித்தை !! (கட்டுரை)
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான முன்னைய அரசாங்கமும் தற்போதைய அரசாங்கமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கும், அப்பேரவை விடயத்தில் நாட்டு மக்களுக்கும், குறிப்பாக சிங்கள மக்களுக்கும் உண்மையைக் கூறுவதில்லை.
தாம், மனித உரிமைகள் பேரவையின் முன் மண்டியிடுவதில்லை என, அவ்வரசாங்கங்களின் தலைவர்கள், சிங்கள மக்களிடம் கூறி வருகிறார்கள். அதேவேளை, அவர்கள், மனித உரிமைகள் விடயத்தில், பொறுப்புக் கூறல் தொடர்பில் பல நடவடிக்கைகளைத் தாம் எடுத்து வருவதாக, மனித உரிமைகள் பேரவையிடம் கூறி வருகிறார்கள்.
உண்மைநிலை என்னவென்றால், அவர்கள், மனித உரிமைகள் பேரவையின் நெருக்குவாரத்தின் காரணமாகப் பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்கள். அதேவேளை, அவற்றை இதய சுத்தியுடன் செய்யாது இருக்க, கவனமாகவும் இருந்து விடுகிறார்கள்.
சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் முடிவடைந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது நிரந்தரக் கூட்டத் தொடரில், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொண்டு திரும்பிய முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம, கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, இலங்கையில் போர்க் கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, விசாரணை செய்வதில், வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வதை, இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை, இலங்கைத் தூதுக்குழு மனித உரிமைகள் பேரவைக்குத் தெரிவித்ததாகக் கூறினார்.
அன்றே நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, “மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்யும் பொறிமுறையொன்றில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு, இலங்கையின் அரசமைப்பு இடமளிக்கவில்லை” என்பதை, தாம் மனித உரிமைகள் பேரவைக்கு அறிவித்ததாகக் கூறினார்.
அவரது கூற்றை உறுதிப்படுத்திய, முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றும் போது, “வெளிநாட்டு நீதிபதிகள் பற்றிய கோரிக்கையை, இலங்கைத் தூதுக்குழு நிராகரித்தது” என்று கூறினார். இது தொடர்பாக, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தைப் பாராட்டினார்.
ஆனால், உண்மையிலேயே அரசாங்கத் தூதுக்குழுவினர் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்தார்களா? மேலோட்டமாகப் பார்த்தால், அந்தக் கேள்விக்கு ‘ஆம்’ என்றே பதிலளிக்க வேண்டும்.
ஆனால், நடைமுறையில் அவர்கள் அதனை நிராகரிக்கவில்லை; அது தான் உண்மை. உண்மையிலேயே அவர்கள், வெளிநாட்டு நீதிபதிகளை நியமிப்பது உள்ளிட்ட சில பணிகளை நிறைவேற்ற, மனித உரிமைகள் பேரவையிடம் இரண்டு வருட கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
வெளிநாட்டு அமைச்சர் மாரப்பனவே, மனித உரிமைகள் பேரவையில், வெளிநாட்டு நீதிபதிகளை உத்தியோகபூர்வமாக நிராகரித்தார். ஆனால், மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக, இம்முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம், அரசாங்கம் அந்த நிலைப்பாட்டுக்கு எதிராகச் செயற்பட்டமையை இங்கு வந்து கூறவில்லை.
இலங்கை அரசாங்கம், 2015, 2017 ஆகிய ஆண்டுகளைப் போலவே, இம்முறையும் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அனுசரணை வழங்கியது. அதில் வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பாக, நேரடியாக எதுவுமே குறிப்பிடப்படவில்லை. ஆனால், அது வேறு விதமாக அந்த விடயத்தைக் கையாள்கிறது.
‘மனித உரிமைகள் பேரவையின் 34-1 பிரேணையின் மூலம் கோரப்பட்டதற்கு இணங்க, பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சமர்ப்பித்த அறிக்கையை, பேரவை வரவேற்பதுடன், அதன் 30-1 பிரேரணையின் மூலம், அடையாளம் காணப்பட்டு, மேலும் மீதமாகவுள்ள கடமைகளைப் பூரணமாக நிறைவேற்றுமாறு, இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.’ என, இம்முறை நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் ஒரு வாசகத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதால், மேற்படி வாசகத்தின் மூலம், அரசாங்கம் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது தவறு என்றும் இலங்கை அரசாங்கம் அந்த அறிக்கையை ஏற்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
ஆனால், அவர் மேற்படி வாசகத்தின் இரண்டாம் பகுதியை நிராகரிக்கவில்லை. அதாவது 30-1 பிரேரணையின்படி, இலங்கை அரசாங்கம் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளில் மீதமாகவுள்ள கடமைகளை நிறைவேற்ற வேண்டும் எனப் பேரவை கேட்டுக் கொண்டதை அவர் நிராகரிக்கவில்லை.
பேரவை அவ்வாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு கேட்டுக் கொள்ளும் வாசகமுள்ள பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளது. அவ்வாறெனில் அந்தக் கோரிக்கையை, இலங்கை அரசாங்கத்தால் நிராகரிக்க முடியாது.
அவ்வாறெனில், அந்தக் கோரிக்கையின் பிரகாரம், இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற மீதமாகவுள்ள 30-1 பிரேரணையின் கடமைகள் எவையெனப் பார்க்க வேண்டும். 30-1 பிரேரணையென்பது இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கி, 2015ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையாகும். அதில், கீழ்காணுமாறு ஒரு வாசகம் இருக்கிறது.
‘பேரவை… மனித உரிமைகள் மீறல்களை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களை விசாரிக்க, நீதிமன்றப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் முன்வைத்த ஆலோசனையை வரவேற்கிறது. நம்பகமான நீதித்துறை நடவடிக்கையொன்றில், நேர்மைக்கும் நடுநிலைமைக்கும் பெயர் பெற்ற நபர்கள் தலைமை தாங்கும் சுயேட்சையான நீதிமன்ற மற்றும் வழக்குத் தொடரும் நிறுவனங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அத்தோடு, இந்த விடயத்தில் இலங்கையின் நீதிமன்றப் பொறிமுறையில், பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கப்படுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது.’
அதாவது, மனித உரிமைகள் மீறல்களை மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்களை விசாரிக்க, நீதிமன்றப் பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பாக, இலங்கை அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் ஆலோசனையொன்றை முன்வைத்துள்ளது.
அத்தோடு, இவ்வாறான நீதிமன்றப் பொறிமுறையொன்றில், வெளிநாட்டு நீதிபதிகள் கலந்து கொள்வதன் முக்கியத்துவத்தை, இப்பிரேரணை வலியுறுத்துகிறது. மறுபுறத்தில், இவ்வாறு வலியுறுத்தும் பிரேரணைக்கு, இலங்கை அரசாங்கம் இணை அனுசரனை வழங்கியுள்ளது. எனவே, இலங்கை அரசாங்கம், வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை, 2015 ஆம் ஆண்டு பிரேரணையின் மூலம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ஆனால், அந்தப் பணி நிறைவேறவில்லை. அது மீதமாகவுள்ள கடமைகளில் ஒன்றாகும். அவற்றை நிறைவேற்ற வேண்டும் என, இவ்வருட பிரேரணை கூறுகிறது. அந்தப் பிரேரணைக்கும் இணை அனுசரணை வழங்கி, அரசாங்கம் அதனை ஏற்றுக் கொள்கிறது.
அதாவது, அரசாங்கம் இவ்வருடமும் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றப் பொறிமுறையொன்றை, உள்ளிட்ட மீதமாகவுள்ள கடமைகளை நிறைவேற்றவே அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கோரியது. அது வழங்கப்பட்டுள்ளது.
பின்னர், ஜெனீவா சென்றவர்கள் இங்கு வந்து நாம் வெளிநாட்டு நீதிபதிகளை நிராகரித்தோம் எனச் சிங்கள மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேவேளை, ஜெனீவாவுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை, நிறைவேற்றாது இழுத்தடிப்பதன் மூலம், அரசாங்கம் 2015ஆம் ஆண்டு, முதல் மனித உரிமைகள் பேரவையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகிறது.
வெளிநாட்டு நீதிபதிகளை இன்றும் தவிர்க்கலாம்
மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைப் பொறிமுறையொன்றில், வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்க, இலங்கையின் அரசமைப்பு இடமளிப்பதில்லை என்பதே, அரசாங்கத்தின் வாதமாக இருக்கிறது.
அவ்வாறாயின், வெளிநாட்டு நீதிபதிகள் உள்ளடக்கப்பட்ட விசாரணைப் பொறிமுறையொன்றைப் பரிந்துரை செய்த மனித உரிமைகள் பேரவையின் 2015ஆம் பிரேரணைக்கு, அரசாங்கம் ஏன் இணை அனுசரணை வழங்கியது?
இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்ட அன்றே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும் போது, இந்தப் பிரேரணையை ஒரு வெற்றியாகவே குறிப்பிட்டார்.
வெளிநாட்டு, உள்நாட்டு கலப்பு நீதிமன்றம் ஒன்றை, மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தமது அறிக்கையில் பிரேரித்ததாகவும் ஆனால், அதனைப் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், இலங்கை நீதிபதிகள் என மாற்றிக் கொண்டதன் மூலம், தமது அரசாங்கம் நிலைமையை இலகுவாக்கிக் கொண்டதாகவும் அவர் அந்த உரையில் குறிப்பிட்டார்.
மறுபுறத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கோ தற்போதைய அரசாங்கத்துக்கோ இந்த வெளிநாட்டு நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றம் என்ற விடயத்தைத் தவிர்த்துக் கொள்ள வாய்ப்பு இருந்தது.
அதாவது, தேசியப் பொறிமுறையொன்றின் மூலம், மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக, நியாயமான விசாரணையொன்று நடைபெறும் என்ற உத்தரவாதத்தை, நடைமுறையில் சர்வதேச சமூகத்துக்கு வழங்குவதன் மூலம், வெளிநாட்டு நீதிபதிகளைத் தவிர்த்திருக்கலாம்.
ஐ.நாவோ அல்லது சர்வதேச சமூகமோ, வெளிநாட்டு நீதிபதிகள் மூலமே, மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என, ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தவில்லை. ஆரம்பத்தில் தேசிய பொறிமுறையொன்றையே அவர்கள் கோரினர். 2009ஆம் ஆண்டு மே மாதம் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி மூனும் மஹிந்த ராஜபக்ஷவும் வெளியிட்ட கூட்டறிக்கையிலோ அல்லது முதன் முதவாக மனித உரிமைகள் பேரவை 2012ஆம் ஆண்டு, இலங்கை தொடர்பாக நிறைவேற்றிய பிரேரணையிலோ வெளிநாட்டு நீதிபதிகள் கோரப்படவில்லை.
மேற்படி, கூட்டறிக்கையில் நீதி வழங்க வேண்டும் என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டது. 2012ஆம் ஆண்டு பிரேரணையில், அரசாங்கம் நியமித்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே கோரப்பட்டது.
இந்த ஆணைக்குழு தமது அறிக்கையை வெளியிட்ட போது, மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் தலைவர்கள் அவ்வறிக்கையை உலகத் தலைவர்களுக்குக் காட்டி, தமது அரசாங்கம் நியாயமாக நடந்து கொள்கிறது என வாதாடினர். ஏனெனில், அவ்வாணைக்குழு, தமக்கு வழங்கப்பட்ட கடமைக்கு அப்பால் சென்று, போர்க் கால மனித உரிமைகள் மீறல்கள், அதிகாரப் பரவலாக்கல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பரிந்துரைகள் செய்திருந்தது.
இதற்கு முன்னர் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களைப் போலன்றி, இந்த ஆணைக்குழுவையும் அதன் அறிக்கையையும் அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. அரசாங்கமும் அந்த அறிக்கையை உலகத் தலைவர்களுக்குக் காட்டிக் கொண்டு திரிந்தது. அந்த அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்றே அமெரிக்கா தலைமையிலான சில நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த முதலாவது பிரேரணையில் கோரப்பட்டது.
தாமே நியமித்த ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்ற மஹிந்தவின் அரசாங்கம் முன்வந்திருந்தால், அமெரிக்கா அன்று அந்தப் பிரேரணையை முன்வைத்திருக்காது. அமெரிக்காவை மீறி, வேறு எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டும் இருக்காது.
அதேவேளை, அன்று மஹிந்தவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கின் காரணமாக, அவர் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்திருந்தால் சிங்கள மக்கள் அதனை எதிர்த்து இருக்கவும் மாட்டார்கள்.
இன்று போலல்லாது, அப்போது கடும் சிங்கள இனவாதியாகவிருந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்கவே, 2012ஆம் ஆண்டு, போரின் போது, மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவற்றைப் பற்றி விசாரணை செய்து, குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன் மூலம் வெளிநாட்டு நெருக்குவாரத்தைத் தவிர்க்கலாம் என்பதே, அவரது வாதமாகியது.
அப்போது கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற பேரினவாதத் தலைவர்களும் அதனை எதிர்க்கவில்லை. ஆனால், இராணுவத்தைப் பகைத்துக் கொள்ள வேண்டிவரும் என்பதால், மஹிந்த அவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை.
தற்போதைய அரசாங்கம், 2015ஆம் ஆண்டு, பிரேரணை மூலம் தம் மீது சுமத்தப்பட்ட கடமைகளில் மீதமாகவுள்ள கடமைகளை நிறைவேற்றவே இவ்வருடம் கால அவகாசம் பெற்றது. அந்தப் பிரேரணையிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கைவிடப்பட்டு இருக்கவில்லை. அதுவும் அந்தப் பிரேரணையில் இருக்கிறது.
வெளிநாட்டு நீதிபதிகள் வேண்டாம் என்றால், அரசாங்கம் மாற்றுத் திட்டம் ஒன்றை முன்வைக்க வேண்டும் என, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரியொருவர் கூறியதாக, அண்மையில் செய்தியொன்று கூறியது.
அதாவது, இதய சுத்தியுடன் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற, அரசாங்கம் இப்போதும் நடவடிக்கை எடுக்குமாயின், சர்வதேசம் வெளிநாட்டு நீதிபதிகளை வலியுறுத்தாது என்றே தோன்றுகிறது.
Average Rating